விலைவாசி உயர்வு... சோற்றுடன் ஒரு காய்/குழம்பு வைத்து சாப்பிடுவது கூட ஆடம்பரம் ஆகிவிட்டது. ஒவ்வொரு முறை விலைவாசி பற்றி எண்ணும் பொழுதும் மனதில் லஷ்மியும் கோமதியும் வந்து செல்வார்கள்.
குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு பெற்றோர் மெனக்கெடுவதை இப்பொழுது அவர்கள் வைக்கும் விதம் விதமான பெயர்களில் இருந்தே காணலாம். பெற்றோர் குழந்தைகளுக்கு அப்பழுக்கற்ற பெயர்களையே வைக்கிறார்கள்; குழந்தைக்கு பெயர் போலவே நல்ல எதிர்காலம் அமையாதோ என்ற ஏக்கமும் இருக்கும். எல்லா பெயர்களும் நல்ல பெயர்களே; மனிதர்கள் தான் பெயர்களை அழுக்காக்குவார்கள். சரி விடுங்கள்... எதற்கு சொன்னேன் என்றால் நமக்கு தான் லஷ்மி கடாட்சம் இல்லையே, பெண்ணுக்கேனும் இருக்கட்டும் என்று “லஷ்மி” என்ற பெயர் வைத்திருப்பார்களோ? ஆனால் லஷ்மிக்கு லஷ்மி கடாட்சம் படவில்லை.
லஷ்மிக்கு சிரித்த முகமெல்லாம் கிடையாது; என்றாலும் சிடுமூஞ்சி அல்ல. ஏதோ... அப்படி இப்படி கஷ்டப்பட்டு பள்ளி இறுதிவரை தேற்றினார்கள். அப்பாவும் போய் சேர்ந்துவிட, வேலைக்கு செல்லும் தேவை லஷ்மிக்கு இருந்தது. தட்டெழுத்தில் தேறி ஆயிரத்து சொச்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அம்மாவுக்கு உடல் நலம் அவ்வளவு சரி இல்லை. வாடகை, பால், காய், கரண்ட் என்று எல்லா செலவும் சமாளிக்க இயலவில்லை. ஒரு கட்டத்தில் அங்கே இங்கே தேடி அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு, இவர் ஹாஸ்டலில் சேர்ந்து விட்டார். மாதம் எண்ணூறு ரூபாயில் ஹாஸ்டல் செலவுகள் அடங்கிவிட, முதியோர் இல்லம், போக்குவரத்து செலவு என்று சரியாகப் போய்விடும். அம்மாவை அருகில் இருந்து கவனிக்க ஆசையிருந்தும் இயலாமல் சிரிப்பைத் தொலைத்த முகம்.
கோமதி... லஷ்மிக்கு நேர் எதிர். கோமதிக்கு நாற்பதை ஒட்டி இருக்கும் வயது. முகத்தில் பவுடரும், லிப்ஸ்டிக்கும் , ஓங்கி ஒலிக்கும் குரலும், “ஹா..ஹா” என்ற சிரிப்பும், முதலில் பகட்டான ஆள் என்றுதான் தோன்றும். முகப்பூச்சுக்கும் பின்னால் இருக்கும் பற்பல பிரச்னைகள். பெரிய பிரச்னைகள் உள்ளவர்கள் முகத்தில் புன்னகையை அணிந்து கொள்வதும், சின்ன சின்ன பிரச்னைகள் உள்ளவர்கள் கப்பல் கவிழ்ந்த முகத்துடன் வளைய வருவதும் வாழ்க்கையின் சுவாரசியங்கள் தானே?
கோமதி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவரது இளமையில் வேற்று சாதியில் ஒருவரை மணம்புரிந்து வீட்டை விட்டு வெளியேறியவர். ஆணொன்றும் பெண்ணொன்றும் தந்த பின் கடமை முடிந்ததாய் கணவன் கைகழுவிவிட்டு ஓடிப்போனான். தோள் கொடுக்க யாருமின்றி தவித்தார். கிடைத்த வேலை, வயிற்றுக்கும் வாய்க்குமே சரியாக இல்லை. இதில் பிள்ளைகளை எங்கே படிக்க வைக்க... அவர் தேடியது, குழந்தைகள் காப்பகம். மகனும் மகளும் காப்பகத்தில் வளர, இவர் ஹாஸ்டலில் காலம் தள்ளினார். மனம் நிறைய பாசம் இருந்தும், கையில் பசை இல்லாததால் பிள்ளைகளை உடன் வைத்துக்கொள்ள இயலவில்லை. மகளுக்கு தாய் தன்னை அனாதையாக்கிவிட்டதாகக் கோபம். மகன், புரிந்து கொண்டான். எப்படியோ அவனுக்கும் வேலை கிடைத்தது. சீக்கிரமே வீடு பிடித்து பிள்ளைகளுடன் செல்லப் போவதைச் சொல்லிக்கொண்டிருந்தார். மகளின் கோபம் தீரவில்லை என்றார். காலம் நிச்சயம் அவளுக்கு அந்த தாயின் வேதனையைப் புரிய வைக்கும்.
இவையெல்லாம் கிட்டதட்ட 15 வருடத்திற்கு முந்தைய கதை. காலம் ஓடினாலும், மனிதர்கள் சந்திக்கும் பிரச்னைகள் கூடுகிறதே ஒழிய எதுவும் மறைவதாகத் தெரியவில்லை. விலைவாசி உயர்வு அன்றாட வாழ்க்கையை மட்டும் போராட்டம் ஆக்குவதில்லை, சிலரின் வாழ்க்கையைப் போர்க்களம் ஆக்குகிறது. என்று விடியும் இது போன்ற மக்களுக்கு? என்றாலும்... போராட்டமான வாழ்க்கையைத் தளராது போராடிக்கொண்டே செலுத்தும் கோமதி, லஷ்மியின் முயற்சியைப் பாராட்ட வேண்டும்
துன்பமும் வேதனையும் என உலகம்
ஆனாலும்….
பூக்கள் மலரும்
- ஐஸா
வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு
5 comments:
கோமதியின் கதை - மனதை கலங்க வைத்தது.
// பெரிய பிரச்னைகள் உள்ளவர்கள் முகத்தில் புன்னகையை அணிந்து கொள்வதும், சின்ன சின்ன பிரச்னைகள் உள்ளவர்கள் கப்பல் கவிழ்ந்த முகத்துடன் வளைய வருவதும்//
உண்மைதான்.
//எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு//
அருமை. நல்ல பதிவு அமுதா.
\\பெரிய பிரச்னைகள் உள்ளவர்கள் முகத்தில் புன்னகையை அணிந்து கொள்வதும், சின்ன சின்ன பிரச்னைகள் உள்ளவர்கள் கப்பல் கவிழ்ந்த முகத்துடன் வளைய வருவதும்//
அப்படியே காட்டுகிறீர்கள் உண்மையை..
\நகர்ந்துகொண்டே இரு//
நன்றி ..துன்பமான சூழ்நிலையில் தோல்வியிலிருந்து தப்பிக்கவாவது நகர்ந்துகொண்டிருக்கவேண்டுமே..
அருமை. நல்ல பதிவு.
பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html
Post a Comment