என் மேகம் ???

Wednesday, September 23, 2009

என்றும் நானறியேன்

இன்றும் கூர் மழுங்காத கத்தியும்
ஓயாமல் ஓடும் சுவர்க்கடிகாரமும்
முகம் பார்த்திராத தாத்தாக்களை
நினைவுக்கு கொண்டுவரும்

வெற்றிலை இடிக்கும் பாத்திரமும்
ஓரமாகக் கிடக்கும் நார்க்கட்டிலும்
கதைகள் சொன்ன பாட்டிகளின்
நினைவுகளை அள்ளி வருகின்றன

விளாம்பழம் கண்டவுடன்
பிரியமாக வாங்கி வைத்து
மறக்காது கொடுத்தனுப்பிய
சின்ன அத்தையின் நினைவு

தோட்டத்து மலர்கள் முதற்கொண்டு
கருப்பட்டி மிட்டாய் இலந்தை வடை
என்று சின்ன சின்ன விஷயங்களும்
எண்ணிலா இன்னும் பல விஷயங்களும்
அன்பைப் பொழிந்த மாமாவின்
நினைவுகளால் மனதை நெகிழ்த்தும்

என்றும் நானறியேன்...
என்னை நினைவுறுத்த
என்ன இருக்கும் என்று!!!

18 comments:

பின்னோக்கி said...

நல்ல கவிதை. உங்கள் திண்ணை கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதை எனக்கு அறிமுகப்படுத்திய ஜீவனுக்கு என் நன்றி.

கவலைப்படாதீர்கள்..ஒவ்வொருவரும், தன் நிழலை விட்டுத்தான் செல்வார்கள். கண்டிப்பாக அடுத்த தலைமுறை நம்மை நினைவுகூறும்.

(உங்கள் பதிவுகள, என் டிரக்கரில் போட்டிருக்கிறேன். ஆனால் இந்த பதிவு அதில் தெரியவில்லை. என்ன காரணம் ?)

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்றும் நானறியேன்...
என்னை நினைவுறுத்த
என்ன இருக்கும் என்று!!!

அருமை அமுதா

ஹேமா said...

உண்மையை இடித்துணர்த்தும் வரிகள் அமுதா.அன்பையாவது நெருக்கமாகக் காட்ட முடியாத தூரத்தில்.அப்போ !

தமிழ் அமுதன் said...

உங்கள்...

அற்புதமான கவிதைகள்தான்.

அது ..

காலத்திற்கும் நிலைத்திருக்கும்!!!!

அதை பாதுகாத்து கொடுப்பது உங்கள் பொறுப்பு..!

அமுதா said...

நன்றி பின்னோக்கி.
/*உங்கள் பதிவுகள, என் டிரக்கரில் போட்டிருக்கிறேன். ஆனால் இந்த பதிவு அதில் தெரியவில்லை. என்ன காரணம் ?)*/
எனக்கும் தெரியவில்லை...

நன்றி அமித்து அம்மா
நன்றி ஹேமா
நன்றி ஜீவன்

ஏனோ தெரியவில்லை இந்த பின்னோட்டங்கள் எல்லாம் மனதை நெகிழ்த்துகின்றன. பதிவுலக நண்பர்களின் அன்புக்கு நன்றி

R.Gopi said...

//இன்றும் கூர் மழுங்காத கத்தியும்
ஓயாமல் ஓடும் சுவர்க்கடிகாரமும்
முகம் பார்த்திராத தாத்தாக்களை
நினைவுக்கு கொண்டுவரும்//

ஆம்...அமுதா... பழையன கழிந்து புதியன புகுந்ததின் விளைவு...

//வெற்றிலை இடிக்கும் பாத்திரமும்
ஓரமாகக் கிடக்கும் நார்க்கட்டிலும்
கதைகள் சொன்ன பாட்டிகளின்
நினைவுகளை அள்ளி வருகின்றன//

இவங்க எல்லாம் இப்போ வழக்கொழிந்து போய்விட்டார்கள்...

//விளாம்பழம் கண்டவுடன்
பிரியமாக வாங்கி வைத்து
மறக்காது கொடுத்தனுப்பிய
சின்ன அத்தையின் நினைவு//

வ‌ரும் சந்த‌தியின‌ருக்கு விளாம்ப‌ழ‌த்தை நினைவு ப‌டுத்திய‌த‌ற்கு ந‌ன்றிங்கோ.. என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும்... வெல்ல‌த்தோட‌ சேர்த்து சாப்பிட்டா அமிர்த‌ம்தான்...

//தோட்டத்து மலர்கள் முதற்கொண்டு
கருப்பட்டி மிட்டாய் இலந்தை வடை
என்று சின்ன சின்ன விஷயங்களும்
எண்ணிலா இன்னும் பல விஷயங்களும்
அன்பைப் பொழிந்த மாமாவின்
நினைவுகளால் மனதை நெகிழ்த்தும்//

கிராம‌ங்க‌ளிலாவ‌து இப்போது கருப்பட்டி மிட்டாய், இலந்தவடை..இவையெல்லாம் கிடைக்கிற‌தா என்று தெரிய‌வில்லை...

//என்றும் நானறியேன்...
என்னை நினைவுறுத்த
என்ன இருக்கும் என்று!!! //

ச‌ரியான‌ கேள்விதான் கேட்டு இருக்கீங்க‌... வாழ்த்துக்க‌ள் அமுதா... ந‌ல்லா இருக்கு...

அமுதா said...

நன்றி கோபி. இன்னும் சாத்தூர் சிவகாசியில் கருப்பட்டி மிட்டாய் கிடைக்கிறது. பனையோலைப் பெட்டி தான் ப்ளஸ்டிக் கவர் ஆகிவிட்டது. சமீபத்தில் மருதமலையில் ஒரு டஜன் இலந்தை வடை வாங்கி வந்து வைத்திருந்து சாப்பிட்டேன் :-)

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு அமுதா!

Deepa said...

Very nice!


aadhangam purigiRathu....thoRRik koLlavum sigiRathu

கோமதி அரசு said...

//என்றும் நான்றியேன்
என்னை நினைவுறுத்த
என்ன இருக்கும் என்று//

பெரியோர்களின் அன்பை நினைத்துக்
கொண்டு இருக்கும் அன்பு நெஞ்சம்
இருக்கிறதே அமுதா.

தமிழ் said...

அருமை

நட்புடன் ஜமால் said...

அருமை

[[என்றும் நானறியேன்...
என்னை நினைவுறுத்த
என்ன இருக்கும் என்று!!!]]

இந்த ப்லாக் இருக்குமே!

"உழவன்" "Uzhavan" said...

//என்றும் நானறியேன்...
என்னை நினைவுறுத்த
என்ன இருக்கும் என்று!!! //

எல்லோரையும் தனக்குத்தானே கேட்கத் தூண்டிய வரிகள்.

+Ve Anthony Muthu said...

நம்மைப் பிறர் நினைவு கூற, நாம் செய்யும் நன்மை மட்டுமல்ல, தீமையும் சில சமயங்களில் காரணமாகிவிடுகிறது.

எனக்கு மருந்திட்டவர்களுக்குச் சமமாக, காயப்படுத்தியவர்களையும், மனதார நேசிக்கிறேன்.

அத்தகைய அவமானங்கள் மட்டும் இல்லாவிட்டால் இன்று இந்த அந்தோணி முத்து இல்லாது போய்விட்டிருப்பான்.

நினைவூட்டியமைக்கு நன்றி சகோதரி.

ராமலக்ஷ்மி said...

அருமை அமுதா. சின்ன சின்ன விஷயங்கள் நினைவுகளை அள்ளி வருவதென்னவோ தினசரி வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது.

உழவன் சொன்னது போல அந்தக் கடைசி வரிகள் எல்லோரையும் சிந்திக்க வைப்பதாய் இருக்க, ஜீவன் சொன்னதையும் வழிமொழிகிறேன்.

எழுத்துப் பயணத்திலே நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் ரசித்தபடியே, கூடவே வந்து கொண்டிருக்கிறோம் நாங்கள்! வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

அதை நீங்கள் அறியமாட்டீர்கள் அமுதா....உங்களைச் சுற்றியிருப்பவர்கள் அறிவார்கள்!

மாதவராஜ் said...

இதுபோன்ற கவிதைகள் நினைவுறுத்த இருக்கும். வாழ்த்துக்கள்.

Dhiyana said...

கண்டிப்பாக இது போன்ற உங்கள் கவிதைகள் உங்களை நினைவூட்டும்..