என் மேகம் ???

Thursday, July 15, 2010

அவனும் அவளும்...

அம்மாவின் வலியினிடையே
அழுகையின் ஓசையுடன் தான்
இவ்வுலகைக் கண்டார்கள்
அவனும் அவளும்...


குப்புற விழுந்து
விழுந்து எழுந்து
கொஞ்சு மழலை பேசி
தளிர் நடை பயின்று
இல்லம் மகிழ வளர்ந்தனர்
அவனும் அவளும்...


அவள்...
பொம்மைகளைத் தாலாட்டி
சொப்பில் சமைத்த பொழுது
அவன்...
பைக்கும் காரும்
ஓட்டிப் பழகினான்

அவளால் அடுக்கப்பட்ட பொருட்கள்
அவனால் கலைக்கப்பட்டது
அவள் மீண்டும்
அடுக்கினாள் அழுதுகொண்டே
அவன் மீண்டும்
கலைத்தான் சிரித்துக் கொண்டே

பாடங்களும் பரீட்சைகளும்
ஒன்றானாலும்...

பழக்க வழக்கங்களும்
கட்டுப்பாடுகளும்
அவளுக்கு அறிமுகமானது

பருவத்தின் திமிரும்
சுதந்திரக் காற்றும்
அவனுக்கு அறிமுகமானது

அவள்...
கனவுகளின் வாசத்தில்
இராஜகுமாரனைத் தேடினாள்

அவன்..
கனவுகளின் உலகில்
தேவதைகளுடன் வாழ்ந்தான்

காலம் என்னும் புதிரால்
அவளுக்கு
அவன் இராஜகுமாரன் ஆனான்
அவனுக்கு
அவள் மனைவி ஆனாள்

அவள் வீடு அம்மா வீடானது
அவன் வீடு புகுந்த வீடானது
இல்லத்தின் அரசியாக
அவள் வேலைக்கு வந்தாள்

பெயர் முதற்கொண்டு
எல்லாம் மாறி அவள் வந்தாள்
கண்ணீர் கூட கண்களுக்குள் என..

இன்றும்
அவள் கனவுகளை
அடுக்கிக் கொண்டிருக்கிறாள்
அவன் ...
கலைத்துக் கொண்டிருக்கிறான்

7 comments:

தமிழ் அமுதன் said...

///அவளால் அடுக்கப்பட்ட பொருட்கள்
அவனால் கலைக்கப்பட்டது
அவள் மீண்டும்
அடுக்கினாள் அழுதுகொண்டே
அவன் மீண்டும்
கலைத்தான் சிரித்துக் கொண்டே///

************************

///இன்றும்
அவள் கனவுகளை
அடுக்கிக் கொண்டிருக்கிறாள்
அவன் ...
கலைத்துக் கொண்டிருக்கிறான்///


அசத்தல்...!

Dhiyana said...

அருமையான கவிதை அமுதா.

//இன்றும்
அவள் கனவுகளை
அடுக்கிக் கொண்டிருக்கிறாள்
அவன் ...
கலைத்துக் கொண்டிருக்கிறான்//

கடைசி பத்தி இன்னும் ஒரு முறை கவிதையைப் படிக்கத் தூண்டியது.

தமிழ் said...

/இன்றும்
அவள் கனவுகளை
அடுக்கிக் கொண்டிருக்கிறாள்
அவன் ...
கலைத்துக் கொண்டிருக்கிறான் /

நிதர்சனம்

பின்னோக்கி said...

ஒரு வாழ்க்கை வரலாறை படித்தது மாதிரி இருந்தது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//இன்றும்
அவள் கனவுகளை
அடுக்கிக் கொண்டிருக்கிறாள்
அவன் ...
கலைத்துக் கொண்டிருக்கிறான்//

excellent!!!!!!!!

கோவை குமரன் said...

//இல்லத்தின் அரசியாக
அவள் வேலைக்கு வந்தாள்//

ஆண்களே... நாம் எப்போது இதை மாற்றப் போகிறோம்....

அருமையான வரிகள்..சிந்திக்க வைத்தமைக்கு நன்றி..

Ahamed irshad said...

கவிதை நல்லாயிருக்கு...