என் மேகம் ???

Friday, December 19, 2008

ஒரு தாயின் பரவசம்




கிட்டதட்ட 4 வருடங்களுக்கு முன், சற்றே ஓய்வு கிடைத்திருந்த பொழுது, புத்துணர்வு பெற்ற மனம், வார்த்தைகளைக் கோர்த்து விளையாடியது. பொன்னால் பொறிக்கப்பட வேண்டும் என தாய்மை தந்த பரவசத்தை ஒரு நோட்டுப்புத்தகத்தில் பொன்னிற எழுத்து பதியும் பால்பாயிண்ட் பேனாவின் உதவியுடன் உருவானது "என் வானம்". "முதலில் என்னை கவனி" என்னும் விதமாக அடிக்கடி என் குழந்தைகளால் அது ஒளித்து வைக்கப்படும். இரண்டு வருடங்களுக்கு முன் என் தோழியரிடம் பகிர்கையில், முல்லையின் யோசனைப்படி பதிவுலகில் உருவானது "என் வானம்". "என் நட்சத்திரங்களை" மட்டுமே வலையேற்றப்பட்ட நேரத்தில் காணாமல் போனது, சமீபத்தில் கிடைத்தது. அதில் குழந்தையின் முதல் சில வளர்ச்சியைப் பற்றி எழுதிய தாய்மையின் பரவசத்தை, இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

"எனக்குப் பிடித்த சில நினைவுகளை பதித்துக் கொள்ள ஆசை. பசுமரத்தாணி போல் சில பதிந்தது என எண்ணினாலும். மணலில் பதித்த எழுத்துக்களாய் காலமெனும் அலைகள் கலைப்பதைத் தடுக்க முடியவில்லை. சில பொன்னான நினைவுகளைப் பொன்னெழுத்தில் பொறிக்க விழைந்தேன்.

நந்தினி, யாழினி என இருமலர்களின் நறுமணம்.
நந்தினி - இள ரோஜா நிறத்தில் நாவை நீட்டி கொட்ட கொட்ட விழித்துப் பார்த்த அழகு
யாழினி - வெள்ளை ரோஜாவாக கண்களை மூடித் தூங்கிய அழகு

இது பிறந்தவுடன் கண்ணில் கண்ட நீங்கா நினைவுப் பதிப்பு.

இந்த செல்லங்களின் சேட்டை எண்ணாற்றவை. பூவொன்று மலர்வது கண்முன்னே தெரியாமல் நிகழ்வது போல் தான் குழந்தையின் வளர்ச்சி. வாழ்க்கையை அழகுப்படுத்துவதே குழந்தைகள் தான். KIDS MAKE THE LIFE COLORFUL. அம்மா, அதன் பொக்கை வாய்ச் சிரிப்பும், மின்னும் கண்களும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. வள்ளுவரும், பாரதியும் எழுதியதை அனுபவித்தாலன்றி முழுதாக உணரமுடியாது. அந்த பிஞ்சு கைகள் மடங்கி இருப்பது அழகு என்றால், அக்கைகளுக்குள் என் விரல் உறங்குவது, பூ மெத்தையில் புரளும் சுகம். கண் மலர்ந்து சிரித்தாலும், கண் மூடி உறங்கினாலும், சிரிப்பின்றி பார்த்தாலும் ... ஒவ்வொரு அசைவிலும் உள்ளம் சிலிர்க்கின்றது.

குழந்தை பாலருந்தி, என் அருகாமையில், அணைப்பில் உலகத்தைப் பற்றிய கவலையின்றி மயங்குவதென்பது விவரிக்க இயலா இன்பமயமானது. வளர, வளர அதன் சேட்டைகள் சிலிர்ப்பானது. அந்த கைகளும், கால்களும் தூக்கத்தில் தான் ஓய்வெடுக்குமா? கைகளைச் சுழற்றுவதும், கைகளைப் பிசைவதும், கையால் காலைப் பற்றுவதும், பிஞ்சு காலால் என் மார்பில் உதைப்பதும், கொடுக்கும் பொருளைப் பற்றிக் கொண்டு அதைப் படுத்தும் பாடும்.. அப்பப்பா... அந்த கணத்தின் இனிமை விளக்க இயலாதது.

கடவுள் குழந்தையின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு விலங்காக உடைப்பாராம், கண், காது, கைகள் என ...அதன் பிறகே கண் தெரிவது, காது கேட்பது , ஒரு சாய்வது, குப்புற விழுவது என்று ஒவ்வொரு வளர்ச்சியுமாம், என் பெரியம்மா கூறுவார். பிறந்து சில நாள் கழித்து , தலையை இடதும் வலதுமாக உருட்டும் அழகென்ன.. வேகமென்ன .. பின் மெள்ள, மெள்ள குப்புற விழ எடுக்கும் முயற்சிகள்... ஒருசாய்ந்து படுத்து, கையை ஊன்றி, உடலைத் திருப்பி, பின் தலையை உருட்டி, தலையைத் தூக்கியவுடன் வெற்றிப் பெருமிதத்தில் சிரிக்கையில் இமயத்தைத் தொட்ட மகிழ்ச்சி ஒரு தாயிடம்.

அந்த தொட்டிலில் செய்யும் குறும்புகள்.. அழகாக சேலையை ஜன்னல் திரை போல் விலக்கி, எட்டிப் பார்த்து சிரிக்கும் அழகென்ன.. தடாலென தலையைத் தொங்க விட்டு "ஏய்" என்று அழைக்கும் அழகென்ன.. வலக்கையால் இடக்காலைத் தூக்கிப் பிடித்துத் தூங்க எங்கே கற்றாய் பெண்ணே? உன் அக்கா இப்படி இருக்கையில் கால் மேல் கால் போட்டுத் தூங்கும் அழகே தனி. நீ தொட்டிலுள் மீன் போல் கால்களை உதைத்து உதைத்து நீந்தும் தங்க மீன்."

6 comments:

ராமலக்ஷ்மி said...

உங்க நீங்கா நினைவுப் பதிப்பு அருமை அமுதா.

//றந்து சில நாள் கழித்து , தலையை இடதும் வலதுமாக உருட்டும் அழகென்ன.. வேகமென்ன .. பின் மெள்ள, மெள்ள குப்புற விழ எடுக்கும் முயற்சிகள்... ஒருசாய்ந்து படுத்து, கையை ஊன்றி, உடலைத் திருப்பி, பின் தலையை உருட்டி, தலையைத் தூக்கியவுடன் வெற்றிப் பெருமிதத்தில் சிரிக்கையில் இமயத்தைத் தொட்ட மகிழ்ச்சி ஒரு தாயிடம்.//

உண்மை உண்மை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான நினைவுகளை அற்புதமாக அசைப்போட்டிருக்கிறீர்கள்

உலகில் 7 அதிசயமாமே, குழந்தையின் அசைவை விடவா//

உண்மைதான்
நம் கண் முன்னே நம் குழந்தைகளின் பரிணாம வளர்ச்சி மிகவும் அசாத்தியப்பட்ட ஒன்றுதான்.

தமிழ் அமுதன் said...

இந்த பதிவினை நீங்கள்
ஒரு கவிதையாய் முயற்சி
செய்து இருந்தால்!

நெஞ்சை வருடும் வரிகள்
எங்களுக்கு கிடைத்து
இருக்கும்!

நட்புடன் ஜமால் said...

தாய்மை

தாய் மட்டுமே உணரக்கூடியது.

தந்தையால் புரிந்து கொள்ள மட்டுமே முடிந்தது.

Dhiyana said...

//யாழினி - வெள்ளை ரோஜாவாக கண்களை மூடித் தூங்கிய அழகு//

தூங்கிற குழந்தை ரொம்ப அழகு அமுதா.. எனக்கும் மிகவும் பிடிக்கும்.

அ.மு.செய்யது said...

//கடவுள் குழந்தையின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு விலங்காக உடைப்பாராம்,//

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்..இனிமை..