என் மேகம் ???

Tuesday, April 27, 2010

நான் பொறந்த கத சொல்லவா, வளந்த கத சொல்லவா?

கதை சொல்லிகள் பற்றிய பதிவுகள் படிக்கும் பொழுதே மனதை நிறைத்து நின்றனர் அம்மாவும் மாம்மையும். குழந்தை பருவத்தில் இருந்து வாழ்க்கை முழுக்க அலுக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் கதைகளை... கதை சொல்லிகளிடமிருந்து.

மாம்மை .... கதை என்றவுடன் இவர் நினைவு தான் மனதை நிறைக்கின்றது. மாம்மை ஒரு கத சொல்லுங்க என்றால், "நான் பொறந்த கத சொல்லவா, வளந்த கத சொல்லவா, வாழ்ந்த கத சொல்லவா, தாழ்ந்த கத சொல்லவா" என்று மரப்பாச்சி பொம்மை சொன்னதாக கூறி ஆரம்பிக்கும் அழகே தனி. ஏதேதோ கதைகள் கூறுவார்... "பொன்னேங்கர தாசி கதை" , செவ்வாய்க்கிழமை விரதக் கதை , இலச்சுமி கதை , அவ்வை கதை, விக்ரமாதித்யன் கதை, இராமன் கதை, பாண்டவர் கதை, என்று பல கதைகள் அடக்கம். அவர் கூறும் பாம்பு கதைகள் சுவாரசியமானவை... சுடுகாடு வரை வந்து எட்டிப்பார்க்கும் கொம்பேறி மூர்க்கன், கண்ணைக் கொத்தும் பச்சை பாம்பு, பழி வாங்கக் காத்திருந்து திருமணத்தன்று பூவிலிருந்து தீண்டிய பூநாகம் என்று சுவாரசியங்கள் நிறைந்தவை. அது போக அவ்வப்பொழுது "கொழுக்கட்டையை" "அத்திரி பாச்சா" என்று சொல்லி மனைவியின் உடம்பை "கொழுக்கட்டை" போல் வீங்க வைத்த முட்டாள் மாப்பிள்ளை, மாவுக்கு ஆசைப்பட்டு ஆட்டுரலில் தலை விட்ட மாப்பிள்ளை என்ற நாடோடிக் கதைகளும்... சில கதைகளே என்றாலும் எல்லா கதைகளும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது... இன்றும் நினைத்தால் இனிக்கும் கதைகள். குழந்தைகளுக்கு நன்கு கதை சொல்வதாக நினைத்துக்கொள்ளும் எனக்கு, யோசித்துப்பார்த்தால் அவரது திறமையில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லை என்றே தோன்றுகிறது.

ஐயம்மை... இவர்களும் கதை சொல்வார்கள்... திகிலூட்டும் பேய்க்கதைகள். சுள்ளி பொறுக்க சென்ற பொழுது நடுக்காட்டில் அழைத்த முனியும், கன்னிப்பெண்ணைப் பிடித்தாட்டிய பேயும், யாருக்கு உடல் நலமில்லை என்றாலும் "எல்லாம் அவளால் தான்" என்று இறந்து போன யாரோ ஒருவரையும் பற்றியும் கூறி திகிலூட்டுவார். திகிலாக இருந்தாலும் கதை கேட்டுவிட்டு பின்னர் பயந்து கொண்டிருப்போம். இப்பொழுது சிரிப்பாக இருப்பது அப்பொழுது திகில் தான்.

அம்மா... எனக்கு அம்மா சொன்ன கதைகள் நினைவில் இல்லை. ஆனால் அம்மா என் குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறூட்டுவது கண்டு தான் நான் கதை சொல்லக் கற்றுக் கொண்டேன். நாய், பூனை காக்கா என்று எதையாவது வைத்து அவர் கதை கூறும் சுவாரசியத்தில் குழந்தைகள் இரண்டு வாய் அதிகம் உண்ணுவர். டி.வி.யில் ஒருமுறை கதைசொல்லி ஒருவர் குழந்தைகளுக்கான கதை ஒன்றை அபிநயத்தோடு கூறிய பொழுது கதை சொல்வது என்பது ஒரு தனி கலை என்று தோன்றியது. இப்பொழுது என் இரு பெண்களும் அழகாகக் கற்பனை கலந்து கூறும் கதைகள் இனிமை... இனிமை... இனிமை...

அம்புலி மாமா, பாலமித்ரா, கோகுலம் , சிறுவர் மலர் மற்றும் படக்கதைகள் தந்த சுவாரசியங்கள் தனி ரகம். இன்றும் தேவதைக்கதைகளும், நாடோடிக் கதைகளும் மனதை மயக்குகின்றன. கற்பனைகளும் கனவுகளும் நிறைந்த அந்த மாயா உலகிற்கு இட்டுச் செல்லும் கலை கதைசொல்லிகளுக்கு மட்டுமே கைவரும். "நிலவில் இருக்கும் முயலும்", "கடலுள் உப்பை இன்னும் சிந்தும் கருவியும்" என்று இன்னும் பாட்டி சொன்ன கதைகள் கூறும் பொழுது கதை சொன்ன முன்னோரும் கதையோடு நம்முடன் வாழ்கின்றனர்.

6 comments:

நட்புடன் ஜமால் said...

எனக்கும் என் தாயோ தந்தையோ கதைகள் சொல்லியதாக ஞாபகத்தில் இல்லை.

அவர்களுக்கு வறுமையோ வறுமை, கதை சொல்ல நேரம் இருந்திருக்காது, என் தாயின் தந்தை அவர்களின் அனுபவத்தை நிறைய சொல்லியிருக்காங்க, அதிகம் கதை சொல்லிகள் நூல்கள் தான்

ரத்னபாலாவில் துவங்கி ...

ராமலக்ஷ்மி said...

அழகான பகிர்வு அமுதா.

//"கொழுக்கட்டையை" "அத்திரி பாச்சா" //

“அத்தேரிமாக்கு” எங்களுக்கு:)!

//"நான் பொறந்த கத சொல்லவா, வளந்த கத சொல்லவா?"//

நீங்க எந்தக் கதைய சொன்னாலும் நாங்க கேட்க ரெடி. அடிக்கடி சொல்லதான் மாட்டேங்கறீங்க:)!!

சந்தனமுல்லை said...

சுவாரசியமான இடுகை, அமுதா!

Vidhoosh said...

:)

கமலேஷ் said...

நல்ல அழகான பகிர்வு...

ஹுஸைனம்மா said...

மாம்மை, ஐயம்மை - பெயர்களே நிறையக் கதைகள் சொல்லும்போல!!