என் மேகம் ???

Monday, July 20, 2009

நாளையும் மற்றொரு நாளே

எங்கோ மணி அடிப்பது போல் தோன்றியது. அது அவளுக்கானது என்று புரிய சில விநாடிகள் ஆனது. இன்னும் கொஞ்சம் தூங்குவோமா என்ற எண்ணத்தை ஒதுக்கி விட்டு எழுந்த பொழுது மணி காலை 5:05. இலேசாகத் தொண்டையில் கசப்புணர்வும் ஓங்களிப்பும் வயிற்றில் சிசு "நானிருக்கிறேன் அம்மா" என்றது. மெல்ல எழுந்து குளியலறைக்குள் சென்றாள். குளியல் முடிந்து வரும் பொழுது மணி 5:30 என்றது. இனி, நூல் பிடித்தாற்போல் சரியாக வேலையை முடிக்காவிட்டால் பஸ் போய்விடும். கணவன் எந்த வித சலனமும் இன்றி உறங்கிக் கொண்டிருந்தான்.

மெல்ல கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தாள். மாமனாரும், மாமியாரும் பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வாசற்கதவைத் திறந்து, கேட்டில் மில்க் பாக்ஸில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து வந்து சமையலறைக்குள் நுழைந்தாள். பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை சின்ன தீயில் எரிய விட்டாள். அம்மா வாங்கித் தந்த பால் குக்கர் பரணில் இருக்கிறது. "அது என்ன உய்ய்-னு சத்தம் கொடுத்துட்டு... பக்கத்தில் இருந்து பாத்துக்கறதை விட பொம்பளைக்கு என்ன வேலை", என்பது மாமியாரின் கொள்கை. அவள் வீட்டில் அம்மா பாலை குக்கரில் வைத்துவிட்டு மற்ற வேலைகளைக் கவனிப்பாள். சத்தம் வரும்பொழுது அம்மா/அப்பா/அவள் அடுப்பை அணைத்துவிட்டு காபி போடுவார்கள். வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின் , ஊருக்கு சென்ற ஒரு நாள் , கண்ணயர்ந்தவளை பால் குக்கர் விசில் எழுப்பியதில் இருந்து இவள் செல்லும் பொழுதெல்லாம் அம்மா பால் குக்கர் வைப்பதில்லை; அடுப்பருகில் நின்று பாலைக் காய்ச்சுவாள். மெல்ல கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

வாசல் பெருக்கி, தெளித்து சின்னதாகக் கோலமிட்டாள். இது அவளாக விரும்பி ஏற்றுக் கொண்ட வேலை. புள்ளி வைத்தோ வைக்காமலோ, அழகான ஒரு கோலமிட்டு முடிக்கும் பொழுது அம்மாவுடன் இருக்கும் ஒரு அமைதி வரும். விடுதியில் இருந்த பொழுது கூட அந்த சின்ன கோயிலின் முன் அவள் தினமும் கோலமிடுவாள்.

சற்றே தலை சுற்றுவது போல் இருந்தது. கதவைப் பிடித்து நிதானித்து விட்டு உள்ளே வந்தாள். பாலில் ஆடை விழுந்திருந்தது. குக்கரில் பருப்பை வேகப் போட்டுவிட்டு, பாலை கொதிக்க விட்டு இறக்கி வைத்தாள். பாலை கோப்பையில் ஊற்றியவாறு என்ன காய் வைக்கலாம் என்று யோசித்தாள். நேற்று அம்மா வந்து சமைத்து கொடுத்த உணவின் ருசியும் மணமும் நினைவுக்கு வந்தது. கேரட்டை ப்ரிட்ஜில் இருந்து எடுத்து உணவு மேசையில் வைத்துவிட்டு, அவளும் அமர்ந்து பாலருந்தினாள். மெல்ல ஒரு ஆயாசம் ஏற்பட்டது. ஞாயிறன்று அவள் வீட்டில் அப்பா சமைப்பார். அம்மாவுக்கு அதுவே மற்ற நாட்களில் ஆயாசம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மற்ற நாட்களும் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்.

இன்று ரொம்ப யோசிக்கிறேன் என்று எண்ணியவாறு சமையல் அறைக்குள் நுழைந்தாள். பருப்பு , இரசம், கேரட் பொரியல், இட்லி, வெங்காய சட்னி என்ற ஓட்டத்துடன் நடுவில் மாமியார், மாமனாருக்கு காபி கொடுத்துவிட்டு , உணவை கட்டிவிட்டு, நிமிர்ந்த பொழுது மணி 6:50. மட மட என உடை மாற்றிவிட்டு, அப்பொழுது தான் எழுந்த கணவனுக்கு காபியை வைத்துவிட்டு வெளியேறினாள். வந்து இரண்டு நிமிடத்தில் பஸ்ஸில் ஏறி அமர்ந்தவளை 8:30 மணிக்கு அலுவலகத்தில் ரம்யா எழுப்பி விட்டாள். இந்த 1.30 மணி நேரமாவது ஓய்வாகிறதே, எத்தனை பேருக்கு இது கிடைக்கும் என்ற எண்ணத்துடன் அவள் வேலையிடத்தை நோக்கி நடந்தாள்.

இப்பொழுது அவளுக்கான வேலைகளை இன்னும் சிரத்தையுடன் இருக்க வேண்டும். அவள் கருவுற்றிருப்பதை அறிந்தவுடன் அவளது லீட் சொன்னது, "நல்ல விஷயம். ஆனால் இதனால் அடிக்கடி விடுப்பு எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்", என்பது தான். "நீ மெடர்னிட்டி லீவ் எடுத்தாலே ரேட்டிங் உதைக்கும். ஒரு சைக்கிள் நம்ம ப்ரமோஷன் கோவிந்தா தான். இப்பவே கொஞ்சம் ஓவரா தான் உன்னை மானிட்டர் பண்ணுவாங்க..." என்றனர் தோழியர். வேலைப் பளுவில் உணவுவேளை வந்துவிட்டது.


"மீனா டீ டைம்ல எங்க வீட்டுக்கா போன? "
"ம். குட்டிப்பயன் மோஷன் போய்விட்டான். போன் வந்தது. அதான் போய்ட்டு வந்தேன்"
'அடப்பாவி. ஏன் வீட்ல இருக்கிறவங்க செய்ய மாட்டாங்களாமா?"
"வேலைக்கும் ஆள் போடக் கூடாதாம். இதுக்கும் நான் தான் ஓடணுமாம்."
"நீ ஒரு நாள் போகாமல் இரு. எல்லாம் சரியா தான் இருக்கும்"
"மீட்டிங் இருக்குனு சொல்லிட்டு ஒரு நாள் 2 மணி நேரம் கழிச்சி போனேன். அப்படியே தான் இருந்தான்",
என்றவளின் கண்களில் நீர்.
இத்தனைக்கும் இது காதல் திருமணம். பெற்றோர் காதலை ஒத்துக்கொண்டதால், இனி அவர்கள் சொல்படி மட்டுமே கேட்பதாக உறுதி எடுத்துக் கொண்ட கணவன் எதிலும் தலை இடுவதில்லை. ஆயிரங்கள் சம்பாதித்தாலும் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள முடியாது; மாதாமாதம் சம்பளம் அவர்களிடம் போய் , கணக்கு சொல்லி தான் காசு பெற்றுக்கொள்ள முடியும். குழந்தைக்கு அழகாக ஒரு சட்டை கூட அவளால் எடுக்க முடியாது.

"எல்லா காசும் அவங்களுக்கு தான் கொடுக்கற. பேசாமல் வேலைக்கு போக முடியாதுனு சொல்லிடு"
"ஒரு 8 மணி நேரமாவது நான் நிம்மதியா இருக்கலாம்னு பார்க்கிறேன்",
வருத்தம் நிறைந்த சிரிப்புடன் மீனா கூறினாள்.

தான் கூட இப்படித் தான் இப்பொழுதெல்லாம் நினைப்பதாகத் தோன்றியது. ஏன் இதில் இருந்து வெளி வர முடிவதில்லை. முடியாது என்றால் என்ன ஆகும்? கங்காவிற்கு நடந்தது போல் ஆகுமா? அம்மா, அப்பா அழைக்கப்படுவார்கள். பஞ்சாயத்து நடக்கும். இசைவாக இல்லாவிட்டால் அவளை அழைத்துச் செல்லலாம் என்பார்கள். அவர்கள் வீட்டில் தானே இருக்கிறாள்? அவளால் அவள் பெற்றோர் சலனப்படுவதைக் காண முடியாது. அவளைக் கண்டு இருவரும் மருகிவிட மாட்டார்களா?


"நீ ஆபீஸ் பக்கத்தில் வீடு பார்க்கணும்", என்ற ஜெனியைப் பார்த்து புன்னகைத்தாள். ஜெனிபர் அவள் திருமணத்தின் பொழுதே தெளிவாகப் பேசி அலுவலகம் அருகிலேயே வீடு பார்த்து இருக்கிறாள். "பெண்களுக்கு இருக்கும் சுமைகளுக்கு வீடு அருகில் இருப்பது நலம்", என்பது அவள் எண்ணம். அவள் சொல்வதின் நியாயங்களைப் புரிந்து கொள்ளும் கணவன். என் கணவர் வீட்டு விஷயங்களில் தலையிடுவதே இல்லை என்று கூறாமல் மழுப்பலாக சிரித்தாள்.

"வீட்டு வேலைக்காவது ஆள் இருக்கா?", ஜெனி
"வீடு பெருக்குவதற்கு மட்டும் வேலைக்கு ஆள் இருக்கு", என்றாள். "பாத்திரம் கழுவறது எல்லாம் ஒரு வேலையா. வேலைக்காரங்க அதெல்லாம் ஒழுங்கா செய்ய மாட்டாங்க. வீட்டுக்குள்ள வேலைக்கு ஆள் வச்சிருக்கிறதே பெரிசு", அவள் மாமியாரின் கொள்கை.

"உனக்கு இப்படி. எங்க வீட்டு பக்கத்தில ஒரு ஆண்ட்டி எங்கம்மாட்ட அழறாங்க. மருமகள் எல்லா வேலையும் அவங்கள பார்க்கச் சொல்றாளாம். இருபத்திஐயாயிரம் வீட்டு வாடகை கொடுக்கறவங்க ஆயிரம் ரூபாய் கொடுத்து வேலைக்கு ஆள் வச்சிக்க மாட்டாங்களாம். மொத்ததில பொண்ணா பிறந்தா ஒண்ணு மருமகளா கஷ்டப்படணும் இல்ல மாமியாரா கஷ்டப்படணும் போல", என்றாள் ஜெனிபர்.

"வீணா பத்தி கேள்விப்பட்டியா?" என்றாள் ரம்யா. வீணாவிற்கு அவளைவிட குறைவாக சம்பாதிக்கும் பையன் தான் பார்த்தார்கள். திருமணத்திற்குப் பின் தாழ்வு மனப்பான்மை வந்தால் என்று அவள் யோசித்த பொழுது, ராஜி தான் கூறினாள், "அது பத்தி அவர்கிட்ட பேசிட்டு நீ முடிவு எடு. அது மாதிரி நான் யோசிச்சிருந்தால் எனக்கு ஒரு அழகான குடும்பம் மிஸ் ஆகி இருக்கும்", என்றாள். ராஜி வீட்டில் அவள் கணவர், மாமனார், மாமியார் எல்லோரும் அன்பைப் பொழிபவர்கள். எல்லோரும் எல்லா வேலைகளும் பகிர்ந்து செய்யும் ஓர் அழகான குடும்பம். எல்லோருக்கும் அப்படி அமைவது இல்லையே!!!

"நாலு வருஷம் ஆகிடுச்சு. இப்ப என்னனு தெரியல, வீணா வேலையை விடாட்டி, பிரிச்சிடலாம்னு அவங்க மாமியார் சொல்றாங்களாம். அவரும் சரிங்கறாராம். கையில குழந்தையை வச்சிகிட்டு எப்படி யோசிக்கறாங்கனு புரியலை. என்ன பண்றதுனு கேட்டாள். என்ன சொல்ல முடியும்? சினிமால வர்ற மாதிரி விட்டுடுனு சொல்றது சுலபமா இல்லை. அவள் தான் அவள் வாழ்க்கையை வாழணும்".

படித்து வேலையில் இருப்பதால் மட்டும் பெண்ணுக்குப் பிரச்னைகள் குறைந்து விடுகிறதா? இரட்டைச் சவாரியில் தனித்து போராட வேண்டி உள்ளது. அவள் தீராத பிரச்னையால் தனிமைப் படுத்தப்பட்டால் படிப்பும் வேலையும் நிச்சயம் உதவும். அன்றாடப் பிரச்னைகள் என்றால் ஒட்டவும் முடியாது உதறவும் முடியாது தவிக்க வேண்டும். சமைக்க முடியாது என்று ஒரு நாளேனும் உரிமைக் குரல் தன்னால் எழுப்ப முடியுமா என்று தெரியவில்லை.

சற்று நேரம் மெளனமாக உணவு முடிந்தது. வீணாவின் பிரச்னையின் தாக்கத்தில் எல்லோரும் அமைதியாக இருந்தனர். வீணா என்ன செய்வாள் என்ற எண்ணம் வேலைப்பளுவிலும் நான்கைந்து முறை வந்த மசக்கை வாந்தியிலும் அமிழ்ந்து போனது. வீட்டிற்கு கிளம்பும் நேரம் வந்த பொழுது மனமும் உடலும் சோர்வாக இருந்தது.மீண்டும் பேருந்தில் ஏறி வீடு போக எட்டு மணி ஆகும். இவள் வருகைக்காக வீடு காத்திருக்கும். இரவு உணவுக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாக வேண்டும். பின் பாத்திரங்கள் கழுவி, அடுப்படி ஒதுக்க வேண்டும். ஐந்து மணிக்கு அலாரம் வைத்து படுக்கும் பொழுது கடிகார முள் பதினொன்றை நெருங்கி விடும். இப்பொழுது வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் சேர்த்து அவளே கவனித்துக் கொள்ள வேண்டும்.

நாளை பிள்ளை வந்த பின்னும் எதுவும் மாறாதோ என்று தோன்றியது. வேலைக்கு செல்லாது இருந்தாலாவது அம்மா வீட்டிற்கு சில நாட்கள் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஞாயிறு என்றால் அம்மா வருவாள் என்ற மாற்றம் தவிர "நாளையும் மற்றொரு நாளே" என்று தோன்றியது. அடுத்த சில மணித்துளிகளாவது சற்று நிம்மதியுடன் இருப்போம் என்று பஸ் இருக்கையில் அமர்ந்து கண் அயர்ந்தாள்.


பி.கு: இது உண்மை சம்பவங்களின் தொகுப்பே!!!

8 comments:

நட்புடன் ஜமால் said...

உண்மை நிகழ்வுகளின் தொகுப்பா ...

நட்புடன் ஜமால் said...

"மீட்டிங் இருக்குனு சொல்லிட்டு ஒரு நாள் 2 மணி நேரம் கழிச்சி போனேன். அப்படியே தான் இருந்தான்", என்றவளின் கண்களில் நீர். ]]

வேலைக்கு போகும் பெண்களில் நிலை :(

அ.மு.செய்யது said...

BALANCED WOMEN
என்றழைக்கப்படும் படித்த வேலைக்கு செல்லும் குடும்ப பெண்களின் வாழ்வியலை அழகாக‌
ஒரு ஆவணப்படம் போன்று காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்

Good work அமுதா !!!!

Dhiyana said...

உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு என்பது வருத்தமளிக்கிறது அமுதா. ஆண்களுக்கு நிகராக சென்று சம்பாதித்தாலும் சில பெண்களுக்குத்தான் எத்தனை கஷ்டங்கள்!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

:((((((((

நீரோடை போல எந்த சலனமுமில்லாமல் மெதுவாக நகரும் விஷய அடுக்குகளின் இடையே ஒவ்வொருத்தரின் சோகமும், சுமையும் சொல்லப்பட்ட விதம் அருமை

நாளையும் மற்றொரு நாளே :)

சந்தனமுல்லை said...

:(((

சமயங்களில் நேரில் கேட்டிருந்தாலும் அழகாக விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள்! ஹ்ம்ம்..நாளையும் மற்றுமொரு நாளே!!

"உழவன்" "Uzhavan" said...

பெண்களின் வாழ்க்கையில் புகுந்த வீடு சரியாக அமைவது ஒரு பெரிய வரம்தான். அந்த வரம் எல்லோர்க்கும் எளிதாய் கிடைக்கட்டுமாக!

ஹேமா said...

பெண்களுக்கு புகுந்தவீட்வாழ்க்கை-அலுவலகம்-நண்பர்கள் எல்லாமே ஒரு அதிஸ்டம்தான்.
அமைந்துவிட்டால் வெற்றிதான்.