காலம் முழுவதும் போற்றும் நினைவுகளைத் தந்துவிட்டு, இன்றோடு அப்பா மறைந்து 30 நாட்கள் ஆகிவிட்டது.
அன்பு மட்டும் அல்ல கண்டிப்பும் நிறைந்தவர் அப்பா. படிப்பில் கண்டிப்பு மற்றவற்றில் சுதந்திரம். தன் காலத்து அப்பாக்கள் போல் அல்லாது எனக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் புரியவே எனக்கு நிறைய நாள் தேவைப்பட்டது. பக்கத்து வீட்டில் அப்பாக்கள் வரும் நேரம் உள்ளே ஓடும் குழந்தைகளும் அம்மாக்களும் இருக்க, எப்பொழுதோ வந்து விட்ட அப்பா நம்மை அழைக்க கூட இல்லை என்பதன் சுதந்திரம் வீட்டை விட்டு வெளியேறி வெளியுலகம் காணும்பொழுது புரிந்தது.
நேரம் தவறாமை நேர்மை இதெல்லாம் அப்பாவிடமிருந்து கற்றவை. அப்பாவின் அன்பு கடுமையுடன் கூடியது. எந்த அளவு கோபம் வருமோ அதே அளவு அன்பும் உண்டு. 11ம் வகுப்பிலும் சைக்கிளில் வைத்து அழைத்து சென்றது ஒன்று. பள்ளி செல்ல பேருந்தில் ஏற்றிவிட்டு பின்னால் சைக்கிளில் வந்து பள்ளியை அடைந்து விட்டேனா என பார்க்க வருவது என்பதெல்லாம் அப்பாவால் மட்டுமே முடியும். உடல் நலமில்லை என்றால் அம்மாவிடம் இது எண்ணை அதிகம் , அது சரியில்லை என்ற கோபத்தின் பின்னுள்ள அன்பு பிள்ளைகள் வரும் பொழுதுதான் புரிகிறது.
என்ஜினீயரிங் படிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. பயாலஜி தான் பிடிக்கும் என்றாலும், கிடைத்த வாய்ப்பை நீ விடக்கூடாது, பின்னால் வருத்தப்படக்கூடாது என்று சொன்னதோடு அல்லாமல் எந்த கோர்ஸ் டாப், என்று பார்த்து விட்டு வந்து...கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் சிறந்தது...ஏசியில் வேலை பார்க்கலாம் என்று பார்த்து பார்த்து சேர்த்தது அப்பா தான். பெண் பிள்ளைக்கு எதற்கு என்ஜினீயரிங் என்ற சிலரின் குரல்களை எல்லாம் செவி மடுக்காமல் கல்லூரியில் சேர்த்த பொழுது தெரியவில்லை...அவர் வரையில் அவர் செய்தது எனக்கு எத்தனை பெரிய மைல்கல் என்று.
கல்லூரியில் இருந்து வர ஆறு மணிக்கு மேல் ஆனால் அந்த பெரிய அரசு குடியிருப்பின் இரண்டு கேட்டிலும் மாறி மாறி காத்திருப்பார் எந்த பக்கமும் நான் வரலாமென... நடுவில் வீட்டிற்கு சென்று ஒருமுறை தான் விட்டு விட்டோமோ என ஒரு பார்வை வேறு. அந்த செயலுக்கு பின்னால் இருக்கும் பொறுமை அப்பொழுது புரியவில்லை.
கூட்டுப்புழுவாக இருந்த என்னை , தைரியமாக வேலை கிடைத்ததும் சென்னையில் விடுதியில் சேர்த்து இன்று இங்கு இருக்க , அவர் பார்த்து பார்த்து செய்தவை ஏராளம். தினம் தனியே விடுதிக்கு சென்றாலும் அவர் வந்தால் விடுதி வரை வந்து உள்ளனுப்பிவிட்டு 7கி.மீ. நடந்து ஊருக்கு பஸ் பிடிக்க செல்வார். பிள்ளைகளின் படிப்பு , வேலை, விடுதி , திருமணம் எல்லாவற்றிலும் அவர் எடுத்த சிரத்தையும் அன்பும் எங்களின் வரம்.
நடையும் மிதிவண்டியும் அவருக்கு பிரியமானவை. வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுதும் சரி, ஒய்வு பெற்ற பின்பும் சரி... வெகு நாட்களுக்கு அவை தான் அவரது ஊர் சுற்றலுக்கு துணை, மெல்ல மெல்ல அவரிடமிருந்து ஒவ்வொன்றாக பறிக்கப்படும்வரை.
அப்பாவுக்கும் நல்ல நினைவு சக்தியும் கூட... பிள்ளைகளுடன் வீட்டிற்கு சென்று கிளம்பினால்.. தேடி தேடி..யோசித்து யோசித்து நாங்கள் விட்டு வரும் அத்தனை பொருட்களும் எடுத்து கொடுப்பார். தன் 63 வயதில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கை அடிபடும்வரை சிரசாசனம் செய்வார். சைக்கிளில் தான் சென்னை உலா... கிட்டதட்ட பத்து கி.மீ தொலைவில் இருக்கும் இடங்களுக்கு கூட சைக்கிளில் சென்று வருவார். கை குணமானவுடன் சைக்கிளை ஓரம் கட்டினோம். அப்புறம் பஸ் அல்லது நடை தான்.
எந்த பொருள் வீட்டிற்கு வாங்க வேண்டும் என்றாலும் எத்தனை முறை வேண்டும் என்றாலும் செல்வார். கிட்டதட்ட 15 கி .மீ தள்ளி வசிக்கும் எனக்கும் பிள்ளைகளுக்கும் ஏதேனும் அம்மா செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் (எவ்வளவு சின்ன அளவாக இருந்தாலும் ..) பஸ் ஏறி வந்து கொடுத்துவிட்டு சென்று விடுவார் . ஒரு நாள் தி.நகரில் விழுந்து கால் முறிந்த பிறகு கூட குணமாகி மீண்டும் பஸ் + நடை தொடர்ந்தது.
பெற்றோருக்கு என்றும் பிள்ளைகள் தான் என்பது போல் பேத்திகளுக்கு தின்பண்டங்களுடன் எனக்கு பிடித்த கேக் வேறு வாங்கி வருவார்...அப்பா எனக்கு வயசு ஆகிவிட்டது ...வாயை கட்டணும் என்று சொன்னாலும்...மீண்டும் அந்த கேக் வரும்.
எப்படி எலும்பு முறிந்தது என்று தெரியவில்லை...ஆனால் சுளுக்கு என்று ஒரு வாரம் சிரமப்படடார்... எலும்பு முறிவு என்று அறிந்த பொழுது இன்பக்ஷன் ஆகி இருந்தது. ஆப்பரேஷன் முடிந்து நன்கு நலம் பெற்றார் போல தான் இருந்தது. சுறுசுறுப்பானவர் வெறித்து பார்த்ததும்...ஞாபக சக்தி உடையவரின் ஞாபகம் குறைந்த பொழுதும் ...அறியவில்லை இனி அப்பாவை வேறு மாதிரி பார்க்க போகிறோம் என்று. அல்செமீர் என்ற அந்த நோய் அப்பாவை மாற்ற ஆரம்பித்தது.
என்றாலும் அந்த சிரிப்பு , பாசம், சில வேளைகளில் கிண்டல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எட்டி பார்க்கும். சில நேரம் யாரோ போல் அமர்ந்து இருப்பார். ஒரு காலத்தில் பிடித்த அந்த நடை கூட அவருக்கு அலுப்பானது. தினம் சிரசானமும் பிராணாயாமம் செய்து ஓடி ஓடி உழைத்தவரா என்று தோன்றும்.
அப்பாவுக்கு அல்செமீர் முன் வரை எல்லாம் தானே பார்த்து கொள்வார். அம்மா அவரை பற்றி கவலை படாது எங்கும் செல்லலாம்.
முடிவில் ... கோவிட் 2வைத்து அலை கோர தாண்டவம் ஆடிய பொழுது ...அப்பாவின் வயது மற்றும் உடல்நிலை காரணமாக மருத்துவமனை கிடைக்காது அலைந்து ஏதோ ஒன்றில் சேர்த்து ... நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்பது போல் ஆகிவிட்டது...கொடூரமான நிலை...கொஞ்ச நாட்கள் அவரை நாங்கள் பார்த்துக் கொண்டது போதும் என்று எண்ணி விட்டார் போல... அவரது 76ம் பிறந்த நாள் அன்று வீட்டை விட்டு மருத்துவமனை அனுப்பினோம்... ஒரு வாரம் கழித்து ...அம்மாவின் 69ம் பிறந்த நாளுக்கு வீடு திரும்பவில்லை... எப்பொழுதும் மனைவி பிள்ளைகளை பார்த்துக் கொண்டவரை , மனைவி பிள்ளைகளால் விடை கொடுக்க இயலவில்லை...
இறையே என்றீரோ ...
அம்மா என்றீரோ ...
அப்பா என்றீரோ ...
அன்பே என்றீரோ...
மகனே என்றீரோ...
மகளே என்றீரோ...
மக்களே என்றீரோ...
மண்ணோடு உறைந்தீரோ
காற்றோடு கலந்தீரோ
நெருப்போடு ஒளிர்ந்தீரோ
நீரோடு கரைந்தீரோ
விண்ணோக்கி விரைந்தீரோ..
மயில் இறகாக
மனம் வருடும்
மகிழ்ந்து இருந்த
மறவா தருணங்கள்
நீர்க்குமிழி வாழ்க்கை
பட்டென்று வெடித்தாலும்
நீங்கா நினைவுகளால்
நிலைத்து நிற்கும்
ஒருவரின் வாழ்வின் ஒரு பகுதியை இப்பக்கத்தில் கொண்டு வரலாம் என்ற அறியாமையில் சிரிக்கிறேன். அப்பாவின் ஒரு துளி அன்பை இங்கு நிரப்பி சற்றே ஆறுதல் கொள்கிறேன்.