என் மேகம் ???

Saturday, January 31, 2009

காலியான வீடு

அந்த வீடு
காலியாக இருந்தது
இருந்தும் இல்லாமல்...

நல்லதொரு நாளில்
அவர்கள் வந்தார்கள்

வீடு மகிழ்ச்சியில் நிறைந்தது
குழந்தையின் சிரிப்பில்
தினம் பூபாளம் கேட்டது
புன்னகையின் வாசம்
பக்கத்திலும் பரவியது

நல்லதொரு நாளில்
மனமார்ந்த வாழ்த்துக்களுடன்
அவர்கள் சொந்த வீடு
குடி பெயர்ந்தார்கள்

இந்த வீட்டில
மழலையின் சுவடுகள்
இன்னும் இருக்கிறது..
வீட்டை...
வெறுமையால் நிறைத்துவிட்டு
காலி செய்துவிட்டார்கள்

Thursday, January 29, 2009

நேற்று...இன்று...நாளை...


நேற்று...
உன் விரல் பிடித்து
உன் வகுப்பறை வரை வந்து
உன்னை முத்தமிட்டு
உன் வாசத்தோடு
நான் நகர்ந்த பொழுது
மகிழ்ச்சியில் பொங்கியது மனம்

இன்று...
என் விரல் விட்டு
என்னை முத்தமிட்டு
உன் வகுப்பறை நோக்கி
என் வாசத்தோடு
நீ நகரும்பொழுது
கொஞ்சம் ஏக்கம்...
கொஞ்சம் பெருமிதம் என
விம்மியது மனம்

நாளை...
உன் கனவுகளின் வாசத்தோடு
புத்தம் புதிய சிறகுகளோடு
உன் வானத்தில் சிறகடிக்கும்
நாளைக் காணத் தயாராகு
என்று மெல்லச் சொல்கிறது மனம்...

Tuesday, January 27, 2009

தந்தை பாசம்



உன்னிடம் நான்
சொன்னதில்லை மகளே!!

என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என...

உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
வார்த்தையில் வடிக்காது
மெளனமாக இரசிக்கிறேன்...

உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்
என் கண்களுக்குள்
நீ மட்டுமே தெரிந்தாய்...

நீ மலர்ந்திருந்தால் தான்
நான் நானாக உள்ளேன்
உன்முன் மட்டுமே
மறுப்பை மறுத்து விடுகிறேன்...

உன் கண்ணீருக்கெல்லாம்
கண்ணீர் சொல்ல முடியா
வலியில் நான் துடிக்கின்றேன்...

என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ...

சொல்லத் தேவையில்லை
காலம் முழுதும் உன்னை
மனதில் சுமப்பேன் என்பதை...