என் மேகம் ???

Thursday, September 17, 2009

பால் சோறும் பக்கடாவும்

"இன்னிக்கு உங்க வீட்ல என்ன டின்னர்?" - இந்த கேள்விக்கு "ரொம்ப சிம்பிள்" என்று சற்றே மழுப்பலுடன் புன்னகைப்பேன். பதில் சொன்னால் , "அது உங்க குழந்தைகளுக்கு... உங்களுக்கு?" என்று கேள்வி வரும். பால் சோற்றின் ருசி அறியாதவரிடம் பேசி என்ன பயன்? அதன் பிறகும் தொடரும் கேள்விகள்..

"எப்படி சாப்பிடுவீங்க? சர்க்கரை போட்டா?"
"இல்லை. உப்பு சேர்த்தே தான். சிலர் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுவாங்க. அவங்க வழக்கம்"
"எப்படி சாப்பிடுவீங்க? நான் கேள்விப்பட்டதே இல்லை. குழந்தைகளுக்கு தான் கொடுப்பாங்க"
"எங்க ஊர்ப்பக்கம் அப்படி தாங்க"
"சும்மா கதை விடாதீங்க... வீட்லனு சொல்லுங்க... ஊரே சாப்பிடுமா? "


என்ன சொல்வேன்? "பால்சோறும் பக்கடாவும் வேலாயுதம் கடையில் விற்கப்படுவதாகவும் ஏழு மணிக்குள் காலியாவதாகவும் நான் கேள்விப்பட்டதையா? இரவு நிச்சயம், மறுநாள் திருமணம் என்ற வழக்கம் ஆதலால் நிச்சயதார்த்த இரவு உணவில் "பால்சோறும் பக்கடாவும்" ஸ்பெஷல் என்பதையா? திருமணப்பேச்சுகளின் ஒன்றில் "அமெரிக்காவில் இருந்தாலும் என் பையனுக்கு நைட் பால்சோறு சாப்பிட்டாகணும்" என்று காதில விழுந்த பேச்சையா?

அதென்னவோ இந்த பால்சோறு இல்லாவிட்டால் எனக்கு இரவு உணவு உண்ட திருப்தி இராது. இதே பால்சோறு எனக்கு பகலில் பிடிக்காது. சென்னையில் வந்து விடுதியில் தங்கிய பொழுதுதான் பால்சோறின் அருமை தெரிந்தது. சாம்பாரும், இரசமும் (இரண்டும் கிட்டதட்ட ஒண்ணுதான்) கண்டு பெருமூச்சு விட்டு சில இரவுகள் பழத்துடனோ வெளியே சாப்பிடும் ஸ்நாக்சுடனோ முடிந்துவிடும். வெந்நீர் வைக்க மட்டும் என்று ஸ்டவ்வுக்கு விடுதியில் அனுமதி கிடைத்த பொழுது, நைசாக பால் வாங்கி காய்ச்சி பால்சோறு உண்டபொழுதுதான் மனம் நிறைவுற்றது (விடுதி மக்கள் ஓவர் ஆர்வமாகி ஒரு நாள் பாகற்காய் பொறியல் பண்ண, இதையும் போடு என்று ஒருத்தி "ஆஞ்சநேயர் கோயில் வெண்ணெய் பிரசாதம்" சேர்க்க, கமகம என்ற வாசனை சூப்பர்வைசரை ஈர்த்து, ஸ்டவ் வைக்க தடை வந்தது வேறொரு விஷயம்)

பால்சோற்றுடன் ஊறுகாய், புளிக்குழம்பு என்று எல்லாம் ஒத்துப்போனாலும் பக்கடா (அதுவும் ஊர்ப்பக்க பக்கடா ) தான் "ஏ" க்ளாஸ் காம்பினேஷன். சமீப காலத்தில் இரவு அரிசி உணவு சாப்பிட்டால் எடை கூடுகிறது என்று எனக்கு நானே பால்சோறுக்கு "தடா" போட்டுவிட்டேன். குழந்தைகளுக்கு ஊட்டி விடும் பொழுதெல்லாம் நாவூறும். என்றாலும் ஊரில் இருந்து பக்கடா வந்துவிட்டால் எனது இரவு உணவு "பால் சோறும் பக்கடாவும்" தான்.

டிஸ்கி: "என்ன டின்னர்" என்று கேட்டவர்கள் எவரும் டின்னருக்கு வர விருப்பப்படுவதில்லை :-)

28 comments:

ஆயில்யன் said...

//"எப்படி சாப்பிடுவீங்க? சர்க்கரை போட்டா?"
"இல்லை. உப்பு சேர்த்தே தான்//

உப்பு போட்டா?

நாங்கெல்லாம் பால் + சாதம் + ஜீனி போட்டுதான் தின்போம்!

ஆயில்யன் said...

//சாம்பாரும், இரசமும் (இரண்டும் கிட்டதட்ட ஒண்ணுதான்)//

அடடே! ஒண்ணாவ சமைக்கலாமா நானெல்லாம் தனிதனியா சமைச்சு டெரராகியிருக்கேன் அந்த டெக்னிக்க சொல்லிக்கொடுங்க :)

ஆயில்யன் said...

//"என்ன டின்னர்" என்று கேட்டவர்கள் எவரும் டின்னருக்கு வர விருப்பப்படுவதில்லை :-)/

பின்னே அம்புட்டு சூப்பர் காம்பினேஷன்ல சொல்லுறீங்க!

என்ஜாய் யுவர்செல்ஃப் :)))

தமிழ் அமுதன் said...

பால் சோறு எப்படி செய்றதுன்னு
சொல்லலையே ...!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குறிப்பு :சூப்பருங்க.. இப்படி ஒரு ஐடியா இருக்கா..:))

பக்கோடாவை நினைவுப்படுத்திட்டீங்களே.. தயிர்சாதத்துக்கூட சாப்பிடுவேன் நான்..

sowri said...

I will try this combination. Never did with "pakada" though!

அமிர்தவர்ஷினி அம்மா said...

பால் சோறு + மாம்பழம் காம்பினேஷன்ல சாப்பிடுங்க.

சும்மா வழுக்கிட்டு உள்ள போகும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
//சாம்பாரும், இரசமும் (இரண்டும் கிட்டதட்ட ஒண்ணுதான்)//

அடடே! ஒண்ணாவ சமைக்கலாமா நானெல்லாம் தனிதனியா சமைச்சு டெரராகியிருக்கேன் அந்த டெக்னிக்க சொல்லிக்கொடுங்க :)

என்ன பாஸ், எங்க பாத்தாலும் ஒரே ரெசிப்பியா கேட்டுக்கிட்டு இருக்கீங்க, கல்யாணம் ஆகப்போவுதா பாஸ் :))))))))))))

அமுதா said...

/* ஆயில்யன் said...
//சாம்பாரும், இரசமும் (இரண்டும் கிட்டதட்ட ஒண்ணுதான்)//

அடடே! ஒண்ணாவ சமைக்கலாமா நானெல்லாம் தனிதனியா சமைச்சு டெரராகியிருக்கேன் அந்த டெக்னிக்க சொல்லிக்கொடுங்க :)
*/
என்ன பெரிய விஷயம்? சாம்பார் செய்ங்க.. மேலே இருக்கிறது இரசம். கீழே இருக்கிறது சாம்பார். உங்களுக்கு தெரியாததா பாஸ்?



/*அமிர்தவர்ஷினி அம்மா said...
பால் சோறு + மாம்பழம் காம்பினேஷன்ல சாப்பிடுங்க.

சும்மா வழுக்கிட்டு உள்ள போகும்.
*/
அது எங்க அம்மாவுக்கு பிடிச்ச காம்பினேஷன்.

க.பாலாசி said...

உப்பு போட்டா பால் சோறு சாப்பிடுவீங்க...புதுசா இருக்கே...நானும் சர்க்கரை போட்டு சாப்பிட்டுருக்கேன்...

சந்தனமுல்லை said...

/டிஸ்கி: "என்ன டின்னர்" என்று கேட்டவர்கள் எவரும் டின்னருக்கு வர விருப்பப்படுவதில்லை :-)/

:)))) அஞ்சா நெஞ்சன் ஆயில்ஸ்-க்கு இப்படி ஒரு சவாலா!!!

ப்ரியமுடன் வசந்த் said...

// வெந்நீர் வைக்க மட்டும் என்று ஸ்டவ்வுக்கு விடுதியில் அனுமதி கிடைத்த பொழுது, நைசாக பால் வாங்கி காய்ச்சி பால்சோறு உண்டபொழுதுதான் மனம் நிறைவுற்றது //

அவ்ளோ இஷ்டமா?

நானெல்லாம் சாப்பிட்டது கூட கிடையாது...:(

குடுப்பினை இல்லையொ....

ஹேமா said...

பால்சோறு இனிப்போடும் நல்லா இருக்கும்.தேங்காய்ச் சம்பல்,
கறிவேப்பிலைச் சம்பலோடு கொஞ்சம் உறைப்பாகச் சாப்பிட்டுப் பாருங்களேன்.நல்லா இருக்கும்.

ராமலக்ஷ்மி said...

சின்னவயதில் பால்சோறு சாப்பிடதுண்டு எப்போதாவது.

நீங்கள் சொல்லியிருக்கும் விதத்திலேயே எல்லோருக்கும் நாவில் நீர் வந்து விடும்:)!

"உழவன்" "Uzhavan" said...

ஐயோ எச்சி ஊறுது.. நான் இதுவரைக்கும் பால் சோறு சாப்பிட்டதே இல்லை

Anonymous said...

எனக்கு பால் சாதம் பிடிக்காதுங்க..ஆனால் பக்கடா ரொம்ப பிடிக்கும்..


//சாம்பாரும், இரசமும் (இரண்டும் கிட்டதட்ட ஒண்ணுதான்)//



அட கடவுளே இப்போ மாத்திடாய்ங்களா?
அன்புடன்,

அம்மு.

காமராஜ் said...

அது எங்க ஏரியா ஸ்பெசல்.
அசத்திட்டீங்க.அசத்திட்டீங்க.

R.Gopi said...

பால் சோறும், ப‌க்க‌டாவும் பின்னே அமுதாவும்...

சூப்ப‌ர் காம்பினேஷ‌ன்...

ஆமா... நெஜ‌மாவே ந‌ல்லா இருக்குமா அமுதா?? உங்க‌ளை ந‌ம்பி ஒரு வாட்டி ட்ரை ப‌ண்ண‌ போறேன்...

R.Gopi said...

//சாம்பாரும், இரசமும் (இரண்டும் கிட்டதட்ட ஒண்ணுதான்) //

ச‌ரிதானே... கல‌க்காம‌ மேலாக‌ எடுத்தால் ர‌ச‌ம்... க‌ல‌க்கிட்டு எடுத்தா அது சாம்பார்... க‌ரெக்டா??

அன்புடன் அருணா said...

எனக்குப் பிடிக்காதென்றாலும் நிறையபேர் விரும்பிச் சாபபிடுவதைப் பார்த்திருக்கிறேன்...

அரங்கப்பெருமாள் said...

ராஜபாளயம் அருகில் ஒரு கிராமத்து நண்பன் வீட்டுக்குப் போனேன். அங்குதான் அதை கேள்விப்பட்டேன். முயற்சி செய்தேன், அவ்வளவு பிடிக்கவில்லை(பழக்கமின்மை). அவர்கள் வீட்டில் எல்லோரும் நன்றாகச் சாப்பிட்டதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. மோர்,தயிர் கல்யாண வீட்டில் தரமாட்டார்கள்.பால் முறிந்து தயிர் ஆவதால் உறவு முறிந்து விடுமாம். 7 வருடம் முன்பு நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

☼ வெயிலான் said...

பால்சோறும் பக்கடாவும் - இந்த வார்த்தையைக் கேட்டு ரொம்ப நாள் ஆச்சே!

எங்க ஊர்ப்பழக்கமாச்சே இது! நீங்க எந்த ஊரு........

Deepa said...

என் மாமனார் கூட பால்சாதம் உப்பு போட்டுச் சாப்பிடுவார் என்று அத்தை சொல்லிக் கேள்வி.
ஆனால் அது பக்கடாவுடன் சேர்ந்து ஒரு ஸ்பெஷல் அயிட்டம் என்று தெரியாமல் இருந்தது!
:-)

கோமதி அரசு said...

””பால் சோறும் பக்கடாவும்”

நான் சிறுமியாக இருந்தபோது சிவகாசியில் மூன்று வருடங்கள்
இருந்தோம்,அங்கு நிலா சோறுப்
பொங்குதல் என்ற விழா நடக்கும்.அங்கு எல்லோரும் பால் சாதமும் கடிசிக்க
பக்கடா சாப்பிடவாருங்கள் என்பார்கள்.
நான் சாப்பிட்டு இருக்கிறேன்.
நல்லத்தான் இருக்கும்.

Anonymous said...

பக்கடாவை பக்கோடாவாக இல்லாமல் ப்க்கடாவாகவே வாசித்த சந்தோஷத்தில்தான் பதிவை வாசித்தேன். அலுவலகத்திலிருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. வீடு வந்ததும் முதல் வேலையாய் சமைத்து சாப்பிட்டேன். சீனிக்கு பதிலாய் ஸ்வீட்டெக்ஸ்(காலக்கொடுமை).
\\பின்னே அம்புட்டு சூப்பர் காம்பினேஷன்ல சொல்லுறீங்க!\\
என்னோட கொஞ்சம் சொல்லவா?
பழைய சோத்துக்கு வெல்லக்கட்டி,
பாயாசத்துக்கு அப்பளம்,
சாம்பார்,பருப்பு,கோழிக்கறி எதுவாயிருந்தாலும் கொஞ்சம் ரசம்.
பனையோலை கொலுக்கட்டைக்கு தேங்காய்ச்சில்லு(தேங்காய் பத்த (???!!))
மதிய சாப்பாட்டோட மாம்பழம்!
எப்பூடி...............?

+Ve Anthony Muthu said...

எனக்கு மிக மிகப் பிடித்த அதே காம்பினேஷன்.

வாவ்.

மாதவராஜ் said...

சாத்தூர், சிவகாசிப் பக்கத்திற்கென்ற முக்கியமான இரவு உணவல்லவா இது...!

Dhiyana said...

பால் சோறு பக்கோடா சூப்பர் காம்பினேஷன் அமுதா. தினமும் இரவு நானும் சாப்பிட்டுயிருக்கிறேன். ஆனால் இப்பொழுது இல்லை.