போன மாசம் ஊருக்குப் போயிருந்தேன். உதிரிப்பூ வாங்கி 5 முழம் கட்டினவுடன் நினைவலைகளில் மூழ்கிட்டேன்.
சின்ன வயசில எங்க வீடோ சொந்தக்காரங்க வீடோ எங்க போனாலும் , உதிரிப்பூ வாங்கி பூக்கட்டுறது ஒரு தினப்படி வேலை. மூணு மணி போல பூக்காரங்க வருவாங்க. ”உதிரிப்பூ” நு கூவி தான் பூவே விப்பாங்க. பூவை வாங்கி , அதோட நாரும் வாங்கி , அந்த நாரைக் கொஞ்ச நேரம் தண்ணில ஊறப்போட்டு வைப்பாங்க. அனேகமா ஸ்கூல் முடிஞ்சு வர்ற நேரம் பாதி பூ கட்டி இருக்கும். வந்த உடனே பூவை ரெண்டாவோ மூணாவோ எடுத்து வைப்போம். அது தான் பூ கட்ட கத்துக்க ஆரம்ப பயிற்சி. அப்புறம் காய் பூ எல்லாம் கொடுத்து கால்ல நூல் பிடிச்சு பூ கட்ட சொல்லி கொடுப்பாங்க. நடுவில ஊசி வச்சு பூ கோர்க்கலாம். அதுதான் ரொம்ப ஈசி. இது ரெண்டு டெக்னிக்கிலுமே கட்டினால் , சரத்தை நடுவில வெட்ட முடியாது. அப்புறம் கொஞ்சமா பெரியவங்க மனசு இறங்கி பூ கட்ட சொல்லிக் கொடுப்பாங்க. பிச்சி, கனகாம்பரம் தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ். குட்டை காம்புங்கறதால் மல்லி தான் லாஸ்ட் சாய்ஸ். அதுவும் முதல்ல காய் பூவும் , வாடின பூவும் வச்சி தான் பழகச் செய்வாங்க... பூ கட்ட பெரும்பாலும் நார் தான்... அதுவும் நல்ல நாரா பூக்காரங்ககிட்ட பார்த்து வாங்கணும். நாரை ஊக்கு வச்சு மெல்லிசா பிரிக்கணும். சோத்து நார்னா முழுசா பிரிக்க வராது.. அப்படியே பிரிஞ்சாலும் கட்டும்போது வெட்டிட்டு போயிடும். ஓரொரு பூவா வச்சு கட்டி, அப்புறம் இரண்டு மூணுனு வச்சு கட்டி, அப்புறம் யார் நீளமா கட்டறாங்கனு போட்டி... எல்லாம் ஒரு ஜாலி தான். அப்புறம் இன்னும் டெக்க்னிக்ஸ்னு சரத்துக்கு நடுவுல நார்ல சங்கிலி பாட்டர்ன் வர்ற மாதிரி, மாலை மாதிரினு யார்ட்ட இருந்தாவது ஏதாவது கத்துக்குவோம். இப்பல்லாம் உதிரிப்பூ கொண்டு வர்ற மாதிரி தெரியலை...சரம்தான்... பூச்சரம் எல்லாம் நூல்ல தான்... அதுவும் சென்னைல வாங்கினால் தடி நூல்ல தள்ளி தள்ளி கட்டி இருக்கும், முழம் கணக்கு. மதுரை பக்கமெல்லாம் எண்ணிக்கை கணக்கு... 100 , 50னு ஆனால் நல்ல நெருக்கமா இருக்கும் . கோவை பக்கம் முழம் கணக்குனாலும் ஓரளவுக்கு பூ நெருக்கமா தான் இருக்கும்.
இன்னொரு வாசமான நினைவு மருதாணி. மருதாணியைப் பறிச்சு அம்மில அரைச்சு, கைக்கு நடுவில் பெரிய வட்டம், அப்புறம் சின்ன சின்ன வட்டம், அப்புறம் விரல்ல குப்பி குப்பியா வச்சுட்டு படுத்தால், காலைல படுக்கையெல்லாம் விழுந்து கிடக்கும். அந்த மருதாணி கை வாசமே தனி. யாருக்கு சிவப்பா பிடிச்சிருக்குனு போட்டி வேற. அப்புறம் கலர் மங்கி, விரல் நகத்தில மட்டும் குட்டி குட்டி ஆரஞ்சு நிலவா இருந்து அப்புறம் நகத்தை வெறிச்சுனு ஆக்கிட்டு மறைஞ்சு போயிடும். இந்த மருதாணி பறிக்க, யார் வீட்ல இலை இருக்குனு தேடுவோம். அதுவும் முள் இருக்கிற மருதாணிதான் நல்லா பிடிக்கும். மிக்ஸி இருந்தாலும் அம்மில அரைச்சா தான் அம்மாவுக்கு திருப்தி. அப்புறம் வடநாட்டு ஸ்டைல் க்ரேஸ் ஆரம்பிச்சுது. ப்யூட்டி பார்லர்க்கு போகணும் கை நிறைச்சு டிசைன் போட... எனக்கு என் கல்யாணத்துக்கு போடணும்னு ஆசை. 500 ரூபா இதுக்கா செலவழிக்கணும்னு ஆசை எல்லாம் தூக்கிப் போட்டுட்டேன். அப்புறம் ப்யூட்டி பார்லர் பெருக பெருக மெகந்தி போடற விலையும் குறைஞ்சிடுச்சு. இப்ப தி.நகர் போனால் 50 ரூபாய்க்கு கை நிறைய போடறான்...என்ன கொஞ்சம் கெமிக்கல் வாசம் வீசி அந்த மருதாணியோட வாசத்தை மனசுக்குள்ள கொண்டு வருது....
இன்னொரு அழகான நினைவு கோலம். அம்மாவுக்கு தினம் சாணி கரைச்சு, வாசல் தெளிச்சு கோலம் போடற பழக்கம் உண்டு. மார்கழி மாசம் வாசல் அடைக்க கோலம், பொங்கலுக்கு விடிய விடிய தெரு அடைக்க கோலம். கைல சின்ன சின்ன பார்டர் போடறது போய், கோல மாவு அடைச்சு குழலை உருட்டினால் பார்டர் வந்தது. விசேஷ நாள்னா மாக்கோலம். பச்சரிசி ஊற வச்சு, அரைச்சு, அதில துணி போட்டு, அழகா கோலம் போட்டு, செம்மண் கரை கட்டினால், கலர் கோலம் கூட கொஞ்சம் டல்லாயிடும். அப்புறம் மாக்கோலத்துக்கு பதிலா பெயிண்ட், ப்ளாஸ்டிக் அட்டைனு வந்துடுச்சி. கோலம் கத்துக்கவும் பூ கட்டற மாதிரி பல படி உண்டு. முதல்ல ரெண்டு புள்ளி கோலம், அப்புறம் மூணு புள்ளி கோலம், அப்புறம் அஞ்சு புள்ளி சாக்லேட் கோலம், ஆறு புள்ளி விளக்கு/பூ கோலம்... இங்கே நேர் புள்ளி , இடை புள்ளி ஆரம்பிக்கும் , அப்படியே கோட்டு கோலமெல்லாம் கத்துக்குவோம். நெளி கோலமும் இதே மாதிரி சின்னதில இருந்து தொடங்கும். மங்கையர் மலர்லயும், மங்கைல இருந்தும் அம்மா காப்பி பண்ண நீளமான குண்டு நோட்டு இன்னும் கண்ணுல நிக்குது. வீடு மாற மாற, அதுவும் காணாமல் போயிடுச்சு. நினைவில இருக்கிற நாலு கோலத்தை என்னிக்காவது நினைச்சா வாசல்ல போடுவேன் மாக்கோல வாசத்தை நினைச்சுகிட்டே...