என் மேகம் ???

Monday, July 19, 2010

நாங்க நாய் வளத்த கதை...

"உங்க ஆத்தா கிளி வளத்தா...மாடு வளத்தா... கோழி வளத்தா...முயல் வளத்தா... ஏன் பாம்பு கூட வளத்தா (அம்மாவும் பாம்புகளும் என்று தனிப்பதிவு போடுமளவு அம்மாவுக்கும் பாம்புக்குமான தொடர்பு விசேஷமானது).... நாய் தான் வளர்க்கலை.." என்ற வசனத்துடன் தான் அம்மாவின் நாய் வளர்ப்பு துவங்கியது. எங்களை வளர்த்து திருப்தி அடையாமல் குவாட்டர்ஸில் வீடு மாறி சற்றே பெரிய வீடு வந்ததும், அம்மாவின் நாய் ஆசை தீவிரமானது. கொழுக் மொழுக் என்று சுற்றித்திரிந்த தெரு நாய்க்குட்டி ஒன்றை வீட்டிற்கு அழைத்து வந்தோம்.

மணி என்று அதற்கு பெயரிட்டோம். எங்களைப் பொறுத்தவரை நாய் என்றால் "மணி (அ) சீஸர்" என்ற பெயரிலோ ... நிறத்தைப் பொறுத்து "ப்ரளனி, வைட்டி, பிளாக்கி" என்ற பெயரிலோ அழைக்கப்பட வேண்டும். எங்கள் நாய்க்கு கறுப்பு , வெள்ளை என்று இரு நிறமும் இருந்ததால் நிறப்பெயரின் குழப்பம் தவிர்க்க மணி என்று அழைக்கப்பட்டது. மிக்க நன்றி உணர்வுடைய நாய்... காலையில் ஊர் சுற்றினால் மாலை வீடு வந்து சேர்ந்து விடும். இரண்டு நாட்கள் காணவில்லை என்று தேடினால்.... விஷம் சாப்பிட்டு இறந்து கிடந்தது.

சில நாட்கள் சும்மா இருந்த அம்மாவால் வெள்ளை வெளேரென்று "கஷ்க் மொஷ்க்" என்று தாய் மடி விட்டு பிரிந்து சில நாளே ஆன அந்த நாய்க்குட்டியின் மீது கண் வைக்காமல் இருக்க இயலவில்லை. வந்து ஒரு வாரம் கூட இல்லை... வெராந்தாவில் சுற்றிக் கொண்டிருந்த குட்டியை ஒரு ரவுடி நாய்க்கூட்டம் அள்ளிச் சென்று குதறிச் சென்று விட்டது. பைரவருக்கு ஒரு பூஜை போட்டு அம்மா நாய் வளர்க்கும் ஆசைக்கு மூட்டை கட்டினார்கள்.

விடாது கருப்பு என்பது போல் ... இப்பொழுது நாய் ஆசை என் தம்பிக்கு பிடித்தது. எங்கள் குடும்ப நண்பர் கே.சி மாமா என்று இருந்தார். அவர் வீட்டில் ஏராளமான நாய்கள். நல்ல அல்சேஷன் குட்டி ஒன்றை எங்களுக்கு அன்பளிப்பாக அளித்தார். உயர்சாதி நாயென்று அதற்கு "சீஸர்" பெயர் சூட்டப்பட்டது. அப்பொழுது நான் "வைட்டி" என்று அழகான முயல் வளர்த்து வந்தேன். நண்பனின் எதிரி, எனக்கும் எதிரி என்று சீஸ்ர் எனது எதிரி ஆனான். ஆனால், முதன் முதலில் சீசரும் வைட்டியும் சந்தித்தபொழுது இருவருமே தலை தெறிக்க வந்த பாதையில் ஓடினார்கள். மழை இரவு ஒன்றில் வைட்டி குட்டி ஈன்றிருந்த வேளையில் சீசரும் வராந்தாவில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குள் பிரச்சனை இல்லை.

ஒரு மதிய வேளையில் குழாயில் இருந்து கொட்டும் நீரைப் பார்த்து சீஸர் வெறித்தனமாகக் குரைத்த பொழுது அந்த சந்தேகம் எழுந்தது. அன்றே மிருக வைத்தியர் அழைக்கப்பட்டு அதன் நோய் உறுதி செய்யப்பட்டது. வைத்தியர் ஊசி எடுத்து வரச் சென்ற இடைவெளியில் தப்பித்து சென்றாலும், வளர்த்த தன் எசமானனுக்கு கட்டுப்பட்டு வந்தது அந்த நன்றி உள்ள ஜீவன். எதிரி என்றாலும் மனம் கரைந்தது. சீஸரைப் புதைத்து கல்லொன்று நினைவாக வைத்தோம். பைரவருக்கு மீண்டும் ஒரு பூசை; நாய் ஆசை முற்றிலும் ஒழிந்தது. தெருவில் போகும் நாய்க்கு மீந்த சோறு மட்டும் போடுவோம்.

என்றாலும்... கடைசியாக நிகழ்ந்த நிகழ்வும் சொல்லத்தான் வேண்டும். நந்தினி பிறந்திருந்த நேரம்... தாய்ப்பால் அருந்திவிட்டு தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தது அந்த அழகான வெள்ளைக்குட்டி. "இந்த நாய் வளர்ப்போம்; பால் வைப்போம்" என்று சிரட்டை எடுத்தார் என் கணவர். எல்லா கதையும் சொல்லி, "தயவு செய்து நாய் வளர்ப்பு வேண்டாம். பால் வைக்க வேண்டாம்" என்று நானும் என் அம்மாவும் கெஞ்சினாலும் ," இதெல்லாம் ஒரு காரணமா" என்று அதற்கு பாலூட்டி மகிழ்ந்தார். மறுநாள் பால் கிண்ணத்துடன் நாங்கள் குட்டியைத் தேடினோம்.... நம்புங்கள் .... எங்கள் வீட்டைச் சுற்றி மூங்கில் மரங்கள் உண்டு. அவற்றிடையே கழுத்தை நுழைத்து மூச்சு திணறி உயிர் இழந்திருந்தது அந்த அப்பாவி ஜீவன். ஒரு கணம் எனக்கு அது கழுத்தை நுழைத்து தற்கொலை செய்தாற் போல் இருந்தது... மணியின் மரணம் கூட தற்கொலையோ என்று எண்ணத்தூண்டியது இந்நிகழ்வு.


இந்த கதை எல்லாம் சொல்லி நாய் வளர்க்கக்கூடாது என்றால் "அட போம்மா.... நாங்க நல்லா நாய் வளர்ப்போம் ; வாங்கி கொடு" என்கிறார்கள் குட்டீஸ். பட்... எனக்கு அவங்களை வளர்க்கவே டைம் பத்தலை... இதில் நாய் வேறயா... எனவே மீன், லவ் பேர்ட்ஸ் என்று சமாளித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு நாய் படற பாட்டைக் கேட்டிருந்தால் நீங்களும் சொல்லுங்க. ..

4 comments:

பனித்துளி சங்கர் said...

நீங்கள் சொல்வதுபோல் இல்லை இப்பொழுது பல இடங்களில் நாய்கள்தான் குழந்தைகளை வளர்க்கிறது இதுதான் உண்மை .

அப்பறம் ////////எனக்கு அவங்களை வளர்க்கவே டைப் பத்தலை... /////

இந்த இடத்தில் டைம் என்று வரும் என்று நினைக்கிறேன் சற்று சரிபார்க்கவும் .பகிர்வுக்கு நன்றி

Ungalranga said...

உலகில் திமிங்கலமும், மனிதனும் மட்டுமே தற்கொலை செய்துகொள்ளும் ஜீவன்கள். மற்றவைகளுக்கு அப்படி நடக்க வாய்ப்புகள் இல்லை.!!

நீங்கள் பால் வைத்ததால்தான் நாய் இறந்தது என்பது தவறான நம்பிக்கை..!!
இப்போது உங்கள் வீட்டில் வளர்ப்பு ப்ராணிகள் இருக்க இறைவன் விரும்பவில்லை போலும்..!!

கொஞ்சம் மனதை சாந்தபடுத்திகொண்டு..சில மாதங்கள் கழித்து முயன்று பாருங்கள்..!!

நிச்சயம் பைரவர் உங்களுக்கு உதவுவார்!!

நன்றி..!!

Anonymous said...

//வாங்கி கொடு" என்கிறார்கள் குட்டீஸ். பட்... எனக்கு அவங்களை வளர்க்கவே டைப் பத்தலை...//

:)))))))))))))))))))))))
:)

Chitra said...

Hi Amudha, Thank you for visiting my blog.
ரொம்ப நல்லா எழுதுறீங்க..... உற்சாகமான எழுத்து நடை. follow பண்றேன். :-)
வாழ்த்துக்கள்!