என் மேகம் ???

Friday, February 13, 2009

உங்களுக்கு ஆண்குழந்தையா பெண்குழந்தையா?

"ஞாநி" அவர்கள் "நெருப்பு மலர்கள்" என்ற புத்தகத்தின் பின்னுரையில் குறிப்பிட்டிருப்பார், "இன்றைய தேவை பெண் குழந்தையை ஆண் போல் வளர்ப்பதல்ல. ஆண் குழந்தைகளை பெண் போல் வளர்ப்பதுதான்"

எங்கள் வீட்டில் ஒரே பெண் குழந்தைகள் மயம்.
யாரோ கூறினார்கள், "அம்மாடி... ஒரே பொம்பளைப் பிள்ளையா இல்ல இருக்கு?".
"அதான் வீடு கலகலனு இருக்கு. ஒரு விழானா இதுங்க எல்லாம் அழகா ட்ரெஸ் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கும்", பெண்கள் கூறினோம்.
உள்ளிருந்து ஒரு தந்தையின் குரல் "ஆனால் வேலை எல்லாம் நாங்க மட்டும் இல்லை இழுத்து போட்டு செய்யணும்?".
"ஏன் அதுதான் குறைனா, பொண்ணுங்களையும் வேலை எல்லாம் செய்யற மாதிரி வளருங்க", நாங்கள் கூறினோம்.

இவ்விடத்தில் எனக்கு ஞாநி அவர்களின் கருத்து நினைவிற்கு வந்தது. இரண்டுமே அவசியம் என்று தோன்றியது. கணவன் மனைவி என்ற உறவில் அடிக்கடி விரிசலுக்கு காரணம் ஈகோவாக இருக்கும். புரிதலுடன் பகிர்ந்து வாழும் உறவுகளின் இனிமையே நீடிக்கும். "நானும் சமம், நான் மட்டும் ஏன் செய்ய வேண்டும், நீ செய்.." என்ற அணுகுமுறை ஈகோவைக் கிளர்ந்தெழச் செய்து மோதலுக்கு வித்திடும். "வேலைல என்ன வித்யாசம். நானும் செய்யறேன். சேர்ந்து செய்வோம்" என்ற அணுகுமுறை அன்பைக் கிளர்ந்தெழச் செய்து காதலுக்கு வித்திடும். ஆண் வீட்டு வேலை செய்கிறான் என்றால் பெண் வெளி வேலை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். இது போன்ற நல்ல எண்ணம் வருமாறு வளர்ப்பு இப்பொழுது பெற்றோர் கையில் உள்ளது. அப்பொழுது தான் இது ஆண்/பெண் செய்யும் வேலை என்ற நிலை மாறி நாம் வாழ செய்யும் வேலைகளாக உருபெறும்.

"ஞாநி" அவர்களின் "நெருப்பு மலர்கள்" என்ற புத்தகத்தின் பின்னுரையில் இருந்து சில பகுதிகள்:

"...பெண் மீது ஆணுக்கு இருக்கும் இந்த சார்புகள் எல்லாம் உரிமையாகவும், அதிகாரமாகவும் இருக்கின்றன. மகனை தாய் பேணுவது எனப்து அவள் கடமை. அவனுக்கு அது உரிமை. கணவனை மனைவி பராமரிப்பது என்பது அவள் கடமை, அது அவனுக்கு உரிமை"

"...எந்த ஆணிடமும் பேட்டியின் இறுதியில் இப்படி, "வீட்டு வேலைகளையும் சேர்த்து எப்படி உங்களால் கவனிக்க முடிகிறது", என்று யாரும் கேட்பதில்லை. ஏனென்றால் அந்த ஆணின் பொறுப்பாக யாரும் பார்ப்பதே இல்லை. அதை பெண்ணின் உழைப்பாகவும் மதிப்பதில்லை". "உங்க மனைவி என்ன செய்றாங்க?" என்று கேட்டால் , வெளிவேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் மனைவியுடைய கணவர்கள் பெரும்பாலோர் சொல்லும் பதில், "சும்மா இருக்கா" என்பதுதான். "வீட்டைக் கவனிச்சுக்கறாங்க" என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்"

"வெளிவேலைக்குச் செல்லும் பெண் மீது சுமத்தபடும் இரட்டிப்பு சுமைகள் (மூன்றாம் சுமை குழந்தை பராமரிப்பு) இன்று இரண்டு விதமான் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வெளி வேலைகளுக்குச் செல்லும் படித்த, படிக்காத பெண்கள் எல்லாருமே கூடுதல் சுமைகளை சுமக்க வேண்டியவ்ர்களாகி விட்டார்கள். வீட்டையும் கவனித்துக் கொண்டு வெளிப்பொறுப்பையும் கவனிப்பது சாதனை என்று நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படி சுமக்க முடியாமல் திணறுபவர்களோ பெண்ணுக்கேற்ற இடம் வீடுதான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். பயோகெபிஸ்ட்ரி முதல் வெப் டிசைனிங் வரை என்ன படித்திருந்தாலும், அந்தத் திறமையைப் பயன்படுத்தி வெளிவேலைக்குச் செல்வதை விட வீட்டு நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு "நிம்மதி"யாக இருந்து விடலாம் என்ற மன நிலையை நோக்கி பெண்கள் துரத்தப்படுகிறார்கள்.


...இன்றைய சமூக சூழல் பெண்கள் பல உரிமைகளையும் வசதிகளையும் அடைந்துவிட்டது போன்ற வெளித்தோற்றத்டதைக் காட்டினாலும், அடிப்படைகள் மாறாமலே தான் இருக்கின்றன. ஒன்றுமே நடக்கவில்லை என்று இதற்கு அர்த்தமில்லை. நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த பல தளைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், விடுபட் வேண்டிய தளைகள் இன்னமும் ஏராளமாக இருக்கின்றன என்பது கசப்பானாலும் யதார்த்தம்.
இன்னமும் பெண்ணால் தயக்கமின்றி கவிதைகூட எழுத முடியவில்லை, விரும்பிய உடையை அணிய முடிவதில்லை, நினைக்கும் கருத்தைப் பேச முடிவதில்லை. எண்ணுவதெல்லாம் ஏப்பமாக வெளியிடும் உரிமை ஆணுக்கு இருக்கிறது. பெண்ணுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. இவையெல்லாம் அடிப்படையில் மாறாமல் இருக்கும் சமூக ஒடுக்குமுறையின் சின்னச் சின்ன வெளிப்பாடுகள் தான்.

...

குடும்பத்திலிருந்து தான் எல்ல மாற்றங்களும் தொடங்கப்பட வேண்டும். குழந்தை வளர்ப்பிலிருந்தே அது தொடங்கப்பட வேண்டும். "வாசலில் போடப்பட்டிருக்கும் பால் பையை எடுத்துப் போய் அம்மாவிடமும், செய்தித்தாளை அப்பாவிடமும் கொடுக்க குழந்தைக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள்" என்று கவிஞர் அ.வெண்ணிலா ஒரு கவிதையிலே கேட்பார். குடும்பம் தான் கற்றுக் கொடுத்தது. ...

பெண்ணுக்கு சம உரிமையை மறுக்கும் ஆண் எப்படி உருவாக்கப்பட்டான் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். ஏழெட்டு வயதில் பெண் குழந்தை அம்மாவுக்கு சிறு உதவிகள் செய்யத் தொடங்கும் வேளையில், அதே வயதில் ஆண் குழந்தை சுதந்திரமாக திரிய அனுமதிக்கப்படுகிறது. நான் (ஆண்) சாப்பிட உட்கார்ந்தால் ஒரு கை தட்டை எடுத்து வைக்கிறது, இன்னொரு கை தட்டிலேயே கை கழுவ நீர் ஊற்றுகிறது. சமயங்களில் சோற்றை குழம்புடன் பிசைந்தே வைத்து விடுகிறது. சாப்பிட்டு முடித்து எழும்போது ஒரு கை மறுபடியும் நீர் ஊற்றுகிறது, துகைக்கத் துண்டு நீட்டுகிறது. இத்தனை கைகளும் பெண்களுடையவை - என் அம்மா, பெரியம்மா , அக்கா.

இப்படி தனக்கு பணிவிடை செய்வதற்கே பெண்கள் உலகில் இருக்கிறார்கள் என்ற மன நிலையில் சுமார் 16 ஆண்டுகள் வளர்க்கப்படுகிற நான், 17வ்து வயதில் பெண்ணை சம மனுஷியாக எப்படி பார்ப்பேன்? ஆண்-பெண் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டால் , பெண்ணுக்கு அடைவதற்கு ஒரு பொன்னுலகமே காத்திருக்கலாம். ஆனால் ஆணாகிய எனக்கு ஏராளமான் சலுகைகள், வசதிகள் எலாம் இழக்கப்பட வேண்டியவையாக அல்லவா இருக்கின்றன. கற்கத் தொடங்கும் மழலையிலேய எனக்கு ஆண்-பெண் இருவரும் சம உரிமை உடைய மனிதர்கள் என்பதும் கற்பிக்கப்பட்டிருந்தால் இந்த சிக்கல் எனக்கும் இல்லையல்லவா?

எனவே, இன்றைய தேவை பெண் குழந்தையை ஆண் போல் வளர்ப்பதல்ல. ஆண் குழந்தைகளை பெண் போல் வளர்ப்பதுதான். சிஉ வயதிலிருந்தே அடுப்படியில் உதவிகள் செய்யவும், வளர வளர சமைக்கவௌம், பாத்திரம் தேய்க்கவும், வீடு பெருக்கவும், கழிப்பறை கழுவவும், கோலம் போடவும் கற்கிற, கற்பிக்கப்படுகிற சிறுவனே சக சிறுமிகளை சமமானவர்களாக நடத்தும் பார்வை பெறுவான்.
...

உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

23 comments:

Ungalranga said...

மீ த ஃபர்ஸ்ட்
..
இதில் உள்ள பல விசயங்களில் பல என் மண்டையில் குட்டின..
சில விசயங்கள் "பரவாயில்லையே.. நாம் சரியாக எண்ணத்தோடுதான் இருக்கிறோம்" என்று நினைத்துக்கொள்ள வைத்தன...

மொத்தத்தில் என்னை சரிபடுத்திக்கொள்ள உங்கள் பதிவு உதவியது.. நன்றி...

நட்புடன் ஜமால் said...

\\...பெண் மீது ஆணுக்கு இருக்கும் இந்த சார்புகள் எல்லாம் உரிமையாகவும், அதிகாரமாகவும் இருக்கின்றன. மகனை தாய் பேணுவது எனப்து அவள் கடமை. அவனுக்கு அது உரிமை. கணவனை மனைவி பராமரிப்பது என்பது அவள் கடமை, அது அவனுக்கு உரிமை"\\

அழகு

நட்புடன் ஜமால் said...

\\நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த பல தளைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், விடுபட் வேண்டிய தளைகள் இன்னமும் ஏராளமாக இருக்கின்றன\\

உண்மையே

நட்புடன் ஜமால் said...

\\உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.\\

என் கருத்து ...

பெண்ணை பெண்ணாக வளர்த்திடுங்கள்

பெண் என்பது என்னவென்று சரியாக விளங்கி கொண்டு ...

அ.மு.செய்யது said...

// சிஉ வயதிலிருந்தே அடுப்படியில் உதவிகள் செய்யவும், வளர வளர சமைக்கவௌம், பாத்திரம் தேய்க்கவும், வீடு பெருக்கவும், கழிப்பறை கழுவவும், கோலம் போடவும் கற்கிற, கற்பிக்கப்படுகிற சிறுவனே சக சிறுமிகளை சமமானவர்களாக நடத்தும் பார்வை பெறுவான். //

சிறுவனாக இருக்கும் போதாவது கொஞ்சம் ஃப்ரீயா இருக்கட்டும் விடுங்களே !!!

கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எவ்ளோ கஷ்டப் படவேண்டியிருக்கு..

ஆதவா said...

ஆண்கள் ஆண்களாகவே இருக்கட்டும், பெண்கள் பெண்களாகவே இருக்கட்டும்.... உரிமைகள் இருவரும் பகிர்ந்து கொள்ளட்டும்.. இதுதான் என் கருத்து.

தெரிந்தோ, தெரியாமலோ, பெண்கள் வீட்டில் எனவும், ஆண்கள் வெளியே எனவும், விதிக்கப்பட்டு இருக்கிறது,. ஒருசிலர் இத்திரை விலக்கினாலும் பெரும்பான்மையில் பெண்கள் வீட்டுச் சிறையில் முடங்கியே கிடக்கிறார்கள் என்பதுதான் உண்மை.. ஞாநி சொல்வது போல, நூற்றாண்டு மாற்றங்கள் இருந்தாலும் இன்னும் மாறாதது எத்தனையோ!!!

ஒருமுறை, நான் சொன்னேன் என் பெண் நண்பரிடம், " ஆண்கள் தாலி கட்டுவதே ஆணாதிக்கம் தான்" என்று....

அவள் ஒத்துக்கொள்ளவேயில்லை..... ???????

பெண்களே இப்படி இருந்தால் எப்படிங்க???

pudugaithendral said...

"...எந்த ஆணிடமும் பேட்டியின் இறுதியில் இப்படி, "வீட்டு வேலைகளையும் சேர்த்து எப்படி உங்களால் கவனிக்க முடிகிறது", என்று யாரும் கேட்பதில்லை. ஏனென்றால் அந்த ஆணின் பொறுப்பாக யாரும் பார்ப்பதே இல்லை. அதை பெண்ணின் உழைப்பாகவும் மதிப்பதில்லை". "உங்க மனைவி என்ன செய்றாங்க?" என்று கேட்டால் , வெளிவேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் மனைவியுடைய கணவர்கள் பெரும்பாலோர் சொல்லும் பதில், "சும்மா இருக்கா" என்பதுதான். "வீட்டைக் கவனிச்சுக்கறாங்க" என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்"//

இந்த வரிகளுக்காக உங்களுக்கு பாராட்டுவிழாவே வைக்கணும்.

பட்டமளிக்கு பலகலைக்கழகம் நம்ம முத்துலெட்சுமியை கலந்தாலோசித்து நல்ல பட்டம் சூட்டபடும் என தெரிவிச்சுக்கிறேன்

pudugaithendral said...

"வாசலில் போடப்பட்டிருக்கும் பால் பையை எடுத்துப் போய் அம்மாவிடமும், செய்தித்தாளை அப்பாவிடமும் கொடுக்க குழந்தைக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள்" என்று கவிஞர் அ.வெண்ணிலா ஒரு கவிதையிலே கேட்பார். குடும்பம் தான் கற்றுக் கொடுத்தது. ...//

விளம்பரங்களில் கூட குக்கர், கேஸ் சோப் போன்றவற்றிற்கு பெண் மாடல்தான்.

ஆசிர்வாத் ஆட்டாவிற்கு ஆண் சப்பாத்தி தயாரிப்பது போல் போட்டா தப்பாகிடுமா?

கேட்டா காலங்காலமாய் இப்படித்தான் இருக்கு என்பார்கள்.

pudugaithendral said...

உங்க கருத்தோட நான் பயங்கரமா ஒத்துப்போறேன்.

எனது கருத்தையும் இங்கே சொல்லிக்கிறேன்.

பல பெண்களுக்கு வெளியுலகம், வெளிவேலைத் தெரிவதில்லை. அதுவும் கற்றுக்கொடுக்கப்படவேண்டும்.(உம்: வங்கி, கடைக்குபோதல், சாமான் வாங்குதல்)

ஆண் பிள்ளைகளுக்கு வீட்டு வேலையும் செய்யப் பழக்குதல். சாப்பிடும் இடத்தை சுத்தம் செய்வது உள்பட.

முதலில் இவற்றை பெற்றோர்கள் மனதில் ஏத்திக்கொண்டு செயல்படவேண்டும்.

இதை அவசர சட்டமாகத் தனக்குத்தானே ஏற்றிகொண்டு செயல்படணும். அதுதான் ஒரே தீர்வு

ராமலக்ஷ்மி said...

நல்ல கருத்துக்கள் அமுதா.

//கற்கத் தொடங்கும் மழலையிலேய எனக்கு ஆண்-பெண் இருவரும் சம உரிமை உடைய மனிதர்கள் என்பதும் கற்பிக்கப்பட்டிருந்தால் இந்த சிக்கல் எனக்கும் இல்லையல்லவா?//

மிகச் சரி. அதே போல் பெண்கள் வளர்க்கப் பட வேண்டிய விதம் பற்றி தென்றல் சொல்லியிருப்பதும் சரி. வருங்காலத்தில் வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய எல்லாவற்றிற்கும் ஆண், பெண் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி இருபாலினிரையும் தயார் செய்திட வேண்டும்.

Uma said...

சரியான பார்வை.அடுத்த தலைமுறை ஆண்பிள்ளைகளையாவது நீஙகள் சொன்ன மாதிரி வளர்த்தால் மாற்றம் கொண்டு வரலாம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

குடும்பத்திலிருந்து தான் எல்ல மாற்றங்களும் தொடங்கப்பட வேண்டும். குழந்தை வளர்ப்பிலிருந்தே அது தொடங்கப்பட வேண்டும்.

=வழிமொழிகிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆசிர்வாத் ஆட்டாவிற்கு ஆண் சப்பாத்தி தயாரிப்பது போல் போட்டா தப்பாகிடுமா?

நல்லா சொன்னீங்க

gnani said...

அமுதா அவர்களுக்கு என் நெருப்பு மலர்கள் நூலின் பின்னுரையிலிருந்து சில பகுதிகளை எடுத்து வெளியிட்டு நூலை வலைஞர்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி. ஒட்டு மொத்த நூலைப் பற்றியும் ஒரு சில வரிகள் நீங்கள் எழுதியிருந்தால் மேலும் மகிழ்வேன். அந்த நூலை நான் பல திருமணங்களில் பரிசாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

புதுகைத்தென்றலுக்கு:

அமுதா மேற்கொளாகக் கொடுத்துள்ள என் பின்னுரைப் பகுதிகளுக்கு பாரட்டுப் பட்டத்தை ராமலட்சுமியின் ஆலோசனையுடன் தருவதாக் இருந்தால், அதை எனக்குத்தான் தரவேண்டும். அமுதாவுக்கு அல்ல.(என் கருத்தைப் பரப்புவதற்காக அவருக்குத் தனி விருது நான் கொடுத்துக் கொள்கிறேன்.)

ஒரு பதிவர் என்ன பதிவு வெளியிட்டிருக்கிறார் என்பதை தயவுசெய்து தெளிவாகப் பார்த்து பின்கருத்து வெளியிடுங்கள். ஞாநி

Dhiyana said...

கருத்துகள் அனைத்தையும் ஆமோதிக்கிறேன்.

வீட்டு வேலை செய்வதில் தயக்கம் காட்டாத ஆண்மகனை வளர்த்த என் மாமியாருக்கு என் நன்றிகள்.
என் கணவர் என் எல்லா வேலைகளையும் பங்கிடுவதால், என்னால் என் மகளுடன் அதிக நேரம் செலவிட முடிகிறது.

அமுதா said...

வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

அமுதா said...

ஞாநி அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி.

/*ஒட்டு மொத்த நூலைப் பற்றியும் ஒரு சில வரிகள் நீங்கள் எழுதியிருந்தால் மேலும் மகிழ்வேன். */
சில நூல்களே மனதை பாதித்து, யோசிக்க வைத்து, மற்றவரையும் படித்து அறிந்து கொள்ளச் செய்ய தோன்றும் வகையைச் சார்ந்தவை. "நெருப்பு மலர்கள்" இந்த வகையைச் சார்ந்தது. எனக்கு நூல் வாசிப்பு பற்றி அழகாக கூறும் திறமை இன்னும் இல்லை. அதனாலேயே இந்நூல் பற்றி கூறாது, வெகுநாட்களாக என் மனதுள் அலைமோதிக்கொண்டிருந்த பின்னுரை கருத்துகளை பதிவுலகில் பகிர்ந்து கொண்டேன். நன்றி

தமிழ் அமுதன் said...

பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்ல!

ஆமாம்! பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள்.
தன் தாயிடம்,சகோதரியிடம்,மனைவியிடம்,மகளிடம்
நன்கு கூர்ந்து கவனித்தால் (மனசாட்சியுடன்) பெண் ஆணை விட
உயர்வு என்பது புரியும்.

(மேலும் என் கருத்துக்களை ஒரு பதிவாக எழுதுகிறேன்)

ஹேமா said...

அமுதா,என்னதான் புத்தகங்களிலும் கவிதைகளிலும் பெண்விடுதலை பற்றிப் பேசினாலும் நடைமுறையில் இன்னமும் அடிப்படையான அடக்குமுறைகள் இருக்கத்தான் இருக்கிறது.

//இன்னமும் பெண்ணால் தயக்கமின்றி கவிதைகூட எழுத முடியவில்லை, விரும்பிய உடையை அணிய முடிவதில்லை, நினைக்கும் கருத்தைப் பேச முடிவதில்லை.//

நீங்க சொன்னது உண்மையான வரிகள்.மனம் விட்டுத் தாராளாமாக எதையும் எழுதக் கூச்சமும் பயமுமாகத்தான் இருக்கிறது.

எம்.எம்.அப்துல்லா said...

அதிலயும் அமுதா இன்னோரு பரிதாபமான விஷயமும் பெண்களுக்கு. தன் சொந்த காலில் நின்ற பின்பு திருமணம் செய்ய நினைக்கும் ஆண் எந்த வயசில் வேண்டுமாலும் செட்டில் ஆகலாம். எந்த வயதிலும் அவனுடைய விருப்பப்படி பெண் கிடைத்து விடும்.(50 வயசு கிழவன் 18 பெண்ணை கட்டிய கதை சர்வசாதாரணம்)

ஆனால் சுயமாக உழைத்து பின்னர் திருமணம் செய்ய நினைக்கும் பெண்ணை நினைத்து பாருங்கள்??? எதுவாக இருந்தாலும் அதிகபட்சம் 29 வயதுக்குள் செட்டில் ஆக வேண்டும். 30 ஐ தொட்டாலே திருமணம் அவர்கள் விரிம்பியபடி அமையாது. பெண்களின் கனவு,உழைப்போடு வயதும் இணைந்து கொள்கிறது :((

எம்.எம்.அப்துல்லா said...

திரு.ஞானி அவர்களின் கவனத்திற்கு..


நீங்கள் புதுகைதென்றலுக்கு அளித்துள்ள பதிலில் ’ராமலட்சுமியின் ஆலோசனையுடன்’ என்று எழுதியுள்ளீர்கள்.

கொஞ்சம் நன்றாக படியுங்கள் அவர் ’முத்துலெட்சுமியை கலந்தாலோசித்து’ என்று எழுதி இருக்கிறார். இராமலெஷ்மி என்று அல்ல..


//ஒரு பதிவர் என்ன பதிவு வெளியிட்டிருக்கிறார் என்பதை தயவுசெய்து தெளிவாகப் பார்த்து பின்கருத்து வெளியிடுங்கள். ஞாநி
//

மேலே உள்ளது நீங்கள் குறிப்பிட்ட வார்த்தை. அது உங்களுக்கும் பொருந்துமா???

pudugaithendral said...

ஞாநி அவர்களுக்கு,



ஒரு பதிவர் என்ன பதிவு வெளியிட்டிருக்கிறார் என்பதை தயவுசெய்து தெளிவாகப் பார்த்து பின்கருத்து வெளியிடுங்கள். ஞாநி//

தங்களை காயப்படுத்தியிருந்தால் SORRY. நினைவில் வெச்சுக்கிறேன்.

நான் முத்துலெட்சுமியுடன் பேசித்தான் பட்டமளிப்பதாக சொல்லியிருந்தேன். ராமலக்‌ஷ்மி அவர்கள் சொல்லியிருக்க வில்லை.

போகட்டும் விடுங்கள்.

தமிழ் அமுதன் said...

////Blogger எம்.எம்.அப்துல்லா said...

திரு.ஞானி அவர்களின் கவனத்திற்கு..


நீங்கள் புதுகைதென்றலுக்கு அளித்துள்ள பதிலில் ’ராமலட்சுமியின் ஆலோசனையுடன்’ என்று எழுதியுள்ளீர்கள்.

கொஞ்சம் நன்றாக படியுங்கள் அவர் ’முத்துலெட்சுமியை கலந்தாலோசித்து’ என்று எழுதி இருக்கிறார். இராமலெஷ்மி என்று அல்ல..


//ஒரு பதிவர் என்ன பதிவு வெளியிட்டிருக்கிறார் என்பதை தயவுசெய்து தெளிவாகப் பார்த்து பின்கருத்து வெளியிடுங்கள். ஞாநி
//

மேலே உள்ளது நீங்கள் குறிப்பிட்ட வார்த்தை. அது உங்களுக்கும் பொருந்துமா???/////


இதை நான் வழி மொழிகிறேன்!!!!