என் மேகம் ???

Wednesday, October 15, 2008

புரிந்து கொள்வாயா பெண்ணே?

எனக்கு கிடைக்காதவை, உனக்கு கிடைக்க வேண்டும்
என்று கனவு கண்டதில்லை, ஆனால் நடந்தது...

மகிழ வேண்டிய தருணத்தில், மனதோரம் ஒரு தவிப்பு
எனக்கு கிடைத்தவை, உனக்கு கிடைக்கவில்லை பெண்ணே!!!

தெருப்புழுதியில் விளையாடி, அடுத்த வீட்டில் உறவாடி
நான் கொண்ட இன்பம் எல்லாம்
கணினி விளையாட்டும், தொலைக்காட்சி பெட்டியும் தந்திடுமா?


உன் விடுமுறை என் விடுமுறை அல்லாததால்
உற்றாரோடு அளவளாவும் சுகத்தை
வார இறுதிக்குள் சுருக்கிவிட்டேன்....

களைப்புடன் வீடு திரும்பும் தாயை
கன்னம் நனைய, முத்தமழையில் வரவேற்கும் உனக்கு

பள்ளிவிட்டு வருகையில் அன்பாக வரவேற்று
ஆசை முத்தம் பல தந்து, இனிமையாய் சிற்றுண்டி
அன்னை தரும் சுகத்தை தரவில்லை நான்.

அம்மா, மனைவி, மருமகள், மகள், என்ற பல அடையாளங்களில்
என் அடையாளத்தை இருத்திக் கொள்ளும் போராட்டத்தில்
நீ இழப்பதை ஈடு செய்வேனா கண்ணே?

என் அன்னை கட்டிக்கொண்ட நெருப்பை
இப்பொழுது நான் உணர்வது போல்
உன் அடையாளங்களை நீ தேடும் பொழுது
என்னைப் புரிந்து கொள்வாயா பெண்ணே?

11 comments:

ராமலக்ஷ்மி said...

கண்டிப்பாக புரிந்து கொள்வாள் அமுதா! வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் பலரின் வேதனையை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்! அதன் பின் இருக்கும் உயர்வான தியாகங்கள் ஒருநாளும் உணரப் படாது போகாது.

தமிழ் அமுதன் said...

களைப்புடன் வீடு திரும்பும் தாயை
கன்னம் நனைய, முத்தமழையில் வரவேற்கும் உனக்கு

பள்ளிவிட்டு வருகையில் அன்பாக வரவேற்று
ஆசை முத்தம் பல தந்து, இனிமையாய் சிற்றுண்டி
அன்னை தரும் சுகத்தை தரவில்லை நான்.

என்ன சொல்ல?

ஆயில்யன் said...

//உன் விடுமுறை என் விடுமுறை அல்லாததால்
உற்றாரோடு அளவளாவும் சுகத்தை
வார இறுதிக்குள் சுருக்கிவிட்டேன்....

களைப்புடன் வீடு திரும்பும் தாயை
கன்னம் நனைய, முத்தமழையில் வரவேற்கும் உனக்கு

பள்ளிவிட்டு வருகையில் அன்பாக வரவேற்று
ஆசை முத்தம் பல தந்து, இனிமையாய் சிற்றுண்டி
அன்னை தரும் சுகத்தை தரவில்லை நான்.//

:(

அமுதா said...

நன்றி ஜீவன்
நன்றி ஆயில்யன்
நன்றி ராமல்ஷ்மி மேடம். காலாண்டு விடுமுறைக்குப் பிறகு, "வீட்டுக்கு வந்தால் நீ இருப்பியா? என்ற குட்டிப் பெண்ணின் சின்ன ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாத்தால் தோன்றிய எண்ணங்கள் இவை. தங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா said...

அம்மா, மனைவி, மருமகள், மகள், என்ற பல அடையாளங்களில்
என் அடையாளத்தை இருத்திக் கொள்ளும் போராட்டத்தில்
நீ இழப்பதை ஈடு செய்வேனா கண்ணே?

உங்களின் ஒவ்வொரு வரியும் உணரமுடிகிறது.

இதே நிலையில் தானும் நானும்.

என்ன

பக்கம் பக்கமாய் கவிதையெழுத முடிகிறது. பகிர முடிகிறது.
ஆனால் மழலையின் இன்பத்தை அனுபவிக்கமுடிவதில்லை.
ம்ஹும்
இயலாமை , இயலாத தாய்மை.

அமுதா said...

/*இயலாமை... இயலாத தாய்மை*/
ஆம், அமிர்தவர்ஷினி அம்மா

ரிதன்யா said...

பல நேரங்களில் நானும் உணர்ந்திருக்கிறேன் இந்த இழப்பை,
வளரும்போது சரியாகிவிடுவாள் எனும் நினைவுடன்.

அமுதா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிதன்யா.

ஆகாய நதி said...

எனக்கும் அதே கவலை தான்... இப்போ என் செல்லக்குட்டி பொழிலனுக்கு 4 மாதம் ஆகிறது. டிசம்பரோட எனக்கு விடுமுறை முடியிது ரொம்ப கவலையா இருக்கு :(
1 வயது வந்ததும் என்ன பண்றதுனும் புரியல... அவன் தான் என் உயிர்.

அமுதா said...

வருகைக்கு நன்றி ஆகாய நதி.

/*1 வயது வந்ததும் என்ன பண்றதுனும் புரியல*/
கவலைப்படாதீங்க தானா எல்லாம் புரியும். பொழிலன் அழகான பெயர். வலைப்பூல பாருங்க எத்தனை மம்மீஸ் சமாளிச்சுட்டு இருக்கிறோம் என்று :-)

Deepa said...

Bravo! an unforgettable post.

I can't find words to thank you for sharing this with me, Amudha!
Thanks a lot.
I am sure, you are being a great mother besides a successful career woman. As I said, You, Mullai, and Amithu amma have all been my inspiration to get back to work. So, I ll very much appreciate all your advice and experiences in striking a balance. You- doubly, cos you have two bundles of joy!
:-)