சாலையோரம் தொடர் பதிவிற்காக தீபா அழைத்திருந்தார். நான் வாகனம் ஓட்டுவதில்லை... சாலை பயத்தால்... சாலை ஓரம் இரண்டு நிமிடம் நின்று போக்குவரத்து நிறைந்த பாதையைப் பாருங்கள்... எல்லா வாகனங்களுக்கும் ஒரு ஒற்றுமை... வேகம்... வேகம்... வேகம்... எதைப் பிடிக்க இவ்வளவு வேகம் என்று தோன்றும். நிதானமாகச் செல்பவருக்கு வசை கிடைக்கும். ஆங்காங்கே இடித்தாலும் குறையாத வேகம்... சாலையைக் கடப்பவரைப் பற்றி கவலைப்படாத வேகம்.. இது என்று நிதானம் ஆகுமோ என்ற பயம் வேகமாக மனதைக் கவ்வும்.
தீபா அழகாக சொல்லி இருப்பார் "It may not be your fault, but it's your accident. அதனால் மற்றவர்களின் தவறுக்கும் தயாராக இருங்கள்.". வரக்கூடாத திசையில் வந்து நேராக மோதி நம்மை முறைப்பார்கள். அன்று சாலையில் காரைத் திருப்ப இடது புறம் வரும் வண்டிகளையும், பக்கவாட்டிலும் பார்த்துக் கொண்டே திருப்பினால், எதிர் திசையில் சைக்கிளில் ஒருவர் மோதுவது போல் வருகிறார். எத்தனை பக்கம் பார்க்க இயலும்? கொஞ்சம் சுற்று என்றாலும் சரியான வழியில் வருவது நன்று.
மற்றோருநாள் காரைத் திருப்ப முயலும் பொழுது, கிடைத்த சிறு சந்தில் , வேறு இரு வாகனங்கள் ஓவர்டேக் செய்ய முயன்று... முன் கதவு ஜாம் ஆகிவிட்டது. உள்ளே குழந்தை இருந்ததால் நியாயம் பேசவும் நேரம் இல்லை. ஏன் இந்த வேகம்? முன்னால் செல்லும் வாகனத்தில் குழந்தை இருக்கலாம், கர்ப்பிணி இருக்கலாம், நோயுற்றவர் இருக்கலாம்... ஒரு சிறு இடி கூட அது பெரிய விஷயம் ஆகலாம். வேகம் விவேகமல்ல....
மற்றொன்று நெரிசல். நாம் நெரிசல் நேருவதைத் தவிர்க்கலாம். வரிசையாக எல்லோரும் நிற்பார்கள். சிலர் மட்டும் வேகமாக முன்னால் சென்று சாலையின் நடுவில் நின்று, எதிர்ப்பக்கம் வாகனம் வருவதைத் தடுப்பார்கள். அப்புறம் ட்ராபிக் ஜாம் தான். யாரும் நகர முடியாது. சத்யம் தியேட்டர் வாயிலில் காட்சிக்கு நேரம் இருந்ததால் சாலையோரம் வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. ஒரு பக்கம் போக்குவரத்து ஒழுங்காக சென்று கொண்டிருக்கிறது. ஒருத்தன் சாலையை மறித்துக் கொண்டு காரில நடுவே புக முயல்கிறான். மற்றவர்ளுக்கு இடையூறு செய்து அப்படி என்ன அவசரம் ? அவனை விட்டால் தான் போக்குவரத்து சீர்படும் என்பதால் அவனுக்கு நடுவில் வழிவிட வேண்டி இருந்தது. இது போல் நடு சாலையில் முந்தி சென்று நெரிசலை உண்டாக்காதீர்கள்.
இரவில் வாகனம் ஓட்டுவதில் பல சிக்கல்கள். "ஹை பீம்" போட்டுவிட்டு வரும் வாகனத்தால் முன்னால் இருக்கும் வாகனம் தெரிவதில்லை. என் கணவர் எப்பொழுதும் ஹை பீம் போட விரும்புவதில்லை. அன்று அப்படி தான் .. எதிரே வரும் வாகனங்களின் "ஹை பீம்" வெளிச்சம் மறைந்ததும் பார்த்தால் சற்றே முன்னால் இருளின் அரக்கன் போல ப்ரேக் லைட் இன்றி செல்கின்றது ஒரு லாரி. நாம் லோ பீம் போட்டால் எதிரில் வரும் வாகனத்தின் ஹை பீமில், முன்னால் இருக்கும் ஓளியற்ற வாகனங்கள் தெரிவதில்லை. முதலில் லாரிகள் ப்ரேக் லைட் ஒழுங்காகப் போட்டால் நிறைய விபத்துக்கள் தவிர்க்கப்படும். நாமும் லோ பீமில் ட்ரைவ் பண்ண முயல்வது நல்லது.
வாகனம் ஓட்டுபவரும் கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில் வேலைப்பளுவால் மனச்சோர்வடைந்த உறவினர், பைக்கில் ஒரு விநாடி நிலை குலைந்து போனார்... தலைக்கவசம் இருந்த்தால் சிறு சிராய்ப்புடன் தப்பினார். ஆனால் அந்த சில மணி நேரங்கள் அவரது குடும்பத்தினர் தவித்த தவிப்பு.... இரு சக்கர வாகனம் என்றால் தலைக்கவசம் கண்டிப்பாக அணியுங்கள். உங்கள் நன்மைக்காகவும் மற்றவர் நன்மைக்காகவும், உடல் சோர்வோ மனச்சோர்வோ உணர்ந்தால் வாகனம் ஓட்டாதீர்கள்; சிறிதளவு மது எடுத்துக் கொண்டாலும் வாகனம் ஓட்டாதீர்கள்.
எல்லோருக்கும் தேவை நிதானம்... சற்று முன்பே கிளம்பினால் வேகம் தேவைப்படாதே!!! வேகம் எமனின் கோட்டை தவிர எந்த கோட்டையையும் பிடிக்க விடாது; தேவையற்றது வேகமும், நெரிசல் உண்டாக்குவதும்.
அடிக்கடி பிரதான சாலையில் ஆம்புலன்ஸ் சைரன் அடித்தாலும், நகர இயலாத நெரிசலால் வேகமாக செல்ல இயலாததைக் காணலாம். வி.ஐ.பி கள் சாதாரணமாக செல்ல சாலையில் வழி ஏற்படுத்தப்படும் ஊரில் , துடிக்கும் உயிருக்கு செல்ல முடியாத நெரிசல் என்பது வேதனையான விஷயம்.
தங்கள் அனுபவங்களைப் பகிர நான் அழைப்பது
அமித்து அம்மா
பின்னோக்கி
அகஆழ்
8 comments:
வேகம் விவேகமல்ல
நாம் எம்பூட்டு ஜாக்கிரதையா இருந்தாலும் எதிர்ல வாறவனும் சரியா வரனும்...
சிரமம் தான்.
நல்ல இடுகை அமுதா!
உங்கள் அனுபவம் அருமை...
டிவைடர் இருக்கற ரோட்டில் சரிங்க..இல்லாத ரோட்டில் இந்த ஹை பீம் ப்ரச்சனை பயங்கரமானது.. கொஞ்ச நேரத்துக்கு நமக்கு எதிரில் இருப்பதோ சாலையோ ஒன்னுமே தெரியாம படற அவஸ்தை :(
சரியாச் சொன்னீங்க அமுதா. இந்த லோ பீம் -ஹை பீம் பிரச்னையும் கவனிக்கப்பட வேண்டியது.
நல்ல பகிர்வு அமுதா. விவரமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ளுவோம். நன்றி.
தொடரச்சொல்லி அழைத்ததால், உடனடியாக பதிவு வேலையில் அவசர அவசரமாக வேகமாக இறங்கியதால், மெதுவாக இந்த பின்னூட்டம்.
வேகம் கூடாதுன்னு சொல்லியிருக்கீங்க.
ஹை பீம் நான் தினமும் சந்திக்கும் பிரச்சினை.
மற்றபடி உங்கள் காருக்கு நிகழ்ந்தது தெரியும் ஆகையால் ...
பாவம் நீங்கள் :(
அனுபவப்பூர்வ பகிர்வுகள் என்றுமே பயனுள்ளவை.
இந்த சாலைவிதிகள் பிரச்சனைல நம்ம ஊரெல்லாம் எவ்ளோவோ பரவாயில்லங்க...இந்தியாவுலயே டிராபிக் ரூல்ஸ் ஃபாலோ பண்றதுல வொர்ஸ்ட்னா அது பூனே தாங்க.
Post a Comment