என் மேகம் ???

Tuesday, March 31, 2009

தித்திக்கும் முத்தம்...



மழலை பொழிந்தது முத்தமழை
மனதுள் உருவானது பனிமலை

உன் பறக்கும் முத்தத்தில்
நிறமிழந்தது வண்ணத்துப் பூச்சி

உன் முத்தத்தின் ஈரத்தில்
வறண்டது மனதின் வறட்சி

நீ கன்னத்தில் முத்தமிட்டால்
பாரதியின் வரிகள் உயிர் பெறுகின்றன

உன் முத்தத்தின் குளிர்ச்சியில்
ஐஸ்க்ரீமாக உருகியது மனம்

தித்திக்கும் முத்தத்தின் இனிப்பில்
தித்திப்பை இழந்தது குலாப்ஜாமூன்

உன் முத்தம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்
உன்மத்தம் ஆகிறது மனம்

ரோஜாவிற்கு மழலை முத்தம்
மலர்களுக்குள் இப்பொழுது யுத்தம்



நூறுமுறை கிடைத்தாலும்
போதும் என்று கூறிடாது மனம்

மீண்டும் உன்னை சீண்டுகிறேன்...
மன்னிப்பாக நீ கேட்பது முத்தமல்லவா?

அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் பெற்றாலும்
அடங்கவில்லை ஆசை

உன் முத்தத்தின் இதத்தில்
மறந்து போனது மனக்கவலை

உன் முத்தத்தின் குளிர்ச்சியில்
மனப்பூக்கள் பூக்கின்றன

தென்றலாக உன் முத்தம்
பூவானது என் மனம்




அன்பாக ஆசையாக
வெற்றியின் பரிசாக
தவறுக்கு மன்னிப்பாக
கோபத்திற்கு தண்மையாக
வலிக்கு இதமாக
என எந்த காரணத்திற்கு
கொடுத்தாலும் பெற்றாலும்
தித்திக்கும் மழலை முத்தம்

Thursday, March 26, 2009

பள்ளி செல்கையில்...

சுட்டெரிக்கும் வெயிலில்
புத்தகச் சுமையோடு
கைப்பிடித்து நடத்தி
அழைத்து வந்தாலும்...


போக்குவரத்து நெரிசலில்
அலுவலக அவசரத்தில்
இருசக்கர வாகனத்தில்
அழைத்து வந்தாலும்...

வெயில் சற்றும் படாமல்
சொகுசாக இருத்தி வைத்து
காரில் பூவைப் போல்
அழைத்து வந்தாலும்...

எல்லா பெற்றோரின் கண்களிலும்
குழந்தையின் எதிர்காலம் பற்றி
வண்ண வண்ணக் கனவுகள் தாம்...

Tuesday, March 24, 2009

மறந்த நாள்...

மெய்யோடு இருந்த பொழுது
நினைவுக்கு வந்ததில்லை
பிறந்த நாள்...

நினைவுகள் மட்டுமே மெய்யாகிப் போன
இந்த பொய்யான வாழ்க்கையில்...

மெய்யான பிறந்த நாளும்
பொய்யான பிறந்த நாளும்
மறவாமல் நினைவிற்கு வருகிறது

பிறந்த நாளும்
மறைந்த நாளும்
என்றும் மறவா நாளாக
இதயம் கனக்கிறது...

Saturday, March 21, 2009

தீராத ஏக்கங்கள்



கொடுக்காத முத்தங்கள்
மிச்சம் இருக்கின்றன

ஆடாத விளையாட்டுக்கள்
நிறைய இருக்கின்றன

தேவதை கதைகள்
இன்னும் கேட்க இருக்கின்றன

பால்யத்தைக் கவர்ந்து
சென்றது காலம்



சிந்தாத சிரிப்புகள்
சிதறிக் கிடக்கின்றன

காணாத கனவுகள்
கண்ணுள் நிற்கின்றன

சொல்லாத இரகசியங்கள்
பூட்டிக் கிடக்கின்றன

இளமையைக் கவர்ந்து
சென்றது காலம்




கேட்காத கேள்விகள்
மனதுள் சுழல்கின்றன

புரியாத நிகழ்வுகள்
நிறைய இருக்கின்றன

ஆறாத காயங்கள்
இரணமாக உள்ளன

வாழ்க்கையைக் கவர்ந்து
சென்றது காலம்



வாழாத தருணங்களை எண்ணி
வாழ்ந்த வாழ்க்கையை மறந்த
தீராத ஏக்கதோடு நோக்கினேன்
முடிந்து போன வாழ்க்கையை...

(படங்கள்: இணையம்)

Friday, March 20, 2009

காதல் காதல் காதல்.... காதல் போயின்???

சுற்றுவட்டாரத்தில் காதல் , திருமணத்தில் முடிந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் காதல் மீது கவனம் கொள்ள வைத்த ஒரு தோழியின் காதலே!!!

நான் அவரை சந்தித்த பொழுது அவர் கல்லூரி முடித்து மூன்று ஆண்டுகள் இருக்கலாம். ஹாஸ்டலில் வெகு நேரம் தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பார். அவரது ஆண் நண்பரின் அழைப்பு என்று வதந்திகள் உலாவிக் கொண்டிருக்கும். அமைதியாக இருக்கும் அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு வந்த பொழுது நான் அவரது காதலை வியந்தேன். கல்லூரியில் முளைவிட்டு வளர்ந்த காதல் அது. அவர் அவரது காதலருக்காகக் காத்துக் கொண்டிருந்தார் என்றால் மிகை ஆகாது.

காதலருக்காக அசைவ உணவை விட்டிருந்தார். முன்னணி கல்லூரியில் தேர்வு பெற்று பல வேலை வாய்ப்புகளைக் காதலுக்காக நிராகரித்திருந்தார். திருமணத்திற்குப் பின் தான் தனது வேலை பற்றிய முடிவு என்று உறுதியோடு காத்திருந்தார். கிராமத்தில் இருந்து வந்ததால் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. கிட்டதட்ட அவரது காதலால் அவர் தந்தையின் உயிர் ஊசலாடும் நிலைக்குப் போயிருந்தது. என்றாலும் உறுதியாகப் போராடி வீட்டில் அனுமதி பெற்றார். அமெரிக்காவில் இருந்து வைர மோதிரத்தோடு வந்தார் காதலர். தன் வீட்டில் சம்மதம் பெறச் சென்றார். மீண்டும் அமெரிக்கா சென்றார். அதன் பிறகு அவரது இருப்பு இவருக்குத் தெரியவில்லை. மின்னஞசல்கள் கிணற்றில் இட்ட கல்லாயின. மேலும் இரண்டு வருடங்கள் காத்திருந்துவிட்டு எந்த தகவலும் இல்லாததால் வீட்டில் சொன்ன இடத்தில் கழுத்தை நீட்டினார். எனக்கு அவரது காதலின் மென்மையும், உறுதியும் தெரியுமாதலால், மிகவும் வருத்தமாக இருந்தது. காதல் என்றால் எனக்கு இது தான் ஒரு சின்ன ஏக்கத்தோடு நினைவுக்கு வரும்.

இன்று எனக்கு நினைவுக்கு வந்த காரணம் இன்னொரு காதல். அவன் தன் காதலைப் பற்றி எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான். இரு வருடங்களாகக் காதலிப்பதாகவும் தங்கள் வீட்டில் போராடுவதாகவும் கூறினான். விரைவில் கைகூட வாழ்த்தினேன். சமீபத்தில அவனுக்கு திருமணம் நிச்சயமானது. அவனது ஆட்டம் பாட்டத்துடன் வேறு ஒரு பெண்ணுடன். ஒரு சிலருக்கு காதல் விளையாட்டாக உள்ளது. இதுவும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

காதல் காதல் காதல்.... காதல் போயின்??? காதலர்களே!! காதலித்தால் உறுதியாக நின்று திருமணம் செய்து கொள்ளுங்கள். தோல்வியின் வலியை நினைத்துப் பார்க்கவே எனக்கு வலிக்கிறதே!!! அனுபவிப்பவருக்கு எப்படி இருக்கும்?

ஊக்கமது கைவிடேல்

இந்த நூறாவது பதிவை எழுதுகிறேன் என்றால் ஒவ்வொரு பின்னூட்டமும், நம்மையும் ஃபாலோ பண்றாங்கப்பா என்ற நம்பிக்கையும் தரும் ஊக்கம்தான். எனது நன்றிகள்.

"மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" என்றார் வள்ளுவர். உண்மை தான் உள்ளம் மட்டும் நைந்து போய் ஊக்கம் இழந்தால் நம் செயல்திறன் குறைந்து விடும். அதனால் தான் "ஊக்கம் உடைமை" பற்றி ஓர் அதிகாரமே திருவள்ளுவர் எழுதினார்; "ஊக்கமது கைவிடேல்" என்று ஒளவை கூறினார்.

"அவியல் இன்னிக்கு சூப்பர்", என்ற பாராட்டில் 25 வருடங்களுக்கும் மேல் சமைக்கும் அம்மாவின் முகத்தில் வெட்கம் கலந்த மகிழ்ச்சி. அது வீடு முழுதும் பரவுகிறது. இது அங்கீகாரம் தரும் ஊக்கம்

என் பெண் நீச்சல் கற்றுக்கொண்டாள். என்றாலும் பெரிய குளத்தில் நீச்சலடிக்க பயம். எத்தனையோ வார்த்தைகளும், க்ளாஸ்களும் அவளுக்கு நம்பிக்கை தரவில்லை. அவள் தோழி ஒரு நாள் வந்தாள். குளத்துள் காசை போட்டு நீச்சல் அடித்து எடுத்து வந்தாள். மூன்றாம் நாள் இவளும் அவ்விளையாட்டில் இருந்தாள். இது ஆரோக்கியமான போட்டி தந்த ஊக்கம்.

சைக்கிள் கற்றுக்கொண்டால் அவள் கொஞ்சம் independent ஆக இருப்பாள் என எவ்வளவோ முயற்சித்தோம். ம்ஹூம்.. அவளுக்கு அதை ஓட்ட பிடிக்கவில்லை. அவள் தோழி வந்து புத்தகம் வாங்கி செல்வதை மேற்கோள் காட்டியும் அவளுக்கு விருப்பமில்லை. ஒரு நாள் , "என்னால் இனிமேல் உன் டான்ஸ் க்ளாஸுக்கு வந்து விட முடியாது , அதனால் டான்ஸை நிறுத்தி விடுவோம்", என்றேன். இரண்டே நாள் தான் சைக்கிள் கற்றுக்கொண்டாள். எனக்கு புது சைக்கிள் வாங்கி கொடு நானே க்ளாஸ் போய்க்கொள்கிறேன் என்றாள். இது டான்ஸின் மீது இருந்த் ஆர்வம் தந்த ஊக்கம்.

சீக்கிரம் படிச்சு முடிச்சா டி.வி பார்க்கலாம் என்று வேகமாக படிப்பது ஆசை தரும் ஊக்கம்.
இந்த சனி ஞாயிறு வந்து வேலை முடிச்சிட்டால் இரண்டு நாள் லீவ் போட்டு பிள்ளைகளோடு இருக்கலாம் என்று வேலையில் வரும் உற்சாகம் பாசம் தந்த ஊக்கம்.

"இதுக்கெல்லாம் சோர்ந்து போனால் எப்படி? இன்னும் சாதிக்க நிறைய இருக்கு, உங்களால் கண்டிப்பா முடியும்" என்ற ஆறுதலான வார்த்தைகள் தோல்வியால் துவண்டவரை அடுத்த அடி எடுத்து வைக்க ஊக்கம் தரும்.

"உடம்புக்கு என்ன வந்துடுச்சுனு இப்படி இருக்கீங்க? நல்ல உணவா அளவா சாப்பிட்டு, உற்சாகமா இருந்தால் நோய் ஓடிடாது", என்ற ஆறுதலான வார்த்தைகள் நோயில் இருப்போர்க்கு தேறிவிடுவோம் என்ற தெம்பு தரும்.

இப்படி ஊக்கம் கொடுக்க பல காரணங்கள் இருக்கலாம். பல வேளைகளில் வலிகளும் வேதனைகளுமே பலருக்கு ஊக்கம் கொடுத்திருக்கும். நிராகரிப்பு, கோபம் என்ற வேண்டாத விஷயங்களை ஊக்கமாக எடுத்து உயர்ந்தோர் பலருண்டு. நாம் வலிகளைக் கொடுக்க வேண்டாம், மனம் நிறைந்து ஊக்கம் கொடுக்கலாமே!!


காசு பணம் வேண்டாம், ஊக்கம் தர மனம் போதுமே!!! மனம் நிறைந்து ஊக்கம் தரும் வார்த்தைகள் உங்களை அறியாமலே இன்னொருவருக்கு பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

Monday, March 9, 2009

விரியும் உன் உலகம்...



என் கருவில் நீ இருந்தாய்
உருண்டாய் புரண்டாய்
எனக்கே எனக்குள்ளே
நான் மட்டும் உன் உலகமென...

அழுகையுடன் கூடிய
உன் வருகையில்
புன்னகைகள் மலர்ந்தன
வீடு உன் உலகமானது...

அழுது ஆர்ப்பரித்தாய்
குப்புற விழுந்து நோட்டமிட்டாய்
தவழ்ந்து வந்து ஆராய்ந்தாய்
நின்று பார்த்து மகிழ்ந்தாய்
நடந்து நடந்து ஓய்ந்தாய்
சிரித்துப் பேசி வசீகரித்தாய்
மெல்ல மெல்ல நுழைந்தனர்
உறவுகள் உன் உலகில்...

என்றாலும்...
என்னை விட்டு அகலமாட்டாய்
ஓடி ஆடும் பிள்ளைகள் இருந்தாலும்
விளையாட விழைந்தாலும்
உனக்கு நான் வேண்டும்
என்ற நிலை மாறி...

என் இருப்பை மறந்தாய்
ஓடி விளையாடினாய்
நீயே விரித்துக் கொண்டாய்
தெருவுக்குள் உன் உலகை...

பள்ளி செல்லத் தொடங்கினாய்
சற்றே என் நிழல் விட்டு
ஒரு வட்டம் அமைத்துக் கொண்டாய்
உன் உலகில் நட்பு பூத்தது...

என்றாலும்...
என்னை விடுத்து
வெகு தொலைவு சென்றதில்லை

இன்று...
மிதிவண்டி மிதித்து
அக்கம்பக்கம் செல்கிறாய்
கவலையோடு நான் காண
எனக்கு தைரியம் சொல்கிறாய்
நெஞ்சை சூழும் பயங்களுக்கு
உன் தன்னம்பிக்கையே ஆறுதல்

ஆஸ்கர் விருதுகளை ஆராய்கிறாய்
ஸ்மைல் பிங்கியைப் புரிந்து கொள்கிறாய்
வெளி உலகம் இன்று உன் உலகில்...


மெளனமாக இரசிக்கிறேன்...
மெல்ல மெல்ல...
விரியும் உன் உலகம்
உன் முன் சுருங்கும் அதிசயத்தை!!!!








Sunday, March 8, 2009

யாழினியும் மீனும்




யாழினிக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு அவளது பிடித்தம் ஆச்சரியமாக இருக்கும். எப்பொழுதிலிருந்து அவளுக்கு மீன் மீது ஈடுபாடு என்று யோசித்ததில்...

முதன்முதலில் ப்ளே ஸ்கூல் சென்றபொழுது அவள் வரைந்தது கூட மீன் தான். ஏதோ ஒரு வடிவம் போட்டு உள்ளே ஒரு புள்ளி வைத்து காட்டுவாள். இது என்னடா? "ஃபி...ஃபி.." என்பாள். ஃபிஷ் என்று புரிவதற்கு எங்களுக்கு கொஞ்ச நாள் ஆனது.

அதன் பிறகு ஒரு நாள் எதற்கோ பரிசாக வந்த அந்த விடிவிளக்கை அவள் அழுகை நிறுத்த ஏற்றினேன். அது வண்ண வண்ண மீன்கள் சுற்றும் மீன்தொட்டி தோற்றம் கொண்டது. அதைக் கண்டதும் அமைதியாகி அலுக்காது வேடிக்கை பார்க்கலானாள். அதன் பிறகு அவ்வப்பொழுது அதைப் போடச் சொல்லி அமைதியாக கன்னத்தில் கை வைத்து பார்த்துக் கொண்டிருப்பாள். அழகாக இருக்கும். எனவே மீன் வளர்ப்பது என்ற முடிவுக்கு வந்தோம்.

வீட்டிற்கு மீன் தொட்டியும் மீன்களும் வந்தன. தினம் அவற்றுக்கு உணவு போடுவது, மாதமொரு முறை சுத்தம் செய்வது என அவள் அப்பா சொல்லிக் கொடுத்தார். தினம் அவள் தான் மீன்களுக்கு உணவு இடுவாள். அவ்வப்பொழுது போய் வண்ண வண்ண மீன்களும் வாங்கி வருவார்கள்.

அதை அவள் "கோல்டு ஃபிஷ்", "ஏஞ்சல் ஃபிஷ்", "ஷார்க்", "கப்பி", " டாங்க் க்ளீனர்" , "டெலஸ்கோப்" ஃபிஷ் என வகைபடுத்துவதைக் காண எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். நுங்கம்பாக்கத்தில் மீன் கண்காட்சிக்கு கூட்டிச் சென்ற பொழுதுதான் அவள் எவ்வளவு மீன்களைத் தெரிந்து வைத்திருக்கிறாள் என்று தெரிந்தது. பாதியில் எனக்கு அலுத்துப் போனது, அவளுக்கு அலுக்கவே இல்லை. அவள் மீன் ஆர்வத்திற்கு என்னால் முடிந்தது மீன்கள் படம்
போட்ட புத்தகம் ஒன்றை வாங்கிக் கொடுத்தது மட்டுமே!!!

இதற்கு நடுவே ஃபைட்டர் ஃபிஷ் எப்படி குட்டி போடும் என்று அவள் சித்தப்பா விளக்க, ஃபைட்டர் ஃபிஷ் ஜோடி தேடி அவள் தந்தையுடன் அலைச்சல்... மாப்பிள்ளை கிடைத்தார், பெண் கிடைக்கவில்லை. மதுரை போனால் கடைச்சனேந்தல் மீன் பண்ணைக்கு ஃபைட்டர் ஃபிஷ் பெண் தேடி ஒரு விசிட் இருக்கும். சென்னையில் அடையாறு, தி.நகர், வடபழநி என்று அலைவார்கள். 2 நாள் கழித்து வா என்றால் சரியாக 2 நாள் கழித்து போய் நிற்பார்கள். வீட்டில் அதிகாலையில் இருந்தே அங்கு போக நச்சரிப்பு தொடங்கிவிடும். அவள் அப்பாவும் அவளை வெளியே அழைத்து போய், "கடை பூட்டி இருக்கு சாயங்காலம் தான் திறப்பார்கள் ", என்பார். அவள் "இங்க பூட்டி இருக்கு, வடபழநில திறந்து இருக்கும்", என்பாள். ஒரு வழியாக மதுரையில் இருந்து ஒரு ஜோடி சின்ன ஃபைட்டர் மீன்கள் சென்னை வந்தன. அவை பெரிதாக வேண்டும். இன்று வரை அவற்றுக்கு நல்ல கவனிப்பு நடந்து கொண்டுள்ளது.

தொட்டி மீன்கள் மட்டும் அல்ல, உணவுக்கும் அவளுக்கு மீன் பிடிக்கும். பாசமலரின் முரண்கள் பலவிதம் கவிதை போல்....

கண்ணாடிக் குடுவையில்
கண்ணாய் வளர்த்த
குட்டிமீன் மரித்ததென்று
கண்ணீர் விட்ட பிள்ளையைக்
குதூகலப்படுத்தத்
தாய் சமைத்தாள் மீன்குழம்பு.



ஒரு நாள் ஒரு மீன் கதை அவளுக்கு சொன்னேன். கரடி டேல்ஸ் புக் லைப்ரரில இருந்து எடுத்துட்டு வந்திருந்தேன். அதை அவளுக்குப் படிச்சு காட்டினேன்.

Timsy, Bucki, Moti அப்படீனு மூணு மீன் இருக்கும். Timsy எப்பவும் எல்லா வேலையும் முன்னாடியே முடிச்சுடும், Bucki சொன்ன நேரத்துக்கு முடிக்கும், Moti லேட்டா தான் முடிக்கும். ஒரு நாள் Timsy வந்து மீன்வர்கள் வரப்போறாங்க நாம் இந்த இடத்தை விட்டு ஓடிடலாம்னு சொல்லும். ஆனால் Bucki & Moti, வரட்டும் பார்க்கலாம்னு சொல்லிட்டு வராது. மீனவர்களும் வருவாங்க, Bucki & Moti வலைல மாட்டிப்பாங்க. Bucki செத்த மாதிரி நடிக்கும். அதைத் தூக்கி தனியா போட்ட உடனே அது தண்ணில குதிச்சுடும். அப்ப Timsy மனசு கேட்காமல் வந்துடும். Timsy & Bucki , Moti கிட்ட இரகசியம் பேசி, ஒரு குதி குதிக்கும். தண்ணி தெறிச்சு மீனவன் கண்ல பட்டு வலையை நழுவ விடுவான், Moti வெளியே நழுவிடும். மூணு மீனும் பாறைக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கும். Bucki & Moti, இனிமேல் நாங்க புத்திசாலித்தனமா எல்லா வேலையும் முன்னாடியே செய்றோம்னு Timsy கிட்ட சொன்னாங்களாம்.

நீங்க மூணு மீன்ல எது Timsy, Bucki, Moti? என்று கேட்டேன். நான் Timsy , நான் Timsy அப்படீனு அக்கா தங்கைக்குள்ள சண்டை. இன்னிக்கு நீ ஸ்கூலுக்கு லேட்டா போன, அதனால் நீ "Moti", நீ அரக்க பரக்க ஓடி வேனைப் பிடிச்ச , அதனால் நீ "Bucki" அப்படீனு சொன்னேன். மறு நாள் காலங்காத்தால எழுந்து நான் Timsy அப்படீனு அடுப்படில நிற்கறாங்க. யார் சீக்கிரம் கிளம்பறாங்களோ அவங்க தான் Timsy-னு சொன்னேன். ரெண்டு பேரும் Timsy மீனா சீக்கிரம் கிளம்பிட்டாங்க.

இப்பவும் தொட்டில மீன்கள் நீந்திகிட்டு இருக்கு, மூணு மீன் கதையை நானும் சொல்றேன்... அவளும் இன்னும் மீன்களை அலுக்காமல் இரசிச்சுட்டு இருக்காள், அலுக்காமல் கதை கேட்கிறாள்...ஆனால், சாப்பிட்ட மீனு செரிச்ச மாதிரி மறுநாளே "Timsy" பேரோட கவர்ச்சி போயிடிச்சு.

மகளிர் தின வாழ்த்துகள்

பெண்ணின் பெருமையைப்
பலரும் பாடிட
மகுடம் சூடிய மகளிரை
மகிழ்ந்து வாழ்த்திடும் மனம்

பெண் என்பதாலேயே
மண்புழுவாகத் துடிப்பவரும்
இருக்கின்றார்...
அவர்களுக்கும் துடிக்கிறது மனம்


என்னருமை சமூகமே!!!
தூக்கி வைக்கவும் வேண்டாம்
தூக்கி எறியவும் வேண்டாம்
சகமனிதராக அன்பு பாராட்டினால்
சுகமாக வாழ்ந்திடலாம்

மகளிர் தின வாழ்த்துகள்

Thursday, March 5, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்

என்னைக் கவர்ந்தவர்கள் பற்றிக் கூற அழைத்திருந்தார் ஜீவன். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் யாரேனும் நமது கவனத்தைக் கவர்ந்து கொண்டே தான் இருப்பார்கள். என் குட்டிப் பெண்ணின் வகுப்பில் முப்பதுக்கும் மேற்பட்டோர் இருந்தாலும் அவளாகவே அவளுக்குப் பிடித்தவர்கள் என பிடித்துக் கொள்கிறாள். எத்தனை முரண்கள் இருந்தாலும் முடிவில் ஈர்க்கும் இந்த பிடித்தம் எப்படி இப்பொழுதே ஏற்படுகிறது என்று நான் வியப்பேன்.

எத்தனை கோபம் கொண்டாலும் அன்பான வார்த்தைகளால் சகலமும் மறந்து வாழ்க்கையோடு ஒன்றி பல விஷயங்கள் கற்றுத் தரும் உறவுகள் தாய், தந்தை, குழந்தைகள், உடன் பிறந்த/பிறவா சகோதரர்கள். திருமணம் என்ற உறவின் மூலம் மட்டுமே அறிமுகமானாலும் வற்றாத அன்பைப் பொழியும் உறவுகள் கணவர், மாமா, அத்தை , வசந்தா அண்ணி. கூட்டுப் புழுவாக இருந்து சிறகை விரிக்கும் நேரத்தில் அறிமுகமாகி நட்பாகி சிறகுகளின் பலத்தை புரிய வைத்த தோழி பாரதி என்று எல்லோருமே என்னைக் கவர்ந்தவர்கள்.

இந்த வட்டங்கள் இன்றி பலரின் மனதைக் கவருபவர்கள் உண்டு. காந்திஜியின் உண்மை, பாரதியின் வீரம், அப்துல் கலாமின் முயற்சி, ஒளவையின் புலமை, பல இன்னல்களைத் தாண்டி உறுதியோடு அரசியலில் இறங்கும் பெண்மணிகளின் உறுதி என்று உள்ளம் கவர்ந்தவர்கள் பலர் உண்டு.

நாம் வாழத் தேவை தன்னம்பிக்கை, பிற உயிர் வாழ அன்பு என்பது உறுதி. அப்படி என்னைக் கவர்ந்தவர்கள்:

அன்னை தெரசா






அன்னை செய்த சேவைகளை மறக்க முடியுமா?
தன்னலம் கருதாது பிறர் நலனுக்கு வாழ்ந்த
தாய் உள்ளத்தை நினைக்காமல் இருக்க முடியுமா?
நம்பிக்கை இழந்தோரின் நம்பிக்கையாக
வாழ்வை வெறுத்தோரின் தேவதையாக
எல்லோருக்கும் தாயாகத்
தாய்மையுடன்
வாழ்ந்த கருணை உள்ளத்தைப்
பணிவுடன் வணங்குகிறேன்!!


அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

நாம் எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை விட, செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம்.நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட, கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம்


அமைதியின் பலன் பிரார்த்தனை
பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை
நம்பிக்கையின் பலன் அன்பு
அன்பின் பலன் சேவை
சேவையின் பலன் அமைதி



ஹெலன் கெல்லர் & ஆன் சல்லிவன்



எனக்கு இவரைப் பற்றி என் பெண்ணின் பாடம் வழியாகத்தான் தெரியும். அவரைப் பற்றி கேட்ட பொழுது மெய் சிலிர்த்தது. எல்லாம் ஒழுங்காக இருந்தும் ஏதேனும் நாம் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறோம். சிறு வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர் ஹெலன் கெல்லர்.

சற்றே எண்ணிப்பாருங்கள் நீங்கள் எதையும் பார்க்கவோ, கேட்கவோ பேசவோ முடியாது. உணர்வுகள் மட்டுமே துணை. உங்களுக்கு "தண்ணீர்" என்று அப்படி புரிய வைக்கலாம்? நீங்கள் சொல்வதை மூன்றாமவ்ர் புரிந்து கொண்டார் என்று எப்படி அறிவீர்கள்? இந்நிலையில் இவருக்கு ஆசிரியராக வந்தவர் ஆன் சல்லிவன். ஹெலன் கையில் பொம்மை கொடுத்து அவள் கைகளில் "பொம்மை" என்று எழுதினார், கேக் கொடுத்து "கேக்" என்று எண்ணினார். எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை ஹெலன். அவர் கற்றுக்கொள்ள மறுத்தார். கற்றுத்தருகிறார்கள் என்று புரிந்தால் தானே? ஆனால் ஆன் நம்பிக்கை இழக்கவில்லை, கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் தண்ணீரை ஹெலன் மீது தெளித்து "தண்ணீர்" என்று எழுதினார் ஆன். அப்பொழுது தான் ஹெலனுக்கு தான் கற்பிக்கப்படுகிறோம் என்று புரிந்தது. "தண்ணீர்" என்று எழுத கற்றுக்கொண்டார். ஒவ்வொன்றையும் எப்படி எழுத வேண்டும் என்று வினவி கற்றுக் கொண்டார். சற்று நேரத்தில் 30 வார்த்தைகள் கற்றுக் கொண்டார். அதன் பிறகு விரல்களின் மூலமும், பேசுபவரின் உதட்டசைவுகளை விரல்களால் உணர்வதன் மூலமும், பிரெய்ல் மூலமும் தகவல் பரிமாறக் கற்றுக்கொண்டார்.

ஹெலன் கெல்லர் ‘நம்பிக்கை’ மட்டும் கொண்டு தடைக்கற்களை படிக்கற்களாக்கி சிறந்த எழுத்தாளராகவும் சமூக ஆர்வலராகவும் உருவானார். இருவரின் நம்பிக்கையயும் வியக்காமல் இருக்க முடியவில்லை. எதுவும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை தானே வாழ்வின் ஆதாரம்?

ஹெலன் கெல்லரின் பொன் மொழிகள்:

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.


நம்மால் அவர்கள் அளவு செய்ய முடியாவிட்டாலும் முடிந்தவரை அன்பு செலுத்துவோம். நம்பிக்கை என்பது நமக்கு மட்டும் இன்றி தடுமாறும் மற்றவருக்கும் அளித்து வாழ்வை இனிமை ஆக்கிடுவோம்.உள்ளத்து உணர்வுகளைப் பகிர உதவியதற்கு நன்றி ஜீவன்.

இப்பதிவை படிக்கும் எவரும் உங்களைக் கவர்ந்தவர்களை உங்கள் பதிவில் கூறுங்களேன்!!!