நட்புக்கு காலத்தைக் கடத்தும் சக்தி உண்டு. பால்ய சினேகத்தைக் காணும் பொழுது பால்யத்திற்கும், கல்லூரி சினேகிதத்தைக் காணும் பொழுது கல்லூரிக்கும் காலம் கடந்து இடம் மாறி செல்கிறோம். அன்று சாலையைக் கடந்த வேளையில் பெயர் சொல்லி அழைத்த நட்பு ஓடி விளையாடிய பருவத்திற்கு அழைத்துச் சென்றது. “எப்படி கண்டுபிடிச்ச” என்ற கேள்விக்கு “எப்படி மறக்க முடியும்” என்ற பதில் பன்னீர் தூவலாக மனதைக் குளிர்வித்தது. நினைவுகள் பகிர்ந்து மனம் மகிழ்ந்தோம்.
மிகவும் நான் மிஸ் செய்த நட்பொன்று உண்டு. சென்ற வருடம் “அழியாத கோலமாக” எழுதிய கடிதம் ஒன்றைப் பகிர்ந்து மகிழும் வாய்ப்பு இந்த வருடம் அமைந்தது. என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள பதிவுலகம் அளித்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தேன். அப்படி இப்படி தேடி LinkedIn & Facebook துணையுடன் 13 வருடங்கள் கழித்து தொடர்பு கொண்டோம். சென்ற வாரம் அவளை சந்திக்கும் வாய்ப்பும் அமைந்தது.
விடிய விடிய கதை தான். இரு பெண் குழந்தைகள் முதற்கொண்டு சில ஒற்றுமைகள் கண்டு மகிழ்ந்தோம். எனது சின்ன சின்ன பிரச்னைகள் அவள் கடந்து வந்த பிரச்னைகள் முன்னும் அவள் சந்தித்த மனிதர்களின் பிரச்னைகள் குறித்தும் பேசிய பொழுதும் காணாமல் போயின. நான் பகிர்ந்த கடிதம் மூலம் வலைப்பக்கம் பற்றி அறிந்து, அவளும் அவள் தாய்மொழியில் வலைபாய்கிறாள் என்பதும், அது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்பதும் மகிழ்ச்சி தந்தது. எந்த ஒரு விஷயமும் அழகாக சொல்வாள்; அவள் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்... என்ன ... ஒருவர் வலைப்பக்கத்தை மற்றவர் படிக்க இயலாது... இருவருக்கும் மற்றவர் தாய்மொழி தெரியாது.
கிளம்பும் பொழுது அவளது நூலக அறைக்கு அழைத்துச் சென்றாள். 07-03-1996 என்று எழுதப்பட்டு அன்புடன் நான் பரிசளித்த ஷேக்ஸ்பியரின் கவிதைத் தொகுப்பு என் கையெழுத்துடன் இருந்தது. 1999 டிசம்பரில் அவள் தோட்டத்தில் பூத்த மலரொன்று பதப்படுத்தப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் 2000 ஆண்டு ஜனவரியில் அவள் தோட்டத்தில் பூத்த மலரொன்று பதப்படுத்தப்பட்டிருந்தது. நூற்றாண்டுகளின் இணைப்பாக அப்புத்தகம் என்றாள். மனம் நெகிழ்ந்தது. அவள் தோட்டத்து மலரொன்று இன்று என் புத்தகத்துள்ளும்.... ”நட்பூ”வின் வாசத்துடன்...
5 comments:
//அவள் தோட்டத்து மலரொன்று இன்று என் புத்தகத்துள்ளும்.... ”நட்பூ”வின் வாசத்துடன்...//
‘அழியாத கோலங்கள்’..
‘வாடாத நட்பூ’..
இரண்டும் வாசிக்க வாசிக்க இனிமை. வாழ்த்துக்கள் அமுதா.
நட்பூ...மணக்கிறது..!;)
வாழ்த்துக்கள் :)
நட்பூ மலர்ந்து நறுமணம் வீசுகிறது. வாழ்த்துக்கள்.
அவள் தோட்டத்து மலரொன்று இன்று என் புத்தகத்துள்ளும்.... ”நட்பூ”வின் வாசத்துடன்...
.... very nice. Superb!
Post a Comment