என் மேகம் ???

Thursday, August 27, 2009

இப்பொழுதெல்லாம்...

எப்பொழுது தொலைந்துபோனது
அந்த குழந்தைத் தனம்?
இளமை துள்ளலுடன்
நுழைந்த பொழுதோ?

எப்பொழுது தொலைந்துபோனது
அந்த இளமை துள்ளல்?
பொறுப்புகளின் சுமை
கூடிப் போனபொழுதோ?

என்றாலும் ...
இப்பொழுதெல்லாம்...

சொப்புகளில் உன்னுடன்
சமைக்கும்பொழுது
குழந்தைத்தனம் என்னுள் இருக்கிறது

என்னைப் பிடி என்று
நீ ஓடும்பொழுது
எனக்குள் இளமை துள்ளுகிறது

நன்றி மகளே!!!
குழந்தைத்தனமும் இளமையும்
தொலையவில்லை...
மறைந்துள்ளது என்று
எனக்கு காட்டிக் கொடுத்ததற்கு....

(ஒரு மொக்கைக்கும் தேடலுக்கும் வித்திட்ட முல்லைக்கு நன்றி :-))

Wednesday, August 26, 2009

And,Now...

முட்டையிடாத ஒரு நாட்டுக்கோழி ஒன்று, என்னிடம் இருந்தது. பள்ளிவிட்டு வந்ததும் அது குப்பை கிளறும் அழகை வேடிக்கை பார்ப்பேன்.

வெகுசுவாரசியமாக இருந்தது, வாழ்க்கை!

எப்படியோ தொலைந்துபோனது அந்த கோழி ஒருநாளில்...
அதனுடன் நான் சப்புக் கொட்டிக்கொண்டிருந்த நாட்டுக்கோழி பிரியாணியும்!

(டெடிக்கேட்டட் டு ஆச்சி)

Tuesday, August 25, 2009

திருநாள்

அன்பு மகளே!!!
சில வருடங்களாக
ஒவ்வொரு வருடமும்...

கிருஷ்ண ஜெயந்தி
வந்து கொண்டிருந்தது
உன் பாதம் பட்டபின் தான்
குழலோசை கேட்டது

விநாயகர் சதுர்த்தியில்
கொழுக்கட்டைகள் வெந்தன
நீ கேட்ட பொழுதுதான்
அவை பூரணமாயின

தீபாவளி வாணங்களுடன்
வெடித்துக் கொண்டிருந்தது
நீ புன்னகைத்த பொழுதுதான்
வாணங்களின் வண்ணங்கள்
எனக்குத் தெரிந்தன

நினைவுகளின் ஏக்கத்துடன்
வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருந்தது

என் பால்யத்தை நினைவுறுத்த..
அம்மா அப்பா அன்பை
மீண்டும் காணச் செய்ய...
என்று உன்னால் தான் இதோ!!!
வாழ்க்கையை வாழ்கிறேன்
ஒவ்வொரு நாளும் திருநாளாக...
கைகொட்டி சிரிக்கும் குழந்தையின் மனநிறைவோடு...