என் மேகம் ???

Monday, December 1, 2025

ஓய்வு

 மழை ஓய்ந்துவிட்டது 

பேச்சு ஓயவில்லை


காற்று ஓய்ந்துவிட்டது 

கதைகள் ஓயவில்லை 


கண் ஓய்ந்துவிட்டது

கனவுகள் ஓயவில்லை 


கை ஓய்ந்துவிட்டது 

வேலைகள் ஓயவில்லை 


கால் ஓய்ந்துவிட்டது 

பயணங்கள் ஓயவில்லை 


மனம் ஓய்ந்துவிட்டது 

எண்ணங்கள் ஓயவில்லை


எது ஓய்ந்தாலும்

பூமியும் வாழ்வும் ஓய்வதில்லை...

Monday, September 8, 2025

சிவப்பு நிலா

செங்கதிரோன் ஒளியோ சுடும்

செந்நிலவோ தண்மை தரும்


வெட்கமல்ல வெறுப்புமல்ல கோபமல்ல

வெண்ணொளிதான் அள்ளித் தந்தது


தன்னொளி அல்ல என்றாலும்

 தண்ணொளி தந்தது முழுமதி 


புவி மங்கை தந்ததோ  நிழல் திரை

புவி மாந்தர் தந்ததோ தூசும் மாசும்


வெண்ணொளியும் அதில் சிதறியது

வெண்ணிலவும் சிவந்து தெரிந்தது


கவியின் வரிகள் வண்ணம் கொண்டது

கதை பின்னுவோர் கற்பனை கூடியது


வல்லுநர்கள் ஆராய்ச்சி விரிந்தது

வலை எங்கும் இதுவே செய்தி ஆனது


நிழல் திரையும் விலகியது

நிலவும் பால் நிறம் கொண்டது


காலம் காலமாக திகழும் இது

காலம் பிறழாது நிகழும் இது


காலம் நழுவும் மனிதனுக்கு ...

காலத்தோடு பிறழும் மனதுக்கு...

காட்சிகள் எல்லாம் அதிசயமே


Monday, August 11, 2025

வலை ஒலிபரப்பும் நானும்

 வலை ஒலிபரப்பும் நானும்

--_-----------------------------

சொல் அலையில் கவிதை அலை செய்கிறீர்களா என வித்யா கேட்ட பொழுது...அது முதல் அலையோ...நான் முதல் எலியோ...என்றெல்லாம் யோசிக்காமல்....கரும்பு தின்ன கூலியா என மிக மகிழ்ச்சியாக தலையாட்டினேன். அந்த நாளும் வந்தது...மதிய உணவுக்கு முன் சென்று நாலு கவிதைகளை "சிங் இன் த ரைன்" என வாசித்துவிட்டு வந்துவிடுவோம் என்று... நண்பகலில் அவர் வீட்டு கதவைத் தட்டினேன்.. வலைஒலிக்கென மைக் இருந்தது...ஆனால் சத்தமில்லா இடம் வேண்டுமே ... அது ஒரு சிக்கல்..

அப்போ தான் நாய் குரைக்குது, கார் போகுது, ஹாரன் அடிக்குது...சும்மா 'ஆரம்பமே களை கட்டுது'. சத்தம் கம்மியா கேட்கும் உள்ளறையில் இவ்வளவு அலப்பறை. கதவை சாத்தி திரையை மூடி மைக் செட் பண்ணால்... இட நெருக்கடி ...இருவர் அங்கே இருக்க... 'இது என் ஏரியா உள்ளே வராதே ' அப்படீனு ஒரு வழியா சமாளிச்சு..அப்படி இப்படி எப்படியோ நாற்காலியில் மைக்கோடு உதடுகள் ஒட்டா குறையாக (மைக் அருகில் என்பதை விட மைக் வாயில் இருந்தால் தான் தெளிவாக பதிவாகுமாம்..) நான் உட்கார...வித்யா அருகில் ஒலிப்பதிவுக்காக சமாளித்து நின்றார்.  பேசச் சொன்னார் வணக்கம் என்றேன். என் குரல் கேட்கவில்லை, வெளியில் இருந்து "விஷுக்" என்று வாகன ஒலி. மடிக்கணினி தன் பங்குக்கு சொன்னதை செய்யாது 'நானும் ரௌடிதான் என்று ' ஒலியை  ஸ்பீக்கரா (அ) ஹெட்ஃ போனா என விளையாடிக்கொண்டிருந்தது. "இப்பவே கண்ண கட்டுதே" என்று ...அப்படி இப்படி எப்படியோ மடிகணினியை சரிகட்டி வழிக்கு கொண்டு வந்தோம். அடுத்து கவிதைகள் சொல்லவா என நான் வாயைத் திறந்தால்...இல்ல...ஒன்று முதல் எட்டு வரை சொன்ன பின் தான் ஒவிவாங்கி என் குரலை உள்வாங்குமாம். இது வித்யாவுக்கு சொல்லி வந்த பாடமல்ல...தட்டி தடவி அவராக கற்றுக்கொண்ட வித்தையாம். ஒரு வழியாக "கவிதை என்று எதைச் சொல்வேன்" என்று தொடங்கினால்...சொல்லிடுவியா நீ...என என் தொண்டை கமறியது. தொண்டையை சரி பண்ணிவிட்டு 2 வரி தான்...இப்போ திடீர்னு நாக்கு வம்பு செய்து உச்சரிப்பு குழற...(நாக்குல வசம்ப வச்சு தேய்க்க) ...மறுபடியும் 'முதலில் இருந்தா ' என நான் மலைக்க... ஆரம்பிங்க அமுதா...தப்பு பண்ணால் திரும்ப அதை அப்படியே சரியா வாசிங்க.. நான் எடிட் பண்ணிக்கிறேன் என்று கப கப என பசிக்கும் வயிற்றில் பாலை ஊற்றாமல் ஊற்றினார் வித்யா... இருந்த இடத்தில் எங்கு காகிதத்தை  வைத்து படிக்க பார்த்தாலும் 'ஜில் ஜங் ஜக்' னு கண்ணு சுத்துது. தப்பு செய்து அவருக்கு வேலை அதிகம் வைத்திட கூடாது என முடிந்த வரை தவறின்றி பேச முயன்றேன் (பயபுள்ள பொழச்சிட்டு போகட்டும்). அதற்கு அப்புறம் அவர் தன் பகுதி பேசி, பின்புல சத்தங்களை நீக்கி...வெட்டி ஒட்டி...அம்மம்மா...அந்த 5 (அ) பத்து நிமிடம் தேன் போல் நம் காதுகளில்  விழும் குரலுக்கு பின் இத்தனை சித்து வேலைகளா? வாரா வாரம் சரியான நேரத்தில்  வர வேண்டும் என்றால் "எதயுமே ப்ளான் பண்ணி செய்யனும்". நானோ ...என் பகுதிக்கு மட்டுமே நான் உணவுக்கு முன் என ப்ளான் செய்து தேனீருக்கு முன் வீடு வந்து சேர்ந்தேன். 

தலைவலியும் காய்ச்சலும்  தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். ஒரு படைப்பாளியின் படைப்புக்கு பின்னால் இருக்கும் வேலைகளை நாம் அறிந்து கொள்வதே இல்லை. சத்தமில்லாமல் ஒரு லைக் போட்டுவிட்டேன் சொல் அலைக்கு மட்டும் அல்ல ... நம் சங்கத்தின் காணொளிகளுக்கும் தான்...




Friday, August 8, 2025

என்றும் நானறியேன்(நூல் விமர்சனம்)

 

என்றும் நானறியேன்

 



நூல்: என்றும் நானறியேன்

ஆசிரியர்: அமுதவல்லி நாராயணன்


************************************************

அணிந்துரை:

மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் எனக்கு பல அரிய நல் தமிழ் உறவுகளைக் கொடுத்துள்ளது. அதில் முக்கியமான ஒருவர், இளைய சகோதரி திருமதி. அமுதவல்லி. ‘சுழல்’ எனும் தலைப்பில் ‘ழகரக் கவியரங்க’ மேடையையும், அந்த அரங்கத்தையும் தன் கவிதையால் சுழல வைத்தவர். *வாசித்தலை நேசித்தலும், நேசித்து வாசித்தலும் நம்முள்ளே இருந்து விட்டால் நற்றமிழ் தானே வரும்* எனும் கூற்றினை மெய்ப்பித்தவர். கணினியிலே பணியென்றாலும் கன்னித் தமிழ் மேல் தீரா பற்றுக் கொண்டவர். தமிழ்ச் சேவையில் முன்னிற்பவர். இவரது இந்த *‘என்றும் நானறியேன்’* எனும் இந்த கவிதைத் தொகுப்பு நூலுக்கு என்னை அணிந்துரை எழுதிட பணித்துள்ளார். உள மகிழ்வோடு அதனைச் செய்ய சம்மதித்தேன்.


சிறந்த சொல்லாட்சியோடு *108 கவிதைகள்* புனைந்து இந்நூலை வெளியிடுகிறார். துவங்குகையில், கவிதைக்கு விளக்கமாக *‘தனித்தன்மையுடன் பூப்பதே கவிதை’* - எனத் துவங்கி அடுத்த கவிதையில் *‘மனதைத் தொட்ட வடிவெல்லாம் எனக்குக் கவிதையானது’* -என முரசடித்து கோலாகலமாய்த் துவங்குகிறார் கவிஞர்.


எல்லாருக்கும் பிடித்ததை செய்து தரும் *அம்மாவுக்கு தனக்கு எது பிடிக்கும் என்பது மறந்து போனதை* நெகிழ்ச்சியோடு மூன்றாம் கவிதை சொல்கிறது.

அதற்கு அடுத்த கவிதையோ வயிற்றில் சுமக்க முடியாது போனாலும் தோளிலும் முதுகிலும் சுமந்த பின், *வாழ் நாளெல்லாம் மனதில் சுமக்கும் தந்தையின் பாசத்தை* உணர்ச்சியோடு சொல்கிறது.

அலைபேசி உலகில் *பாட்டிகள்* பற்றி ஒரு கவிதை, கவலைகளைப் பகிர, *வாழ்க்கைக் கோலம்* எனும் கவிதையில் ‘கோலமோ அலங்கோலமோ அழிந்தாக வேண்டும் என்றுலும் வாழ்ந்துதான் தீர வேண்டும்’ - என தத்துவத்தைச் சொல்கிறது

*‘வண்ணம்’* கவிதையில் வண்ண பேதம் பார்க்கும் மனிதனை கவிஞர் சாடுகிறார். *'போனஸ்’* கவிதையிலோ வெயிலில் மழையும், மழையில் வெயிலையும் போனஸாகப் பார்த்தவர், இயற்கையை சீரழித்து மைனஸாகும் மனிதன் தொலைத்த மனிதத்தைத் தேடுகிறார்.


பூத்துக் குலுங்கும் செந்நிற மலர்கள் இவரை சிலிர்க்க வைத்ததைப் பார்க்கலாம். ரயில் நிலையத்தில் உறவுகளை நோக்கி ஓடும் குழந்தை மூலம் உறவுகள் மகிழ வைப்பதைப் படிக்கலாம்.

14-ம் கவிதை புள்ளினங்களின் ஒலியை சிதறடிக்கும் வாகனத்தின் ஒலிப்பான் ஒலியை விவரிக்கிறது. 18-ஆம் கவிதையோ கடிதங்கள் பற்றி உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது. அதற்கு அடுத்த கவிதையோ கையெழுத்து பற்றிய சிந்தனைகளை கல்வெட்டு போல் பதிவேற்றி வைக்கிறது. அதிலும் *‘கையெழுத்து எப்படி இருந்தாலும் மனதின் மொழி புரிந்து விடும்* எனும் கூற்று உறவின் மேன்மையை உரக்கச் சொல்கிறது.

‘வீடென்பது’ உணர்வுகளின் பின்னல் எனப் பதிவேற்றியதோடு காலியான வீடு, நினைவுகள் பூட்டிய வீடு, திண்ணை தொலைத்த வீடு, ஊரில் வீடு, திண்ணையின் கதை என வீட்டைப் பற்றிய கவிதைகளில் ஒவ்வொருவரின் இளமைக் கால நினைவுகளையும் அசை போட வைக்கிறார் கவிஞர்.


 *‘என்சொல்வேன்’* எனும் கவிதையில் பெண் குழந்தைகளுக்கு, *‘தலை நிமிர்ந்து வாழ்வோம்... தலை குனிந்து ஒதுங்கோம்!!!...”* (மூன்று ஆச்சரியக் குறிகளோடு) என ஆணித்தரமாய் அறிவுறுத்துகிறார்.

மண், மழை எனவும் பயணிக்கிறார். மரணம் எனும் தலைப்பில் முத்தான நான்கு ஹைக்கூ...

கனவு, கடமை, ஏக்கம் என எல்லாவற்றையும் நசுக்கிச் செல்லும் வாகனத்தை *‘விபத்து’* கவிதையில் பார்க்கலாம். துரத்தும் கனவுகளை, பற்பல கேள்விகளை நாமும் வாசிக்கலாம்.

சிக்னலில் பொருட்கள் விற்கும் ஏழையின் குரலாய், சாலைகளில் விளையாடவியலா சிறார்களின் குரலாய் கவிஞர் ஆதங்கம் தெறித்து வெடிக்கிறது. மருத்துவமனை பொழுதுகள், நீர்க்குமிழி கனவுகள் பற்றி உணர்ச்சியோடு பேசுகிறார்.


மனதைக் குளமாய், மாயையாய், கண்ணாடியாய் சித்தரிப்பது *‘மனம்’* எனும் கவிதை. நிராகரிக்கப் பட்ட / படாத கவிதைகளை முத்துகளோடு ஒப்பிடுகிறது *‘முத்துகளும் கவிதைகளும்’.* இதனைப் படிக்கையில் இவர் கவிதைகள் எல்லாம் நிராகரிக்கக் கூடாத, நிராகரிக்கப்பட முடியாத,  நல் முத்துகளே எனும் எண்ணம் நம் மனதில் இழையோடுவது உண்மை.

காற்றை வரவழைக்க கதை பேசக் கூப்பிடுகிறார் ஒரு கவிதையில். *‘சன்னல் திறந்தால் சுதந்திரமாக நுழைந்தன காற்றும் வெளிச்சமும்’* என சிலிர்க்கிறார் வேறொரு கவிதையில்.


*“ஓசை ஒத்தப் பாக்கள்”* படைத்து அளித்துள்ளார் 72-ஆம் கவிதையில்.

77-ஆம் கவிதையிலோ காணாமல் போன காக்கை குருவி மீண்டு வர விண்ணப்பிக்கிறார்.

மழலையின் சிரிப்பு, தித்திக்கும் முத்தம், மழலை இன்பம் என குழந்தைகளைச் சுற்றிச் சுற்றி ருசியாய் ரசித்திடவே சில கவிதைகள். மனதின் அடியாழத்தில் தேங்கிக் கிடக்கும் ஏக்கங்களின் வெளிப்பாடாய் சில கவிதைகள், சமூகப் பார்வை கொண்டு பெண்ணியம் பேசும் புரட்சிக் கவிதைகள் என நூல் நெடுக மனங்கவரும் சொல்லாடல்களோடு, சிந்தனையைத் தூண்டும் கருத்தாங்களோடு, படிக்க வைக்கும் சுவாரசியத்தை அதிகரிக்கும் சொல்லாட்சி கொண்டு இந்நூலினை வடித்துக் கொடுத்துள்ள கவிஞர். அமுதவல்லி நிச்சயமாக தமிழன்னையின் பரிபூரண அருள் பெற்றவர். இவரது எழுத்துகள் இவர் வாசித்தலில் நாட்டம் கொண்டவர் என்பதை உறுதி செய்கிறது.

அதிலும் முத்தாய்ப்பாக இந்நூலின் நிறைவுக் கவிதையாக *‘என்றும் நானறியேன்’* எனும் கவிதையைப் படைத்துள்ளார். அதில் தாத்தா, பாட்டி, சின்ன அத்தை, மாமா என ஒவ்வொரு உறவுகளையும் ஒவ்வொரு பொருள் நினைவு படுத்துவதை பட்டியலிட்டு விட்டு, தன்னை நினைவுறுத்த என்ன இருக்கும் என அறியேன் என அங்கலாய்ப்போடு நூலை நிறைவு செய்கிறார். 


கவிஞர் இப்படி அங்கலாய்க்கத் தேவையில்லை என்பதை *‘என்றும் நானறியேன்’* எனும் இந்நூலே உரக்கச் சொல்கிறது. கவிஞரின் கால் தடத்தை தமிழ்ச் சமூகத்தில் கல் வெட்டாய்ப் பதிக்கிறது. தலைமுறைகள் கடந்து நிற்பது படைப்பாளியின் எழுத்துகளே! இவர் தன் தடத்தைப் பதிப்பதிலே வெற்றி வாகை சூடியிருக்கிறார்.

நான் அறுதியிட்டு உறுதியாகச் சொல்லிடுவேன்! அமுதவல்லி அவர்களின் கவிதைகள் நல் முத்துகளே. வெகுசீக்கிரம் இவர் நவமணிகள் கொண்ட கவிமாலை ஒன்றினை தமிழன்னைக்குச் சூடட்டும். அந்நாள் விரைவில் வந்திடட்டும். இவர் இலக்கிய உலகில் உற்சாகமாய் வெற்றி உலா வருவார் என்பதை ‘என்றென்றும் நானறிவேன்’. உறுதி செய்கிறது.


என்னையும் மதித்து இந்நூலுக்கு அணிந்துரை வழங்கச் சொன்ன கவிஞருக்கு என் நன்றிகள். சிறந்ததொரு நூலினை படைத்தளித்தமைக்கு வாழ்த்துகள்.

அன்புடன்,

*ஸ்ரீவி* 

(ஜெ. ஸ்ரீவெங்கடேஷ்)

கவிஞர்,

எழுத்தாளர்,

தலைவர்,

*மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம்.*

******************************************

*கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்* எனும் பழமொழிக்கு உதாரணமாக நான் இங்கு நிற்கிறேன். அறுபது ஆண்டுகள் தமிழை ஒருபுறம் வைத்து வாழ்ந்து, இப்போது அதன் இனிமையில் மூழ்கி மகிழும் என்னைப் புத்தக விமர்சனம் எழுதச் சொன்ன தலைவரின் துணிச்சல் பாராட்டத்தக்கது.


ஒரு திரைப்படத்தில் வடிவேலு, காமெடி காட்சியொன்றில், “இசை என்றால் என்ன?” என்று கேட்டு, *குட்டும்போது கேட்கும் சத்தமும் இசையே* எனக் கூறுவார்., அதேபோல் அமுதவல்லி தன் *என்றும் நானறியேன்* கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையே *கவிதை* என்று தொடங்கி, ஒரே கருத்தை ஆயிரம் பேர் ஆயிரம் விதங்களில் சொன்னாலும், சொல்லாக்கத்தின் தனித்தன்மையால் *கவிதை புதுமையாகப் பூப்பதாகக் கூறுகிறார்.*

கவிதையின் இலக்கணத்தை அழகுற வரையறுத்து, *கவிதை என்று எதைச் சொல்வேன்..* என்று கேட்டு மழலையையும் மலரையும் ரசிக்கும்போது அவற்றை அன்பெனவும் அழகெனவும் உணர்பவர்கள், *தோட்டத்தில் மழலையை மலரென உருவகிக்கும்போது* 


அதுவே கவிதையென மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றனர் என்று முடிக்கிறார். இத்தகைய உணர்வு நயத்துடன், அமுதவல்லி தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் 108 மந்திரங்களாக (108 கவிதைகளாக) தீட்டியுள்ளார். ஒவ்வொரு கவிதையும் வாழ்வின் சுவடுகளை, உணர்ச்சிகளின் உன்னதத்தை, அன்பின் ஆழத்தைப் பிரதிபலிக்கிறது.

அமுதவல்லியின் முன்னுரையும் அறிமுகமும் இத்தொகுப்பில் தேவையற்றவையாகத் தோன்றுகின்றன, ஏனெனில் *என்றும் நானறியேன்* தன் கவிதைகளின் வழியாகத் தன்னை முழுமையாக வெளிப்படுத்துகிறது. இதைப் படிக்கும் வாசகர்கள், ஆசிரியரின் உள்ளத்தை, அவரது வாழ்வின் நுட்பமான தருணங்களை, அவரது சிந்தனைகளின் ஆழத்தை உணர முடிகிறது. “என்றும் நானறியேன்” என்ற தலைப்பு, தன்னைத் தேடும் பயணத்தின் அடையாளமாக இருப்பினும், இந்தத் தொகுப்பு 


*அமுதவல்லியை முழுமையாக அறிந்து கொள்ள வாசகர்களுக்கு வழிகாட்டுகிறது.*

- தியாகராஜன்

*************************************************

அமுதவல்லி அவர்களே உங்கள் அருமையான "  என்றும் நான் அறியேன்"  கவிதை புத்தகம் பெற்றேன்  

என்ன  பேரு பெற்றேன்

 என்றே சொல்ல வேண்டும்


 கவிதை என்று எதைச் சொல்வேன்  வினவினீர்கள்

 விடை இதோ  உங்கள் தமிழை!


  தனக்கு என்ன பிடிக்கும் என்று மறந்து போன அம்மாவுக்கும்

 அடுத்து வரும் தந்தை பாசம்

 ஏங்குகிறேன் நானும் சமீபத்தில் இழந்ததால்


 பாவம் பாட்டி  அலைபேசி உலகில் மாட்டிக் கொண்டார்

 பக்கத்தில் பார்த்தால் வண்ணங்களின் ஓவியம்


 வீடு என்பது  நினைவூட்டுகிறது  பாவேந்தரின்  குடும்ப விளக்கு

 காலியான வீட்டுக்கு  அவர் எழுதிய  இருண்ட வீடு


 இருந்த நினைவால்  நீங்கள் பூட்டிய வீட்டில்

 தொலைந்து போன திண்ணைக்காய்  ஆழ்ந்த இரங்கல்


 உங்களைப் போல் எனக்கும் ஓரத்தில் உறுத்தல்

 நன்றிகள்,  சந்தித்த துரோகங்கள், செய்த தவறுகள்  என


 உங்கள் இணை சொல் நயம் இல்லாததால்  உங்கள் வரிகள்  சிலவற்றையே இங்கு சமர்ப்பிக்கிறேன்


 இழப்பின் ஆழத்தில்  இழுக்கும்

 இரவொன்று   விழுங்கக்  காத்திருக்கும்  தனிமையில்...

  காட்சிப்பிழையாக நீண்டு தெரிகிறது  வாழ்க்கை!


 *என்றும் அறிந்திடுங்கள்  உங்கள் கவிதையே  உங்களை  நினைவுறுத்தும்!!*

- ஸ்ரீவித்யா


கிண்டல்..

 

கிண்டல்..

 கிண்டலால் கிண்டப் படும் மனம்

கிண்டலால் கிடைத்தவை சில...

ரவையின் கிண்டல்... உப்புமா 

சொற்களின் கிண்டல்... கவிதை

எண்ணங்களின் கிண்டல் ...கதை

வண்ணங்களின் கிண்டல் ... ஓவியம் 

உணர்வுகளின் கிண்டல் ...மனம்

அன்பின் கிண்டல்...மனிதம்

Tuesday, August 5, 2025

இயற்கை

 இயற்கை 

---_--------

புழுதி படர்ந்த காற்றில்

வண்ணம் பூசி சிறகடித்தது

வண்ணத்துப்பூச்சி ஒன்று


நடை பயிற்சியாளர்கள் நகர்ந்த பின்

நடை பயின்று உலாவரும்

மாடப்புறாக்கள் தன் இணையோடு


விரைந்து செல்லும வண்டிகளிடையே

ஊர்ந்து சென்று பிழைத்தோம் என

கூட்டுக்குள் புகுந்த நத்தைகள் 


ஒய்யார வீட்டருகே

தன் கூட்டை வைத்த மகிழ்ச்சியில்

உணவு தேடிச் செல்லும் காகம்


மரத்தில் கூடு எனக்கும்தான் என

இலை மூடி காற்றில் அசையும்

எறும்புகளின் இல்லங்கள் 


விட்டார்களா நம்மை இவர்கள் என

சீட்டி அடித்து அதிசயிக்கும்

இரட்டை வால் குருவிகள்


மனிதன் ஆக்கிரமிப்பு செய்தாலும்

ஓயாத காற்றின் சுழற்சியாக

தன்னை மீட்டுக் கொண்டே இருக்கும்...

 இயற்கை

Sunday, July 27, 2025

நினைவு நல்லது வேண்டும் (ஆண்டு விழா கவியரங்கம்)

 

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம்-ஆண்டு விழா கவியரங்கம்



நினைவு நல்லது வேண்டும் 

----------------------------------------------

தமிழ்த் தாய்க்கு 

முதல் வணக்கம் 

நற்றமிழ் போற்ற

கூடி இருக்கும் அவையோர்க்கு

தமிழ் வணக்கம் 


இன்று தமிழ் அன்னை எனக்களித்த தலைப்பு 

மகாகவியின் நல் வரிகள் ...

'நினைவு நல்லது வேண்டும் ' 


நினைவு என்று எதைச் சொல்வீர்?


கடந்த காலத்தின் தடங்களா?

இக்கணத்தின் மனதின் துடிப்பா?

இல்லை

நாளைய பொழுதின் கனவா?


நினைவென்பது

நனவின் முத்திரைகளா?

அல்லது 

கனவின் சித்திரங்களா?


பாரதி கூறும் நினைவோ...

கனவுகளை மெய்ப்படுத்தும்...(2)


நினைவை

 சிந்தையில் நிறுத்தினால் அன்றோ

கனவுகள் நனவாகும்


 நிகழ்வுகள் நலமாக...

உலகம் உய்ய...

நினைவு நல்லது வேண்டும்


உயிரின் படைப்பில்..

உடலுக்கு உருவம் உண்டு 

மனதிற்கு வடிவம் இல்லை...


மனதை...நாம்

வடிவமைக்க வேண்டும் ...

சுயமாக சிந்தித்து 


செதுக்க வேண்டும் ...

சிந்தையில் 

எண்ணங்கள் நிலைக்க செய்து


எனவே...

வாழ்வை நிர்ணயிக்கும்...

மனதிற்கு வடிவம் இல்லை 


மனம் ஒன்று இல்லை எனில்

மனிதன் என்று சொல்வோமா?

குணம் அது திரிந்து விட்டால்

மனிதம் மறைந்து போகாதோ? 


உண்பது நாழி உடுப்பவை இரண்டே 

என்பதே வாழ்க்கை என்றானால்

தமிழில் திளைத்து மனமுருக

சங்கமம் இங்கே நடந்திடுமா? 


மிருகங்களுக்கும் மனமுண்டு

அவற்றுக்கென குணமுண்டு

மனிதனின் குணமென எதைச் சொல்வீர்?

தங்கக் கோட்டையில் வாழ்ந்தாலும் 

கள்ளமும் கயமையும் நிறைந்திருந்தால்

உதடுகள் மட்டும் புகழ் பாடும்

உள்ளம் அதையே நகையாடும்


மனிதம் தழைக்க உலகம் சிறக்க

நினைவு நல்லது வேண்டும் crescendo - 2


அல்லவை சொல்ல தேவையில்லை 

தரணி அறிய தானாக வலம்வரும்

நல்லவை சொல்வது அரிதென்றாலும்

காரிருள் சூழ்ந்தாலும்

ஒற்றை தாரகையாக வழிகாட்டும்


இருள் படர்கிறது என

இருளோடு உறைவீரோ?

மின்னும் நட்சத்திரத்தின்

ஒளித்துகளாய் ஒளிர்வீரோ?

ஒளித்துகளாக நினைத்தால் அன்றோ

கதிராக இருள் விலக்க

வழி தோன்றும் 


வாழ்வும் மிளிரும் உலகும் ஒளிரும்

நினைவு நல்லது வேண்டும்


உடலின் திண்மை ஊன் வளர்க்கும்

மனதின் திண்மை உயிர் வளர்க்கும்

நன்மை பயக்கும் செயலால் தான்

திண்மை என்பதே மேன்மையுறும்

செயல்கள் நலமாய் அமைந்திட

நினைவும் நலமாய் வேண்டும் 

உணர்ந்தே வரம் வேண்டினான் மகாகவி 

நினைவு நல்லது வேண்டும்  என...


எண்ணியது ஈடேற்றும்

நினைவென்பது...

காலத்தின் முகவரி

மனதின் முகம்

உயிரின் நாதம்

உடலின் மறைபொருள் 

வாழ்வின் நிலை 

இன்று கனவின் பிம்பம் 

அதுவே

நாளை நனவின் உருவம்..


எனவே நாளை

நாமும் நலம்பெற

உலகில் யாவும் நலம்பெற

நினைவு நல்லது வேண்டும் 


வாழ்வது ஒருமுறை தான்

அதில்

பாரதி சொன்ன

வேடிக்கை மனிதராக வீழ்ந்திட வேண்டாம் 

வழி காட்டும் 

துருவ நட்சத்திரமாக வாழ்ந்திட வேண்டும்(2)

அதற்கு

நமக்கும் வரம் வேண்டும் 

நினைவு நல்லது வேண்டும்


மகாகவியின் வரிகளைப் பகிர நல் வாய்ப்பளித்ததற்கு நன்றி. வணக்கம்


Monday, June 2, 2025

மூன்று தலைமுறை மகளிர் நியூசிலாந்து பயணம்

 

சமீபத்தில் நான், தாய் மற்றும் இளைய மகளுடன் நியுசிலாந்து சுற்றுப்பயணம் சென்றேன். விமான கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் என் மூத்த மகளின் தோழி - எங்களை நியுசிலாந்து முழுதும் காரில் சுற்றிக் காட்டினாள். அதன் அழகில் மயங்கி துளிர்த்த கவிதை:

 

மூன்று தலைமுறை மகளிர் நியூசிலாந்து பயணம்

புரட்டிப்போட்ட வாழ்க்கையை

புரட்டி போராடும் நங்கையவளுடன்

இரு வாரங்கள்

மூன்று தலைமுறை மகளிர் மட்டும்

நான்கு சக்கரத்தில்

நான்காயிரம் கிலோமீட்டர்

நியூசிலாந்தில்

நெடுஞ்சாலைப் பயணம்

 

 ஓவியத்துள் நுழைந்தேனோ...

கனவுக்குள் அமிழ்ந்தேனோ...

இயற்கை எழில் அள்ளிப்பருக

கண்களது போதவில்லை

மனமதுவோ கொள்ளவில்லை

மணித்துளிகள் பற்றவில்லை

 

 விட்டு விடு என

இயற்கை பிரித்த நிலமிது

விடுவதில்லை என

குடிபெயர்ந்த மனிதர்கள்

 

பசுமை பொங்கும் நிலங்கள்

மறைந்து புகையும் எரிமலைகள்

பற்பல தோற்றத்தில் மலைகள்

(Southern Alps - Mount cook)

 

பனிமலை அளித்த பனியாறுகள்

வானம் வசப்படுத்தும் ஏரிகள்

புள்ளினம் உலவும் வனங்கள்

சிரித்து கொட்டும் அருவிகள்

(Fantail falls, huka falls)

 

சிலிர்த்து ஓடும் நீரோடைகள்

சூழ்ந்து மயக்கும் கடல்

நீரோட்டங்களில் மெருகேறிய கற்கள்

நிலமெங்கும்  அழகின் உவகை

 

 வடக்கு தெற்கு தீவை

கடலலைகள் பிரித்தாலும்

வண்டிகள் ஏற்ற கப்பலொன்று

போக்குவரத்தை இணைக்கும்

(Bluebridge ferry)

 

மூடிக் கனலும் எரிமலையது

பிளவு வழி புகையாக

புவிவெப்பம் கடத்த (geo thermal)

 உருவாகும் மின்சக்தி

அது மனிதனின் யுக்தி

(Craters of moon)

 

அடர்ந்த காடுகளுண்டு

அதிசயம் காணீர்

அரவங்கள் (பாம்பு) ஏதுமில்லை

 

துள்ளி ஓடும் மான்களுண்டு

வேட்டையாடும் விலங்குகள் இல்லை

மனிதனைத் தவிர

 

டைனோசர் காலத்து பறவைகள் உண்டு

உயிர் பயமில்லை என

பறக்க மறந்த பறவைகள் பல உண்டு

(Kiwi, takahe, Weka)

 

குண்டு குண்டு கொசுக்கள் உண்டு

இரத்த சுவை கேட்காது

தாவர பட்சினி இங்கு அது

 

அடர்ந்த இருளிலும்

பயமேதும் இல்லை

குளிர் காற்றைத் தவிர்த்து

 

இயற்கையை பிரதிபலிக்கும்

பளிங்கென நீர்நிலைகள்

வானமும் சிறை படும்

தாவரமும் தழைந்திடும் (blue springs)

 

பனி நீரின் சில்லிப்பில்

கனிமங்கள் கலந்தோட

மயில் கழுத்து நிறமாகும்

நதிநீரும் நடை பயிலும் (turquoise river)

 

வானோடு போட்டியிடும்

நீலக்கடல் அலைகள்

சீறிப் பாய்ந்திடும்

கற்பாறைகள் செதுக்கிடும் (pancake rocks)

 

அலைகள் முத்தமிடும்

மலைகள் இங்குண்டு

பசுமை போர்த்தும் மலைமீது

பனியும் போர்த்தவே  துடிப்பதுண்டு

காலங்காலமாக பனி போர்த்திய

மலைகளும் இங்குண்டு (fox glacier)

 

ஆதியில் பனிமலையிடை

குடிபுகுந்த கடல்நீரின் கதையுண்டு (milford sound)

மலை உயர அருவிகள்

கடற்காற்றின் விளையாட்டில்

தொங்கும் அதிசயம் இங்கு

 

காண்போரின் உள்ளம் மயக்க

டால்பின்கள் ஓடிவரும்

காணும் அதிர்ஷ்டமிருந்தால்...

பென்குயினும் சீலும்

கடலோரம் விளையாடும்

 

கடலின் மடியில் மலைகள்

மலையின் மடியில் ஏரிகள்

ஏரிகளை அலங்கரிக்கும் மரங்கள்

(Lakes Tekapo, Taupo, Wanaka, Wakatipu, Matheson, Te Anau, Pukaki, mueller)

 

பச்சை மஞ்சள் சிவப்பு

போக்குவரத்து சிக்னல் அல்ல

வசந்தத்தின் வண்ணங்கள்

மரங்களின் ஆடைகள்

 

பனி ஆடை உடுத்த

இலை களைந்த மரங்கள்

காற்றைத் தடுக்க

வரிசை மாறா மரங்கள்

நில மடந்தை அணிந்து கொள்ள

பல வண்ண தாவரங்கள்

 

பச்சை புல்வெளி

போர்த்திய நிலத்தில்

ஒய்யாரமாக மேய்ந்திடும்

மாடுகள் வெள்ளாடுகள் மான்கள்

 

பனி போர்த்திய இளங்காலைகள்

குளிர் ஊடுருவும் அடர் இரவுகள்

கதிரவன் வருகையோ செல்கையோ

வானெங்கும் நிறக் கோவைகள்

கதிரவன் சிரிப்பதுண்டு

 எரிப்பதில்லை

 

கை எட்டும் தொலைவில்

வானம் நிறைத்து நட்சத்திரங்கள்

பால் வெளியும் தெரியும்

நாம் அதில் சிறுதுளி

என மனம் உருகும்

 

உணவுச் சங்கிலி சமன் இல்லை

பெருகும் ...

மானும் மயிலும் முயலும் தீதிங்கே

இயற்கை வழுவில் வழுவாதிருக்க

தேவை சில வியூகங்கள்

 

ஓசோன் ஓட்டை விளைவு

இங்கு தெள்ளத் தெளிவு

வானிலையின் நிலைகுலைவு

மனிதனின் தலைகுனிவு

 

என்றாலும் ..

காலந்தோறும்...

நினைவுப் பெட்டகம் தளும்ப

மென்மையாக அசைபோட

மனதை மயக்கிய

இனிய பயண நினைவுகள்