காலை என்றாலே எனக்கும் ப்ரீ-கேஜி செல்லும் என் வாண்டுக்கும் ரணகளம் தான். ஸ்கூலுக்கு செல்லும் கவலை அவளுக்கு, ஸ்கூலுக்கு அனுப்பும் கவலை எனக்கு. இன்று காலை சுப்ரபாதமே, ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று
தான் ஆரம்பித்தது. மெல்ல கதை சொல்லிக்கொண்டே உணவு ஊட்ட ஆரம்பித்தேன். அவள் விரும்பும் வண்ணம் கதையை ஆரம்பித்தேன். மனதுள் ஸ்கூலுக்கு செல்லும் ஆர்வத்தை எப்படி கதையுள் செலுத்துவது என்று யோசித்தவாரே,
கதை சென்றது. என் வாண்டுக்கு என்னைப் பற்றித் தெரியுமாதலால், ஒவ்வொரு வரிக்கும் "ஸ்கூலுக்கு போக மாட்டேன் " என்று தாளம் போட்டது. மெல்ல, கதையுள் ஸ்கூலுக்கு செல்லும் ஆர்வத்தைக் கிளப்பும் விதமாக
முடித்தேன். எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை, அவள் ஸ்கூலுக்கு ஆவலுடன் செல்வாள் என்று. ஆனால், "இதோ கிளம்பிட்டேன்" என்று என் வாண்டு கிளம்பியது. என் கற்பனை கதை எனக்கும், பிடித்தது. எனவே, இங்கு
பகிர்ந்து கொள்கிறேன்...
ஒரு காட்டில் ஒரு யானை இருந்ததாம். அது ஒரு நாள், வாக்கிங் போச்சாம். ஒரு முயல் பார்த்ததாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை
சொல்லுச்சாம். "நானும் வரேன்", அப்படீனு முயல், யானை மேல ஏறிக்கிச்சாம். முயல் யானை மேல வர்றதை பார்த்து, குரங்கு வந்துச்சாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை சொல்லுச்சாம். நானும் வரேன்", அப்படீனு குரங்கு, யானை வால்ல தொஙகிட்டு வால்தனம் பண்ணிட்டு
வர ஆரம்பிச்ச்தாம்.
குரங்கு, பண்ற சேட்டையை, அணில் பார்த்துச்சாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை சொல்லுச்சாம். நானும் வரேன்", அப்படீனு
அணில், யானை துதிக்கையில் ஏறி விளையாடுச்சாம்.
அப்படியே காட்டில் மயில், குயில், மான் எல்லாம் சேர்ந்து, இயற்கையை இரசிச்சிட்டே போனாங்களாம். திடீர்னு, "உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...." அப்படீனு சத்தம். பார்த்தால், சிங்கம் நின்னுச்சாம். "எல்லாரும் எங்க் போறீங்க", அப்படீனு
உறுமுச்சாம். "நாங்க வாக்கிங் போறோம்", அப்படீனு எல்லாம் சேர்ந்து கத்துச்சாம். "யானை மேல ஏறிகிட்டு என்ன வாக்கிங்... எல்லாம் இறங்குங்க, நானும் வரேன்.." அப்படீனு சிஙகம் சொல்லிச்சாம். எல்லாம் கீழே இறங்கி,
ஜாலியா குளத்த்து கிட்ட வந்தாங்களாம். குட்டி முயலுக்கு ஒரே தாகம். ஓடிப் போய் தண்ணில வாய் வச்சுதாம். உள்ள இருந்து ஒரு முதலை வந்துச்சாம்.
"எல்லாரும் எங்க் போறீங்க" அப்படீனு மிரட்டுச்சாம். "நாங்க வாக்கிங் போறோம்", அப்படீனு எல்லாம் சேர்ந்து கத்துச்சாம். உடனே முதலை அழ ஆரம்பிச்ச்தாம். பெரிய மீன் ஒண்ணு வந்துச்சாம். அதுவும் எல்லாரும் வாக்கிங்
போறாங்கன்ன உடனே அழுதுதாம். எல்லாரும் "ஏன் அழறீங்க" அப்படீனு கேட்டாங்களாம். மீனும் முதலையும், எங்களுக்கும் வாக்கிங் வர ஆசையா இருக்கு, ஆனா நாங்க தண்ணிய விட்டு எப்படி வர்றது" அப்படீனு அழுதுதாம்.
எல்லா மிருகமும் அழ ஆரம்பிச்ச்தாம்.
அப்ப யாழ் பாப்பா வந்தாளாம். "எல்லாரும் ஏன் அழறீங்க" அப்படீனு கேட்டாளாம். சிங்கம் சொல்லுச்சாம். யாழ் பாப்பா சிரிச்சாளாம், "இதுக்கா அழறீங்க? நான் ஒரு ஐடியா கொடுக்கட்டுமா?", அப்படீனு கேட்டாளாம். எல்லாரும்
"என்ன என்னனு" கேட்டாங்களாம். யாழ் குட்டி சொன்னாளாம், "எல்லாரும் ஜாலியா தண்ணில குதிச்சு நீந்துவோம்". எல்லோருக்கும் சந்தோஷமாம். ஜம்முனு தண்ணில குதிச்சு விளையாடினாஙகளாம்.
யாழ் பாப்பாக்கு எப்படி இது தோணிச்சாம். யாழ் பாப்பா புத்திசாலி. யாழ் பாப்பா ஏன் புத்திசாலி? சிங்கம் ஸ்கூலுக்கு போகுதா? இல்ல... யானை ஸ்கூலுக்கு போகுதா? இல்ல? மீன் ஸ்கூலுக்கு போகுதா? இல்ல... யாழ் பாப்பா
ஸ்கூலுக்கு போறாளா? ஆமாம். அதான் புத்திசாலியா இருக்கா..
இந்த கதை கேட்டு தான் என் குட்டி பாப்பா ஸ்கூலுக்கு குடு குடுனு ரெடி ஆகி போனாள். நானும் நிம்மதியா இந்த கதையை எழுதினேன்.