என் மேகம் ???

Friday, November 7, 2008

எலும்பு சூப்


புதுகைத் தென்றலின், தமிழ் சமையல் வலைப்பூ திரட்டி, வாரத்திட்டம் -6 பார்த்து, நம்மளும் ஒரு சூப் ரெசிபி போடலாம்னு பார்க்கிறேன். ரெசிபினு ஒண்ணு போடறது இதான் முதல் முறை. படம் எல்லாம் இல்லை, இந்த ஞாயிற்றுக்கிழமை செய்தால் ஃபோட்டோ புடிச்சு போடறேன்.




எங்கள் ஊரில், உடம்பை கொஞ்சம் தேற்ற வேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டால் போதும், தினம் ஒரு வகை என எலும்பு சூப், ஆட்டுக்கால் சூப், நாட்டுக்கோழி சூப் என்று போட்டுத் தள்ளி விடுவார்கள். சைவத்தை விட அசைவ சூப் ரொம்ப சிம்பிள் வேலை போல் எனக்கும் ஒரு ஃபீலிங். இங்கே கொடுத்து இருக்கும் ரெசிபியை ஆடு/கோழி வகையறா சூப்பிற்கு உபயோகிக்கலாம்.

தேவையானவை:


நெஞ்செலும்பு - கால் கிலோ
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்றவாறு

அரைக்க:
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
தக்காளி - 1
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி

அலங்கரிக்க
கொத்துமல்லி நறுக்கியது சிறிதளவு


செய்முறை:


முதலில் அரைக்கக் கொடுத்துள்ள சாமான்களை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நெஞ்செலும்பைச் சேர்த்து சற்று வதக்கிவிட்டு, 4 தம்ளர் தண்ணீரும், தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். குக்கரில் 4 விசில் வந்த பின்பு, தீயைக் குறைத்து 15 நிமிடம் வேக விடவும் (கோழி என்றால் 4 விசிலே போதும்). தேவை என்றால் சிறிது கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். நன்கு கலந்து, கொத்துமல்லி தூவி பறிமாறவும்.

Wednesday, November 5, 2008

சின்ன சின்ன கேள்விகள்???

"ஏம்மா எப்ப பார்த்தாலும் என்னையே சொல்ற?", பெரியவளின் கேள்வி. "நீ பெரியவள், அதனால் நீ தான் விட்டுக்கொடுக்க வேண்டும்", என்றவுடன் சின்னவளிடம் பெரியவளின் முணுமுணுப்பு , "இன்னும் கொஞ்ச நாளில் நீயும் பெரியவள் ஆவ, நீயும் அம்மாட்ட திட்டு வாங்குவ". (எவ்வளவு வளர்ந்தாலும் சின்னவள் சின்னவளாகத் தான் இருப்பாள் என நான் கூறியது அவளுக்குப் புரியவில்லை)

******************************

திடீரென்று ஒரு நாள் என் சுட்டிப் பெண் , "அம்மா எனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைப்பீங்க?" என்றாள். திரு திரு என்று விழித்து "ஏன்" என்றோம். "அப்ப தான் நிறைய கிப்ட் கிடைக்கும்" என்றாள். (ஓ... பரிசுகளின் உண்மை விலை தெரியும் வரை இப்படியே கவலை இன்றி இரு பெண்ணே...)

***********
"அப்பா, நான் பெரியவள் ஆகி என்ன செய்யப் போறேன்?"
"நல்லா படிச்சா எங்களை மாதிரி கம்ப்யூடர்-ல வேலை பண்ணலாம்".
(படிக்காட்டி நிறைய சாய்ஸ் என்று அவரும் கூறவில்லை... அவளும் கேட்கவில்லை...)
*********************************
ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து "பூவா தலையா" விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென்று அருகில் வந்து, "அம்மா, ஒரு ரூபாய்ல ஒண்ணும் பண்ண முடியாது தானே?" என்றாள். சாக்லேட் வாங்கலாம் என்பது தவிர என்ன பதில், ஏன் இந்த கேள்வி என்று யோசித்துக் கொண்டே, சட்டென்று நினைவு வர, "வெய்ட் பார்க்கலாம்" என்று பதில் கூறினேன். அவளுக்கு எடை பார்ப்பது பிடிக்கும். சற்று நேரம் தேடி ஒரு ரூபாய் நாணயத்தைக் கையில் கொடுத்த பொழுது புரிந்தது, "தொலைந்த நாணயம் தேட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியில் உதித்த கேள்வி" என்று.
****************************
மாமாவின் குட்டிப்பயலோடு விளையாடிக் கொண்டிருந்தாள். என்னடா செல்லம்... தம்பி உன்னையே பார்க்கிறான் பாரு என்றவுடன், வெட்கப் பார்வை. சற்று நேரம் கழித்து... "நான் ஆரஞ்ச் ட்ரெஸ் போட்டது தான் தம்பிக்கு ரொம்ப புடிச்சிருக்கு... அதனால் இனி நான் ஆரஞ்ச் ட்ரெஸ் தான் போடுவேன். ஏம்ப்பா, நான் பெரியவள் ஆனால் என்ன ட்ரெஸ் போட்டால் தம்பிக்கு பிடிக்கும்?" (குட்டீஸ் உலகத்தில இது எத்தனை பெரிய பிரச்னை? நீ எது போட்டாலும் பிடிக்கும்டா செல்லம்...)
*************************

Tuesday, November 4, 2008

வயது தந்த பாடம்

பல பிள்ளைகளைப் போல் எங்களுக்கும் பெற்றோரை மகிழ்விக்க ஆசை தான். நட்சத்திர விடுதி, விமானப் பயணம், வெளிநாடு என எல்லாம் இன்று அனுபவிக்க அன்று பாடுபட்டு அவர்கள் படிக்க வைத்ததன் பலன் தானே?

சும்மா கூப்பிட்டால் வருவார்களா? பிறந்த நாள் கொண்டாட்டம், L.T.A என்று காரணம் சொல்லி, நட்சத்திர விடுதி, விமானப் பயணம் எல்லாம் அவர்களையும் பார்க்க வைத்தாயிற்று. அடுத்தது வெளிநாடு. திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் என்று ஒரு டூர் போகலாமா என்று யோசித்தோம். பிள்ளைகள் சற்று பெரிதானால் சுற்றுலா நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் தலை தூக்க, பிள்ளைகளின் வயதைக் கருதி திட்டத்தை சற்றுத் தள்ளிப் போட்டோம். எதிர்பாராத விதமாக, வீட்டில் ஓர் இழப்பு. பிள்ளைகளின் வயதைக் கருதியவர்கள், பெற்றோருக்கு வயதாகிறதே என்று யோசிக்க மறந்தோம். நாம் பொறுப்பான பெற்றோராக யோசிப்பது போல், பெற்றோரின் பொறுப்பான பிள்ளைகளாகவும் யோசித்திருக்க வேண்டும் என்று மனதை உறுத்துகிறது.