என் மேகம் ???

Tuesday, June 23, 2009

"வேதபுரத்து வியாபாரிகள்"

இந்திரா பார்த்தசாரதியின் "வேதபுரத்து வியாபாரிகள்" வாசித்தேன். அது ஓர் அங்கதம். "நடப்பு நிகழ்வுகளை மிகைப்படுத்திக் கற்பனையுடன் நகைச்சுவை தோன்ற எழுதுவதுதான் அங்கதம்". "இப்பொழுது நம் நாட்டில் நடப்பன அனைத்துமே அங்கதம் தான். நான் அங்கதம் என்று நினைத்துக்கொண்டு எழுதினால், அது படிப்பவர்களுக்கு வெறும் செய்தி திரட்டாக இருக்கக்கூடும்", என்று ஆசிரியர் கூறியிருப்பார். அவர் நாவல் எழுதிய வருடம் 1994. பதினைந்து வருடங்கள் கழிந்தும் அவர் கூறியது உண்மை தான் என்கிறன நிகழ்வுகள். அவரது நாவலில் இருந்து சிறு குறிப்புகள் இங்கு பகிர்கிறேன்.

நாவல் தொடங்குவதே இந்த குறிப்புடன் தான்:
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்பே, கையில் கால்ஷீட்டுடன் தோன்றிய கதாநாயகிகளும் ... வேதபுரம் (பழைய கல்வெட்டிலிருந்து... நடுவில் எழுத்துக்கள் சிதிலமடைந்துள்ளன. காலம் - ஜெ.மு 20007)"

*************************************************************************************

வேதபுரத்து புராணக் கதை ஒன்று:
"பக்கத்து நாட்டு பகைவர்கள், எங்கள் ஆற்றைத் திருடிக்கொண்டு போய் மலையருகே ஒளித்து வைத்து விட்டார்கள். போர் தொடுக்க வேண்டும் என்று கொதித்தெழுந்தது எங்கள் மறவர் கூட்டம். ஆனால் எங்கள் தலைவர், நிதானத்தை இழக்காமல், 8640 விநாடிகள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். எங்கள் மக்கள் கூட்டம் கண்ணீர்விட்டு அரற்றியது. அவர்கள் கண்களினின்றும் பெருக்கோடிய நீரே இன்று இந்நாட்டில் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது"

*************************************************************************************

"வேதபுரச் சமூக நலத்திட்டங்களில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது போலீஸாரால் காவல் நிலையங்களில் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் புதுவாழ்வு தர ஒரு சீரமைப்புத் திட்டம்..."

*************************************************************************************

"வேதபுரத்து வீதி ஓரங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு குப்பைத் தொட்டிகள். ஒன்று, ஏழை எளியவர்க்கு; மற்றொன்று விலங்குகளுக்கு. எச்சில் இலைகளுக்காக முந்தைய ஆட்சிகளில் மனிதனுக்கும் நாய்க்கும் நிகழ்ந்த போராட்டம் இனி இல்லை..."

*************************************************************************************

"சொல்லுடையராதல் வேறு; செயலுடையராதல் வேறு.. 'அருங்குரல்' - வேதபுரத்து நீதி நூல்"

*************************************************************************************

"பகுத்தறிவிலிருந்து விடுதலை பெற்று, நம்பிக்கையின்மையை விரும்பிப் புறக்கணித்தால்தான், மனித வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும் - வேதபுரத்து தலைவர் கட்டுரைகள்"

*************************************************************************************

"வேதபுரத்தில் தான் தலைவர்களின் பாதங்களைத் தொட்டுக் கும்பிடுதல் என்ற மரபு ஏற்பட்டிருக்க முடியும்; மேல்நாடுகளின் இம்மரபு தோன்றி இருக்க இயலாது. காரணம், அந்நாடுகள் குளிர்ப் பிரதேசங்கள், காலில் எப்பொழுதும் பூட்ஸ் போட்டிருப்பார்கள்; பாதங்களின் நேரடி தரிசனம் கிடப்பது சாத்தியமில்லை"

*************************************************************************************

"ஏராளமான அமைச்சர்களுடைய மந்திரி சபையில், அமைச்சர்களுடைய பெயரைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் அவர்களை எண் வரிசையில் குறிப்பிடுவது நன்று. பெயர் மாறினாலும் எண் மாறாது"

*************************************************************************************

"'லஞ்சம்' என்ற சொல் வேதபுரத்து மொழி அகராதியிலே கிடையாது. ஏனெனில், 'இம்மொழியில் 'ல'கரத்தை முதலெழுத்தாகக் கொண்டு எந்த சொல்லையும் படைக்க இயலாது. அப்படிப் படைத்தால் அது இலக்கண வழு...'"

*************************************************************************************

வேதபுரத்தில் தான் உலகிலேயே வேறெங்கும் இல்லாமல், முதல் முறையாகப் பறவை எச்சத்தை ஆய்வதற்கான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டது. இது வேதபுரத்து மகத்தான சாதனை"
[என்ன சாதனை என்று யோசிக்காதீர்கள், இந்த ஆராய்ச்சிக்கூடத்தின் பணி தலைவ்ர் சிலை மீது எச்சமிடும் பறவையைப் பிடிக்கச் சொல்வர். பிடித்த பறவை தான் எச்சமிட்டதா என்று இங்கு சரி பார்ப்பர். இல்லையென்றால் பறவையைப் பிடித்தவர் சிறைப்பறவை ஆவார்]
*************************************************************************************

"நாற்பதினாயிரம் நூற்றாண்டுகளாக எவ்விதமான மாறுதலுமில்லாமல் அப்படியே இருந்து வருவதுதான் வேதபுரத்து நாகரிகத்தின் சிறப்பு!"

*************************************************************************************

"`இந்திரபிரஸ்தம்` என்ற சொல்லினுடைய வேர் 'இந்திரா'வா 'இந்திரனா' என்பது ஆய்வுக்குரியது. சந்ததி ஆட்சியை நினைவில் கொண்டால் 'இந்திரா' என்பதே பொருத்தமாகப் படுகிறது..."

*************************************************************************************

இந்திர பிரஸ்தத்து தலைவர் கட்சியோட வேதபுரத் தலைவர் இப்படி அறிமுகமாவார்:
"இந்திர பிரஸ்தத்து தலைவர் கட்சியோட, இங்குள்ள 23 தலைவர்களிலே முக்கியமான ஒத்தரு. மொத்த கட்சி ஆளுகளும் 23 தான்"

*************************************************************************************

"இந்திரபிரஸ்த நாட்டுத் தலைவருக்கு பதின்மூன்று மொழிகளில் மவுனம் சாதிக்கத் தெரியும்; எட்டு மொழிகளில் புன்னகை பூக்கத் தெரியும்"

*************************************************************************************

சரி... வேதபுரம் , இந்திரபிரஸ்தம் எல்லாம் எந்த ஊருனு உங்களுக்கு தெரியும் தானே?

14 comments:

Unknown said...

நடப்பு நிகழ்வுகளை மிகைப்படுத்திக் கற்பனையுடன் நகைச்சுவை தோன்ற எழுதுவதுதான் அங்கதம்".

"இப்பொழுது நம் நாட்டில் நடப்பன அனைத்துமே அங்கதம் தான். நான் அங்கதம் என்று நினைத்துக்கொண்டு எழுதினால், அது படிப்பவர்களுக்கு வெறும் செய்தி திரட்டாக இருக்கக்கூடும்"\\

இன்னும் எத்துனை வருடங்கள் ஆனாலும் இந்த நிலைதான் இருக்குமோ என்னவோ!

Unknown said...

காலம் - ஜெ.மு 20007\

புதசெவி

Unknown said...

சரி... வேதபுரம் , இந்திரபிரஸ்தம் எல்லாம் எந்த ஊருனு உங்களுக்கு தெரியும் தானே? \\

அட ...

நிஜமாவே அது தானா இது ...

அமுதா said...

/*காலம் - ஜெ.மு 20007\
புதசெவி*/

எனக்கும் புதசெவிதான். அவங்கவங்க என்ன வேணா புரிஞ்சுக்கலாம். அது படிப்பவர் உரிமை

Dhiyana said...

//இந்திரபிரஸ்த நாட்டுத் தலைவருக்கு பதின்மூன்று மொழிகளில் மவுனம் சாதிக்கத் தெரியும்; எட்டு மொழிகளில் புன்னகை பூக்கத் தெரியும்//

இது தசாவதாரம் பட ஜோக் மாதிரி இருக்கு. He speaks 5 languages in Telugu.. :-))..

அமிர்தவர்ஷினி அம்மா said...

இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து நீங்கள் எடுத்துப்போட்டிருக்கும் இந்த முத்தான வாசகங்கள் அனைத்துமே பொருந்தும்.

நல்ல பகிர்வு அமுதா.

தமிழ் அமுதன் said...

நல்ல தொகுப்பு! சொல்ல பட்டு இருக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமானவை!

தமிழ் அமுதன் said...

///சரி... வேதபுரம் , இந்திரபிரஸ்தம் எல்லாம் எந்த ஊருனு உங்களுக்கு தெரியும் தானே? ///

ஏன் தெரியாது? போனவாரம் கூட அங்க ரயிவே மேம்பாலம்,விமான நிலையம் எல்லாம் ஓபன் ஆச்சு!!;;))

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு அமுதா.

‘நச்’சென்று முடித்திருக்கிறீர்கள்:
//சரி... வேதபுரம் , இந்திரபிரஸ்தம் எல்லாம் எந்த ஊருனு உங்களுக்கு தெரியும் தானே? //

ஹும்ம்ம்ம்.. தெரியாமலென்ன..?

சந்தனமுல்லை said...

:-)) அப்புறம் அபூர்வா, வாட்ச், டார்ச் வனிதா செக்ரடரியாகறது..நல்ல பகிர்வு அமுதா!

"உழவன்" "Uzhavan" said...

//"இந்திரபிரஸ்த நாட்டுத் தலைவருக்கு பதின்மூன்று மொழிகளில் மவுனம் சாதிக்கத் தெரியும்; எட்டு மொழிகளில் புன்னகை பூக்கத் தெரியும்"//

அருமை :-)
நல்ல தொகுப்பு

சென்ஷி said...

அருமையான புத்தகப்பகிர்வு.. நன்றி!

//இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து நீங்கள் எடுத்துப்போட்டிருக்கும் இந்த முத்தான வாசகங்கள் அனைத்துமே பொருந்தும்.//

வழி மொழிகிறேன்!

Chithan Prasad said...

இந்திரா பார்த்தசாரதி இப்போது யுகமாயினியில் " கனவுகளைத் தொடர்ந்து " என்கிற புதிய புதினம் ஒன்றைத் தொடராக எழுதிக்கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் ( 78 ) அதே அங்கதம் பளிச்சிடுகிறது.
சித்தன்

தேவன் மாயம் said...

'லஞ்சம்' என்ற சொல் வேதபுரத்து மொழி அகராதியிலே கிடையாது. ஏனெனில், 'இம்மொழியில் 'ல'கரத்தை முதலெழுத்தாகக் கொண்டு எந்த சொல்லையும் படைக்க இயலாது. அப்படிப் படைத்தால் அது இலக்கண வழு...'"//

கேட்க ரொம்ப நல்லாயிருக்கு!!