என் மேகம் ???

Tuesday, January 26, 2010

காலங்கள் மாறும்... காட்சிகள் மாறும்...

பெட் வேண்டும் என்று வீட்டில் குழந்தைகள் ஒரே கெஞ்சல். மீன் உண்டு. அடுத்த படியாக பராமரிக்க எளிது என்று லவ் பேர்ட்ஸ் வாங்கினோம். வரும் பொழுதே சின்னப் பெண்ணிடமிருந்து கேள்வி, "அது ரெண்டும் லவ் பண்ணுதா அம்மா?". அவ்வப்பொழுது இப்படி ஏதேனும் ஒரு கேள்வி வந்து கொண்டேதான் இருக்கும் விளம்பரம் கண்டாலோ, படம் பார்த்தாலோ... "நீங்க ரெண்டு பேரும் எப்ப ஃபர்ஸ்ட் பார்த்தீங்க? என்ன பேசினீங்க?". வியப்பாகத் தான் உள்ளது கேள்விகள். சிரித்துக் கொண்டே பதில்கள் சொல்ல கற்றுக்கொண்டோம். மனம் கொசுவர்த்தி சுற்றியது...

அன்று பள்ளியில் இருந்து வந்த பொழுது அடுப்படியில் புதிதாக பெண் ஒருவர் இருந்தார். புன்னகைத்தவரை யோசனையுடன் பார்த்தபடி அம்மாவை நோக்கினேன். தீவிரமாக சமையல் செய்து கொண்டிருந்தார் அம்மா; என்னைப் பார்க்க விரும்பவில்லை. எப்பொழுது ஊருக்கு வந்தாலும் சிரிப்போடு கும்மாளம் அடிக்கும் அண்ணன் , ஹாலில் சற்று சீரியசாக சிரிக்க முயன்றார். சற்று நேரத்தில் புரிந்துவிட்டது... இருவரும் ஊரை விட்டு ஓடி வந்திருந்தார்கள் என்று. எப்படி லவ் பண்ணி இருப்பார்கள் என்ற கேள்வி மனதைப் பிறாண்டியது. டி.வி நிகழ்ச்சிகள் கூட சென்சார் செய்யப்பட்ட காலகட்டம், "லவ்" என்று சொல்வதே தவறாக இருந்தது... "ஹீரோவும் ஹீரோயினும் இது பண்ணுவாங்க" "வில்லன் அந்த பொண்ணை இது பண்ணிடுவான்" என்ற "இது" அதன் இடம் பொறுத்து பொருள் கொள்ளப்பட்டது. மனதைப் பிறாண்டிய கேள்வியைக் கேட்க இயலாமலே அவர்கள் ஊருக்கு போய்விட்டார்கள்.

ஊரில் திருவிழாவுக்கு வந்த எல்லா உறவினர்களும் கூடியிருந்தோம். குழந்தையைத் தொட்டிலில் கிடத்திவிட்டு, அடுப்படியில் வேலை உள்ளதா என எட்டிப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்த அண்ணியிடம் இரகசியமாக, "அண்ணி, அண்ணனை எப்ப நீங்க முதல்ல பார்த்தீங்க?" என்றோம். அண்ணியின் முகம் பூவாக மலர "நான் காலேஜுக்கு போக பஸ் ஸ்டாண்ட்ல நிப்பேன். உங்க அண்ணனும் அங்க வருவாக... .". அண்ணி சொல்ல ஆரம்பித்த வேளையில், "அதுக தான் கூறு இல்லாமல் கேக்குதுனா நீயும் இப்படி கூறுகெட்டதனமா சொல்லிட்டு இருப்பியா?" என்ற அம்மாவின் கத்தலில் எங்கள் அவை கலைந்தது. "எப்படி லவ் வந்து இருக்கும்" என்ற கேள்வி பதில் இல்லாமலே எல்லோர் மனதிலும் தங்கி விட்டது.

”அண்ணி உங்க லவ் ஸ்டோரியை சொல்லுங்க” என்று அம்மா முன்பாக அண்ணியிடம் கேட்க எனக்கு தைரியம் வந்தது எனது திருமணத்திற்குப் பின் தான்.

இப்பொழுது எதையும் உனக்கு தேவையற்றது என்ற பதிலாலோ, பதில் சொல்லாமலோ மழுப்ப முடியாது. அவர்களுக்குப் ஏற்ற பதில் சொல்ல கற்றுக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. காலத்தின் தேவைக்கேற்ப எல்லா விஷயங்களும் மாறிக்கொண்டே தான் உள்ளன

11 comments:

pudugaithendral said...

இப்பொழுது எதையும் உனக்கு தேவையற்றது என்ற பதிலாலோ, பதில் சொல்லாமலோ மழுப்ப முடியாது. அவர்களுக்குப் ஏற்ற பதில் சொல்ல கற்றுக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது.//

ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க. இப்ப அம்மா, அப்பாவா இருப்பது கொஞ்சம் சேலங்சிங் தான். பசங்க ஐக்யூ அப்படி.

Vidhoosh said...

கேட்கும் கேள்விகளும் பதிலே சொல்ல முடியாதலவுதான் இருக்கு. பெற்றோராய் இருத்தல் பெரிய சவால்தான். சமாளிக்க(த்தான்) வேண்டும்..:)
வித்யா

Rithu`s Dad said...

:) இப்பொழுது எல்லாம் பசங்களுக்கு பதில் சொல்லவே நாம தனியா படிக்கனும்..!!

படங்கள், டிவி எல்லாம் பார்த்து பசங்க, பெற்றோர்களிடம் நீங்க லவ் பன்னுனீங்களா? முதலில் எங்கே பார்த்தீர்கள்?? என கேள்வி கேட்டதாக நண்பர் ஒருவர் கூறியது எனக்கு மனதில் வருகிறது.. ( அவர்க்கு அரேன்ஞ்டு கல்யானம்.. !!)

ராமலக்ஷ்மி said...

காட்டிய பழைய காட்சிகள் ரசனை:)!

//இப்பொழுது எதையும் உனக்கு தேவையற்றது என்ற பதிலாலோ, பதில் சொல்லாமலோ மழுப்ப முடியாது. //

உண்மை அமுதா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) அமுதா நல்லா கேக்கறாங்க குட்டீஸ்..
எஙக் வீட்டுல நாங்களே எஙக் கதைய சொல்லிச் சொல்லி..இப்பகுட்டீஸ் போதும் போதும்னு ஓடறாங்க :))

ஹுஸைனம்மா said...

//அவர்களுக்குப் ஏற்ற பதில் சொல்ல கற்றுக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. //

ஆமாம்.

என் சின்ன மகன் இன்னும் நாங்களிருவரும் சிறுவயது முதல் ஒரே பள்ளியில் படித்து வந்ததாகவே நினைத்துக் கொண்டிருக்கிறான்!!

நட்புடன் ஜமால் said...

’இது’ - இன்னும் இருக்கு.

--------------

பதில் நிறைய சொல்லனும் போல

பொருமையை கற்றுகொள்ளனும்.

Deepa said...

//இப்பொழுது எதையும் உனக்கு தேவையற்றது என்ற பதிலாலோ, பதில் சொல்லாமலோ மழுப்ப முடியாது. அவர்களுக்குப் ஏற்ற பதில் சொல்ல கற்றுக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. //
உண்மை தான். அது சரி, நீங்க கேட்ட அந்த லவ் ஸ்டோரியை எங்களுக்கும் சொன்னா என்னவாம்?
:-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்பொழுது எதையும் உனக்கு தேவையற்றது என்ற பதிலாலோ, பதில் சொல்லாமலோ மழுப்ப முடியாது. அவர்களுக்குப் ஏற்ற பதில் சொல்ல கற்றுக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது.//

சரியா சொன்னீங்க அமுதா.

எப்படியெப்படியெல்லாம் கேள்வி கேக்குதுங்க பயபுள்ளைங்க ;)))) நாம “இது” கூட தெரியாம இருந்துருக்கோம் :)))

பின்னோக்கி said...

என்னங்க டபக்குன்னு முடிச்சிட்டீங்களே ? :).

Dhiyana said...

உண்மை அமுதா