என் மேகம் ???

Saturday, June 22, 2013

திருலா


வருடங்கள் ஓடிவிட்டது  "திருலா"க்கு சென்று. அது ஒரு காலம், அம்மன் கோவிலில் சூரன் செய்வதை வேடிக்கை பார்த்து, இரவு  விழித்திருந்து தெருவுக்கு தெரு ஓடி போய் சூரன் எரிக்க்கப்படும் வரை  சூரங்குத்து பார்த்து, நாள்தோறும் மண்டாப்படி போய் சாமி பார்த்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி "ஆஹோய் அல்லாஹோய்" பாடி,  பொருட்காட்சி சுற்றி, புட்டு அவித்துக் கொண்டு போய் வானவேடிக்கையை பார்த்து தேரோட்டம் பார்த்து  என்று...


வீடியோ கேம்ஸ் , ஐ பாட் என்று இயந்திரங்களுடன் பழகிவிட்ட  குழந்தைகளுக்கும் கொஞ்சம் உயிர்ப்புடன் சில விஷயங்களைக்
காட்டவும் ,  இந்த வருடம் சித்திரைப்பொங்கல் தான் கோடை விடுமுறை என்று கிளம்பி விட்டோம் சிவகாசிக்கு. திருவிழா எப்பொழுதுமே திருலா  தான்.


ஐந்தாம் திருலா  , ஆறாம் திருலா  , கயறு குத்து, வாண வேடிக்கை, தேரோட்டம் இவை தான். மனதில் நின்றவை. ஐந்தாம் திருலா , ஆறாம் திருலா , கயறு குத்து இவற்றைக் காண ஊருக்கு பயணம் செய்தோம்.
ஐந்தாம் திருலா , ஆறாம் திருலா மண்டாப்படியில் சாமி பார்க்க கூட்டம் அலைமோதும்.





 ஐந்தாம் திருலா இரவு சூரங்குத்து , ஒரு தெருவில் சூரன் வந்து ஏமாற்றி செல்ல,  அடுத்த இடத்தில் தலை வெட்டுபட்டு மாட்டு தலை பொருத்த , சிறு வயதில் ஓடி ஓடி ஆட்டு தலை மாற்றி, வேப்பிலை செருகி, எரிக்கும் வரைப் பார்த்ததுண்டு. குட்டீஸிடம் அந்த பொறுமை இல்லை இரவில் 2 மணிக்கு அதை எதிர்பார்க்க முடியாது. எனவே மாட்டு தலையுடன் சூரனைப் பார்த்து முடித்தோம்.



ஆறாம் திருலா முடிந்த மறுநாள் அதிகாலை கழுவேற்றம். கிராபிக்ஸ் உலகின் முன் இதெல்லாம் பெரிதாக தெரியாவிட்டாலும், திருலாவின் அழகே தனி தான். அக்கா காளியம்மன் தங்கை மாரியம்மனின் இடம் வந்து கழுவேற்றம் கண்டு, வாணவேடிக்கை கண்டு சென்றாள்


கயறுகுத்து அன்றுதான் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வேப்பங்குலையு டன்  "ஆஹோய் அல்லாஹோய்" பாடி, கோயிலுக்கு செல்வது.  சிறார்கள் எல்லாம் கூட்டமாக செல்வதே தனி அழகு. இப்படி செய்தால் நோய் வராது என்பது நம்பிக்கை . எங்கள் பிள் ளைகளும் கரும்புள்ளி செம்புள்ளியைக் கலை ந யத்துடன் குத்திச் சென்றார்கள். அதற்கு தாளத்துடன் பாட்டு,

ஆஹோய் அல்லாஹோய்
ஆத்தாத்தா பெரியாத்தா
அம்பது பிள்ளை பெத்தாத்தா
உனக்கு நாலு எனக்கு நாலு
போடாத் தா
கம்பு குத்து கயறு குத்து
ஆஹோய் அல்லாஹோய்
மாரியாத்தா கும்பா
மாவிடிச்சி திம்பா
 காளியாத்தா கும்பா
கறியுஞ் சோறும் உம்பா
ஆஹோய் அல்லாஹோய்

(அக்கா தங்கை அம்மன், பணக்கார மற்றும் ஏழை அம்மன், அதற்கேற்றவாறு மாவோ கறியோ)
 

அன்றிரவு வாணவேடிக்கை , கிளம்பி விட்டதால் புகை வண்டி நிலையத்தில் நின்று கண்டோம். ஒன்று இரண்டு என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்றெண்ணியவாறு திருலாவின் ஒரு பகுதியை வெகுநாள் கழித்து கண்ட திருப்தியோடு ஊர் திரும்பினோம் .