என் மேகம் ???

Tuesday, September 29, 2009

இன்பத்தைத் தேடி...

இளம்வெயிலை அனுப்பி
புன்னகை பரப்பினான்
காலை இளஞ்சூரியன்

மகிழ்ச்சியை அள்ளிக்கொண்டு
மென்மையாகக் கடந்தது
மெல்லிய இளங்காற்று

ஆனந்தத்தைத் தெளித்து
அள்ளச் சொன்னது
குழந்தையின் சிரிப்பு

எதையும் கவனிக்காமல்
இன்பத்தைத் தேடுவதாக
சொல்லிக்கொண்டு...
தொலைத்(ந்)துக் கொண்டிருந்தேன்!!!

ஊஞ்சலாடும் நினைவுகள்

சமீபத்தில் ஊருக்கு சென்று வீடுகள் நிறைந்த ஒரு இடத்தைக் கடக்கும் பொழுது அம்மா சொன்னார் "இங்க தான் நாங்க சோத்தைக்கட்டிட்டு வந்து ஊஞ்சல் விளையாடுவோம். அப்ப இது காடா கிடக்கும். இப்ப பாரு", என்று. ஊஞ்சல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விஷயம். இன்றைக்கும் பூங்காக்களில் "குழந்தைகளுக்காக" என்று போட்டிருந்தாலும் விளையாடும் பெரியவர்களைக் காணலாம். சட்டென்று மனம் ஊஞ்சல் நினைவுகளைத் தேடியது;

கோவையில் வனச்சரகக் குடியிருப்பு தான் நான் வளர்ந்த இடம். வீட்டருகில் நிறைய புளிய மரங்கள் நாங்கள் விளையாட நிழலை விரித்துக் காத்திருக்கும். சிறுவர்களின் விளையாட்டுத் திடல் அது தான். அதன் மரக்கிளைகளில் தொங்கி ஊஞ்சல் ஆடிய பொழுதுகள் இன்றும் பசுமையாக... அந்த நிழலின் குளுமையாக....அதன் பின் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வராண்டா வந்தது. நல்ல தாம்புக் கயிறும், சின்னதாக ஊஞ்சல் பலகையும் வாங்கி அப்பா ஊஞ்சல் போட்டுத் தந்தார்.எனக்கும் என் தம்பிக்கும் இடையில் ஊஞ்சல் யாருக்கு என்று அடிக்கடி யுத்தம் நடக்கும். சில சமயம் ஊஞ்சலில் தட்டாமாலை சுற்றி, தாம்புக்கயிறில் முடியும் சுற்றி, கத்திரிக்கோல் உதவியின்றி நான் எழுந்தது இல்லை. என்றாலும் ஊஞ்சலும் தட்டாமாலையும் அடிக்கடி நடக்கும்.

பின் வீடு மாறியதால் சற்றே நீளமான வராண்டா... தாம்புக்கயிறு இரும்புச் சங்கிலி ஆனது... "ஜிவ்வென்று" மேலே வரை ஊஞ்சலாடி இறங்குவதே பறப்பது போல் இருக்கும். சில சமயம் நிலைப்படி தட்டி கொஞ்சம் கீழே இறக்கிவிடும். அதில் தான் நந்தினியும் சிரித்துக் கொண்டே ஊஞ்சல் ஆடுவாள். இப்பொழுது அவள் சிரிக்கும் பொழுதெல்லாம் நினைக்கும் சம்பவமாக ஊஞ்சல் ஆனது. ஆடிக்கொண்டிருந்தவளை நோக்கி அவள் தந்தை கை நீட்ட, சட்டென்று கையை விட்டவளைப் பிடிக்க இயலவில்லை. வாய் முழுதும் இரத்தம். டாக்டரிடம் போய், மருந்து போட்டு ஒரு மணி நேரத்தில் எல்லாம் சரியானது. சில மாதங்கள் கழித்து தான் பார்த்தோம், பல்லில் கறை போல்... ஏதோ வளர்ச்சி தடைபட்டுவிட்டது போலும்...வேர்கள் நன்கு வளர்ந்தபின், பதின்ம வயதில் தான் அதற்கு வைத்தியம் பார்க்கலாமாம்... ம்ஹ்ம்... ஊஞ்சல் ஆசை...


எனக்கு சினிமாவில் வருவது போல் பெரிய ஊஞ்சல் ஹாலில் போட்டு படிக்க, படுக்க வேண்டும் என்று ஆசை. வீடு கட்டும்பொழுது மாமாவிடம் சொல்ல, அவரே மரம் பார்த்து வாங்கி ஒரு ஆள் படுக்கும் அளவு ஊஞ்சல் பலகை செய்து வாங்கினார். வீட்டுக்கூரையிலும் கொக்கி எல்லாம் வைத்தாயிற்று... ஆனால் வீட்டுள் ஊஞ்சலுக்கு இடம் கொடுத்தால் வேறு எதற்கும் இடம் தான் இல்லை. எனவே ஊஞ்சல் வீட்டு முகப்பிற்கு வந்தது. ஆசை தீர உட்கார்ந்து, படுத்து , படித்து.... அதன் பின் கார் வந்து அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

இப்பொழுது ஊஞ்சல் பலகை ஓய்வெடுக்கிறது. அதன் இரும்பு சங்கிலி தொட்டில் கட்டவும் பிரம்பு கூடை ஊஞ்சல் தொங்கவும் உதவுகிறது. அந்த பிரம்பு ஊஞ்சலில் தான் மாமா அமர்ந்து யாழினியைத் தோளில் சாய்த்து உறங்க வைப்பார். இப்பொழுது அந்த ஊஞ்சல் சும்மா காற்றில ஆடிக்கொண்டு இருக்கிறது. வீட்டிற்கு யாரேனும் வந்து அதில் அமர்ந்தால் தான் அதற்கு சண்டை துவங்கும். வாழ்க்கையே ஊஞ்சல் தான்!!!! நாம் உட்கார்ந்து இருக்கிறோம்... யாரோ ஆட்டிக் கொண்டு இருக்கிறார்கள்... சுகமாகவும் இருக்கும் சுமையாகவும் இருக்கும்... நிறுத்தவும் தோன்றும்... ஆடிக்கொண்டே இருக்கவும் தோன்றும்....நிற்கும் வரை இந்த ஆட்டம்தான்...

Wednesday, September 23, 2009

என்றும் நானறியேன்

இன்றும் கூர் மழுங்காத கத்தியும்
ஓயாமல் ஓடும் சுவர்க்கடிகாரமும்
முகம் பார்த்திராத தாத்தாக்களை
நினைவுக்கு கொண்டுவரும்

வெற்றிலை இடிக்கும் பாத்திரமும்
ஓரமாகக் கிடக்கும் நார்க்கட்டிலும்
கதைகள் சொன்ன பாட்டிகளின்
நினைவுகளை அள்ளி வருகின்றன

விளாம்பழம் கண்டவுடன்
பிரியமாக வாங்கி வைத்து
மறக்காது கொடுத்தனுப்பிய
சின்ன அத்தையின் நினைவு

தோட்டத்து மலர்கள் முதற்கொண்டு
கருப்பட்டி மிட்டாய் இலந்தை வடை
என்று சின்ன சின்ன விஷயங்களும்
எண்ணிலா இன்னும் பல விஷயங்களும்
அன்பைப் பொழிந்த மாமாவின்
நினைவுகளால் மனதை நெகிழ்த்தும்

என்றும் நானறியேன்...
என்னை நினைவுறுத்த
என்ன இருக்கும் என்று!!!