என் மேகம் ???

Saturday, March 28, 2026

வரையறைகள்

 வரையறைகள் 

------------------


உயிரை வரையறுப்பான் ஒருவன்

உணவை வரையறுப்பான் ஒருவன் 


ஒழுக்கம் வரையறுப்பான் ஒருவன்

ஒற்றுமை வரையறுப்பான் ஒருவன்


கடவுளை வரையறுப்பான் ஒருவன்

கருத்தை வரையறுப்பான் ஒருவன்


காலத்தோடு மாறும் என்பான் ஒருவன்

காலத்தால் மாறாதென்பான் ஒருவன்


தனக்கென மாற்றுவான் ஒருவன்

தனக்கல்ல என மாற்றுவான் ஒருவன்


வரையறைப்பவனிடம் கேள்வி‌ கேட்டால்

வரையறைக்குள் சிக்காதவர் ஈனர் என்பான்


தொல்லை...

அவரவர் வரையறைக்குள் இருப்பதல்ல 

அடுத்தவர் வரையறையை சீண்டுவதால்

Friday, March 27, 2026

டீக்கடை நினைவுகள்

 உண்ட மயக்கத்தில் 

சாய்வு நாற்காலியில் 

டீக்கடை நினைவுகளை 

இதமாக அசைபோடும்...

தாத்தாவின் மனம்.


தேநீர் போடும் நேரம்

கணக்கில் கொண்டு 

சற்றே கண்ணயர்வாள்

டீக்கடை கடந்து செல்வதே

போராட்டமாகக் கடந்த பாட்டி

Sunday, March 8, 2026

மகளிர் தினம்

 சிறகொடிந்தாலும்

சிறகிழந்தாலும்

கற்களால் வீழ்ந்தாலும்

கண்ணாடித் திரையிட்டாலும்

எல்லோருக்குமான வானில்

தன் இடம் இருத்திக் கொள்ள

காலம் காலமாக போராடுபவள்...



அன்பெனும் போர்வையில் அழுத்தம் ..

ஆகாதென்று கூக்குரல் ..

இயலாது என்று முட்டுக்கட்டை ..

போதாதா என்று போர்க்குரல்..

சில பறவைகளின் வரவுக்கே

வானம் வசமானது என கூக்குரல்கள்


மனம் தளருவதில்லை  அவள்

கடக்கும் ஒவ்வொரு அடியும் 

நாளைய பெண்ணிற்கு

வானம் வசப்படும் வழி



மகளிர்...

தொட்டு விட்ட உயரம்

கடந்து வந்த தூரம்

கொண்டாட மட்டுமல்ல


தடைகளும் திரைகளும் 

சமூகம் தகர்க்க

விழிப்புணர்வு தரும் தினம்


எல்லோருக்கும் வானம் வசப்பட

இனிய மகளிர் தின வாழ்த்துகள்💐