வாழ்க்கையே ஒரு நெடும் பயணம் தான். அது முடிவதற்குள் ஒவ்வொருவருக்கும் பல விதமான அனுபவங்கள். வாழ்வின் அனுபவங்கள் என்று பார்த்தால், நான் பார்த்த, கேட்ட, படித்த என்ற அனுபவங்கள் மண்ணின் ஒரு துகள் அளவு கூட கிடையாது. என்றாலும், மனதை ஒரு நொடியேனும் தொட்டுச் சென்ற நொடிகளைப் பதிவு செய்யும் ஆசையுடன் இந்த குறிப்புகள்.
எங்கே தொடங்குவது என்று யோசித்தபொழுது, வாழ்வின் தொடக்கமான பிறப்பே , யாரிடம் தொடங்கியது என்று அறியாதவர்களின் தேடல் நினைவுக்கு வந்தது. இந்த அனுபவங்கள் இல்லையென்றால் “கன்னத்தில் முத்தமிட்டால்...” அமுதாவின் தேடலைப் புரிந்திருக்க இயலாது.
அன்று விடுதியில் அந்த பெண்ணைப் பார்த்தவுடன் எங்கள் புருவம் உயர்ந்தது. தென்னாட்டுப் பெண்ணாக உருவம் இருக்க, பேசியது என்னவோ ஆங்கிலம்... அதுவும் accent-உடன். அலட்டலோ என்றெண்ணியபடி பெயர் கேட்டோம், “எம்மா” என்றாள். “ஹேமா” தான் சரியாக விழவில்லையோ என்றெண்ணினோம். உண்மையில் அவள் பெயர் எம்மா தான். பால்குடி வயதிலேயே வறுமையின் பிடியினால் வெளிநாட்டிற்கு தத்தாகச் சென்றிருந்தாள். வயது வந்தவுடன் தன் தாயைத் தேடி ஒரு மாத விடுப்பில் வந்திருந்தாள். மதுரை அருகே ஏதோவொரு கிராமத்தில் வீட்டு வேலை செய்பவர் என்ற தகவல் மட்டுமே அவளிடம் இருந்தது. அவள் அம்மா கிடைத்தாரா எனத் தெரியவில்லை, ஆனால் அவளது தேடல் ஒரு கேள்வியாக மனதில் தங்கி விட்டது.
நாங்கள் குடியிருந்த வீட்டில் வளைய வருவாள் பதின் வயதில் ஒரு பெண். காலில் கொலுசொலிக்க, கையில் வளை குலுங்க முகம் முழுதும் சிரிப்புடன் அவள் வந்தால் அந்த பகுதியே கலகல என்று இருக்கும். அவள் தாய்க்கு அவளைக் கண்டாலே முகம் பொலிவுறும். சில நாட்கள் காணவில்லை. என்ன என்று விசாரித்ததில், “அவள் தத்து பிள்ளை” என்ற உண்மையை யாரோ அவளிடம் கூற அவள் தன் கூட்டிற்குள் சுருண்டு கொண்டாள். என்ன என்று சொல்ல? பெண் வேண்டுமென ஆசையாக தத்தெடுத்த பெற்றோருக்கும் வேதனை. சில நாட்களில் நாங்கள் அங்கிருந்து குடி பெயர்ந்ததால் அந்த பெண் மீண்டும் கலகல என்று ஆனாளா என்று தெரியவில்லை. ஆனால் தன்னைப் பெற்றோர் இவரில்லை என்றால் ஏற்படும் அதிர்ச்சி அலைகள் மனதைத் தொட்டுச்சென்றது.
ஆதரிக்க யாருமின்றி தடுமாறும் பிள்ளைகளின் வேதனை ஒரு விதம் என்றால், தத்தெடுக்கப்பட்டு பெற்ற பிள்ளையாக வளர்த்தாலும், உண்மை தெரியும் வேளையில் பிள்ளைகளின் வேதனை ஒரு விதம்.
வாழ்க்கையில் தான் எத்தனை விசித்திரங்கள்?
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
9 comments:
:(உண்மை
அவங்க உணர்வுகள் புரியக் கஷ்டம் தான்.என்ன இருந்தாலும் ஒரு வித்தியாசமான உணர்வை அவங்க உணரத்தானே செய்வாங்க..இப்ப நல்ல நிலையில் இருந்தாலுமே..ஏன் என்று ஒரு கேள்வி வந்ததுன்னா முடிஞ்சு போச்சு..குழப்பம் தானே ..
நல்ல கோட் ப்பா நன்றி பகிர்ந்ததற்கு..
:(உண்மை
அவங்க உணர்வுகள் புரியக் கஷ்டம் தான்.என்ன இருந்தாலும் ஒரு வித்தியாசமான உணர்வை அவங்க உணரத்தானே செய்வாங்க..இப்ப நல்ல நிலையில் இருந்தாலுமே..ஏன் என்று ஒரு கேள்வி வந்ததுன்னா முடிஞ்சு போச்சு..குழப்பம் தானே ..
நல்ல கோட் ப்பா நன்றி பகிர்ந்ததற்கு..
தத்து எடுக்கும் குழந்தைகளுக்கு யாரோ சொல்லித் தெரியும் நிலைமை ஏற்படாமல் ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கும் நாலைந்து வயதிலேயே பக்குவமாகச் சொல்லி தயார் படுத்தி விடுவது பின்னாளில் அவர்கள் உலகை தைரியமாக எதிர்கொள்ள துணை செய்யும். நடைமுறையில் இந்த முறை நல்ல பலன் தந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
பகிர்ந்து கொண்டுள்ள சம்பவம் வேதனை தருகிறது.
//ஆதரிக்க யாருமின்றி தடுமாறும் பிள்ளைகளின் வேதனை ஒரு விதம் என்றால், தத்தெடுக்கப்பட்டு பெற்ற பிள்ளையாக வளர்த்தாலும், உண்மை தெரியும் வேளையில் பிள்ளைகளின் வேதனை ஒரு விதம்.//
உண்மை.எல்லாமே வேதனைதான்.
ஆதரிக்க யாருமின்றி தடுமாறும் பிள்ளைகளின் வேதனை ஒரு விதம் என்றால், தத்தெடுக்கப்பட்டு பெற்ற பிள்ளையாக வளர்த்தாலும், உண்மை தெரியும் வேளையில் பிள்ளைகளின் வேதனை ஒரு விதம்.
......உண்மைதாங்க. குழந்தைகள் பாவம்தான்.
விசித்திரம் நிறைந்த வாழ்க்கை!
அனுபவம் வித்யாசமான ஆசிரியர். அது பாடம் நடத்தி பரிட்சை வைப்பதில்லை.பரிட்சையின் மூலம் பாடங்களைச் சொல்கின்றது.
குறிப்புகளும் கடைசியில் கோட் செய்ததும் அருமை.
விவரம் தெரியும் வயதில் நாமே சொல்லிவிடுவது நலம்
Post a Comment