சென்ற மாதம் நிழல் ஏற்பாடு செய்திருந்த "ட்ரீ வாக்" சென்றிருந்தோம். ஆறு வருடங்களுக்கு முன் குப்பை மேடாக இருந்த 5 ஏக்கர் இடத்தை நிழல் ஆர்வலர்கள் தங்கள் அயராத உழைப்பால் அழகிய சோலையாக மாற்றியுள்ளார்கள். "பயோடைவெர்சிட்டி" என்ற கருத்துடன் அமைக்கப்பட்ட கோட்டூர்புர மரப்பூங்காவில் மண்ணின் மரங்கள் பலவற்றைக் காணலாம். மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட ட்ரீ வாக்கில், இயற்கை பற்றிய பல விஷயங்கள் தெரிய வந்தன.
உனக்கு தெரிந்த ட்ரீ சொல்லு என்றால் "பெளல்ட்ரி" என்ற சுட்டியின் பதிலோடு துவங்கியது ட்ரீ வாக். மரங்களின் பெயரோடு ஊருக்கு நம் முன்னோர்கள் பெயர் வைத்தனர். எனவே பிற்காலத்தில் எந்நேரத்திலும் அப்பெயரைக் கொண்டு அம்மண்ணின் தன்மை, தாவரங்கள், பூச்சிகள், பிராணிகள் என்று மீண்டும் அதன் இயற்கைதன்மையை நிலை நாட்டலாம் என்றார். மரங்கள் "geographical indicator" ஆகவும் உள்ளன. மேலும் குழந்தைகளிடம் உணவுக்கு ப்ளாஸ்டிக் உபயோகம் டாக்ஸினை வெளிப்படுத்தும், இலைகளை உபயோகித்தால் மண்ணோடு மட்கும் என்றும் கூறினார்.
ட்ரீ வாக் முடிந்து அவர்களுக்குப் பிடித்த மரத்தை வரைய சொன்னதும், அவற்றை பூங்கா தினமன்று காட்சிக்கு வைப்போம் என்று சொன்னதும் குழந்தைகளின் உற்சாகத்தை வெளிக் கொணரும் நல்லதொரு முயற்சி.
இத்தனை உழைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவின் கருத்தை அறியாமல் இன்னும் ஷட்டில் கோர்ட் போடலாம், மரங்களை உருவங்களாக மாற்றலாம் என்று வருவோருக்கு விழிப்புணர்வை இன்னும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிழல் ஆர்வலர்களுக்கு நன்றி.
ஒவ்வொரு மரத்துடனும் மகரந்த சேர்க்கைக்கு ஒரு பூச்சி உண்டு என்ற தகவலுடன் தொடங்கியது ட்ரீ வாக்
அத்தி
அத்தி பழமல்ல பூ. அத்தி மரத்தின் பூச்சி குளவி. அத்திப்பழம் மினரல்ஸ் நிறைந்தது. எனவே அம்மாக்களை அத்திப்பழ பொரியல் செய்து தரச் சொன்னார்.
புன்னை
கிருஷ்ணர் ஏறி விளையாடிய மரம். மயிலாப்பூரில் இம்மரத்து காய்களுக்கும் பூச்சிகளுக்கும் மயில்கள் வரும். ஒரு காலத்தில் புன்னை மரங்கள் நிறைந்து மயில் அகவும் ஊராக இருந்தது தான் நம் மயிலாப்பூர். ஸ்தல விருக்ஷம் தவிர்த்து இப்பொழுது அங்கு புன்னை மரங்கள் இல்லை
கனக சம்பா
ப்ளாஸ்டிக்கின் தீமைகளை "டின்னர் லீப்" எனப்படும் கனகசம்பாவின் இலைகளைப் பற்றி பேசும் பொழுது கூறினார். பெயரைக்கு ஏற்ப சாப்பாடு சாப்பிடும் அளவு பெரிதாக இருந்தன இலைகள். தங்க நிறத்தில் பூக்கும் என்பதால் கனக சம்பா என்ற பெயராம்
புரசு
"Flame of the Forest" என்றழைக்கப்படும் புரசு மரங்கள் நிறைந்த இடமாம் புரசைவாக்கம். இன்று ஸ்தல விருட்சம் தவிர புரசு மரங்கள் அங்கு கிடையாதாம்.
மகிழம்
Bullet wood என்றழைக்கப்ப்டும் மகிழ மரம் ஒரு stress buster. அதன் அடியில் நின்றாலே மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி உண்டாகுமாம். மற்றபடி மகிழம் பூவின் மணம் எல்லோரும் அறிந்தது தானே? மேலும் மகிழ மர இலைகளும் பட்டையும் மவுத் வாஷாகவும் திகழ்கிறது
நாவல்
நாவல் பழக்கொட்டை சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து என்பது அறிந்தது தானே? இம்மரம் ஒரு "geographical indicator" என்றும் சொன்னார். யாகங்கள் செய்யும் பொழுது நாவல் மரங்கள் நிறைந்த கண்டத்தில் என்று முன்னோர்கள் மரங்களைக் கொண்டு இடங்களை அடையாளம் கொள்வதை எடுத்துக்காட்டினார்
பாதாம்
பாதாம் என்றழைக்கப்படும் நாட்டு வாதுமை மரத்தையும், வாதாங்கொட்டை மரத்தையும் அடையாளம் காட்டினார். குதிரை கிடுக்கன் . சிறிதே இடம் பிடிக்கிறது என்று சன்னலோரம் நடப்படும் நாட்டு வாதுமை, பூ பூக்கும் காலங்களில் சன்னல் திறக்க இயலா வண்ணம் வாடை அடிக்கும். எனவே செய்யும் செயலை ஆராய்ந்து செய்யுங்கள் என்றார்
நீர்மருது
அர்ஜுனா மரம் என்றழைக்கப்படும் நீர்மருது ஆற்றோரம் விளையும் மரமாகும். நன்கு வளர்ந்த மரத்தில் காது வைத்து கேட்டால் நீரோட்டம் தெரியும். இதன் பட்டை இதய நோய்களை குணப்படுத்தும்தன்மை உடையது.
புங்கம்
புங்க மரம் கிட்டதட்ட ஒரு டிகிரி வெப்பத்தை குறைக்கும்தன்மை உடையது. இதன் விதைகளில் இருந்து பயோ டீசல் தயாரிக்கப்படுகிறது, இதன் மலர்கள் மற்ற மரங்களின் மலட்டுத்தன்மையைப் போக்கும். இது கடலோரம் காணப்படும் மரம். எங்கள் வீட்டு புங்க மரம் வெகுநாளாக வளரவே இல்லை. அதற்கு பதில் இங்கு கிடைத்தது. முதலில்தன் வேரை நன்கு வளர்த்துக்க்கொண்டு தன் அடிப்படையில் நன்கு உறுதியானபின், மேலே தழைக்கிறது. இதனால், புயல் காற்றுக்கும் உறுதியாக நிற்கிறது. இதன் இலைகளில் பூஞ்சை காணப்படும். அதனால் இலைகளின் அழகு சற்றே குன்றி இருக்கும். ஆனால் இதன் பயனோ எண்ணற்ற்வை. எனவே வெளி அழகைக் கொண்டு யாரயும் எடை போடக்கூடாது. மேலும் எந்த பதிலுதவியும் இன்றி பூஞ்சைக்கு இடமளிக்கும் இது நட்புக்கு நல்லதொரு உதாரணம்
நுணா
எனப்படும் நுணா மரத்து சாற்றில் தோய்க்கப்படும் துணிகளை கரையான்கள் அரிப்பதில்லை
நொச்சி
நொச்சி செடிகள் இருக்கும் இடங்களில் கொசுக்கள் அடையாது. (சுற்றுப்புறம் மிக மோசமாக இருந்தால் நொச்சி இலையிலேயே கொசுக்கள் இருக்கும் என்றும் சொன்னார்)
அசோக மரம்
நாம் அசோக மரம் என்று எண்ணும் நெட்டிலிங்க மரங்கள் அசோக மரம் அல்லவாம். அது போன்றே இலை இருக்கும் அசோக மரத்தைக் காட்டினார். நெட்டிலிங்க மரங்களின் இலைகளுக்கு சத்தம் உரிஞ்சும் ஆற்றல் உண்டாம். எனவே தான் அவை கல்வி வளாகங்களில் காணப்படுகின்றன. அசோக மரம் மிகவும் பாதுகாக்கப்படும் மரமாம். அதற்கு சேதம் உண்டாக்குபவர்களுக்கு சட்டப்படி தண்டனை உண்டாம். ஆயுர்வேதத்திற்காகப் பட்டையை எடுக்க அனுமதி வாங்கியே எடுக்க வேண்டுமாம். மேலும் அந்த மரத்தில் 2 வருடம் வரை மீண்டும் பட்டை எடுக்கக் கூடாதாம்.
மூக்குச்சளி மரம்
Indian cherries எனப்படும் மூக்குச்சளி மரம் எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு பிடித்த மரம் ஆனது. இந்த பழங்களைப் பறித்து சுவைத்த குழந்தைகள் இதன் பெயர் காரணத்தை உணர்ந்தனர்
(படங்கள் நன்றி: நிழல் ஆர்வலர்)
பூவரசு, மந்தாரை , புங்கன் என்று இன்னும் பல மரங்களைக் காண நேரம் தான் இல்லை. மான்கள் வந்து இளைப்பாறும் மலைப்பூவரச மரம், ஒரு குகை போலவே நிழலாக குளிர்ச்சியாக இருந்தது. அரளி செடி இலைகளுக்கு டாக்ஸின்களை உறிஞ்சும் ட்னமை இருப்பதாலேயே அவை சாலைகளில் வைக்கப்படுவதாகக் கூறினார். குழந்தைகளுக்கு மண்ணின் மரங்களைக் காட்டிய திருப்தியுடன் முடிந்தது ட்ரீ வாக். இம்முயற்சியை முன்னின்று நடத்திய நிழல் ஆர்வலர்களுக்கு மிக்க நன்றி
உலகில் நமக்கு தெரியாத விஷயங்கள் ஏராளமாக உள்ளன என்பதற்கு இம்மரங்கள் பற்றிய விஷயங்களே உதாரணம். இயற்கையில் தான் எத்தனை அதிசயங்கள். மனிதனால் உதவ முடியாவிட்டாலும் உபத்திரவம் பண்ணாது இருந்தாலே நன்றாக இருக்கும். அழகான இந்த பூங்காவை உருவாக்கியதோடு விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிழல் ஆர்வலர்களுக்கு நன்றி