அவன் கையில் இருந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்தான். இனி அப்பாவைப் படத்தில் மட்டும் தான் காண முடியும் என்ற எண்ணம் மனதைக் கலக்கியது. ஊரில் வேலை பார்த்தபொழுதும் சரி, ஊரை விட்டு வந்த பொழுதும் சரி அவனுக்கு அவர் அமைதியாக உறுதுணையாக இருந்தார். நடுவில் வேலையை விட்டு ஏதோ படித்தபொழுதும் கேள்வி கேட்காது செலவுக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்.
திடீரென்று ஒரு நாள் ஏதோ துர்க்கனவு என்று அவனைக் காண பஸ்ஸில் வந்து விடியற்காலையில் நின்றது நினைவிற்கு வந்தது. "எனக்கு ஏன் அப்படி ஒன்றும் தோன்றவில்லை" என்ற கேள்வி உதித்தது. இது ஒரு துர்க்கனவாக மறைந்திடாதா என்ற ஏக்கம் சூழ்ந்தது. அம்மாவை நினைத்து மனதில் பாரம் ஏறியது.
படத்தில் அப்பாவின் முத்திரைச் சிரிப்பு பதிந்திருந்தது. "ராஜா" என்று அப்பா அழைப்பது போல் இருந்தது. நடராஜன் என்ற அவனை எல்லோரும் நட்டு, நட்ராஜ் , ராஜ் , ராஜா என்றும் அழைப்பார்கள். என்றாலும், அப்பா அழைக்கும் "ராஜா" எத்தனை தனித்தன்மையுடையது என்று இப்பொழுது தோன்றியது. அப்பாவின் அருகில் நிற்க வேண்டும் போல் இருந்தது.
"கவி, இந்த போட்டோவை பெரிசா பண்ணி ஹால்ல மாட்டப் போறேன்", என்றான். அவள் சரி என்பது போல் தலையை ஆட்டினாள். உடனே நெகடிவ்வை எடுத்துக் கொண்டு கிளம்பினான். குடும்பத்துடன் பல படங்கள் இருந்தாலும், பெரிது படுத்தும் அளவுக்கு எதுவும் தேறவில்லை. எதற்காகவோ எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் படம் மட்டும் தான் கொஞ்சம் பெரிது படுத்தும் அளவுக்கு இருந்தது.
கடையில் அவன் எதிர்பார்த்த அளவு பெரிது பண்ண ரிசொல்யூஷன் இல்லை என்றார்கள். அவர்கள் சொன்ன அளவிற்கு அடுத்த பெரிய அளவு சொன்னான். தேவைப்பட்டால் கிராபிக்ஸில் சில தொடுதல்கள் பண்ணுவதாகக் கூறினார்கள்.
மறு நாள் படத்தை வாங்கிப் பார்த்தபொழுது நன்றாக இருப்பது போல் தோன்றியது. ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது "ரிசொல்யூஷனுக்காக" சில இடங்களில் டச்சப் செய்திருந்தது தெரிந்தது. மீசை முழுமைபெற்று அப்பா சற்று இளமையாகத் தெரிந்தார்... அவனுக்கு வேறு யாரையோ பார்ப்பது போல் இருந்தது. "இல்லை கவி...அப்பாவைப் பார்க்கிற மாதிரி இல்ல... அந்த படத்தில் அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. நான் போய் மாத்திட்டு வந்திடறேன்", என்று கிளம்பிச் சென்றான்.
சற்று நேரம் கழித்து திரும்பி வந்தவனிடம், "என்ன மாத்த சொல்லிட்டீங்களா?" என்றாள். "ம்... அவர்கிட்ட சொன்னேன்; அந்த படம் அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. இது அப்படி இல்லை. அதே மாதிரி எந்த அளவுல நல்லா இருக்குமோ, அந்த அளவுக்கு பெரிசுப்படுத்த சொன்னேன். அவர் புரியுது தம்பினு சொல்லி நாளைக்கு வரச் சொன்னார்" என்ற பொழுது அவன் கண்கள் கலங்கி இருந்தன.
9 comments:
எமது கண்களும் ...
:((( - பழைய நினைவுகள் - பாட்டியின் நினைவுகளை கிளறிவிட்டது!
ஹ்ம்ம்..:(
நினைக்கையில்..........
கண்கள் குளமாகின்றன.
தந்தையின் நினைவில் வாடும் மகனின் உணர்வுகளை அழகாகப் படம் பிடித்து விட்டீர்கள்.
அருமை.
நான் என் பாட்டியின் படத்த பெரிசு பண்ண கொடுக்கணும்!!!
என்னங்க பன்றது நம்மால் முடிஞ்ச விசயங்கள சொல்லலாம் ......
என்னென்னு ஒரு தடவ வந்து பாருங்கோவன்,
பிடிச்சிருந்தால் ஒருத்தருக்கிட்ட சொல்லுங்க, பிடிக்கலையா ஒரு 10 பேருக்காவது
சொல்லி போடுங்க....!!!
அமுதா என் தாத்தாவின் ஞாபகம் வருகிறது.என் தாத்தா ஒரு தவில் வித்வான்.தவில் கழுத்தில் போட்டபடி உள்ள படம் ஒன்று பெரிப்பிக்கப்பட்டது.ஒவ்வொரு நாளும் பார்க்கையில் அவர் எந்த நேரமும் பாரத்தோடு நின்றுகொண்டிருப்பதாய் ஒரு சங்கடத்தில் பிறகு சாதாரண படம் ஒன்றைப் பெரிப்பித்தோம்.
சமீபத்தில் என் மாமாவோட ஃபோட்டோவை பெரிசு பண்ணிய விஷயம் ஞாபகம் வந்துடுச்சு இதை படித்தவுடன்
:(
Post a Comment