என் மேகம் ???

Friday, January 8, 2010

டிசிப்ளின்

விநாயகம் மாமாவை உங்களுக்கு தெரியுமா? வெள்ளை வெளேரென்ற வேட்டியும் மடிப்பு கலையாத சட்டையுமாகத் தான் இருப்பார். எப்பொழுதும் "டிசிப்ளின்" தான் அவர் முதல் கவனம். எங்கள் வீட்டில் அவர்தான் மெத்தப் படித்தவர்; பட்டதாரி. எல்லோருக்கும் அவர் மீது பயம் கலந்த மரியாதை உண்டு. அதனால் பெரியவர்கள் குடும்பப்பிரச்னை என்றால் அவரிடம்தான் தீர்வு கேட்பார்கள்; குழந்தைகள் அவர் முன் வர பயப்படுவார்கள்.

வால்தனங்கள் பண்ணும் வாலுகள் எல்லாம் வாலைச்சுருட்டினாலும், வாயடிக்கும் என்னால் வாயை அடைக்க முடியவில்லை. ஒரு நாள், அவரிடம் பேசினால் என்ன தான் ஆகும் என்ற ஆவலில், "வாங்க மாமா!!! எப்படி இருக்கீங்க?" என்று நின்று பேசினேன். வால்களின் வாய் அடைத்தது; அம்மாக்களின் வாய் திறந்தது. மாமா அழகாக சிரித்துக்கொண்டே "அடடே!!!" என்றார். "நல்லா படிக்கணும், டிசிப்ளினா இருக்கணும்" என்றார். அவ்வளவு தான் ...உள்ளே ஓடிவிட்டேன் நான்.

மாமாவின் மீது உள்ள பயத்தாலே அவர் வீட்டிற்கு நாங்கள் செல்வது இல்லை. அப்படியே சென்றாலும் மாமா இல்லாத பொழுது சென்று வந்துவிடுவோம். இல்லை என்றால் "டிசிப்ளின்" பற்றி லெக்சர் கேட்க வேண்டுமோ என்ற பயம் தான். எல்லாவற்றையும் மீறி ஒரு நாள் மாமா வீட்டில் தங்க வேண்டி வந்தது. மாமா கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் ரிடையர் ஆன மாமா கண்கொத்தி பாம்பாக எங்களை கவனிப்பதில் இருந்து தப்ப முடியாது என்று புரிந்தது.

மெல்ல பல் துலக்க பிரஷை எடுத்து தோட்டப்பக்கம் நகர்ந்தோம். "அடடே!!! பிரஷைக் கழுவாமல் பல் விளக்கலாமா?" என்ற கேள்வியுடன் பல்துலக்குவது பற்றி பாடமொன்று தொடங்கியது. வாயெல்லாம் பல்லாக நின்றனர் எங்கள் அம்மாக்கள். அடுத்து சரியாக காலைச் சாப்பாட்டிற்கு வந்து விட்டார். இட்லியை எப்படி பிட்டு சட்னியில் பிரட்டி சாப்பிட வேண்டும் என்று விளக்கம் ஆரம்பித்தது; மவுந்து நின்றனர் எங்கள் தாயார்கள். "டிபன் டிசிப்ளின்" கற்றுக்கொண்டு மாடிக்கு ஓட்டம் எடுத்தோம்.

மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தவர்களை "கொய்யாப்பழம்" என்ற குரல் தான் காந்தமாக ஈர்த்தது. உருண்டை உருண்டையாக கூடையில் கொழுத்துக் கிடந்த கொய்யாவை தின்ன ஓடி வந்தவர்களை முந்திக்கொண்டு ஓடிவந்து திரும்பிப் பார்த்தால் ... யாரையும் காணோம். "அடடே!!!" மாமா திண்ணையில் உட்கார்ந்து புகை விட்டுக் கொண்டிருந்தார். என்றாலும் எனக்கு கொய்யா ஆசை விடவில்லை. அத்தையிடம் வாங்கி வாயில் வைக்கப் போனேன். "அடடே!!" "பழத்த கழுவாமல் சாப்பிடலாமா? இப்படி வச்சிட்டு போய் கையைக் கழுவிட்டு வா", என்றார்.

வந்த பொழுது அவரும் கையைக் கழுவிவிட்டு, கத்தியால் அழகாக கொய்யாவைத் துண்டு துண்டாக நறுக்கி கையில் கொடுத்தார். நீங்கள் நினைப்பது போல , கை கழுவது பற்றியும், பழங்களைக் கழுவித் தின்பது பற்றியும் பேசினார். "டிசிப்ளின்" வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்று கூறியபடி சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தார். நான் அவரைப் பார்த்தேன். "போய் விளையாடு" என்றார். "இவ்வளவு நல்ல பழக்கம் பத்தி சொல்ற நீங்க ஏன் சிகரெட் பிடிக்கறீங்க" என்றேன். மாமா என்னை யோசனையுடன் பார்த்தவாறு சிகரெட்டைத் தூக்கி எறிந்தார். நான் ஓடி மறைந்தேன். அதன் பின் ஊருக்கு கிளம்பும் வரை நான் அவரைப் பார்க்கவில்லை. கேட்டு விட்ட கேள்வியின் பயம் தான்...

அவர் தூக்கி எறிந்த சிகரெட் தான் அவர் புகைத்த கடைசி சிகரெட் என்று எனக்கு வெகு நாட்களுக்கு தெரியாது. பின் ஒரு முறை கதிர்வேல் மாமா "விநாயகம் மாமா இப்படி சிகரெட் விட்ட கத கேட்டு தான் நானும் விட்டுட்டேன்" என்று சொன்ன பொழுது சந்தோஷமாகத் தான் இருந்தது.

15 comments:

KarthigaVasudevan said...

Nice ...:)

நட்புடன் ஜமால் said...

ஏதோ ட்விஸ்ட் எதிர்ப்பார்த்து கொண்டே தான் படித்தேன்

கடைசியில் மிக அருமையானதாக இருந்தது.

பழகு பிறகு போதி ...

Deepa said...

”பாலு ங்கறது உங்க பேரு.. தேவர்ங்கறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா.... பட்டமா.. பட்டமா...” ன்னு கேட்டச் சின்னப் பையன் மாதிரி நீங்களும் விநாயகம் மாமாவை ஒரு போடு போட்டிருக்கீங்க!
சபாஷ்!

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு.. (நிறய பேரு காலங்கார்த்தாலே வந்துருக்காங்க,, நாந்தான் தூங்கிட்டேன்)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

தீபாவின் பின்னூட்டம் :))

பின்னோக்கி said...

பரவாயில்லையே ஒருத்தரை திருத்திட்டீங்க.

என் மாமாவைப் பற்றி எழுதவேண்டும்.

sathishsangkavi.blogspot.com said...

நல்ல நடையில் எழுதி இருக்கிறீர்கள்... கடைசியில் அருமையாக இருக்கிறது...

R.Gopi said...

சூப்பரா அந்த மாமாவை மடக்கி விட்டீர்கள்....

அதுவே அவர் பிடித்த கடைசி சிகரெட் என்பதும், பிறகு அவர் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டார் என்று சொன்னதும் பலே சொல்ல வைத்தது....

ஆயில்யன் said...

//புனைவு//

வாழ்த்துக்களோடு....!

அமிர்தவர்ஷினி அம்மா said...

சூப்பரா எழுதியிருக்கீங்க அமுதா

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
//புனைவு//

வாழ்த்துக்களோடு....!

வழிமொழிகிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல டிசிப்ளின். 
கை கழுவுவதற்காகவென்றே உலகில் ஒரு தினம் கடைபிடிக்கப்படுகிறது

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருந்தது அமுதா!