என் மேகம் ???

Monday, February 2, 2009

வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள் (தொடர் பதிவு)

அமிர்தவர்ஷினி அம்மா வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள் பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். எனக்கு உடனே எப்பவோ படிச்ச தமிழ் பாடம் நினைவுக்கு வந்தது. அதில நான் தமிழ்னு நினைச்சுட்டு இருந்ததை எல்லாம் வடமொழி, பாரசீகம், லத்தீன் போன்ற மொழிகளில் இருந்து வந்ததுனு இருக்கும். எனவே எது உண்மையில் தமிழ்ச்சொல் என்பதில் எனக்கு எப்பொழுதுமே குழப்பம் தான்.

இந்த தலைப்பைப் பார்த்ததும் சொல்வழக்கா, நூல் வழக்கா அப்படீனு கன்ஃப்யூஷன். ஆமாங்க பேச்சு வழக்கில் ஆங்கிலம் பேசுவது, எழுதும் பொழுது தமிழில் எழுதுவோம். பாருங்க கன்ஃப்யூஷன் (குழப்பம்) , டிஸ்கஷன் (கலந்துரையாடல்), கப்(கோப்பை), ஸ்பூன் (தேக்கரண்டி), ஸாரி (மன்னிப்பு) , தாங்க்யூ (நன்றி) etc etc...(இன்ன பிற).

அதனால் சொல்வழக்கே எடுத்துக்கிட்டேன். இந்த சொற்கள் இன்னும் சில இடங்களில் புழக்கத்தில் இருக்கலாம் , சில இடங்களில் வேறு சொற்கள் வந்து மறைந்தும் இருக்கலாம். சின்ன வயசில வாசல் தெளிச்சு கோலம் போடுங்கறதை "முத்தம் (முற்றம்) தெளிச்சு , கோலம் போடு" என்பார்கள். இப்பொழுது முற்றங்கள் குறைந்து விட்டதாலோ என்னவோ, இவ்வழக்கு இப்பொழுது "வாசல்" என்றே மாறி விட்டது. புழக்கடை என்று பின்வாசலைக் குறிப்பார்கள். இதுவும் இப்பொழுது பின்னால் என்று மாறிவிட்டது. பரண் மேல போடற பொருள் எல்லாம் இப்ப "லாஃப்ட்--ல" போடச் சொல்றாங்க. இரும்பு கிராதி இரும்பு கேட் ஆய்டுச்சு. புகைப்படத்துக்கு சட்டம் போடறது ஃப்ரேம் அப்படீனு இப்ப தான் நினைவுக்கு வருது. காரை எப்படி எனக்கு மொட்டை மாடியாச்சுனு யோசிக்கிறேன்.

எங்கம்மா அழைத்து நான் கேட்டு உள்ள ஒரு உறவுமுறை மாம்டக்கா. மாமன் வீட்டு அக்கா என்பதே இது. இப்பொழுது யாரும் அழைப்பதாகத் தெரிவதில்லை. மாமன் மகளை மதினி என்பார்கள். நான் அழைத்த பொழுது ஒருவர் "அண்ணி" என்று அழை , மதினி என்பது பட்டிக்காடு போல் உள்ளது என்றார்கள். அவர்கள் இருப்பது ஒரு பட்டிக்காடு என்பது வேறு விஷயம். இதுக்கெல்லாம் விசனப்பட முடியுமா? அப்பப்ப "ஃபீல்" பண்ணுவேன்.

வழக்கில் இருந்தாலும் வீட்டில் இல்லாது போனதால் வழக்கொழிந்த சொற்கள் அம்மி, குழவி, உரல், உலக்கை, சல்லடை, சிணுக்கரி (சிடுக்கெடுக்க உபயோகிப்பது. கம்பி போல் இருக்கும்), ஊதாங்குழல். குழந்தைக்கு மருந்து புகட்ட சங்கு பயன்படுத்துவோம். இப்பொழுது தான் ப்ளாஸ்டிக் குப்பிகள் மருந்தோடு வந்துவிட்டனவே!! வாக்கர் வந்ததால் நடைவண்டியும், சிம்னியால் புகைபோக்கியும், சோப்பினால் படிகாரமும் வழக்கொழிந்து போயின.


தமிழைச் செம்மொழி ஆக்கிய அரசே இன்னும் பலரால் கவர்ன்மெண்ட் என்றே அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட்டை ஆகத்தாகக் அழைக்கும் கட்சிகள் ஆடி/ஆவணியாக அழைத்தால் , தமிழ்த் தேதியில் பிறந்த நாளைத் தலைவர்கள் கொண்டாடினால் தமிழ் மாதங்கள் வழக்கொழியாமல் இருக்கும். இன்றும் என் அம்மா உறவினரோடு பேசுகையில் தமிழ் மாதங்களில் தான் நாங்கள் பிறந்த தேதியைக் கூறுவார். இவர்களைப் போன்றோராலும், மாதங்களுடன் சேர்ந்து விட்ட பண்டிகைகளாலும் (தைப்பூசம், மாசி மகம் ....), கல்யாணம், கோயில் காரியத்திற்கான பத்திரிக்கைகளாலும் இன்னும் தமிழ் மாதங்கள் உயிரோடு இருக்கின்றன.

வாழ்க தமிழ்!!!

இப்பதிவைத் தொடர நான் அழைக்க விரும்புவோர்:

முத்துச்சரம் இராமலஷ்மி மேடம்
தமிழ் திகழ்மிளிர்
மழைக்கு ஒதுங்கியவை அ.மு.செய்யது

19 comments:

பழமைபேசி said...

//சோப்பினால்//

உங்களுக்கும் எமது வாழ்த்துகளும் நன்றியும்! நிறையச் சொல்லுகளை நினைவுபடுத்திட்டீங்க.... இஃகிஃகி!

சோப்பைப் பெரியவிங்க சொல்லுறது சவக்காரம்.

Dhiyana said...

முன்பு அப்பாவை ஐயா என்று கூறுவதும் உண்டு. இப்பொழுது அப்பாவும் போய் டாடி ஆகி விட்டது.

ஹேமா said...

அமுதா சந்தோஷமாயிருக்கு.
எத்தனை பழைய மறக்கும் தறுவாயில் இருக்கும் சொற்கள்.
மருந்து பருக்கும் சங்கை பாலடை என்றும் சொல்வதாய் ஞாபகம்.சரியா?

நான் என் கவிதைகளில் எங்கள் ஊர்ப் பழக்கச் சொற்களைப் புகுத்திக்கொள்வேன் சிலசமயங்களில்.

ராமலக்ஷ்மி said...

அழகா சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள்.

புழக்கடை எப்போதும் ’பொறவாசல்’தான்.
வழக்கில் என்பதறகு புழக்கத்தில் என்போம்.
அடுப்பங்கரையாகிய அடுக்களை ’அடுக்காளை’யாய் இருந்தது.
பாத்திரம் கழுவும் சர்வீஸ் ஏரியா ’அங்ஙனம்’ என்றழைக்கப் பட்டது.
மொட்டை மாடி--- ‘தட்டட்டி’.
மாடி----’மச்சு’
வீட்டு ஹாலாகிய பாடசாலை ‘பட்டாலை’ எனப்பட்டது.
மணமேடை---- ‘மணவட’.
புகைபோக்கி எமக்குப் ’புகைக்கூண்டு’.
அண்ணிகள் எப்போதுமே ‘மதினி’கள்தான்:)!

முத்துலெட்சுமி பதிவிலும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லி விட்டதால் இதையே உங்கள் தொடர் அழைப்புக்கான பதிலாய் ஏற்று மார்க் கொடுத்திடுங்க அமுதா:)!

தமிழ் said...

/மாமன் மகளை மதினி என்பார்கள். நான் அழைத்த பொழுது ஒருவர் "அண்ணி" என்று அழை , மதினி என்பது பட்டிக்காடு போல் உள்ளது என்றார்கள். அவர்கள் இருப்பது ஒரு பட்டிக்காடு என்பது வேறு விஷயம். இதுக்கெல்லாம் விசனப்பட முடியுமா? அப்பப்ப "ஃபீல்" பண்ணுவேன். /

இதைப் படித்தப் பிறகு அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரிவில்லை

/வழக்கில் இருந்தாலும் வீட்டில் இல்லாது போனதால் வழக்கொழிந்த சொற்கள் அம்மி, குழவி, உரல், உலக்கை, சல்லடை, சிணுக்கரி (சிடுக்கெடுக்க உபயோகிப்பது. கம்பி போல் இருக்கும்), ஊதாங்குழல். குழந்தைக்கு மருந்து புகட்ட சங்கு பயன்படுத்துவோம். இப்பொழுது தான் ப்ளாஸ்டிக் குப்பிகள் மருந்தோடு வந்துவிட்டனவே!! வாக்கர் வந்ததால் நடைவண்டியும், சிம்னியால் புகைபோக்கியும், சோப்பினால் படிகாரமும் வழக்கொழிந்து போயின/

சரியாகச் சொன்னீர்கள்

/ஆகஸ்ட்டை ஆகத்தாகக் அழைக்கும் கட்சிகள் ஆடி/ஆவணியாக அழைத்தால் , தமிழ்த் தேதியில் பிறந்த நாளைத் தலைவர்கள் கொண்டாடினால் தமிழ் மாதங்கள் வழக்கொழியாமல் இருக்கும். இன்றும் என் அம்மா உறவினரோடு பேசுகையில் தமிழ் மாதங்களில் தான் நாங்கள் பிறந்த தேதியைக் கூறுவார். இவர்களைப் போன்றோராலும், மாதங்களுடன் சேர்ந்து விட்ட பண்டிகைகளாலும் (தைப்பூசம், மாசி மகம் ....), கல்யாணம், கோயில் காரியத்திற்கான பத்திரிக்கைகளாலும் இன்னும் தமிழ் மாதங்கள் உயிரோடு இருக்கின்றன./

உண்மைதான்

தமிழ் said...

தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றிங்க

நேரம் கிடைக்கும்பொழுது கண்டிப்பாக
இடுகை இடுகிறேன்.

நட்புடன் ஜமால் said...

புத்திசாலிகள் நிறைய இருக்காங்கப்பா

அமுதா said...

நன்றி பழமைபேசி. எனக்கு படிகாரம்னு எங்க மாம்மை சொன்னதா நினைவு. தவறா இருக்கலாம். திருத்தியதற்கு நன்றி


தீஷு - "ஐயா" ஆமாங்க. அம்மா கூட முன்பெல்லாம் அம்மை என்பார்கள்.

அமுதா said...

நன்றி ஹேமா.
//மருந்து பருக்கும் சங்கை பாலடை என்றும் சொல்வதாய் ஞாபகம்.சரியா

ஆமாம். என் தோழி அப்படிதான் கூறுவார்.

நன்றி ராமலஷ்மி மேடம். நிறைய சொல்லிட்டீங்க. நான் இன்னும் நிறைய நீங்க பதிவிடுவீங்க தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணிணேன்.

அமுதா said...

கருத்துக்கு நன்றி திகழ்மிளிர்.

அமுதா said...

வருகைக்கு நன்றி ஜமால்

நட்புடன் ஜமால் said...

மாம்டக்கா
சிணுக்கரி


இது இரண்டும் புதியவை எனக்கு.

ராமலக்ஷ்மி said...

நன்றி அமுதா:)! எனக்குத் தெரிந்த அளவில் அவ்வளவுதான். இன்னும் யோசித்ததில் விட்டுப் போன ஒன்று:
வராந்தா--’தாசா’ பெரும்பாலும் இச்சொல் தாழ்வாரம் என்பதிலிருந்து வந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

சந்தனமுல்லை said...

நல்ல பட்டியல் அமுதா!

//வாக்கர் வந்ததால் நடைவண்டியும், சிம்னியால் புகைபோக்கியும், //

ஹஹ்ஹா!


//குழந்தைக்கு மருந்து புகட்ட சங்கு பயன்படுத்துவோம்//

பாலாடை -ன்னு சொல்லுவோம்..இப்பவும்! இன்னும் உபயோகத்தில்தான் இருக்கிறது..பொருளும் சொல்லும்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

மாதங்களுடன் சேர்ந்து விட்ட பண்டிகைகளாலும் (தைப்பூசம், மாசி மகம் ....), கல்யாணம், கோயில் காரியத்திற்கான பத்திரிக்கைகளாலும் இன்னும் தமிழ் மாதங்கள் உயிரோடு இருக்கின்றன.//

மிக மிக மிகச் சரி.

நானானி said...

சிணுக்குரியா...அல்லது சிணுக்கூரியா?
வராந்தா..தாசா இல்லை தார்சா
சரியா?
நல்ல தொடர்பதிவு நிறைய பேரை கொ.வ. சுத்தவச்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.

அமுதா said...

வருகைக்கு நன்றி நானானி. "சிணுக்கரி" என்பது சொல்வழக்கு. உண்மையில் எப்படி எழுத வேண்டும் என்று குழம்பியது உண்மை

ஆதவா said...

நானும் எப்போதான் யோசிக்கிறேன்.. இத்தனை தமிழ் வார்த்தைகள் எங்கே சென்றன??

அருமையான, காலத்திற்குத் தேவையான பதிவு

அ.மு.செய்யது said...

ஆஹா...மன்னிக்கவும்..எப்படியோ இந்த பதிவை நான் மிஸ் பண்ணிட்டேங்க..

தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி அமுதா !!!!