என்னைக் கவர்ந்தவர்கள் பற்றிக் கூற அழைத்திருந்தார்
ஜீவன். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் யாரேனும் நமது கவனத்தைக் கவர்ந்து கொண்டே தான் இருப்பார்கள். என் குட்டிப் பெண்ணின் வகுப்பில் முப்பதுக்கும் மேற்பட்டோர் இருந்தாலும் அவளாகவே அவளுக்குப் பிடித்தவர்கள் என பிடித்துக் கொள்கிறாள். எத்தனை முரண்கள் இருந்தாலும் முடிவில் ஈர்க்கும் இந்த பிடித்தம் எப்படி இப்பொழுதே ஏற்படுகிறது என்று நான் வியப்பேன்.
எத்தனை கோபம் கொண்டாலும் அன்பான வார்த்தைகளால் சகலமும் மறந்து வாழ்க்கையோடு ஒன்றி பல விஷயங்கள் கற்றுத் தரும் உறவுகள் தாய், தந்தை, குழந்தைகள், உடன் பிறந்த/பிறவா சகோதரர்கள். திருமணம் என்ற உறவின் மூலம் மட்டுமே அறிமுகமானாலும் வற்றாத அன்பைப் பொழியும் உறவுகள் கணவர், மாமா, அத்தை , வசந்தா அண்ணி. கூட்டுப் புழுவாக இருந்து சிறகை விரிக்கும் நேரத்தில் அறிமுகமாகி நட்பாகி சிறகுகளின் பலத்தை புரிய வைத்த தோழி பாரதி என்று எல்லோருமே என்னைக் கவர்ந்தவர்கள்.
இந்த வட்டங்கள் இன்றி பலரின் மனதைக் கவருபவர்கள் உண்டு. காந்திஜியின் உண்மை, பாரதியின் வீரம், அப்துல் கலாமின் முயற்சி, ஒளவையின் புலமை, பல இன்னல்களைத் தாண்டி உறுதியோடு அரசியலில் இறங்கும் பெண்மணிகளின் உறுதி என்று உள்ளம் கவர்ந்தவர்கள் பலர் உண்டு.
நாம் வாழத் தேவை தன்னம்பிக்கை, பிற உயிர் வாழ அன்பு என்பது உறுதி. அப்படி என்னைக் கவர்ந்தவர்கள்:
அன்னை தெரசா
அன்னை செய்த சேவைகளை மறக்க முடியுமா?
தன்னலம் கருதாது பிறர் நலனுக்கு வாழ்ந்த
தாய் உள்ளத்தை நினைக்காமல் இருக்க முடியுமா?
நம்பிக்கை இழந்தோரின் நம்பிக்கையாக
வாழ்வை வெறுத்தோரின் தேவதையாக
எல்லோருக்கும் தாயாகத்
தாய்மையுடன்
வாழ்ந்த கருணை உள்ளத்தைப்
பணிவுடன் வணங்குகிறேன்!!
அன்னை தெரசாவின் பொன்மொழிகள்நாம் எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை விட, செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம்.நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட, கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம்அமைதியின் பலன் பிரார்த்தனை
பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை
நம்பிக்கையின் பலன் அன்பு
அன்பின் பலன் சேவை
சேவையின் பலன் அமைதிஹெலன் கெல்லர் & ஆன் சல்லிவன் 
எனக்கு இவரைப் பற்றி என் பெண்ணின் பாடம் வழியாகத்தான் தெரியும். அவரைப் பற்றி கேட்ட பொழுது மெய் சிலிர்த்தது. எல்லாம் ஒழுங்காக இருந்தும் ஏதேனும் நாம் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறோம். சிறு வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர் ஹெலன் கெல்லர்.
சற்றே எண்ணிப்பாருங்கள் நீங்கள் எதையும் பார்க்கவோ, கேட்கவோ பேசவோ முடியாது. உணர்வுகள் மட்டுமே துணை. உங்களுக்கு "தண்ணீர்" என்று அப்படி புரிய வைக்கலாம்? நீங்கள் சொல்வதை மூன்றாமவ்ர் புரிந்து கொண்டார் என்று எப்படி அறிவீர்கள்? இந்நிலையில் இவருக்கு ஆசிரியராக வந்தவர் ஆன் சல்லிவன். ஹெலன் கையில் பொம்மை கொடுத்து அவள் கைகளில் "பொம்மை" என்று எழுதினார், கேக் கொடுத்து "கேக்" என்று எண்ணினார். எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை ஹெலன். அவர் கற்றுக்கொள்ள மறுத்தார். கற்றுத்தருகிறார்கள் என்று புரிந்தால் தானே? ஆனால் ஆன் நம்பிக்கை இழக்கவில்லை, கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் தண்ணீரை ஹெலன் மீது தெளித்து "தண்ணீர்" என்று எழுதினார் ஆன். அப்பொழுது தான் ஹெலனுக்கு தான் கற்பிக்கப்படுகிறோம் என்று புரிந்தது. "தண்ணீர்" என்று எழுத கற்றுக்கொண்டார். ஒவ்வொன்றையும் எப்படி எழுத வேண்டும் என்று வினவி கற்றுக் கொண்டார். சற்று நேரத்தில் 30 வார்த்தைகள் கற்றுக் கொண்டார். அதன் பிறகு விரல்களின் மூலமும், பேசுபவரின் உதட்டசைவுகளை விரல்களால் உணர்வதன் மூலமும், பிரெய்ல் மூலமும் தகவல் பரிமாறக் கற்றுக்கொண்டார்.
ஹெலன் கெல்லர் ‘நம்பிக்கை’ மட்டும் கொண்டு தடைக்கற்களை படிக்கற்களாக்கி சிறந்த எழுத்தாளராகவும் சமூக ஆர்வலராகவும் உருவானார். இருவரின் நம்பிக்கையயும் வியக்காமல் இருக்க முடியவில்லை. எதுவும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை தானே வாழ்வின் ஆதாரம்?
ஹெலன் கெல்லரின் பொன் மொழிகள்:மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கைஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். நம்மால் அவர்கள் அளவு செய்ய முடியாவிட்டாலும் முடிந்தவரை அன்பு செலுத்துவோம். நம்பிக்கை என்பது நமக்கு மட்டும் இன்றி தடுமாறும் மற்றவருக்கும் அளித்து வாழ்வை இனிமை ஆக்கிடுவோம்.உள்ளத்து உணர்வுகளைப் பகிர உதவியதற்கு நன்றி ஜீவன்.
இப்பதிவை படிக்கும் எவரும் உங்களைக் கவர்ந்தவர்களை உங்கள் பதிவில் கூறுங்களேன்!!!