என் மேகம் ???

Tuesday, February 10, 2009

மாமாவின் நினைவுகள்

பிப். 10. அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா? நாட்கள் உருண்டோடி வருடமாகிவிட்டது. காலம் வலிகளின் தீவிரத்தைக் குறைக்கிறது. சென்ற ஆண்டு மறைந்துவிட்ட மாமாவை நினைத்துப் பார்க்கிறேன். எனது மரணத்தைப் பற்றிய பதிவுகள் அவரது பிரிவின் தாக்கமே...

பெண்ணுக்கு வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டுமெனில் கணவன் மட்டுமல்ல புகுந்த வீட்டு சொந்தங்களும் புரிதலுடன் வேண்டும். முன்பின் அறிமுகமில்லாத மனிதர்களுடன் உண்டாகும் பிணைப்பு அன்பினால் மட்டுமே. திருமணம் என்ற பந்தத்தினால் கிடைக்கும் புது சொந்தங்களின் பிணைப்பும் அவ்வாறே.

திருமணமான ஒரு வாரத்துள் அருகில் இருப்பவர்களுக்கு விருந்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பூண்டு உரித்துக் கொண்டிருந்தவரை ஆச்சரியமாகப் பார்த்தேன். ஆண்கள் அடுப்படியில் உதவுவது என்பது எனக்கு ஆச்சரியம். அந்த ஆச்சரியம் தொடர்ந்து கொண்டே இருந்தது. எனது வளைகாப்பிற்கு பூச்சடை செய்ய பூ தொடுத்தார். கேலி செய்து சிரித்த பெண்களிடம் "நம்ம வீட்டுப் பெண்ணுக்கு தானே செய்கிறேன்" என்றார். ஈகோ வீட்டிற்குள் தலையெடுக்காது இருந்தால் இன்பமே என்று புரிய வைத்தார். வீட்டு வேலை என்றாலும் அலுவலக வேலை என்றாலும் அதே சுறுசுறுப்பு, வேகம் மற்றும் உழைப்பைக் காணலாம்.

வீட்டில் உறவுகளுக்குள் ஒரு பிரச்னை என்று நான் கலங்கி இருந்த பொழுது அவர் கூறிய அறிவுரை கோடி பொன் பெறும். "வாழ்க்கை என்றால் பிரச்னை வரும் , போகும். இதுக்கெல்லாம் அழுதுட்டு இருக்கலாமா? தைரியமா என்ன பண்ணணும்னு பார்க்கணும்.
நீ கவலைப்படாமல் இரு நான் கவனிச்சுக்கிறேன்" என்றார். இன்றும் பிரச்னை என்றாலே எனக்குள் ஒலிக்கும் இச்சொற்களால் பிரச்னை ஒன்றுமில்லாததாகத் தோன்றிவிடும்.

அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் வேலை, வீடு என்று திணறிக் கொண்டிருந்த எங்கள் வீட்டு பொறுப்பை முழுமையாக ஏற்றார். முழுமை என்றால்... சமையல், தோட்டம், குழந்தை வளர்ப்பு என்று அனைத்தும். இதற்கு நடுவில் அவரை அலுவலக நிமித்தமாக உதவி கேட்போருக்கும் உதவிக்கொண்டு... எப்படி அவருக்கு அவ்வளவு வலிமையோ?

நான் கருவுற்றிருந்த பொழுது, சிறுநீரகக் கல்லுக்கு மருந்து உட்கொள்ளக் கூடாது என்றார் மருத்துவர். சாப்பிடும் எனக்கு தினமும் வாழைத்தண்டும், கீரையும் அலுத்துப் போனது, அவருக்கு நறுக்கி சமைக்க அலுக்கவில்லை. மனைவி, மகன், மருமகள் என அனைவருக்குமே அவர் ஒருமுறையாவது மருத்துவமனையில் உதவி இருப்பார். தனக்கு என்று இருந்த பொழுது யாரையும் இருக்க விடமாட்டார். "போய் குழந்தைகளைக் கவனி", அவ்வளவுதான்.

வீடு நிறைய குழந்தைகள் இருந்தால் புன்முறுவலுடன் இரசித்துக் கொண்டிருப்பார். குழந்தைகளை எப்பொழுதும் தூக்கிக் கொண்டு அவர்கள் இழுப்புக்குச் சென்று கொண்டிருப்பார். மதுரையில் இருந்து யார் வந்தாலும் பேத்திகளுக்கு சாத்தூர் சேவு வந்து விடும். அது பெரிதல்ல, எனக்கு கருப்பட்டி மிட்டாய் பிடிக்கும் என அவர் சாத்தூர் செல்லும் பொழுதெல்லாம் மறக்காது வாங்கி வருவார். மருதமலையில் இலந்தை வடை கேட்டு என் கணவரிடம் கெஞ்சும் நேரத்தில் அவ்ர் ஒரு இலந்தை வடை கடையே கொண்டுவந்து கையில் கொடுத்துவிட்ட பாசத்தை நினைத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது. "அமாவாசையாவது ஒண்ணாவது சிக்கன் சாப்பிடுங்க" என்று எங்களிடம் கூறுவார். அமாவாசைக்கு நீங்க சாப்பிடாதீங்க என்று சொல்லும் அத்தையின் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து அவர் சாப்பிட மாட்டார்.

திருமணமான புதிதில் முதலில் பயம் கலந்த மரியாதை உண்டு. புத்தக வாசிப்பினால் தான் அது உரிமை கலந்த மரியாதை ஆனது. தந்தை போன்ற உரிமையுடன் சரிசமமாக பேசும் உரிமையைத் துவக்கி வைத்த பொன்னியின் செல்வனுக்கு என் நன்றிகள். எனக்கு பிடித்த "உடையார்" நாவலை அவரிடமும் படிக்கக் கொடுத்து , கட்டிடம் பற்றியும் அவருக்குத் தெரியும் ஆதலால், கோயில் கட்டியது பற்றி எனக்குப் புரியாத்தை அவரிடம் பேசி தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். எத்தனை பகுதிகள் படித்தாரோ தெரியவில்லை..

முடிந்தவரை ஏதேனும் வேலைகள் செய்து கொண்டிருப்பார். அதிகாலை 5 மணிக்கு எழுந்து குளித்து, யோகா செய்துவிட்டு, டி.வி பார்த்தவாறு வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, காய்கறிகள் எல்லாம் அரிந்து விடுவார். தோட்ட வேலையும் நடுவில் பார்த்துக் கொள்வார். ஏதேனும் செடிகள் புதிதாக வளர்த்துக் கொண்டே இருப்பார். சமையல் செய்ய வேண்டுமெனில் அதுவும் முடித்துவிடுவார். நடுவில் அலுவலக நண்பர்களுக்கு அலுவல் விஷயமாகவும் உதவிக் கொண்டிருப்பார். உறவு நட்பு என எவ்வட்டத்திலும் குடும்பம், அலுவல் என எதுவாக இருந்தாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு தன்னால் இயன்றவரை உதவுவார்.

சாத்தூர் அருகே உள்ள சிற்றூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு ஒரு நாள் வேலை முடித்துவிட்டு, மறுநாள் சென்னையில் நண்பர் வீட்டு கல்யாண்த்திற்கு வந்திருப்பார். எதைப் பற்றி வேண்டுமென்றாலும் அவரிடம் பேசாலாம். எப்படியாவது தெரிந்து வைத்திருப்பார். வீட்டில் என்ன ஒரு செயல் என்றாலும் நாங்கள் மட்டுமல்ல என் பெற்றோர் கூட அவரிடம் ஒரு வார்த்தை கேட்டு செய்தால் தான் திருப்தி. நான்கு வருடங்களாகத் தான் மதுரையில் இருந்தார். அதற்கு முன் எங்களுடன் சென்னையில் இருந்து குழந்தைகளைக் கவனித்துக் கொள்வார். எனது இரு குழந்தைகளின் வளர்ச்சியில் அவரது பங்கு மிக உண்டு. அதன் பிறகும் இங்கு ஓரிரு நாட்களுக்கு வந்தால் கூட அதிகாலையில் வெங்காயம், பூண்டு உரிக்கப்பட்டு இருக்கும். எத்தனை சிறு இடைவேளையிலும் முடிந்த அளவு உதவிடுவார்.

அவர் மருத்துவமனையில் இருக்கும் தகவல் அறிந்து, உடனே அதிர்ஷ்டவசமாக ட்ரெய்னில் என் கணவருக்கு இன்னொருவரின் டிக்கட் கிடைத்தது. எல்லாம் நல்லவையாக அமையும் என்று எண்ணினோம். தந்தையைக் காணக் கிளம்பியவர், செல்ல முடிந்தது என்னவோ தாயின் துக்கத்திற்குத் தோள் கொடுக்க. சர்க்கரை நோய் இருந்ததால் நெஞ்சு வலியின் தீவிரம் தெரியாது போய், வாயுத் தொல்லையாக எண்ணிவிட்டு, தெரிந்த பொழுது மருந்துகளால் எதுவும் செய்ய முடியவில்லை.

நட்பு, உறவு என ஒரு பெரிய வட்டம் வந்த பொழுது புரிந்தது எத்தனை பேருக்கு அவர் உதவி இருக்கிறார் என்று. வாழ்ந்தால் இப்படி எல்லோரும் "இப்படி ஒரு நல்லவர் இனி இல்லையே" என்று சொல்லுமாறு வாழ்ந்திருக்க வேண்டும் என்று புரிய வைத்தது.

14 comments:

மாதவராஜ் said...

அமுதா!

உறவுகளின் அழகையும், சிறப்பையும் மிக எளிய வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள்.

உங்களுக்கு எனது ஆறுதல்!

pudugaithendral said...

அருமையான நினைவுகள். என்னைப் போல் நீங்களும் கொடுத்து வைத்தவர் என்பதில் மகிழ்ச்சி.

என் மாமா ( கணவரின் அண்ணன்) காய்கறி நறுக்கித் தருவார். அங்கே இருந்தால் செய்வேன், இங்கேயும் செய்கிறேன் என்று சமையலில் உதவுவார்.

என் அப்பாவிற்கு அடுத்து சமையற்கட்டில் நான் பார்த்த (முழுவீச்சுடன் வேலை) மனிதர் மாமா தான்.

வல்லிசிம்ஹன் said...

அமுதா, உங்கள் மாமாவின் நினைவு என்றும் இதே போல் பசுமையாக உங்களுக்குள் இருந்து அவர் வாழ வேண்டும்.
அருமையான மனிதர். பரிவும் செயலும் கொண்ட மானிடரைப் பார்த்தாலே புண்ணியம். என் தம்பியும் இவ்வாறே இருந்தான்.
உங்கள் மாமா எங்கிருந்தாலும் நன்றாகவே இருப்பார். அதிகம் நோய்வாய்ப்படாமல் உதவி செய்தவாறே போய்விட்டார் இல்லையா.
அமைதி கொள்ளுங்கள் அமுதா.
இதைச் சொல்லிவிட்டு என் தம்பிக்கும் ஒரு ஹலோ மனதில் சொல்லிக் கொள்ளுகிறேன்.

நட்புடன் ஜமால் said...

\\பெண்ணுக்கு வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டுமெனில் கணவன் மட்டுமல்ல புகுந்த வீட்டு சொந்தங்களும் புரிதலுடன் வேண்டும்.\\


சரியா சொன்னீங்க

நட்புடன் ஜமால் said...

ஆண்கள் அடுப்படியில் உதவுவது என்பது எனக்கு ஆச்சரியம்\\

பார்த்திராத, பழக்கமற்ற எதுவுமே ஆச்சர்யம்தான்.

நட்புடன் ஜமால் said...

\\இப்படி ஒரு நல்லவர் இனி இல்லையே" என்று சொல்லுமாறு வாழ்ந்திருக்க வேண்டும் என்று புரிய வைத்தது.\\

மிகச்சரி

அ.மு.செய்யது said...

நெகிழ வைத்த பதிவு அமுதா...

உங்கள் மாமாவிற்கு எங்களது அஞ்சலிகளும் உரித்தாகட்டும்.

அமுதா said...

வருகை தந்து ஆறுதல் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

அமுதா

உங்களின் பதிவை படிக்க படிக்க, அப்படியே எனக்கு என் மாமனார்தான் கண்ணுக்கு முன் நிற்கிறார்.

நீங்கள் எழுதியிருக்கிற எல்லாமே என் மாமனாருக்கு பொருந்தும்

நான் இரவு சாப்பிடாமல் படுத்துவிட்டால், என் கணவர் வந்தால் அவரிடம் சொல்லி, அவ சாப்பிடாமயே படுத்துட்டா, எழுந்து சாப்பிட வை என்று சொல்லிப் போவார்.

அனேக நேரங்களில் எனக்கு காலையில் டீ அவர்தான் போட்டுத்தருவார்.

என் பிறந்த்நாளின் போது வேலைக்கு கிளம்பிய எனக்கு சாப்பாடு கட்டி வைத்து விட்டு, நான் போகும் போது எதிரில் வந்து ஒரு முழம் மல்லிகை பூவும், கையில் 10 ரூபாவும் திணித்து பிறந்த்நாள் வாழ்த்து சொன்னபோது...

என் தந்தை கூட செய்யாதது இது.

உறவால் என் மாமனார்
உணர்வால் எனக்கு இன்னொரு தந்தை


கண்கள் பனிக்கிறது அமுதா.
ஏனோ நல்லவர்களுடன் நாம் வாழும் நாட்கள் குறைவாகத்தான் இருக்கிறது.

சந்தனமுல்லை said...

மனமார்ந்த அஞ்சலிகள் அமுதா!
காலம் ஒரு நல்ல மருந்து!!

ராமலக்ஷ்மி said...

//வாழ்ந்தால் இப்படி எல்லோரும் "இப்படி ஒரு நல்லவர் இனி இல்லையே" என்று சொல்லுமாறு வாழ்ந்திருக்க வேண்டும் என்று புரிய வைத்தது.//

நீங்கள் உணர்ந்த அந்த உண்மையை உங்கள் ஆத்மார்த்தமான ஒவ்வொரு வரிகளும் எங்களுக்கும் புரிய வைத்தன. அவர் தெய்வமாக இருந்து என்றும் உங்களை என்றும் வழிநடத்துவார்.

தமிழ் அமுதன் said...

உங்கள் மாமா மிகசிறந்த மனிதர்தான்!

அதனால்தான் இன்னும் உங்கள் நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்?

எனக்கு கூட நான் இறந்த பின்னர் மற்றவர் எண்ணங்களில் வாழும் வகையில், தற்போது வாழ வேண்டும் என்று

தோன்றுகிறது!

Dhiyana said...

உங்கள் மாமாவிற்கு எங்கள் அஞ்சலிகள்.

ஆதவா said...

இழப்புகளை என்றுமே ஈடு செய்யமுடியாது சகோதரி,,, சென்ற வருடம் என் அண்ணன் இறந்த பொழுது எனக்கும் அப்படித்தான் தோணியது...

வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவராக நாம் இழந்து கொண்டே இருப்போம்.... முடிவில் நம்மை நாமே இழப்போம்.... இது எல்லாருடைய வாழ்வு நியதி...

நினைவில் வைத்திருந்து நாம் அஞ்சலி செலுத்துவோம்... அதுவெ நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை