என் மேகம் ???

Monday, October 26, 2009

வேலை வேலை வேலை...

வேலை வேலை வேலை...என்றுதான் சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. பத்திரிக்கை கூட படிக்க நேரம் கிடைக்காது வீடு, அலுவல் என்று ஓடும் வாழ்க்கை... ஓடுவது பெரிதல்ல.. வீடு அதிராமல் ஓட வேண்டும்... சோதனையாக வீட்டில் இருவருக்கும் ஒரே நேரத்தில் வேலைப்பளு. இரண்டு நாட்களுக்குள் குழந்தைகள் "சீக்கிரம் வாம்மா" என்று கூற ஆரம்பித்தனர். கவனித்துக்கொள்ள பாட்டியும் விளையாட சகோதரிகள் இருந்தாலும் அம்மா அப்பாவின் அருகாமையைத் தேடும் குழந்தைகள்...

தொழில் நுட்பத்தின் உதவியால் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை வரப்பிரசாதமாக இருந்தது. பிறர் உதவி தேவைப்படாத ஒரு நாளில் அடித்துப் பிடித்து ஆறரைக்கு வீட்டில் பெருமையுடன் நுழைந்தால் "இருட்டின பிறகு வராதே!!! வெளிச்சத்தில் வாம்மா" என்று கெஞ்சுவாள் சின்னப்பெண். மீண்டும் போராடி மறுநாள் ஐந்தரைக்கு நுழைந்தால் "நான் ஸ்கூலில் இருந்து வரும்பொழுது நீ இல்லை..." என்று இன்னும் எதிர்ப்பார்க்கும் குழந்தையின் ஏக்கத்தில் மனம் நெகிழ்ந்து போகும்.

என்றாலும் இந்த "வீட்டிலிருந்து வேலை" எனக்கு வசதி தான். அலுவலகத்தில் தாமதமாக உட்கார்ந்து "இன்னும் வீட்டிற்கு கிளம்பலையே!!" என்ற கவலை கிடையாது. அம்மா இருக்கும் மகிழ்ச்சியில் தம் வேலைகளிலும் விளையாட்டுக்களிலும் மூழ்கி விடுவர் குழந்தைகள். அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து ஒரு சின்ன முத்தத்தில் மகிழ்ந்து போகும் குழந்தைகளின் "இதெல்லாம் செய்யணும்னு உனக்கு எப்படிம்மா தெரியும்" என்று வேலை செய்பவளைப் பார்த்து கேட்கும் கேள்விக்கு மனம் சிரிக்கும். அமுதூட்டி படுக்கைக்கு அனுப்பும் வேளையில் "கதை சொல்லி தூங்க வைம்மா" என்பார்கள். "எனக்கு நிறைய வேலை இருக்குடா கண்ணா" என்றால், "ஒரே ஒரு கதை சொல்லிட்டு வந்து வேலை பண்ணும்மா" என்பார்கள்.

மனம் நான் அம்மாவிடம் அனுபவித்த சுகத்தை அசை போடும். கல்லூரி விட்டு வரும்பொழுது அம்மா இருந்து பரிமாற வேண்டும். இல்லை என்றால் உணவு உண்ணமாட்டேன் என்று அம்மா நான் வந்த பின் எனக்கு பரிமாறிவிட்டு வெளியே செல்வார்கள். அப்பொழுது அம்மாவிடம் பெறுவது எனது உரிமையாகத் தோன்றியது.

இன்று குழந்தைகள் தான் எவ்வளவு புரிந்து நடந்து கொள்கிறார்கள். விடுமுறையில் தான் என் நேரத்தைக் கேட்கிறார்கள். ""ஒரே ஒரு கதைம்மா..." என்று கொஞ்சல். மனதுள் மின்னஞ்சல் ஒன்றின் வரிகள் ஓடின "இளமையில் சக்தியும் நேரமும் இருக்கிறது, பணம் இல்லை... பின்பு சக்தியும் பணமும் இருக்கிறது நேரமில்லை... முதுமையில் நேரமும், பணமும் இருக்கிறது சக்தி இல்லை..."

"ஒண்ணு என்னடா ரெண்டு சொல்கிறேன்..." என்று கதை கூற ஆரம்பித்தேன். என் கற்பனை இறக்கை கட்டிக் கொண்டது. வேலை காத்திருக்கட்டும்.. இன்னும் கொஞ்சம் தூக்கம் தொலையலாம்... ஆனால் என் கண்மணிகளுடன் நேரம் தொலையலாமா? பல மணி நேரம் வேலைக்கு இருக்கும் நேரம், சில மணித்துளிகளிலேயே மகிழ்ந்துவிடும் குழந்தைகளுக்கு இல்லாமல் போகுமா? முதுமையில் புத்தகம் வாசிக்கும் சக்தியாவது இருக்க வேண்டும் என்று எண்ணியபடி கற்பனை உலகில் அவர்களுடன் சஞ்சரித்தேன். உதட்டில் புன்னகை தவழ உறங்கும் மொட்டுக்களை காணும் நிம்மதிக்கு உலகில் எதுவும் ஈடு கிடையாது.

12 comments:

ஆயில்யன் said...

////இதெல்லாம் செய்யணும்னு உனக்கு எப்படிம்மா தெரியும்" என்று வேலை செய்பவளைப் பார்த்து கேட்கும் கேள்விக்கு மனம் சிரிக்கும். //

ரசித்தேன்!

ஆயில்யன் said...

டோட்டலாவே கலக்கல் போஸ்ட்டு பாஸ்! :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமையான பதிவு அமுதா!

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.

எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் குழந்தைங்க முன்னாடி அதெல்லாம் ஒன்னுமே இல்லதான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமையான பதிவு அமுதா!

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.

எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் குழந்தைங்க முன்னாடி அதெல்லாம் ஒன்னுமே இல்லதான்.

pudugaithendral said...

பாஸ் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)ம்

"உழவன்" "Uzhavan" said...

ஆபிசயே கட்டிக்கிட்டு அழுகிறவர்கள் கவனிக்க.

ஹேமா said...

இதெல்லாம் செய்யணும் அமுதா.
பணம் ஒருபோதும் தராது பாசத்தை.

ISR Selvakumar said...

குழந்தைகள் நம்மை சார்ந்து இருந்தாலும், நாம் குழந்தைகள் உலகில் இருக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகின்றது.

இனி இனிமையான நேரங்கள் (வேலைகளுக்கு நடுவில் தொலைந்து போகாமல்) உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வாய்க்கட்டும்.

Sanjai Gandhi said...

குட் குட்

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

Rithu`s Dad said...

அருமை.. குழந்தை வளர்க்கும் பெற்றோர்கள் கவனித்து நடக்க வேண்டிய கருத்துக்கள்.. !!