என் மேகம் ???

Friday, April 23, 2010

பானகம்

சமீபத்தில் "தோசா காலிங்" சென்றிருந்தேன். மெனுவில் "பானகம்" இருந்தது. விளக்கத்தில் "பனம்பழமும் கருப்பட்டியும் கலந்த பானம்" என்று குறிப்பு இருந்தது. குடித்துப் பார்த்தேன்... கருப்பட்டியின் சுவையுடன் சற்றே வித்யாசமாக இருந்தது.


சிறு வயதில் வீட்டில் விழா என்றாலும் சரி ஊர்த்திருவிழா என்றாலும் சரி... அண்டா நிறைய பானகம் கரைக்கப்பட்டு தம்ளர் தம்ளராக காலியாகும். இந்த பானகம் வெல்லம், புளி/எலுமிச்சை சாறு மற்றும் ஏலப்பொடி சேர்த்து செய்யப்பட்டது. இன்றும் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதன் ருசி தனி.

அதன் பிறகு நன்னாரி சர்பத் அந்த இடத்தைப் பிடித்தது. மஞ்சள் நிறத்தை விட சிவப்பு நிறம் தான் பிடிக்கும். அதைக் குடித்து வாய் சிவப்பதை இரசிக்கலாமே!!! எலுமிச்சை, சர்பத், தண்ணீர் ஐஸ்பார் என்று ஒரு பெரிய குண்டா நிறைய கரைத்தால்... குடித்துக்கொண்டே இருப்போம் கோடை வெயிலுக்கு. ”கண் மார்க்” சர்பத் என்று தேடி வாங்குவோம். நாக்கில் சிவப்பு நிறம் ஒட்டுவது போல் இன்றும் மனதோடு இருக்கும் ருசி அது. இன்றும் ஊருக்கு சென்றால் சர்பத் கடை தேடித்தான் கால்கள் ஓடும். தண்ணீருடன் ஒரு ருசி, சோடாவுடன் ஒரு ருசி என்று இன்றும் என்னுடைய all time favorite சர்பத் தான்.

அதன் பிறகு ரஸ்னா சீசன். பவுடராக ஒரு பாக்கட், சிரப்பாக ஒரு பாக்கட் என்று சற்றே வித்யாசமாக சுவையுடன் வரும் அதைக் கலப்பதே ஒரு தனி கலை. அந்த பவுடரையும் சர்க்கரையும் கரைத்து சிரப்பை சேர்த்து, துணியில் வடிகட்டி கான்ஸண்ட்ரேட் தனி கவனத்துடன் தயாராகும். அப்புறம் தண்ணீர் சேர்த்து, கடையில் இருந்து ஐஸ்பார்களை வாங்கி வந்து ரஸ்னா ரெடியானால் "ஐ லவ் யூ ரஸ்னா" என்று அந்த குட்டிப்பெண்ணை எண்ணியபடி நாமும் ருசிக்கலாம். இன்றும் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதன் ருசி தனி.

சமீப நாட்களாக இந்த வேலை எல்லாம் கிடையாது... மிராண்டா, பான்டா, கோக் , பெப்ஸி என்று பெரிய பாட்டில்கள் வாங்கப்பட்டு தொண்டையை நனைக்கின்றன. இதன் ருசியும் தனிதான்... ஏனோ எனக்கு நாவில் ஒட்டாத ருசி...

12 comments:

எம்.எம்.அப்துல்லா said...

தோசா காலிங் எங்க இருக்கு?? எங்கயோ பார்த்த ஞாபகம்..சட்டென்று நினைவில் வரவில்லை.!

ஆயில்யன் said...

பானகத்துக்கும் நன்னாரி சர்பத்துக்கும் நடுவில நீர் மோரெல்லாம் டேஸ்டியது கிடையாதா?

சரியாக சித்திரை கோவில் விசேஷ டைம்ல விளையாடி விளையாடி களைத்துப்போன கையோடு ஸ்பெஷல் ப்ளாஸ்டிக் டம்ளர்களில் தண்ணீர் அதிகம் கலந்த கருவேப்பில்லை உப்பு பின்னே கடுகு எல்லாம் போட்ட நீர் மோர் மொண்டு மொண்டு குடிச்சு மல்லாந்து கிடப்போமாக்கும் :)

ராமலக்ஷ்மி said...

பானகம் நன்னாரி சர்பத் எனக்கும் பிடித்தமானவை:)! ருசித்ததை ரசித்து எழுதி ருசிக்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.

pudugaithendral said...

மிராண்டா, கோக், பெப்ஸி போன்றவற்றிற்கு இப்பவும் வீட்டில் தடை போட்டிருக்கேன்.அதனால் மற்ற விஷயங்கள்தான் கோடையின் வெப்பத்துக்கு. பானகம் அதுவும் எலுமிச்சம்பழம் பிழிந்து, சுக்குப்பொடி சேர்த்திருந்தா சூப்பரா இருக்கும்.

சந்தனமுல்லை said...

ஞாபகப்படுத்திட்டீங்க ....ஐ லவ் யூ ரஸ்னா! :-)

நாமக்கல் சிபி said...

எத்தனை குளிர்பானங்கள் வந்தாலும் நாவில் நிற்கும் பானகத்தின் ருசி தனிதான்!

அமுதா கிருஷ்ணா said...

என் சாய்ஸ் நன்னாரியும்,பவண்டோவும்...

Unknown said...

Could not forget Nannari sarbath with a straw.

"உழவன்" "Uzhavan" said...

//. இன்றும் ஊருக்கு சென்றால் சர்பத் கடை தேடித்தான் கால்கள் ஓடும்//
 
நானும் அப்படித்தான். இப்பபோதும் ஊருக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பும்போது, கோவில்பட்டியில் ஒரு நன்னாரி பாட்டில் வாங்கி வந்திடுவேன் :-)
 
பானகம் (பானக்காரம் என்று நாங்கள் சொல்வோம்) வெயிலுக்கு ஏற்ற பானமும் கூட

நட்புடன் ஜமால் said...

பானகம் நம் சாய்ஸ்

நன்னாரி ஏனோ பிடிப்பதில்லை

அம்பிகா said...

பானகம், இங்கே பானக்காரம் என்று சொல்வார்கள். பொடியாக வெட்டிய இஞ்சி, சீரகமும் சேர்ப்பார்கள். உடம்புக்கும் நல்லது.

பின்னோக்கி said...

பானகம் குடிக்க அருமையான பானம்.