என் மேகம் ???

Monday, September 16, 2024

அம்மாவும் பண்டிகைகளும்

 ஒவ்வொரு நாளும் 

ஒவ்வொருவருக்கும் 

பார்த்து பார்த்து 

செய்வாள் அம்மா 


பண்டிகை என்றால் 

கடவுளுக்கும் சேர்த்து 

பார்த்து செய்வாள் 

அம்மா 


பள்ளிக்கு விடுமுறை

அலுவலுக்கு விடுமுறை 

அம்மாவுக்கு அன்று

கூடுதல் வேலை


சில அம்மாக்களுக்கு 

வேலைதான் ஊக்கம் 

முத்தான வியர்வையில் கூட

முகமெல்லாம் புத்துணர்ச்சி


சில அம்மாக்களுக்கு

அயர்ச்சி தான் என்றாலும் 

அன்பாலும் ஆசையாலும்

முகமெல்லாம் மலர்ச்சி 


மலர்ச்சி பழகியதால் 

தெரிவதே இல்லை

அயர்ச்சி ஆசை

ஏக்கங்கள்...


வேலை பகிர்ந்து 

மனதும் பகிர்ந்து 

கொண்டாடும் பண்டிகைகள்

மேலும் சுவை கூடின

பகிர்ந்து பன்மடங்கான

அன்பின் சுவையால்....

Tuesday, September 3, 2024

உலக கடித தினம் (Sep 1)

கடிதம் என்றவுடன்

சிறகடிக்கும் மனது...

உறவுகளின்... உணர்வுகளின்...

சிறகல்லவோ அவை?


தூரத்தால் பிரிந்த

 உறவுகளைப் பிணைத்த 

காகித இழையன்றோ?


தபால் அட்டையில்

நுணுக்கிய எழுத்துக்கள் ...

எழுத இடமின்றி

எழுதாத சொற்களைத்

தேடும் மனம்


கொஞ்சம் காசிருந்தால்

நீலக் காகிதம்

பிறர் அறியாமல் கதைக்கவோ

மிக முக்கியம் என சொல்லவோ...

என்றாலும்,

இடப் பற்றாக்குறை தான்



சுழியுடன் துவங்கி..

நலம் விசாரித்து..

செய்திகள் பகிர்ந்து ..

அன்பான கையெழுத்துடன்

உள்ளம் தொட்ட கடிதங்கள் 


பிறப்பு இறப்பு

கொண்டாட்டங்கள் சண்டைகள்

கோப தாபங்கள்

என நம் வாழ்வின் சுவடுகள்

கடிதங்கள் 


கையெழுத்தின் உணர்வுகளை

மின்னெழுத்துக்கள் பிரதிபலிப்பதில்லை

கோபத்தில் கடிதத்தை

கிழிக்கும் திருப்தி

மின்னுருவை அழிப்பதில் 

கிடைப்பதில்லை 


எப்பொழுதோ எடுத்து வைத்த

ஒற்றைக் கடிதமது..

எழுதியவர் இல்லை என்றாலும் 

இன்றும்  சொல்கிறது 

அவரின் அன்பை...


பாட்டிக்கு எழுதத் தெரியாது 

பேரப்பிள்ளைகள் 

கையெழுத்தில்

செய்தி வரும்


அம்மாவின் கையெழுத்து

முத்து முத்தாக 

நலம் விசாரிக்கும்


அப்பாவின்

கையெழுத்து 

கிறுக்கலாக

ஆறுதல் சொல்லும்


கையெழுத்து 

எப்படி இருந்தாலும் 

மனதின் மொழி

புரிந்து விடும்

ஐந்திணை கவிதைகள்

 

இயற்கையை
அறிந்த மனிதர்கள்
நிலம் ஐவகை என்றனர்
வாழ்வியலை இணைத்து
ஐந்திணை என‌ப்
 பண்பாடினர்
வாழ்க்கை கொண்டாட்டமானது

இயற்கையை 
அரித்த மனிதர்கள் 
சுயநலமாக வாழ்ந்து 
மண்ணுலகை வருத்தி
நானிலமும் பாலையாக
பாழ்செய்ய
வாழ்க்கை திண்டாட்டமானது

....

மலையைத் தெய்வமாகக்
கொண்டாடி வளம்காக்க
மழை பொழிந்தது
மரங்கள் வளர்ந்தன
மலை தான் என
பந்தாடுகிறான் மனிதன் 
மண் சரிந்தது
மரங்கள் வீழ்ந்தன
குறிஞ்சி நிலம் ...
நஞ்சென மாறுமோ?


மானுண்டு மயிலுண்டு
மந்தியுண்டு களிறுண்டு 
வனவளம் மிகுதி உண்டு
மனிதன் ஆசை கொண்டு
அளவுக்கு மீறிக் கொண்டு 
முல்லை நிலம்...
இல்லை என்றாகுமோ?

பசுந்தாவரங்கள் சிலிர்த்தாட
ஆவினங்கள் அசைபோட
நீரோடைகள் நிறைந்தோட
செழித்து மலர்ந்திருக்க
அழித்துப் பார்க்கிறான் மனிதன் 
மருத நிலம்...
கருகிடுமோ அதன் வளம்?


கடலின்றி பூமியில்லை
அதன் அழகுக்கோர் எல்லை இல்லை
பல்லுயிர் வாழும் உலகமது
காற்றும் அலைகளும் சொன்னால்தான்
காலங்கள் நமக்கு இசைவாகும்
காக்கும் கடல்... மனிதனால்
இன்று குப்பைத் திடல்
நெய்தல் நிலம்...
தொய்வதும் முறையோ?


திரிந்து வரும் நிலமெல்லாம்
பாலையானால்
பூவுலகின் அழிவன்றோ...
கொற்றவையை வேண்டி‌ நின்றேன்
நகைத்தாள் அவள்

சுற்றும் இந்த பூமி
பல்லாயிரம் ஆண்டுகள் 
பல்லுயிர்களைக் கொண்டது
பூமகளுக்குத் தெரியும் 
தன்னைக் காத்துக்கொள்ள 

வளங்களைக் காத்தால்
மனிதகுலம் வாழும்
வளங்களை அழித்தால்
மனிதகுலம் அழியும்

பெருமழையொன்றில்
தன்னை மீட்டுக் கொள்ளும் 
ஆற்றைப் போல்
பூமி தன்னை மீட்டுக்கொள்ளும்

நீ அழித்துக் கொண்டிருப்பது
உன் இருப்பிடத்தை அல்ல
உன் இருப்பை...
நீ மீளும் வழி உன் கையில் ...
என்றே சிரித்தாள் அன்னை