என் மேகம் ???

Monday, December 20, 2010

புனித ஜார்ஜ் கோட்டை

சென்னை வந்து பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும், சென்னையில் இருக்கும் முக்கிய இடங்களுக்கு சென்றது மிகக்குறைவே!!! சென்ற வாரம் புனித ஜார்ஜ் கோட்டை செல்ல முடிவு செய்தோம். கடற்கரை ஓரத்தில் சில்லென்ற காற்று வீச, கோட்டைக்கு எதிரே இருந்த் பூங்காவில் காரை நிறுத்தினோம். இப்பொழுது சட்டமன்றம் அங்கில்லாததாலோ என்னவோ, வாகனங்கள் ஏதும் காணவில்லை. இந்தியாவின் உயரமான கொடிக்கம்பத்தில் கம்பீரமாகப் பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய கொடி வரவேற்றது.



புகைப்படம்: வலை




நுழைவாயிலில் கையெழுத்திட்டு, சிறு அகழிபோன்றதொரு அமைப்பைக் கடந்தோம். சின்ன சின்ன பீரங்கிகள் அணிவகுத்து நின்றன. வலப்புறம் கண்காட்சியகம் நின்றது. வெள்ளியன்று சென்றதால் கண்காட்சியகம் விடுமுறையென மாதா கோயில் சென்றோம். அது, 1678-80 AD காலகட்டத்தில் கட்டப்பட்டது. சர்ச்சை சுற்றிலும்... கல்லறைகள் 1700 காலகட்டத்தைச் சுற்றி இருந்தவர்களின் கல்லறைகள். சின்ன சின்ன கல்லறைகள் முதல் பல வருடம் வாழ்ந்து மறைந்தவரின் கல்லறைகள். பலருக்கு எங்கோ பிறந்து இங்கு விதி முடிந்திருந்தது ... மூன்று நூற்றாண்டுகள் கடந்து நிற்பது போன்ற உணர்வு மனதைப் பிசைந்தது.

மாதா கோயில் விரிந்து இருந்தது; பெரிய பெரிய கதவுகளும் சன்னல்களும் என்று பிரும்மாண்டமாகத் தெரிந்தது. குழந்தையுடன் மறைந்த தாய், திருமணமான மூன்றே மாதங்களில் மறைந்த ஆசை மனைவி, அன்புக் கணவன், நெருங்கிய தோழமை, மேலதிகாரி பணியாளர் என்று பலரின் மறைவின் பின்னணிகளை தாங்கி நின்றன சுவர்களும் தூண்களும். சில இடங்களில் மரணத்திற்கு வருந்தும் பளிங்குச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. மேற்கத்தியரோடு, இந்தியரைக் குறிக்கும் தாடியுடன் ஓர் உருவமும், சற்றே மொட்டைத்தலையுடன் ஓர் உருவமும் காண முடிந்தது. ஞானஸ்தானத் தொட்டி ஒன்றும் இருந்தது. அக்கோயிலில் ஞானஸ்தானம் செய்யப்பட்டவர்கள், திருமணம் செய்து கொண்டவர்கள், கல்லறையில் புதைக்கப்பட்டவர்கள் என்று பல கோப்புகள் இருந்தன. எழுத்துக்கள் முத்து முத்தாக அழகாக இருந்தன.


ஞாயிறன்று மீண்டும் அருங்காட்சியகம் சென்றோம். அன்று சர்ச்சுக்கு விடுமுறை. இந்த அருங்காட்சியகம் முன்பு மீட்டிங், லாட்டரி, பொழுதுபோக்கு, தேநீர் விடுதி போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டது. பின்பு பண்டகச்சாலையாகவும் இருந்துள்ளது. மூன்று தளங்களில் காட்சியகம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இரண்டு தளங்களுக்கு மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி. நுழைவுச்சீட்டு ஐந்து ரூபாய்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மிக வலுவான கோட்டை என்று சொல்ல இயலாது.. ஆனால் மிக வலுவான ஒரு சரித்திரத்தை உருவாக்கிய பங்கு இதற்கு உண்டு. இந்த கோட்டை கட்டப்படாது இருந்தால் இந்திய சரித்திரமே மாற்றி எழுதப்பட்டிருக்கலாம். அப்பொழுது சூரட்டில் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை இருந்தது. இந்த கோட்டை கட்ட அனுமதி கேட்டு வந்த பதில் பட்டும்படாமலும் இருந்தது. அந்த கடிதம் உரிய நேரத்தில் வந்திருந்தால், ஒருவேளை கோட்டை கட்டப்படாது போயிருக்கலாம். ஆனால்... காலம் தன் கோலம் வரைந்தது. பிரிட்டிஷ் சரித்திரத்தின் மிகப்பெரிய ராஜ்யமும், இந்திய சரித்திரத்தின் வலிகள் நிறைந்த காலமும் கோட்டையின் அஸ்திவாரத்தில் தொடங்கியது. இங்கிலாந்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் புனித ஜார்ஜின் நினைவாக கோட்டைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இது முதலில் வர்த்தக பரிமாற்றத்திற்காகக் கட்டப்பட்டது தான்... பின்னர் அரசியல் கோட்டையானது.

கீழ்தளத்தில் சிறு பீரங்கிகள், கோட்டைக் கதவுகளைத் தகர்க்க உதவும் கருவி, போரில் பயன்படுத்திய குண்டுகள் (எம்டன் என்பது சென்னையைத் தாக்கிய ஜெர்மானிய கப்பல் என்று அறிந்தேன்), சீருடைகள், போருடைகள், படைக் கொடிகள், பதக்கங்கள், வாட்கள், துப்பாக்கிகள், போர்சிலீன் பாத்திரங்கள், கலைப்பொருட்கள்,கோட்டையின் மாதிரி ... என்று பலவும் கண்காட்சியில் இருக்கின்றன.

மேல்தளத்தில் பகோடா (அ) வராகன் முதற்கொண்டு, பணம், அணா, பைசா , ரூபாய் என்று பல்வேறு காலங்களில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள் இருக்கின்றன. பல மேற்கத்திய அதிகாரிகள், இராணிகள் மற்றும் நவாபுகளின் படங்களும் பார்வைக்கு உள்ளன. ஆங்கிலே ஓவியர்கள் இருவர் நம் நாட்டைச் சுற்றிப்பார்த்து வரைந்த பதிப்போவியங்கள் நாம் காணவேண்டிய ஒன்று. திருச்சி மலைக்கோவில், மதுரை அரண்மனை, ஆற்காடு, ஆரணி, காஞ்சீபுரம் மற்றும் சென்னையின் சில இடங்களில் காணப்படும் அமைதியும் அழகும் மனதை ஈர்க்கின்றன.

எல்லாம் பார்த்து வெளிவரும் பொழுது மனம் சற்று அழுத்தமாகத்தான் இருந்தது. நாம் அடிமையாகக் கிடந்த காலத்தை நினைவுறுத்தும் சின்னம் அல்லவா?


குறிப்பு: பாதுகாக்கப்படும் சின்னம் ஆதலால், புகைப்படம் எடுக்கவில்லை. பிளாஷ் இல்லாமல் புகைப்படமெடுக்கலாம், ஆனால் நான் எடுக்கவில்லை.

3 comments:

Philosophy Prabhakaran said...

சென்னையிலேயே இருந்துக்கொண்டு நான் இதையெல்லாம் ஒருபோதும் கண்டதில்லை...

ராமலக்ஷ்மி said...

//பிரிட்டிஷ் சரித்திரத்தின் மிகப்பெரிய ராஜ்யமும், இந்திய சரித்திரத்தின் வலிகள் நிறைந்த காலமும் கோட்டையின் அஸ்திவாரத்தில் தொடங்கியது.//

வரியை உள் வாங்குகையில் வலி நிறைந்த காலமும் கண் முன் விரிகிறது.

அருமையான பகிர்வு.

//சென்னை வந்து பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும், சென்னையில் இருக்கும் முக்கிய இடங்களுக்கு சென்றது மிகக்குறைவே!!!//

எல்லோரும் இப்படிதான். இங்கே இருப்பதை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதிலே ஆண்டுகள் ஓடி விடுகின்றன.

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர் :-)