என் மேகம் ???

Tuesday, December 1, 2009

வானத்து நட்சத்திரங்களை எண்ண முடியுமா?

”வானத்து நட்சத்திரங்களை எண்ண முடியுமா?”
“எண்ண வாழ்நாள் போதாது”


படித்த ஒரு புத்தகத்தில் மனதில் நின்ற வரிகள். வாசிப்புக்குப் பொருந்தும் வரிகள். பதிவுலகம் மூலம் தான் எத்தனை எழுத்துக்களை , புத்தகங்களை அறிந்து கொள்ள முடிகிறது. படிக்க தான் வாழ்நாள் போதாது போலும்... புத்தகங்கள் படித்து முடித்தவுடன் அந்த எழுத்துக்களின் ஆக்ரமிப்பில் மனதில் தோன்றும் உணர்வை என்னென்பது? சிலருக்கு தான் அதை அழகாக விமர்சிப்பது கைவந்த கலை. எனக்கு வருவதில்லை அருமை, நன்றாக இருக்கிறது என்பது தவிர சொல்லத் தெரிவதில்லை. சமீபத்தில் அமித்து அம்மாவின் பகிர்வில் படித்தது “மாலன் சிறுகதைகள்”. யதார்த்தமான நிகழ்வுகளையும் உணர்வுகளையும் சொல்லும் சிறுகதைகள். மனதில் நின்றவை சிலவற்றை சொல்ல முயற்சிக்கிறேன்:


தப்புக்கணக்கு

இந்த தொகுப்பு தப்புக்கணக்கோடு தான் தொடங்குகிறது. இதைப் படித்தபின் அடுத்த கதை தொடர மனமின்றி இந்த கதையையே சுற்றியது மனம். 2X7=14 என்பதை 7X2 என்று எழுதிய ஜனனிக்கு மதிப்பெண் இல்லை. அதை அவர் தாத்தா கேட்க பள்ளியின் வெவ்வேறு பொறுப்பில் உள்ளவரை அணுக... நமக்கு நம் மனப்பாடக்கல்வியின் முட்டாள்தனமும், செக்கு மாடு போல் சுற்றும் பாதையில் இருந்து விலக இயலா மனமும் தெரிகிறது. முடிவில் 2X7=14 என்பதை 7X2 என்று அவள் எப்படி சிந்தித்தாள் என அறிந்து அவள் புத்திசாலித்தனத்தை மெச்சுகிறார் தாத்தா. ஆனால் பெற்றோர் கவலைபடுகின்றனர். ஏன்? அவள் பெண் குழந்தை என்பதால்... கொடுத்தமாதிரி அல்லாது வேறு மாதிரி யோசிக்கும் குழந்தை பின்னால் நிறைய கேள்வி கேட்பாள்... காயப்படுவாள்...உலகோடு ஓவ்வாதிருந்து அவளுக்கும் அவஸ்தை மற்றவருக்கும் இம்சை. எனவே “டீச்சர் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறாளோ அப்படியே கணக்கு போடு. அதிகப்பிரசிங்கத்தனமெல்லாம் பண்ணாதே” என்று அறிவுறுத்தப்படுகிறாள்.

நான் கதை படித்து சற்று நேரம் உறைந்து போனேன். என் பெண் ஆடி, பாடி இன்னும் பல தன் திறமைகளை வெளிப்படுத்துபொழுதெல்லாம் மனதுள் “இறைவா... இவள் பின்னாளில் கஷ்டப்படக்கூடாது” என்னுள் ஒலிக்கும் குரலை உரத்து கூறினாற் போல் இருந்தது கதை. இந்த வருத்தம் கொஞ்சம் மிகையாகத் தெரிந்தாலும் பெண்ணின் திறனை பார்க்கும் பொழுதெல்லாம் திருமணத்திற்குப்பின்(அது காதல் என்றாலும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது என்றாலும்) சிறகுகள் வெட்டப்பட்டு காம்ப்ரமைஸ் என்று ஊமை வலியுடன் உலவும் சில பெண்களின் நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.


இதெல்லாம் யாருடைய தப்பு?

தமிழ் மீது காதல் கொண்டு தமிழ் படித்த பெண் வேலை இன்றி தவிக்க, தமிழை நிராகரித்து ஆங்கிலம் படித்த சகோதரி வசதியாக செட்டிலாகிறாள். மேடைப்பேச்சாளர் ஆகிறாள் தமிழ் படித்த பெண்... அருவி போல தமிழ்க்கவிதை சொல்லவில்லை...துணுக்கு, கவிதை, மேற்கோள், சிலேடை என்று பேசுகிறாள். கூட்டம் சிரிக்கிறது கை தட்டுகிறது. “எனது தமிழால் யோசிக்க வைக்க முடியவில்லை. கிச்சுகிச்சு மூட்ட முடிகிறது” என்று முடிக்கும் பொழுது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.


வித்வான்

வயலின் வித்வானுக்கு அவரது சிஷ்யன் தரும் பரிசு எதையும் கற்றுக்கொண்டு துல்லியமாக செய்யும் “யஷ்ணி” என்னும் யந்திரம். எல்லாம் செய்யும் அது அவரது வயலின் மட்டும் தொட அனுமதி இல்லை; சங்கீதம் கற்றுக் கொள்ளவும் மறுக்கப்படுகிறது. ஒரு நாள் அதன் இசையில் மயங்கும் அவர் இயந்திரத்தின் இசை என அறிந்தவுடன் கோபம் கொள்கிறார். யஷ்ணி தன் சங்கீதத்தை அவர் கோபம் கண்டு அழித்துவிடுகிறது. சிறிது நேரம் மனப்போராட்டத்திற்குப் பிறகு ஏற்கும் மனதுடன் வருபவர் யஷ்ணி சங்கீதத்தை மறந்தது அறிந்து அதற்கு கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறார்.

சென்ற வாரம் திருமண நாளுக்காக திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சென்றிருந்தோம். கோயில் சென்றால் அபிஷேகம், அலங்காரம் என்பதற்கு எல்லாம் எனக்கு பொறுமை இருப்பதில்லை. அன்று கோவிலில் நான்கைந்து பேர் கணீரென பாடிக்கொண்டிருந்தார்கள். மனதை ஈர்த்து அங்கே என்னை நிறுத்தியது அந்த பாடல்கள்... அந்த குரல்களில் இருந்த உயிர்ப்பு... அது மனிதர்களின் சங்கீததத்தை நேரில் கேட்பதன் உயிர்ப்பு என்று தோன்றியது. மின்வடிவில் கேட்டிருந்தால் இவ்வளவு உயிர்ப்பு இருக்காதோ என்று தோன்றியது... மனப்பிரமையோ? யஷ்ணி நினைவுக்கு வந்தது.


பிரச்னையின் பெயர்: சந்திரலேகா

கல்லூரியில் தேர்தலில் நிற்கும் சந்திரலேகா... போட்டியிடும் திமிர் பிடித்த ஆணால் அவமானப்படுத்தப்பட்டாலும் , போராட்ட மனப்பான்மையுடன்அதையே ஆயுதமாக மாற்றும் சந்திரலேகா...வாழ்க்கையில் சராசரி இல்லத்தரசியாகத் தான் வாழ்கிறாள். நீயா என்று வியக்கும் நண்பனிடம் அவள் கூறுவது தான் இன்றைய பல சந்திரலேகாக்களின் விலங்கு... ”கல்லூரிக்குள் கலவரம் வரலாம். குடும்பத்தில் கூடாது நண்பா.”

பெரும்பான்மையான பெண்கள், என்ன தான் சம உரிமை என்று பேசினாலும் குடும்பம் என்னும் கூடு கலையாதிருக்க காம்ப்ரமைஸ் செய்து வாழ்கின்றனர் என்பது தான் உண்மை.


ஆதலினால் இனி

”புத்தகங்களைப் படித்து வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள முடியும் என்ற மயக்கங்களில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன்” என்று துவங்கும் கடிதத்தில் அதற்கான அனுபவம் சொல்லப்படுகிறது. தான் படித்த மருத்துவ கல்லூரியில் தன் சட்டையை சுண்டி இழுத்து, இரண்டு ரூபாய் பிச்சை கேட்கும் கை உடைந்த பையனைக் கண்டு சினம் கொள்கிறான் முன்னாள் மாணவன். பின் அது பிச்சை அல்ல, வைத்தியம் பார்க்க கேட்கப்படும் இலஞ்சம் என அறிந்து டீன் வரை பிரச்னை கொண்டு செல்கிறான். “நீ இவனுக்கு என்ன உறவு” என்ற கேள்விக்கு , “நான் முன்னாள் மாணவன். ஊனங்கள் இருந்தும் நாம் நம் தேசத்தை விரும்புவதில்லையா. அது போல் இது என் கல்லூரி என்பதில் எனக்கு ஒரு விதமான பெர்சனல் பிரைடு (Pride). அதுவே என்னை உங்கள் முன்வரை இழுத்து வந்திருக்கிறது” என்பான். “நானும் பெருமைப்பட விரும்புகிறேன்” என்று கூறி டீன் மேற்கொண்டு அந்த பையனின் சிக்கிச்சைக்கு ஏற்பாடு செய்வார்.
“புத்தகத்தில் படித்த தத்துவங்கள் என்னைப் போராடத் தூண்டவில்லை. சட்டையை சுண்டி இழுத்த வாழ்க்கை தான் என்னை ஏதாவது செய் என்று உந்தியது” என்ற வரிகள் யதார்த்தம்.

ஒவ்வொருவருக்குள்ளும் இந்த பிரைடு இருந்தால் எல்லாம் தானாக சரியாகிவிடுமோ?


மாறுதல் வரும்

அரசியலால் கள்ளச்சாராயத்ததை எதிர்த்து உயிரைக் கொடுத்த ஒருவனின் வாழ்க்கையின் உண்மைகள் துவக்கும் நண்பர்களுகிடையான உரையாடல். முடிவில் மாறுதல் வரும் என்று சொல்லப்படும் வரிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. “... ஆட்கள் மாறுவதன் மூலம் ஆட்சி மாறலாம். அரசியல் மாறாது. உங்கள் கலாச்சாரத்தை நசிவில் இருந்து மீட்டு எடுக்காதவரையில் உங்கள் அரசியல் மாறாது. அதற்கு என்ன செய்யப் போகிறாய்?”

ஆம் என்ன செய்யப் போகிறோம். எது கலாச்சாரம்? சக மனிதரை மனிதராக பார்ப்பது நம் கலாச்சாரம் என்று எப்பொழுது தலை நிமிர்ந்து சொல்வோம்?


காணாமற் போனவர்கள்

“எங்களை வயலினின் மூன்று தந்திகள் என்று யார் சொன்னார்கள் என்பது இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் அதுதான் அன்று உண்மை” என்று துவங்கும் மூன்று பேர் தோழிகளான கதையும் ஒருத்தியின் காதலை சேர்த்து வைத்த கதையும்.

முடிவு? ரகளையில் செருப்பு வீசிக் கவிதையைக் காப்பாற்றிய அருணாவுக்கு நானும், கை வளையலைத் தானம் செய்து கல்யாணம் நடத்திய கீதாவுக்கு அவளும் ஆயுசு முழுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், இன்று யார் யார் எங்கு எப்படி இருக்கிறோம் என்று எங்கள் மூன்று பேருக்குமே தெரியாது. ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் வாழ்க்கை


சில நாட்களுக்கு முன் தொடர்பதிவாக கவிதா/மீனா கடிதம் பதிவுலகில் வலம் வந்தது. பெரும்பாலானவை திருமணத்திற்கு பின் மாறிவிட்ட பெண்களின் வாழ்க்கையையும் ஏக்கங்களையும் பிரதிபலிக்கும். எங்கள் கல்லூரியில் கூட எங்கள் மூவருக்கு “த்ரீ மஸ்கிட்டீஸ்” என்றார் எங்கள் ஆசிரியர். ஆனால், இன்று யார் யார் எங்கு எப்படி இருக்கிறோம் என்று எங்கள் மூன்று பேருக்குமே தெரியாது.

முத்து முத்தாக யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் ஒவ்வொரு கதையும் சிந்தனையைத் தூண்டுகிறது, ஏன் என்று யோசிக்க வைக்கிறது. அருமையானதொரு தொகுப்பு.

12 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப அழகா பகிர்ந்திருக்கீங்க அமுதா, அதுவும் தப்புக்கணக்கை பகிர்ந்தவிதமும், சந்திரலேகாவைப் பகிர்ந்தவிதமும் அருமை.

காம்ப்ரமைஸ் எவ்வளோ சின்ன வார்த்தை, ஆனா அதுல நம்முடைய வாழ்க்கையே அடங்கிடுது இல்ல :) :(

ராமலக்ஷ்மி said...

சமீபத்தில் வாசித்ததில் என்னையும் பாதித்த தொகுப்பு மாலனின் சிறுகதைகள். நல்ல பகிர்வு அமுதா.

அன்புடன் அருணா said...

நல்ல விமரிசனம்!

Thamiz Priyan said...

நல்ல அறிமுகம். கதை நேரத்தில் ஒரு கதையை பாலு மகேந்திரா எடுத்த நினைவு இருக்கின்றது.

sathishsangkavi.blogspot.com said...

//தமிழ் மீது காதல் கொண்டு தமிழ் படித்த பெண் வேலை இன்றி தவிக்க, தமிழை நிராகரித்து ஆங்கிலம் படித்த சகோதரி வசதியாக செட்டிலாகிறாள்.//

இது தாங்க இன்றைய நிலை......

நல்ல விமர்ச்சனம், நல்ல பகிர்வு.........

ஹேமா said...

நல்லதொரு பகிர்வு அமுதா.என்ன வாசிக்கத்தான் கொஞ்சம் பொறுமையும் நேரமும் வேணும்.நான் வாசித்தேன்.சிந்திக்க வைக்கிறது பதிவு.

கோமதி அரசு said...

நல்ல பகிர்வு அமுதா.

தமிழ் said...

எத்தனையோ புத்தகங்கள் வாசிக்க ஆசை தான். எங்கே நேரம் ?
தங்களைப் போன்றவர்கள் படித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது தான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.


படித்த‌து ம‌ட்டும‌ல்ல‌ ,த‌ங்க‌ளின் எண்ண‌லைக‌ளையும் அடிக்கோடிட்டு காட்டி எழுதி இருப்ப‌து அருமை

வாழ்த்துகள்

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு அமுதா!

அரங்கப்பெருமாள் said...

புத்தகம் வாசிப்பது ஒரு அலாதியான விஷயம்.அதில் எனக்கு எப்பவுமே ஒரு ஈர்ப்பு உண்டு.


//உயிர்ப்பு இருக்காதோ என்று தோன்றியது... மனப்பிரமையோ?//

மனப்பிரமை இல்லை.உண்மைதாங்க.
மார்கழி மாஹாஉற்சவம் வருது. கண்டிப்பா போய் பாருங்க(எனக்குத் தான் வாய்க்கல).
1. சுதா ரகுநாதன்
2. அருணா சாய்ராம்
3. விஷாகா ஹரி (கதா காலட்சபம்)
......
......

அப்பறம் புரியும் இது உண்மைதான்னு.

"உழவன்" "Uzhavan" said...

//அருமை, நன்றாக இருக்கிறது என்பது தவிர சொல்லத் தெரிவதில்லை//
 
ஆகா.. நானும் உங்க் கேஸ்தான் :-)
 
உங்களின் கருத்துக்களோடு நல்லா தொகுத்திருக்கீங்க மேடம். பாராட்டுக்கள்!

பின்னோக்கி said...

தப்புக்கணக்கு - பாலு மகேந்திராவின் கதை நேரம் தொடரில் பார்த்திருக்கிறேன். அருமையான நடிப்பு + கதை.

நல்ல சிறு கதையை பகிர்ந்த விதமும், அதைப் பற்றிய உங்களின் அனுபவங்களும் அருமை.