என் மேகம் ???

Tuesday, September 3, 2024

உலக கடித தினம் (Sep 1)

கடிதம் என்றவுடன்

சிறகடிக்கும் மனது...

உறவுகளின்... உணர்வுகளின்...

சிறகல்லவோ அவை?


தூரத்தால் பிரிந்த

 உறவுகளைப் பிணைத்த 

காகித இழையன்றோ?


தபால் அட்டையில்

நுணுக்கிய எழுத்துக்கள் ...

எழுத இடமின்றி

எழுதாத சொற்களைத்

தேடும் மனம்


கொஞ்சம் காசிருந்தால்

நீலக் காகிதம்

பிறர் அறியாமல் கதைக்கவோ

மிக முக்கியம் என சொல்லவோ...

என்றாலும்,

இடப் பற்றாக்குறை தான்



சுழியுடன் துவங்கி..

நலம் விசாரித்து..

செய்திகள் பகிர்ந்து ..

அன்பான கையெழுத்துடன்

உள்ளம் தொட்ட கடிதங்கள் 


பிறப்பு இறப்பு

கொண்டாட்டங்கள் சண்டைகள்

கோப தாபங்கள்

என நம் வாழ்வின் சுவடுகள்

கடிதங்கள் 


கையெழுத்தின் உணர்வுகளை

மின்னெழுத்துக்கள் பிரதிபலிப்பதில்லை

கோபத்தில் கடிதத்தை

கிழிக்கும் திருப்தி

மின்னுருவை அழிப்பதில் 

கிடைப்பதில்லை 


எப்பொழுதோ எடுத்து வைத்த

ஒற்றைக் கடிதமது..

எழுதியவர் இல்லை என்றாலும் 

இன்றும்  சொல்கிறது 

அவரின் அன்பை...


பாட்டிக்கு எழுதத் தெரியாது 

பேரப்பிள்ளைகள் 

கையெழுத்தில்

செய்தி வரும்


அம்மாவின் கையெழுத்து

முத்து முத்தாக 

நலம் விசாரிக்கும்


அப்பாவின்

கையெழுத்து 

கிறுக்கலாக

ஆறுதல் சொல்லும்


கையெழுத்து 

எப்படி இருந்தாலும் 

மனதின் மொழி

புரிந்து விடும்

1 comment:

ராமலக்ஷ்மி said...

கடிதங்கள் மனதின் மொழி. அழகாகச் சொல்லி விட்டீர்கள்.

நினைவுகளை மலரச் செய்கிறது கவிதை .