என் மேகம் ???

Wednesday, July 22, 2009

சூரிய கிரகணமும் நம்மூரும் அல்ப சந்தோஷமும்....

என்ன தான் லைவா தொலைக்காட்சியில் காட்டினாலும், நாமே பார்த்தால் தான் ஒரு திருப்தி இல்லையா? இது அபூர்வமான நிகழ்வு, பத்து ரூபாய்க்கு கண்ணாடி காந்தி சாலையிலும், திருவான்மியூர் அருகில் திருவள்ளுவர் நகரிலும் கிடைக்கும் என்று செய்தித்தாளில் பார்த்தோம். விடுமுறையில் செய்தால் தான் முடியும் என்று ஞாயிறன்றே பிர்லா கோளரங்கம் சென்று விசாரிக்க "கண்ணாடி எல்லாம் எல்லை. புதன் கிழமை வாங்க, பார்க்க ஏற்பாடு ஆகி இருக்கும்" என்றார்கள். திருவள்ளுவர் நகரையும், பீச்சையும் சுற்றி சுற்றி வந்தோம், விசாரித்தும் பார்த்தோம் ... ம்ஹூம்... நம்ம ஊர்ல ஒரு விஷயம் தேடினால் கிடைக்குமா?

அலுவலகத்திலேயும் ஒருத்தரை ஒருத்தர் விசாரிச்சாச்சு... ம்ஹூம்... கண்ணாடி எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. நேற்றும் திருவள்ளுவர் நகரையும், பீச்சையும் சுற்றி சுற்றி வந்தோம்...விசாரித்தும் பார்த்தோம் ... ம்ஹூம்...சரி காலைல பார்க்கலாம்னு விட்டாச்சு.

தொலைக்காட்சி என்றால் குட்டீஸ் அதையும் ஒரு ஆவணப்படம் போல பார்க்காமல் போய்விடுவார்கள், கண்ணாடி வழியாகக் காட்டினால் பார்ப்பார்கள், மறக்க மாட்டார்கள் என்று ஒரு நப்பாசை தான். காலையில் எழுந்து மீண்டும் கடற்கரைக்கு ஓடினோம். குட்டீஸ் எல்லாம் வர மறுத்துவிட்டார்கள். சூரியனைப் பார்க்கக் கூடாதாம். திருவள்ளுவர் நகரையும், பீச்சையும் சுற்றி சுற்றி வந்தோம். ஆங்காங்கு மக்கள் இருந்தார்கள், ஏற்பாடுகள் எதுவும் கண்ணில் படவில்லை. வேறு வழி? பிர்லா கோளரங்கம் சென்றோம்.


ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. நிறைய பேர் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார்கள். வரிசை வேகமாக நகருகிறது. ஆவல்... ஆவல்.... சிலர் கையில் கண்ணாடியுடன் வருகிறார்கள். ம்... நாமும் வாங்கி வீட்டில் குழந்தைகளைப் பார்க்கச் செய்யலாம் என்ற ஆசையுடன் நக்ர்ந்தால்... கண்ணாடி தீர்ந்து விட்டதாம்... தொலைநோக்கி வழியாகக் காண ஏற்பாடெல்லாம் இல்லை. வரிசையாக நின்று பாருங்கள் என்று மைக்கில் அறிவித்துக்கொண்டிருந்தவரிடம் கண்ணாடி கேட்டால் யாரிடமாவது வாங்கிப் பாருங்கள் என்றார். அவர் கையில் இருப்பதை மறக்காமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

ஓரிருவரிடம் கண்ணாடி கடன் வாங்கி கிரகணம் பார்த்தோம். மகிழ்ச்சியாக இருந்தது. அழகாக சூரியனை கரும் நிழல் ஒன்று மெல்ல மெல்ல கவ்விக் கொண்டிருந்தது. குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் என்ற ஆசை யாரிடமாவது கண்ணாடியைப் பறித்துக் கொள்ளும் ஆவலை உண்டு பண்ணியதால் போதுமென்று வெளியேறினோம். "ப்ரஸ்" என்று போட்ட காரில் ஒருவர் கண்ணாடியுடன் இருந்தார். கடன் வாங்கினோம்; மீண்டும் பார்த்தோம்... எடுத்து ஓடிவிடலாம் என்ற எண்ணத்தை அடக்கி "குட்டீஸ்க்கு காட்டணும் எடுத்துக்கொள்ளவா?" என்று வினவ.... அம்மாடி அவர் சரி என்று விட்டார். நன்றி நவின்று விட்டு... ஓடினோம்...ஓடினோம்... பைக் இருக்கும் இடத்திற்கு ஓடி, மீண்டும் மீண்டும் கண்ணாடி தந்தவரை வாழ்த்தி... வீடு வந்தோம். எங்கள் கண்மணிகளுக்கு கண்ணாடி வழியாக கிரகணம் காட்டினோம். கரும் நிழல் ஒன்று மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருந்தது. சூரியன் அழகாகத் தெரிந்தது. இனிய காலையை அழகாக்க உதவிய அந்த மனிதருக்கு மீண்டும் நன்றி சொன்னோம். குழந்தைகள் மிக மகிழ்ந்தார்கள். அதில் எங்களுக்கும் ஒரு அல்ப சந்தோஷம்.

இது போன்றதொரு நிகழ்வுக்கு கண்ணாடிகளை ஒரு வாரம் முன்பிருந்தே கோளரங்கத்தில் விற்று இருக்கலாம் (அ) எந்த இடங்களில் கிடைக்கும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கலாம். கடைசி நிமிடத்தில் கண்ணாடி கிடைக்காது எத்தனை குழந்தைகள் வருத்தம் அடைந்திருப்பர்? கோளரங்கத்தில் இருந்த கூட்டம் மிக சொற்பமே!!!! அதற்கே கண்ணாடிகள் இல்லை என்றால்....

14 comments:

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! காலக்கொடுமை!!

Unknown said...

என்னத்த சொல்வதென்றே தெரியவில்லை எங்கும் அதே நிலைதான்

Dhiyana said...

//இது போன்றதொரு நிகழ்வுக்கு கண்ணாடிகளை ஒரு வாரம் முன்பிருந்தே கோளரங்கத்தில் விற்று இருக்கலாம்//

செய்திருக்கலாம்...

ராமலக்ஷ்மி said...

//கண்ணாடி வழியாகக் காட்டினால் பார்ப்பார்கள், மறக்க மாட்டார்கள் என்று ஒரு நப்பாசை தான்.//

சரியான ஆசை எண்ணம்.

//குழந்தைகள் மிக மகிழ்ந்தார்கள். அதில் எங்களுக்கும் ஒரு அல்ப சந்தோஷம்.//

குழந்தைகளைப் பார்த்து அகமகிழ்ந்தீர்கள் என்றே சொல்லுங்கள். எத்தனை முயற்சி. பாராட்டுக்கள் உங்களுக்கும், மனமுவந்து கண்ணாடியைத் தந்த நல்லவருக்க்கும்:)!

அ.மு.செய்யது said...

பிர்லா கோளரங்கத்துக்கு இந்த பதிவை மடலிடலாமே !!!!

அமுதா said...

நன்றி முல்லை
நன்றி சந்ரு
நன்றி தீஷு
நன்றி ராமலஷ்மி


/*அ.மு.செய்யது said...
பிர்லா கோளரங்கத்துக்கு இந்த பதிவை மடலிடலாமே !!!!
*/
நான் யோசிக்கவேயில்லை. நன்றி செய்யது. முயற்சி செய்கிறேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

விடாத முயற்சி, கடைசியில் நல்ல பலன் போலிருக்கிறது.

குட்டீஸின் மகிழ்ச்சி உங்களின் வார்த்தைகளில் தெரிகிறது.

தமிழ் அமுதன் said...

நானும் ரொம்ப ஆர்வமா இருந்தேன்! கிரகணம் பார்க்க ஆனா காலைல எழுந்தது
8.30 க்கு இனிமே அடுத்த முறைதான் பார்க்கணும்!!

ஹேமா said...

அமுதா,குழந்தைகளுக்காவே வாழ்வது சுகமும் சுமையுமாய் இருக்கிறது.அவர்கள் சந்தோஷமே எம் சந்தோஷமாகிறது.

"உழவன்" "Uzhavan" said...

கலக்கிட்டீங்க. நான் டிவியிலதான் பார்த்தேன்.

//அதற்கே கண்ணாடிகள் இல்லை என்றால்.... //

என்ன பண்ணுறது? நாம இருக்குற ஊரு/நாடு அப்படி :-(

அரங்கப்பெருமாள் said...

மறுபடியும் ஜனவரி 15,2010 வருது... அன்று வாய்ப்பு கிடைக்குமென நம்புவோமாக..

Vinitha said...

அமுதா ... விகடன் வரவேற்பரையில் வந்தது இந்த பெண்கள் பதிவுகள் தளம் தானா? நன்றி.

யாராவது ஸ்கேன் செய்து கொடுக்கவும்.

:-)

Unknown said...

அமுதா

என்னுடைய நண்பரின் பரிந்துரையின் பேரில் உங்களை நான் 'சுவாரஸ்யப் பதிவராக' எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். அதைக்காண இங்கு செல்லவும்:

http://thittivaasal.blogspot.com/2009/07/blog-post.html

நன்றிகள் பல...

கிருஷ்ண பிரபு, சென்னை.

அமுதா said...

நன்றி அமித்து அம்மா
நன்றி ஜீவன்
நன்றி ஹேமா
நன்றி உழவன்
நன்றி ArangaPerumal

/* Vinitha said...
அமுதா ... விகடன் வரவேற்பரையில் வந்தது இந்த பெண்கள் பதிவுகள் தளம் தானா? நன்றி.

யாராவது ஸ்கேன் செய்து கொடுக்கவும்.

:-)
*/
அதேதான் வினிதா.

விருதுக்கு நன்றி கிருஷ்ணப்பிரபு. மேலும் "சுட்டி உலகத்தை" அழகாக்க முயல்கிறேன்