என் மேகம் ???

Friday, January 8, 2010

டிசிப்ளின்

விநாயகம் மாமாவை உங்களுக்கு தெரியுமா? வெள்ளை வெளேரென்ற வேட்டியும் மடிப்பு கலையாத சட்டையுமாகத் தான் இருப்பார். எப்பொழுதும் "டிசிப்ளின்" தான் அவர் முதல் கவனம். எங்கள் வீட்டில் அவர்தான் மெத்தப் படித்தவர்; பட்டதாரி. எல்லோருக்கும் அவர் மீது பயம் கலந்த மரியாதை உண்டு. அதனால் பெரியவர்கள் குடும்பப்பிரச்னை என்றால் அவரிடம்தான் தீர்வு கேட்பார்கள்; குழந்தைகள் அவர் முன் வர பயப்படுவார்கள்.

வால்தனங்கள் பண்ணும் வாலுகள் எல்லாம் வாலைச்சுருட்டினாலும், வாயடிக்கும் என்னால் வாயை அடைக்க முடியவில்லை. ஒரு நாள், அவரிடம் பேசினால் என்ன தான் ஆகும் என்ற ஆவலில், "வாங்க மாமா!!! எப்படி இருக்கீங்க?" என்று நின்று பேசினேன். வால்களின் வாய் அடைத்தது; அம்மாக்களின் வாய் திறந்தது. மாமா அழகாக சிரித்துக்கொண்டே "அடடே!!!" என்றார். "நல்லா படிக்கணும், டிசிப்ளினா இருக்கணும்" என்றார். அவ்வளவு தான் ...உள்ளே ஓடிவிட்டேன் நான்.

மாமாவின் மீது உள்ள பயத்தாலே அவர் வீட்டிற்கு நாங்கள் செல்வது இல்லை. அப்படியே சென்றாலும் மாமா இல்லாத பொழுது சென்று வந்துவிடுவோம். இல்லை என்றால் "டிசிப்ளின்" பற்றி லெக்சர் கேட்க வேண்டுமோ என்ற பயம் தான். எல்லாவற்றையும் மீறி ஒரு நாள் மாமா வீட்டில் தங்க வேண்டி வந்தது. மாமா கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் ரிடையர் ஆன மாமா கண்கொத்தி பாம்பாக எங்களை கவனிப்பதில் இருந்து தப்ப முடியாது என்று புரிந்தது.

மெல்ல பல் துலக்க பிரஷை எடுத்து தோட்டப்பக்கம் நகர்ந்தோம். "அடடே!!! பிரஷைக் கழுவாமல் பல் விளக்கலாமா?" என்ற கேள்வியுடன் பல்துலக்குவது பற்றி பாடமொன்று தொடங்கியது. வாயெல்லாம் பல்லாக நின்றனர் எங்கள் அம்மாக்கள். அடுத்து சரியாக காலைச் சாப்பாட்டிற்கு வந்து விட்டார். இட்லியை எப்படி பிட்டு சட்னியில் பிரட்டி சாப்பிட வேண்டும் என்று விளக்கம் ஆரம்பித்தது; மவுந்து நின்றனர் எங்கள் தாயார்கள். "டிபன் டிசிப்ளின்" கற்றுக்கொண்டு மாடிக்கு ஓட்டம் எடுத்தோம்.

மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தவர்களை "கொய்யாப்பழம்" என்ற குரல் தான் காந்தமாக ஈர்த்தது. உருண்டை உருண்டையாக கூடையில் கொழுத்துக் கிடந்த கொய்யாவை தின்ன ஓடி வந்தவர்களை முந்திக்கொண்டு ஓடிவந்து திரும்பிப் பார்த்தால் ... யாரையும் காணோம். "அடடே!!!" மாமா திண்ணையில் உட்கார்ந்து புகை விட்டுக் கொண்டிருந்தார். என்றாலும் எனக்கு கொய்யா ஆசை விடவில்லை. அத்தையிடம் வாங்கி வாயில் வைக்கப் போனேன். "அடடே!!" "பழத்த கழுவாமல் சாப்பிடலாமா? இப்படி வச்சிட்டு போய் கையைக் கழுவிட்டு வா", என்றார்.

வந்த பொழுது அவரும் கையைக் கழுவிவிட்டு, கத்தியால் அழகாக கொய்யாவைத் துண்டு துண்டாக நறுக்கி கையில் கொடுத்தார். நீங்கள் நினைப்பது போல , கை கழுவது பற்றியும், பழங்களைக் கழுவித் தின்பது பற்றியும் பேசினார். "டிசிப்ளின்" வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்று கூறியபடி சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தார். நான் அவரைப் பார்த்தேன். "போய் விளையாடு" என்றார். "இவ்வளவு நல்ல பழக்கம் பத்தி சொல்ற நீங்க ஏன் சிகரெட் பிடிக்கறீங்க" என்றேன். மாமா என்னை யோசனையுடன் பார்த்தவாறு சிகரெட்டைத் தூக்கி எறிந்தார். நான் ஓடி மறைந்தேன். அதன் பின் ஊருக்கு கிளம்பும் வரை நான் அவரைப் பார்க்கவில்லை. கேட்டு விட்ட கேள்வியின் பயம் தான்...

அவர் தூக்கி எறிந்த சிகரெட் தான் அவர் புகைத்த கடைசி சிகரெட் என்று எனக்கு வெகு நாட்களுக்கு தெரியாது. பின் ஒரு முறை கதிர்வேல் மாமா "விநாயகம் மாமா இப்படி சிகரெட் விட்ட கத கேட்டு தான் நானும் விட்டுட்டேன்" என்று சொன்ன பொழுது சந்தோஷமாகத் தான் இருந்தது.

Wednesday, January 6, 2010

என் சுவாசக் காற்றே!!!

ரொம்ப நாள் ஆச்சு குட்டீஸ் பத்தி எழுதி. ம்... நான் படிக்கும்பொழுது பண்ணலைனாலும் என் பொண்ணுக்கு செஞ்சத பதிவு செய்ய தான் இந்த பதிவு.

"அம்மா ஹாலிடேஸ்க்கு human body வர்க்கிங் மாடல் பண்ணனும்" - நந்தினி
"respiratory system பண்ணலாமா?"
"அது சிம்பிள் வேண்டாம்"
"circulatory, skeletal, nervous, digestive, excretory" என்று எல்லாவற்றுக்கும் மற்றவர்கள் பண்ணுவதாக சாக்கு. இப்ப நான் என்னத்த தேட? மிஞ்சியது ஹார்மோன் & இம்யூன் தான். சின்னதாக உருண்டையாக இருக்கும் இரும்புமணிகளைப் போட்டு, அப்படியே காந்தம் வச்சு நகர்த்தி, வைரஸ் வந்தால் வெள்ளை அணுக்கள் இப்படி தான் போராடும்னு செய்யலாமா என்றெல்லாம் யோசிச்சு.... அப்புறம் செய்து பார்க்க காந்தம் கிடைக்காததால் விடுமுறை முடியும் தருணத்தில் , "ஒண்ணு சுவாசக்குழாய் இல்லாவிட்டால் ஒண்ணுமில்லை" என்றவுடன் வேறுவழியின்றி அவளும் சரி என்றாள். சிம்பிள்தான் என்றாலும் அவ்வளவு சிம்பிளாக இல்லை இந்த வடிவம் வருவதற்கு.

கொஞ்சம் நெட்டின் உதவியுடனும் கொஞ்சம் சொந்த யோசிப்புடனும் இதோ மாடல்:



ஒருT பைப்பின் இருபுறமும் பலூன், நடுவில் சின்ன இதயம். ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவின் அடியை வெட்டி இன்னொரு பலூனின் பகுதி diaphragm ஆனது. டப்பாவின் மூடிப்பகுதியில் இன்னொரு பலூனின் பகுதி கழுத்தாக இணைக்கப்பட்டு, சின்ன ஓட்டை வழியாக சின்ன ப்ளாஸ்டிக் டப்பா நுழைக்கப்பட்டது தலைக்காக. தலையின் வரைவு மற்றும் அலங்காரம் நந்தினி.. பலூன் உபயம் யாழினி... ஆக்கமும் இயக்கமும் நாங்கள் என்று இது ஒரு கூட்டு முயற்சி...

இப்பொழுது குழாய் வழியாக காற்றை செலுத்தினால் ... மூச்சு உள்ளிழுத்தல் (Inhale)
சுவாசப்பை விரிவடைகிறது...




இப்பொழுது குழாய் வழியாக காற்றை வெளி இழுத்தால் ... மூச்சு வெளியேற்றல் (Exhale)
சுவாசப்பை சுருங்குகிறது...


எப்பூடி?

Monday, January 4, 2010

வந்தாச்சு புதுவருஷம் புத்தகங்களுடன்...

ஒரு வழியாக 2009க்கு விடை கொடுத்து அனுப்பிட்டு 2010க்குள் நுழைந்தாயிற்று. புத்தகலிஸ்டை கடைசி நேரம் வரை ஒத்தி போட்டதில் அப்படி ஒண்ணு இல்லாமலே தான் புத்தக கண்காட்சிக்கு கிளம்பினோம். (கண்டிப்பா புத்தாண்டு கொண்டாட வேண்டுமென்று குட்டிப்பெண்கள் மாலை முதல் போட்டிருந்த சின்ன ஆடல்/பாடல் நிகழ்ச்சிகளிலும், அவர்கள் மாமாவோடு சேர்ந்து உறியடியை கொஞ்சம் மாற்றி பொம்மை தொங்கவிட்டு கண்கள் கட்டி பிடிக்க வைத்த விளையாட்டு, பின் டம்ப்ஷராட்ஸ் விளையாட்டு என்று பன்னிரெண்டு மணிக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லும் வரை மழலைகளோடு நேரம் ஓடிவிட்டது)

குட்டீஸ் எல்லாம் பாட்டி வீட்டில் விட்டு விட்டு (இல்லைனா ஒரு ஸ்டாலுக்கு மேல பார்க்க முடியாது... நிறைய புக்ஸ் வேணும் என்ற கண்டிஷனை ஏற்றுக்கொண்டோம்), கரெக்டா ஒரு மணிக்கு கண்காட்சி இடத்துக்கு நுழைஞ்சோம். கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல வயிற்றுக்கு தந்துவிட்டு தெம்போடு கண்காட்சிக்குள்ளே நுழைஞ்சோம். வாசல்ல கிடைச்ச பதிப்பகம் பற்றிய கையேடும் , என்.ஹச்.எம்-மின் வரைபடமும் ஸ்டால்களைக் கண்டுபிடிக்க உதவியது. எதுவுமே முதலில் குழந்தைகளுக்கு என்றாகிவிட்ட வாழ்க்கையில் புத்தகங்களும் அவர்களுக்கு முதலில் என்று ப்ராடிஜி ஸ்டாலுக்குள் நுழைந்தோம். வாசிப்பில் நந்தினிக்கு ஆங்கிலத்தில் இருக்கும் ஈடுபாடு தமிழில் வரவழைக்க எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. இந்த் முறை ப்ராடிஜி உதவி செய்தது. "ஹெய்டி" (சுட்டி டி.வியால் அவளுக்கு மிக விருப்பம்) மற்றும் "தும்பிக்கை எப்படி வந்தது" புத்தகங்கள் அவளது கவனத்தைக் கவர்ந்து வெற்றிகரமாகத் தமிழில் கதை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி உள்ளன. இன்னும் சில புத்தகங்கள் தேர்வு செய்து அடுத்து நான் ஆவலுடன் சென்றது...

"வம்சி பதிப்பகத்திற்கு"... நம் எழுத்துக்களையும் நமக்குத்தெரிந்தவர்களின் எழுத்துக்களையும் பதிப்பில் காண்பது மகிழ்ச்சி தானே!!! மாதவராஜ் அவர்களின் நான்கு புத்தகங்களையும் (குருவிகள் பறந்துவிட்டன, பூனை உட்கார்ந்திருக்கிறது - சொற்சித்திரங்கள்
கிளிஞ்சல்கள் பறக்கின்றன - வலைப்பதிவு கவிதைகள்
மரப்பாச்சியின் ஆடைகள் - வலைப்பதிவு சிறுகதைகள்
பெருவெளிச் சலனங்கள் - வலைப்பதிவு அனுபவங்கள்)
வாங்கினேன். இதில் எனது கவிதையும், அனுபவக்குறிப்பும் இடம் பெற்றுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. குறுகிய காலத்தில் அயராத முயற்சியால் வந்த புத்தகங்களைத் தொகுத்த மாதவராஜ் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்தோருக்கும் வாழ்த்துக்கள். அதன் பின் கால்கள் ஓயும்வரை சுற்றி நான் தேர்வு செய்த புத்தகங்கள் கீழே... கண்மணி குணசேகரனின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்று சரியாகத் தேடுவதாக நம்பிக்கொண்டு உறுதியாக தவறான பதிப்பகத்தில் தேடியதால் அதை மிஸ் செய்து விட்டேன்.. ஆங்காங்கே புத்தக விமர்சனங்களில் படித்த நூல்களை நினைவு கூர்ந்து தேர்ந்தெடுத்தேன். சில விரும்பிய புத்தகங்களை பட்டியல் தயாரிக்காததால் பதிப்பகம் அறியாமல் விடுபட்டுவிட்டது. அடுத்தமுறை ஒழுங்கான திட்டமிடல் வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

முடிவில் மிகுந்த மகிழ்ச்சி அளித்த விஷயம் நாங்கள் தேர்வு செய்த அளவிற்கு புத்தகங்களை குழந்தைகளுக்கும் தேர்வு செய்தது தான்.

வாங்கிய புத்தகங்கள்:

மேலே குறிப்பிடப்பட்ட மாதவராஜ் அவர்களின் தொகுப்புகள்
ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
காட்டில் ஒரு மான் - அம்பை
மகாராஜாவின் ரயில் வண்டி - அ.முத்துராமலிங்கம்
ஒரு கடலோரகிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
ஒற்றன் - அசோகமித்திரன்
நகுலன் வீட்டில் யாருமில்லை - எஸ்.ரா
குறுஞ்சாமிகளின் கதைகள் - கழனியூரன்
கொல்லனின் ஆறு பெண்மக்கள் - கோணங்கி
மனிதனும் மர்மங்களும் - மதன்
செங்கிஸ்கான் - முகில் (சரித்திரம் மீது திடீரென முளைத்த எனது ஈடுபாடு பற்றி பிறிதொரு பதிவில் சொல்கிறேன்)

குழந்தைகளுக்கு:

NationalBook Trust India பதிப்பில்:

A story about water
Nine Little Birds
குலோபா எலியரசியும் பலூன்களும்
A Real Giraffe
Tale of a Moustache

ப்ராடிஜி பதிப்பில்:

விண்வெளியில் விக்கி
புல்புல் கொடுத்த பெட்ரோல்
fishy fishes
தும்பிக்கை வந்தது எப்படி?
ஹெய்டி

Usbourne Young Readers பதிப்பில்

Dinosaurs next door

இது போக சில பம்பர் ஆக்டிவிடி புக்ஸும், Scholastic-ல் 3D புக்ஸும் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தன.

இனி புத்தகங்களைப் படித்து முடிக்க வேண்டும் ...