என் மேகம் ???

Tuesday, September 29, 2009

ஊஞ்சலாடும் நினைவுகள்

சமீபத்தில் ஊருக்கு சென்று வீடுகள் நிறைந்த ஒரு இடத்தைக் கடக்கும் பொழுது அம்மா சொன்னார் "இங்க தான் நாங்க சோத்தைக்கட்டிட்டு வந்து ஊஞ்சல் விளையாடுவோம். அப்ப இது காடா கிடக்கும். இப்ப பாரு", என்று. ஊஞ்சல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விஷயம். இன்றைக்கும் பூங்காக்களில் "குழந்தைகளுக்காக" என்று போட்டிருந்தாலும் விளையாடும் பெரியவர்களைக் காணலாம். சட்டென்று மனம் ஊஞ்சல் நினைவுகளைத் தேடியது;

கோவையில் வனச்சரகக் குடியிருப்பு தான் நான் வளர்ந்த இடம். வீட்டருகில் நிறைய புளிய மரங்கள் நாங்கள் விளையாட நிழலை விரித்துக் காத்திருக்கும். சிறுவர்களின் விளையாட்டுத் திடல் அது தான். அதன் மரக்கிளைகளில் தொங்கி ஊஞ்சல் ஆடிய பொழுதுகள் இன்றும் பசுமையாக... அந்த நிழலின் குளுமையாக....அதன் பின் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வராண்டா வந்தது. நல்ல தாம்புக் கயிறும், சின்னதாக ஊஞ்சல் பலகையும் வாங்கி அப்பா ஊஞ்சல் போட்டுத் தந்தார்.எனக்கும் என் தம்பிக்கும் இடையில் ஊஞ்சல் யாருக்கு என்று அடிக்கடி யுத்தம் நடக்கும். சில சமயம் ஊஞ்சலில் தட்டாமாலை சுற்றி, தாம்புக்கயிறில் முடியும் சுற்றி, கத்திரிக்கோல் உதவியின்றி நான் எழுந்தது இல்லை. என்றாலும் ஊஞ்சலும் தட்டாமாலையும் அடிக்கடி நடக்கும்.

பின் வீடு மாறியதால் சற்றே நீளமான வராண்டா... தாம்புக்கயிறு இரும்புச் சங்கிலி ஆனது... "ஜிவ்வென்று" மேலே வரை ஊஞ்சலாடி இறங்குவதே பறப்பது போல் இருக்கும். சில சமயம் நிலைப்படி தட்டி கொஞ்சம் கீழே இறக்கிவிடும். அதில் தான் நந்தினியும் சிரித்துக் கொண்டே ஊஞ்சல் ஆடுவாள். இப்பொழுது அவள் சிரிக்கும் பொழுதெல்லாம் நினைக்கும் சம்பவமாக ஊஞ்சல் ஆனது. ஆடிக்கொண்டிருந்தவளை நோக்கி அவள் தந்தை கை நீட்ட, சட்டென்று கையை விட்டவளைப் பிடிக்க இயலவில்லை. வாய் முழுதும் இரத்தம். டாக்டரிடம் போய், மருந்து போட்டு ஒரு மணி நேரத்தில் எல்லாம் சரியானது. சில மாதங்கள் கழித்து தான் பார்த்தோம், பல்லில் கறை போல்... ஏதோ வளர்ச்சி தடைபட்டுவிட்டது போலும்...வேர்கள் நன்கு வளர்ந்தபின், பதின்ம வயதில் தான் அதற்கு வைத்தியம் பார்க்கலாமாம்... ம்ஹ்ம்... ஊஞ்சல் ஆசை...


எனக்கு சினிமாவில் வருவது போல் பெரிய ஊஞ்சல் ஹாலில் போட்டு படிக்க, படுக்க வேண்டும் என்று ஆசை. வீடு கட்டும்பொழுது மாமாவிடம் சொல்ல, அவரே மரம் பார்த்து வாங்கி ஒரு ஆள் படுக்கும் அளவு ஊஞ்சல் பலகை செய்து வாங்கினார். வீட்டுக்கூரையிலும் கொக்கி எல்லாம் வைத்தாயிற்று... ஆனால் வீட்டுள் ஊஞ்சலுக்கு இடம் கொடுத்தால் வேறு எதற்கும் இடம் தான் இல்லை. எனவே ஊஞ்சல் வீட்டு முகப்பிற்கு வந்தது. ஆசை தீர உட்கார்ந்து, படுத்து , படித்து.... அதன் பின் கார் வந்து அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

இப்பொழுது ஊஞ்சல் பலகை ஓய்வெடுக்கிறது. அதன் இரும்பு சங்கிலி தொட்டில் கட்டவும் பிரம்பு கூடை ஊஞ்சல் தொங்கவும் உதவுகிறது. அந்த பிரம்பு ஊஞ்சலில் தான் மாமா அமர்ந்து யாழினியைத் தோளில் சாய்த்து உறங்க வைப்பார். இப்பொழுது அந்த ஊஞ்சல் சும்மா காற்றில ஆடிக்கொண்டு இருக்கிறது. வீட்டிற்கு யாரேனும் வந்து அதில் அமர்ந்தால் தான் அதற்கு சண்டை துவங்கும். வாழ்க்கையே ஊஞ்சல் தான்!!!! நாம் உட்கார்ந்து இருக்கிறோம்... யாரோ ஆட்டிக் கொண்டு இருக்கிறார்கள்... சுகமாகவும் இருக்கும் சுமையாகவும் இருக்கும்... நிறுத்தவும் தோன்றும்... ஆடிக்கொண்டே இருக்கவும் தோன்றும்....நிற்கும் வரை இந்த ஆட்டம்தான்...

12 comments:

ராமலக்ஷ்மி said...

ஊஞ்சலாடிய நினைவுகளில் உல்லாசமும் இருக்கிறது. சில வருத்தமான நினைவுகளும் இருக்கின்றன.

அழகாய் முடித்திருக்கிறீர்கள்:

//வாழ்க்கையே ஊஞ்சல் தான்!!!! நாம் உட்கார்ந்து இருக்கிறோம்... யாரோ ஆட்டிக் கொண்டு இருக்கிறார்கள்... சுகமாகவும் இருக்கும் சுமையாகவும் இருக்கும்... நிறுத்தவும் தோன்றும்... ஆடிக்கொண்டே இருக்கவும் தோன்றும்....நிற்கும் வரை இந்த ஆட்டம்தான்... //

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாங்க லாஸ்ட்ல சூப்பர் தத்துவம்.. :)

நானும் எங்கம்மால்லாம் கூட ஊஞ்சல் பைத்தியங்க தான்.. இப்ப ஊருக்கு போனா சிலர் வீட்டுல ஊஞ்சல் இருக்கும் .என் மகளுக்கு முன்ன போட்டி போட்டு உக்காருவது நான் தான் .. எனக்கும் ஒரு ஊஞ்சலை என் வீட்டுல மாட்டனுங்கறது கனவு தான்..

பின்னோக்கி said...

paavam Nandhini.. padikkum pothe payamaaka irrunthathu.

ஜீவன் said...

///வாழ்க்கையே ஊஞ்சல் தான்!!!! நாம் உட்கார்ந்து இருக்கிறோம்... யாரோ ஆட்டிக் கொண்டு இருக்கிறார்கள்... சுகமாகவும் இருக்கும் சுமையாகவும் இருக்கும்... நிறுத்தவும் தோன்றும்... ஆடிக்கொண்டே இருக்கவும் தோன்றும்....நிற்கும் வரை இந்த ஆட்டம்தான்... ///


ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க ...!

அ.மு.செய்யது said...

அழகான பதிவு !!!

"வாழ்வே ஊஞ்சல் தான்" கடைசி வரிகள் நெஞ்சில் பதிகிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நெகிழ்ச்சியான நினைவலைகள்!

வாழ்க்கையை ஊஞ்சலோடு ஒப்பிட்ட விதம் நன்றாக இருந்தது.

சந்தனமுல்லை said...

:-) நல்லாருக்கு!

" உழவன் " " Uzhavan " said...

ஊஞ்சல் இடுகையில் சோகம் இழையோடுகிறது. மனதைக் கிளர்ந்து பார்த்த இடுகை.

தமிழ்பாலா said...

ஊஞ்சலிலே ஆடினோம்
அங்கும் இங்கும் ஓடினோம்
ஏற இறங்க தேடினோம்
இறங்கும்போது வாடினோம்
ஏறும்போது கொண்டாடினோம்
இன்பத்திலே கூடினோம்
துன்பத்திலே வாடினோம்
வசந்தத்தில் பாடினோம்
கோடையிலே நிழல் நாடினோம்
குளிரினிலே போர்வையாலே மூடினோம்

மாதவராஜ் said...

அற்புதமாக முடித்திருக்கிறீர்கள். பெரும் தத்துவம் போல முடிந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து, திருத்தி, செழுமையாக்கி, விரித்து, எழுதி ’பூக்களிருந்து சில புத்தகங்களுக்கு’ தரலாமா?

அரங்கப்பெருமாள் said...

ஆல மர விழுதுல ஊஞ்சல் கட்டி விளையாண்ட நினைவுகள் வந்துபோகிறது...

Deepa (#07420021555503028936) said...

நீங்கள் எழுதிய அன்றே படித்து விட்டேன். முதன் முதலில் எங்கள் வீட்டில் ஊஞ்சல் மாட்டிய போது அடைந்த குதூகலமும் அதில் எல்லோருடனும் அமர்ந்து விளையாடிய எண்ணற்ற விளையாட்டுக்களும் நெஞ்சில் ஊஞ்சலாடின.

எல்லோரிடமும் சொல்லும் விளக்கம் உங்களிடமும்: அலுவலகத்தில் கமெண்ட் போட முடியாததால் தாமதம்!