என் மேகம் ???

Thursday, August 28, 2008

குழந்தைகளும் , கதைகளும் கற்பனைகளும்....

"இப்பல்லாம் பிள்ளைகளுக்கு நீ கதை சொல்லி சோறூட்டுவது இல்லை", என்பது என் கணவரின் புகார். உண்மை தான், "காக்கா வந்து பாப்பாட்ட, அக்கா அக்கா நான் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட மாட்டியானு கா கா னு
கத்துச்சாம்" என்று தொண்டை வரள பறவைகள் போலவும் மிருகங்கள் போலவும் கத்தி கதை சொல்லி சாப்பிட வைத்த நாட்கள் உண்டு. இப்பொழுதெல்லாம், நிறைய வேலைகள் இருப்பதால், "முழுங்கு ...பத்து சொல்றதுக்குள்ள முழுங்கு..." என்று கூறி ஊட்டுவது வழக்கமாகி விட்டது.இரவு தூங்க கதை சொல்லும் வழக்கம் கூட, கதையின் சுவாரசியத்தில், பிள்ளைகள் தூங்காது விழித்து இன்னொரு கதை சொல்லு என்று கூறுவதால், நின்று விட்டது. என்றாலும், சமீபத்தில் வீட்டிற்கு அழைத்து வரும் வழியில் கதை சொல்லும் வழக்கம் தொடங்கியது. அது குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி விடுவதைக் காண இனிமையாக உள்ளது.


இப்படித் தன் நேற்று நான் என் நான்கு வயது பெண்ணிடம் ஒரு கதை கூறி விட்டு, நீ ஒரு கதை சொல்லு என்றேன். எப்பொழுதும் வேகுவட்டி (விறகுவெட்டி) கதையும், காக்கா கதையும் கூறுபவள், நான் சொன்ன கதையையே மாற்றிக் கூறியது இரசிக்கத்தக்கதாக இருந்தது. மேலும், என் பெரிய பெண் சினன வயதில் கதை கேட்கும் பொழுது போடும் கண்டிஷன் போலவே, ஒரு கருத்து அவள் கூறிய கதையில் இருந்ததாகத் தோன்றியது. அவள் போட்ட கண்டிஷன் "கதையில் யாரும் செத்துப் போகக் கூடாது... கெட்டவங்க எல்லாம் நல்லவங்களாக வேண்டும்.."


நான் கூறிய கதை:

ஒரு தோட்டக்காரர் இருந்தாராம். அழகான தோட்டம் வச்சிருந்தாராம். அவருக்கு ஊருக்குப் போக வேண்டி இருந்ததாம். செடிக்கெல்லாம் தண்ணி ஊத்தனுமே, யார் கிட்ட சொல்லலாம்னு யோசிச்சாராம். தோட்டத்தில் இருந்த
குரங்குகளைக் கூப்பிட்டு, நான் ஊருக்குப் போகணும் , செடிக்கெல்லாம் தண்ணி ஊத்தி பாத்துக்குவிங்களானு கேட்டாராம். அதுங்களும் சரினு சொல்லிச்சாம். அவர் போனப்புறம், அதுங்கள்ளாம், "சின்ன வேர் இருக்கிற செடிக்கு கொஞ்ச தண்ணியும், பெரிய வேர் இருக்கிற செடிக்கு நிறைய தண்ணியும் ஊத்தணும்" அப்படீனு சொல்லிட்டு, ஒவ்வொரு செடியா பிடிங்கி பார்த்து நட்டு வச்சு தண்ணி ஊத்துச்சாம். பிடிங்கி வச்சதால் செடியெல்லாம் செத்துப் போய்டுச்சாம். ஒரு வேலையை கொடுக்கும் போது, யோசிச்சு செய்றவங்ககிட்ட கொடுக்கணும்.


அவள் கூறிய கதை:

ஒரு தோட்டக்காரர் இருந்தாராம். அழகான முயல் வளர்த்தாராம். அவருக்கு ஊருக்கு போக வேண்டி இருந்ததாம்.முயலுக்கெல்லாம் சாப்பாடு போடனுமேன்னு யோசிச்சாராம்.தோட்டத்தில் இருந்த குரங்கை கூப்பிட்டு, நான் ஊருக்குப் போகணும் , முயலைப் பார்த்துக்குவியானு கேட்டாராம். குரங்கு சரினு சொல்லிச்சாம். "முயல் என்ன சாப்பிடும்னு கேட்டுச்சாம்". (ஆகா, என்ன ஒரு முன்யோசனை) "கேரட் சாப்பிடும்". அப்புறம் குரங்கு முயல் கையை கடிச்சிடிச்சாம். (ஏண்டி கடிச்சுது?) ம்ம்.. முயல் குரங்குக்கு தெரியாம கைல மருதாணி போட்டுச்சாம், அதனால் கடிச்சுது (என்ன ஒரு கற்பனை). முயல் வந்து தோட்டக்காரர் கிட்ட குரங்கு என் கையை கடிச்சுதுனு சொல்லிச்சாம். உடனே தோட்டக்காரர் குரங்கை மரமா மாத்திட்டாராம் (இது Fairy Tales பாதிப்போ?). அப்புறம் முயலைக் கூட்டிட்டு ஊருக்குப் போய்ட்டாராம். (உன் பொறுப்பை நீ தான் ஏற்க வேண்டும் என்கிறாளோ?)

நான்கு வயது பெண் முற்றிலும் வேறாக யோசிக்கிறாள் என்பது இனிமையாக இருந்தது. கற்பனையைத் தூண்டும், இந்த கதை கூறும் வழக்கத்தை விடக் கூடாது என்று எண்ணிக் கொண்டேன்.