என் மேகம் ???

Tuesday, September 15, 2009

"என் வானம்" வந்த கதை

"என் வானம்" வந்த கதை சொல்லச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார் தீபா. ஆங்காங்கே பதிவுகளில் சொன்ன கதை தான் என்றாலும் நினைவுகள் என்றுமே "நினைத்தாலே இனிக்கும்".

வாசிப்பை அறிமுகப்படுத்திய பெற்றோர் தான் என் எழுத்துக்கு அடித்தளம் அமைத்தவர்கள். கட்டுரைப் போட்டிக்கு அப்பாவிடம் கேட்க, அவர் லைப்ரரிக்கு அழைச்சுட்டு போய், படிச்சு எழுதுனு சொல்ல, நானும் அங்க இங்க புரட்டி எழுத... பரிசு கிடைக்க... ஆரம்பிச்சது காகிதங்களுக்கு வேட்டு. வெத்து டைரி எல்லாம் என் கையெழுத்தால நிரம்புச்சு... யாரும் படிக்கலைங்கறது வேற விஷயம். சந்தோசம்னாலும் சோகம்னாலும் அந்த டைரிகளுக்குள் புதைந்து பழைய பேப்பர் கடையில் புகுந்துவிடும். இது ரொம்ப நாள் போச்சு...

அப்புறம்... கல்யாணம் பண்ணிட்டு ஆஸ்திரேலியா போனேன். அங்க இருந்து என் தோழிக்கு மின்னஞ்சல் அனுப்ப, அவள் "என்ன அழகா கோர்வையா எழுதற..." என்று பின்விளைவுகளை யோசிக்காமல் கூற, அடிமனதில் "ஆகா... நாம் எழுதறதையும் நல்லா இருக்குங்கறாங்களே!!!" என்ற எண்ணம் விழ ஆரம்பித்தது. இதுக்கு நடுவில் "சிட்னியில் வசந்தம்" என்று ஒரு கவிதையை நான் இணையத்தில் போட... நல்லா இருக்குனு இரண்டு பேர் மின்னஞ்சல் அனுப்ப... அந்த கவிதையைப் பாதுகாக்க மறந்து , இன்று வரை தேடிகொண்டிருக்கிறேன். இந்த தேடல் தான் என் வானத்தை உருவாக்கியது.

எங்க வீட்ல ஒரு பொருளை வச்சா "வைக்கப்போரில ஊசி தேடற" மாதிரி. யாழ் பிறந்திருந்த சமயம் கொஞ்ச நாள் ப்ரேக் எடுத்திருந்தேன். குழந்தைகள் பற்றி கவிதையை எப்பவும் போல ஒரு நோட்ல எழுதி வச்சிருந்தேன். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பத்திரமா வச்சிருக்கணும்னு வைக்கறது எல்லாம் கண்டிப்பா இருக்காது இல்லையா? என் பொஸ்தகம் மட்டும் தப்புமா? இதை எப்படி பத்திரமா வச்சிக்கிறதுனு நான் யோசிக்கற நேரம் முல்லை தன்னோட "சித்திரக்கூடத்தை" தெரியாமல் என் கண்ல காட்டிட்டாங்க...

ப்ளாக் எழுதறதுனு முடிவு பண்ணினேன். "சித்திரக்கூடம்" மாதிரி அழகான பெயர் தேடினேன் ... ஒண்ணும் அகப்படலை. என் நிலவுகள் பத்தி எழுதற எண்ணம் என்பதால் "என் வானம் - என் எண்ணங்கள்" என்று 2006-ல் ஆரம்பிச்சேன். என் வானத்தை "நிலவுகள்" "சூரியன்" என்று அமைத்தேன். ஈ-கலப்பையில் தமிழ் தட்டச்சு செய்ய, தமிழ் மணத்தில் இணைக்க என்ற அறிமுகம் எல்லாம் முல்லை தான். பின்னூட்டம் காண மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் எனக்கு பின்னூட்டத்திற்கு நன்றி சொல்லவோ, பின்னூட்டம் இடவோ தெரிந்திருக்கவில்லை. மெல்ல அனுபவங்கள், எழுதிய கதைகள், பாட்டி சொன்ன கதை என்று பதிவு செய்தேன். கவிதைகளை "நட்சத்திரங்களாக" வானத்தில் பதித்தேன். அப்பொழுது லேபிளுக்கும் தலைப்புக்கும் எனக்கு வித்யாசம் தெரியாது... பின்பு தெரிந்து லேபிள் போட ஆரம்பித்தேன்... அடிக்கடி Save செய்யும் பொழுது "Save as Unicode" செய்ய மாட்டேன். அதனால் எழுதனது எல்லாம் "நீரில் எழுதிய எழுத்தாக " மாயமாகிடும்.

அதன் பிறகு அவ்வளவு சுறுசுறுப்பு இல்லை. "கழுதை கெட்டால் குட்டிச்சுவர்" என்று, என் வானத்தையும் தமிழ்மணத்தையும் மறந்து பூமியில் நடமாடிக்கொண்டிருந்தேன். மீண்டும் சுறுசுறுப்பாவதற்கு ஒரு நட்சத்திரம் தேவைப்பட்டது. முல்லை தமிழ்மணத்தில் நட்சத்திரமாக மின்னுவதைக் காண வந்த நான், மெல்ல மெல்ல தமிழ்மணத்துடன் ஒன்ற ஆரம்பித்தேன். எதையாவது எழுதி "முல்லை இதைக் கொஞ்சம் ரெவ்யூ பண்ணிக் கொடு" என்று டார்ச்சர் பண்ணிவிட்டு அப்புறம் தான் பதிவுலகத்தை டார்ச்சர் செய்வேன். வர்ற ஒண்ணு ரெண்டு பின்னூட்டத்துக்கு வானத்துக்கு குதிப்பேன். அப்புறம் நானே முல்லை மேல பரிதாபப்பட்டு டார்ச்சரைக் குறைச்சுட்டேன்.

சில சமயம் என்னத்துக்கு எழுதிட்டு, யாராவது சிரிக்கப் போறாங்க என்று யோசிப்பேன். அப்பொழுதெல்லாம் ஃபாலோ பண்ணி ஊக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள் ஜீவன், ஆயில்யன் , அமித்து அம்மா எல்லாம். பின்னூட்டம் வழியாக இராமலஷ்மி மேடம், வேணு வேணாம் எல்லாம் நல்ல ஊக்கம் அளித்தார்கள். மெல்ல மெல்ல இன்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஊக்கமளிக்கின்றனர்.

நடுவில் இரண்டு நாள் ப்ளாகில் login பண்ண இயலவில்லை. என்ன என்று தவித்த பொழுது ஆயில்யன் மற்றொருவருக்கும் இப்படிதான் ரெண்டு நாள் வேலை செய்யவில்லை, அப்புறம் சரியாகிடுச்சு, உங்களுக்கும் ஆகும் என்று சாட்டில் தைரியம் கொடுத்தார். கவலை மறந்து இருக்க இரண்டு நாளில் சரியானது. நண்பர் ஜமாலின் பதிவால் Import/Export" blog தெரிந்து கொண்டேன். "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு". நான் கற்றுள்ளதோ கைமண் அளவு இல்லை, மணல் துகள் தான் என்பது போல் இன்னும் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளது. ஒரு கெட்ஜட் போடுவது என்பது இன்றும் எனக்கு பெரிய விஷயம் தான். எந்த டவுட் என்றாலும் அருகில் முல்லை இருக்கிற தைரியமோ? வலைப்பூ குழுக்களில் சேர, ஜி-டாக், லே-அவுட் என்று எல்லாமே முல்லை ட்யூஷன் தான்.

வலைப்பூ நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதோ பார்த்தது, படித்தது, கேட்டது, அனுபவித்தது என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள இதயம் துடிக்கிறது. மனதை ஊக்கப்படுத்தும் அங்கீகாரத்தை அள்ளி அள்ளி வழங்குபவர்கள் வலைப்பூ நண்பர்கள் அல்லவா?
என் வானத்தை தொட்ட ஒவ்வொருவர் வலைப்பூவிற்கும் ஒருமுறையேனும் சென்று பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இட வேண்டும் என்பது என் ஆசை. சில முறை செய்துள்ளேன். பதிவெழுதுவதும், பின்னூட்டமிடுவதும் ஆணிகளுக்கும் கடப்பாறைகளுக்கும் இடையில் கிடைக்கும் சில சைக்கிள் கேப்புகள் என்பதால் பல முறை அது சாத்தியப்படுவதில்லை. என்றாலும் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தும் தோழ/தோழியருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் எழுதாதவர்கள் உங்கள் கதையையும் பதிவில் சொல்லுங்கள்... கேட்போம்... இரசிப்போம்...பதிவுலகம் பதிவுகள் போடுவதற்கே!!!!

14 comments:

ஆயில்யன் said...

/எங்க வீட்ல ஒரு பொருளை வச்சா "வைக்கப்போரில ஊசி தேடற" மாதிரி///

நல்லா இருக்கே !

புதுசு புதுசா வருது பழமொழி !

ஆயில்யன் said...

/எதையாவது எழுதி "முல்லை இதைக் கொஞ்சம் ரெவ்யூ பண்ணிக் கொடு" என்று டார்ச்சர் பண்ணிவிட்டு அப்புறம் தான் பதிவுலகத்தை டார்ச்சர் செய்வேன்///

ஒ அப்ப டெரரரிசம் கத்துக்கொடுத்தது ஆச்சிதானா!!!

ஆயில்யன் said...

/வலைப்பூ நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதோ பார்த்தது, படித்தது, கேட்டது, அனுபவித்தது என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள இதயம் துடிக்கிறது//

அதே!அதே!!

எதேனும் சந்தோசமான செய்தி கேட்டால் உடனே யாரேனும் ஆன்லைனில் இருந்தால் பகிர்ந்துகொள்கிறேன் அவர்களுக்கு ஏற்புடையதோ அல்லது புரிகிறதோ புரியவில்லையோ அது தெரியாது பட் அந்த கணப்பொழுதில் நான் பெறும் மகிழ்ச்சி !

அதுதானே வேண்டும் இந்த வாழ்க்கை போகும் பாதையில்....!

ஹேமா said...

உண்மையில் அழகான பதிவும் மனதில் உள்ளதை எழுதும் பதிவு.நண்பர்களின் பதிவு.மனதை ஆற்றும் பதிவு அமுதா.எனக்கும் கூட.எனகென்று எழுதத் தொடங்கிய பிறகு மனகுதிற்கு எவ்வளவோ ஆறுதல்.

pudugaithendral said...

இன்னும் எழுதாதவர்கள் உங்கள் கதையையும் பதிவில் சொல்லுங்கள்... கேட்போம்... இரசிப்போம்...//

ஆமாம், ஆமாம்.
பதிவுலகம் பதிவுகள் போடுவதற்கே!!!!//

ஆஹா என்னமா யோசிக்கறாங்கப்பா. வார்த்தைகள் அருவியா கொட்டுது அமுதா

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் ப்லாக் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும் அமுதா, அதனாலதான் என் ப்லாக்ல உங்க பேரை சொல்லனும்னா அதுக்கு முன்னாடி உங்க வலைப்பூவின் பெயரையும் போட்டுப்பேன், போட்டுட்டு ஒரு தடவை படிச்சுப் பார்த்து சந்தோஷப்பட்டுப்பேன்

ஒரு தடவை நீங்க சொல்லிப்பாருங்களேன்

என் வானம் அமுதா //

எவ்ளோ நல்லாருக்கு உங்களோட இந்தப் பதிவு மாதிரியே

தமிழ் அமுதன் said...

///ஃபாலோ பண்ணி ஊக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள் ஜீவன், ஆயில்யன் , அமித்து அம்மா எல்லாம்.///

நன்றி ..! அது நான் பதிவுலகில் அடியெடுத்து வைத்த காலகட்டம் ..!ஒரு வலைத்தளத்தை ஃபாலோ பண்ணுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளவே எனக்கு சில காலம் ஆனது ..! விரைவில் நானும் என் கதையை எழுதுகிறேன் ..!

அமுதா said...

/*ஆயில்யன் said...
...
அதுதானே வேண்டும் இந்த வாழ்க்கை போகும் பாதையில்....!
*/
ஆமாம் ஆயில்யன். நன்றி.

/*ஹேமா said...
..எனகென்று எழுதத் தொடங்கிய பிறகு மனகுதிற்கு எவ்வளவோ ஆறுதல்.*/
புரிகிறது , உண்மை...ஹேமா. நன்றி

அமுதா said...

நன்றி புதுகைத் தென்றல்
நன்றி அமித்து அம்மா
நன்றி ஜீவன்

"உழவன்" "Uzhavan" said...

மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள்!

Deepa said...

மிக அழகாக வானத்தின் வர்ணங்களைத் தீட்டி இருக்கிறீர்கள். நன்றி.

//ஒ அப்ப டெரரரிசம் கத்துக்கொடுத்தது ஆச்சிதானா!!!//
repeeeeeeeeat!

//எங்க வீட்ல ஒரு பொருளை வச்சா "வைக்கப்போரில ஊசி தேடற" மாதிரி/////

hee hee me too!

கண்மணி/kanmani said...

வாழ்த்துக்கள் அமுதா எல்லோருமே விழுந்து எழுந்து [எழுத]கத்துக்கிட்டவங்கதான்.

மா.குருபரன் said...

/"இன்னும் எழுதாதவர்கள் உங்கள் கதையையும் பதிவில் சொல்லுங்கள்... கேட்போம்... இரசிப்போம்...பதிவுலகம்"/

பதிவுலக தோழர்கள்....

நன்றி நண்பரே...

அமைதி அப்பா said...

பதிவுலகம் பதிவுகள் போடுவதற்கே!!!!//

எத்தனை உண்மையான வரிகள்.
நானும்,வலைப்பூவை எனது டைரியாகவே
நினைத்து எழுதி வருகிறேன்.

நல்ல பிளாக்கை அறிமுகம் செய்த வலைச்சரத்துக்கு நன்றி.