என் மேகம் ???

Wednesday, December 9, 2009

மொறு மொறு தோசை

மொறு மொறு தோசை பிடிக்காத குழந்தைகள் இருப்பரா என்று எனக்கு தோன்றியது நேற்று மொறு மொறு தோசை சுட்டு சுட்டு கை வலித்த பொழுது. (தோசை பிடித்தவர்கள் எல்லாம் குழந்தைகள் மாதிரியா என்று யாரும் கேள்வி கேட்கக்கூடாது). இரண்டு நிமிடத்தில் என்று விளம்பரப்படுத்தப்படுபவை எல்லாம் இந்த தோசைக்கு முன் நிற்காது.

உண்மையில் இட்லி தோசை கண்டுபிடித்தவர்களுக்கு மொறுமொறு என்று தோசை, மல்லிகைப் பூவாக இட்லி கொடுத்து வாழ்த்தவேண்டும். பெரும்பான்மையான பரபர குடும்பங்களின் சாப்பாடு இந்த இட்லி தோசை மாவில் தான் ஓடும். “அரிசி மாவு உளுந்து மாவு கலந்து சுட்ட தோசை” என்று சிம்பிளாக சொன்னாலும் அவ்வளவு எளிதல்ல மாவரைப்பது... க்ரைண்டரே அரைத்தாலும்...

என் சிறுவயதில் உளுந்தை ஊற வைத்து அதை களைந்து (ஒரு தோல் இல்லாமல் உளுந்து கழுவறத பார்க்கறதிலேயே பொழுது போயிடும்), அப்புறம் உரல்ல போட்டு ஆட்டுவாங்க. நான் பக்கத்தில் உட்கார்ந்து மாவைத் தள்ளி தள்ளி விடுவேன். இப்ப அப்படி இல்லை, உளுந்து ஒரு அரை மணிக்கு ஊற வச்சு க்ரைண்டர்ல போட்டு எடுத்தடலாம். தள்ளறதைத் தள்ளி தான் ஆகணும். "பட்டனை தட்டினா ரெண்டு இட்லியும்..." அப்படீனு வந்தாலும் யாராவது மாவை அரைக்கத்தானே வேணும்?

முதலில் உளுந்து அரிசி விகிதம் ஒன்றுக்கு மூன்றா நான்கா என்று தொடங்கி , உளுந்து பொங்க வேண்டும் (பாக்கெட் வாங்காதே, மளிகைகடையில் மூட்டையிலிருந்து வாங்கு என்ற அறிவுரையுடன் சில சமயம் இந்த டிப்ஸ் கேட்டதற்காக ஊரில் இருந்து உளுந்து சுமந்து வர வேண்டி இருக்கும்), முழு உளுந்து , சாப்பாட்டு அரிசி என்றால் இட்லி மென்மையாக இருக்கும் என்று அறிவுரைகளைப் பின்பற்றி, மாவைப் பதமா கரைக்காட்டி இட்லி வராது என்று பக்குவமாகக் கலக்கி உப்பு போட்டு புளிக்க வைத்தால், “ஒரு சில கைக்கு மாவு பொங்காது” என்ற கமெண்ட்டுக்கு மனம் பொங்கும். ஆனால் ஒரு வழியாக இந்த டெக்னிக் எல்லாம் கற்று மாவு ஆட்டி வைத்து விட்டால் டிபனுக்கு யோசிக்க வேண்டாம். இட்லி, தோசை, ஊத்தப்பம் என்று ஊற்றிக் கொண்டே இருக்கலாம் மாவு தீரும் வரை. தீரப்போகிற சமயத்தில் கூட ரவை, கோதுமை எல்லாம் சேர்த்து இரவா தோசை, கோதுமை தோசை என்று அவசரத்துக்கு கை கொடுக்கும் இட்லி தோசை மாவே மாவு. திடீர் விருந்தினர் வந்தாலும் கவலை இல்லை தோசை மாவு இருந்தால்...

இந்த தோசையில் தான் எவ்வளவு வெரைட்டி... புள்ளைங்களுக்கு அப்படியே கண்ணாடி மாதிரி தோசை சுட்டுக் கொடுத்தால், ஊத்தற கை வலிக்கும் வரை உள்ளே போய்கிட்டே இருக்கும். சில பெரியவங்க... இப்படி சாப்பிட்டால் உடம்புல ஒட்டுமா என்று சும்மா கிண்ணுனு சுடுவாங்க பாருங்க... ஒண்ணு சாப்பிட்டால் ஒரு நாளை ஓட்டிடலாம் ... என்ன ஒரு புள்ளையும் தொட்டு கூட பார்க்காது. இன்னும் சிலரு ஓலையாவும் இல்லாமல், ஊத்தப்பமாவும் இல்லாமல், மாவு ஊத்தி சுடறதெல்லாம் தோசை தான்னு கொடுப்பாங்க...ஏதோ ஒண்ணு வயத்துக்கு கிடைச்சா சரிதான்.

இந்த இட்லி ... அரைச்ச மாவுல மொத நாள் இட்லி நல்லா வரும். அதுக்கப்புறம் அது தோசைக்கு தான் நல்லா இருக்கும். ஆனா எல்லாருக்குமே மல்லிப்பூ மாதிரி வந்துடாது... கொஞ்சமா கல்லு மாதிரி... அட!! கல்லை சாப்பிட்டாலும் செரிக்கற மாதிரி உடம்பு வேண்டாமா? அப்புறம் குஷ்பூ இட்லியாமே ... மல்லிப்பூ தோத்தது போங்க... மாவரைக்கும் பொழுது ஆமணக்கு கொஞ்சம் சேர்க்கணுமாம் ஒருத்தர் டிப்ஸ் கொடுத்தார்... நாங்க கல்லையே செரிச்சுக்கறோம்னு சொல்லிட்டாங்க கேட்டவுக...

இது போக மாவுக்கு போடற உளுந்தையே வறுத்து, அது கூட உப்பு மிளகாய் சேர்த்து அரைச்சு நல்லெண்ணைய் ஊத்தி அப்படியே இன்ஸ்டண்டா தொட்டுக்க இட்லிபொடி கண்டுபிடிச்சவங்களை எப்படி பாராட்டறது? அதுல கொஞ்சமா வெல்லம் சேர்த்து திரிச்சிட்டா புள்ளைங்க அப்படியே மொறு மொறு தோசை, தொட்டுக்க இட்லி பொடினு தினமும் சாயங்காலம் ஸ்நாக்ஸா சாப்பிட சலிக்கறதில்லை.

இப்ப இந்த இட்லி தோசையிலயே ஆயிரத்தெட்டு வெரைட்டி பண்ணலாம்; சாப்பிட யாராவது ரெடினா... என்ன திடீர்னு இட்லி தோசைனு கேட்டீங்களா? இப்ப புள்ளைங்க வயத்துல சாப்பாடு இறங்க திரும்ப சமையலறையில் ஏ,பி,சி,டி எல்லாம் படிக்க வேண்டி இருக்கே? நல்ல வேளையா இட்லி இன்னும் வட்டமா தான் இருக்கு :-)



11 comments:

ஆயில்யன் said...

இப்படி ஒரு வாட்டி ஏபிசிடி தோசை சுடப்போயி வாங்குன அடிதான் ஞாபகம் வருது அவ்வ்வ்வ்!

அது ஒரு காலம்

இது ஒரு காலம் ! :)

சந்தனமுல்லை said...

:-))

/மாவைப் பதமா கரைக்காட்டி இட்லி வராது என்று பக்குவமாகக் கலக்கி உப்பு போட்டு புளிக்க வைத்தால், “ஒரு சில கைக்கு மாவு பொங்காது” என்ற கமெண்ட்டுக்கு மனம் பொங்கும்./

:-))))))

Ungalranga said...

இட்லியிலும் ஏபிசிடி இருக்கு தெரியுமோ??

நடுவில் பெரிசா ஒரு ஓட்டை போட்டு குடுத்தா அது O இட்லி.

எப்பூஊஊடி..!!

அழகாய் இருக்கிறது நீங்க சுட்ட ஏபிசிடி தோசை..

மேலும் சுடுங்க..!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

மாவைப் பதமா கரைக்காட்டி இட்லி வராது என்று பக்குவமாகக் கலக்கி உப்பு போட்டு புளிக்க வைத்தால், “ஒரு சில கைக்கு மாவு பொங்காது” என்ற கமெண்ட்டுக்கு மனம் பொங்கும்./

:) what blood, same blood.

நாங்க இப்பதான் நிலா, ஸ்டார்னு ஸ்டார்ட் செஞ்சிருக்கோம் தோசையில, ஏபிசிடி வர இன்னும் கொஞ்சம் நாள் பிடிக்கும் போல :)

ஹேமா said...

வீட்ல தோசைக்கு அரைச்சு அடுப்பு மேடைல(இருந்து சமைக்கிற மாதிரி வீட்டோட ஒரு மண் அடுப்படி இருக்கு )புளிக்கிறதுக்காக வச்சிருக்காங்க அம்மம்மா.
எல்லோரும் பேசிக்கிட்டு இருக்க தோசை மா அடுப்பு மேடை முழுக்க நான் தோசை சுட்டு பார்த்திருக்கேன்.
ஞாபகம் வந்திடுச்சு அமுதா.

sundar said...

இது போக மாவுக்கு போடற உளுந்தையே வறுத்து, அது கூட உப்பு மிளகாய் சேர்த்து அரைச்சு நல்லெண்ணைய் ஊத்தி அப்படியே இன்ஸ்டண்டா தொட்டுக்க இட்லிபொடி கண்டுபிடிச்சவங்களை எப்படி பாராட்டறது?

இந்த இட்லிப் பொடிக்கு எப்ப ரசிகரானோம்னு நினைக்கவே முடியல...சின்ன வயசில ஆரம்பிச்சது...இன்னும் அலுக்கல...

‘சில கைக்கு தான் மாவு புளிக்கும்’ இதே டைலாக் சின்ன வயசில எங்க வீட்ல கேட்டதுண்டு...

இப்ப கேக்கத் தோணுது அவங்க மட்டும் என்ன கைல ‘வினிகர்’ சொரக்கற மாதிரி பொறந்துட்டாங்களோன்னு.....

சுந்தர்

நட்புடன் ஜமால் said...

அட

இதுலேயே ஏ, பி ஸியா

அ, ஆ வும் முயலலாம் போலயே

நல்லாயிருக்குங்க ...

பின்னோக்கி said...

ஓ..தோசையை பற்றியா என அலட்சியமாக படிக்க ஆரம்பித்து, நீங்கள் குறிப்பிட்டுள்ள நுண்ணிய தகவல்கள், இதனை, இந்த பதிவின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. அதுவும் அந்த உளுந்து களையும் விஷயம், சின்ன வயதில் ஆச்சர்யத்துடன் பார்த்த விஷயம். அதே போல அரிசியிலிருந்து கல் களையும் வேலை.

ஆமணக்கு போட்டால் குஷ்பு இட்லி. நல்ல தகவல். ஆமணக்கு உடலுக்கு நல்லதா கெட்டதா ? சொல்லவில்லையே.

அருமையான, அடுத்த தலைமுறைக்கு தோசை, இட்லியின் கதையை எடுத்து செல்லும் முயற்சி.

"உழவன்" "Uzhavan" said...

இட்லி மாவு, தயிர், முட்டை... இவைகள்தான் பேச்சிலர்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. மறக்க முடியுமா!!

Kavinaya said...

உளுந்து களைஞ்சு, அரிசில கழுவி, கல் அரிச்செடுத்து, ஆட்டுக்கல்லுல ஆட்டின மலரும் நினைவுகளெல்லாம் கிளறி விட்டுட்டீங்க :) தோசைல வாத்து, குருவி, இதெல்லாம் செய்திருக்கேன். அனுபவப் பதிவு நல்லாருந்தது :)

ஊர்சுற்றி said...

//என் சிறுவயதில் உளுந்தை ஊற வைத்து அதை களைந்து (ஒரு தோல் இல்லாமல் உளுந்து கழுவறத பார்க்கறதிலேயே பொழுது போயிடும்), அப்புறம் உரல்ல போட்டு ஆட்டுவாங்க. நான் பக்கத்தில் உட்கார்ந்து மாவைத் தள்ளி தள்ளி விடுவேன். இப்ப அப்படி இல்லை, உளுந்து ஒரு அரை மணிக்கு ஊற வச்சு க்ரைண்டர்ல போட்டு எடுத்தடலாம். தள்ளறதைத் தள்ளி தான் ஆகணும். "பட்டனை தட்டினா ரெண்டு இட்லியும்..." அப்படீனு வந்தாலும் யாராவது மாவை அரைக்கத்தானே வேணும்?
//

சிறுவயதில் அம்மாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து மாவரைத்த ஞாபகங்கள் வந்துவிட்டன. இன்றைக்கு பக்கத்துக் கடையில் வாங்கிவிடுகின்றேன்!