என் மேகம் ???

Wednesday, January 12, 2011

குறிப்புகள்

எம்.எஸ் அப்படி தான் அவரை அழைப்போம். நடுத்தரம் தாண்டிய வயது. பொதுவாக அவரது உலகமே தனி. எப்பொழுதும் ரேடியோவும் கையுமாக சில சமயங்களில் அதனுடன் பாடிக்கொண்டு.... யாருடனாவது பேசிப் பார்ப்பது சற்று அபூர்வம்.

பழகப் பழகத்தானே வாழ்க்கை தெரியும். அவர் நல்ல அழகு கூட. இனிமையான குரல். ரேடியோ சத்தமோ இனிமையான பாட்டு சத்தமோ கேட்டால் அது நிச்சயமாக எம்.எஸ் தான். ஆனால் குழந்தை செல்வம் இல்லை என்று விலக்கி வைத்து விட்டாராம் கணவர்.

கையில் வேலை இருந்தது. பிறகென்ன? ஹாஸ்டல் வாசம். குருவி போல் காசு சேர்த்து சொந்த ஊரில் வீடு கட்டிக் கொண்டார். “எனக்கென்னங்க... ரிடையர் ஆனால் சொந்த வீட்டுக்குப் போய்டுவேன்; அக்கா பசங்க பார்த்துக்குவாங்க... சும்மாவா இருக்கப் போறேன்...என்னால் முடிஞ்சதை நானும் செய்வேன்”, நம்பிக்கையுடன் பேசும் பொழுது பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.

இவர் மட்டுமா? தன்னம்பிக்கை என்றால் வித்யா தான். பார்த்தால் ஒரு குறையும் தெரியாது. என்ன ரொம்ப நேரமா பேசாமல் சிரிச்சிகிட்டே இருக்காங்களேனு பார்த்தால் தான் புரியும்... அவர் உதட்டசைவில் நம்முடைய பேச்சை கேட்கிறார் என. நன்கு படித்து நல்லதோர் வேலையில் இருக்கும் அவருக்கு, ரோஜாப்பூக்கள் போல் இரு குழந்தைகள். ஆனால் அவரது குறையைக் காரணம் காட்டி விலக்கி வைத்திருந்தார். எத்தனை குமுறல்களோ அந்த இதயத்தில்... என்றாலும் எப்பொழுதும் சிரித்த முகம் தான். நிச்சயம் புன்னகையின் ஒரு பகுதி பொருளாதார சுதந்திரம் தந்த தன்னம்பிக்கை தான்.

இன்றும் பலர், கல்யாணம் செய்து குடித்தனம் பண்ணும் பெண்ணுக்கு எதற்கு வேலை என்று கேட்கிறார்கள்? ஆனால், இப்படி கணவனால் கைவிடப்படுபவர்களும் , வாழ்வின் சிக்கல்களில் சிக்கிக் கொள்பவ்ர்களுக்கும் பொருளாதார சுதந்திரம் மட்டுமே தன்னம்பிக்கையும், நல்லதோர் வழியைக் காட்டும். எத்தனையோ வீட்டில் ஆணுக்குப்பின் பெண்ணால் தான் வீடு நிற்கும் என்ற நிலையில் முதலில் இருந்து முயற்சித்து கால் ஊன்றுவதற்குள் ஒரு போராட்டமே தேவைப்படும். ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் அடிப்படை உரிமை.

நாகரீகம் உண்டாக்கத்தக்க நிச்சயமான வழி பெண்ணின் செல்வாக்குதான்
- மெர்ஸன்
பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு
- லெனின்

11 comments:

அம்பிகா said...

.\\ ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் அடிப்படை உரிமை. \\
எப்போது பெண் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைகிறாளோ, அப்போது தான் நிஜமான பெண்ணுரிமை மலரும். நல்ல பகிர்வு.

arasan said...

உண்மையிலே நீங்கள் சொல்வது சரிதாங்க ..

காற்றில்லாத வீடுதான் ....

arasan said...

நெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...

Chitra said...

ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் அடிப்படை உரிமை.


\....rightly said!

Philosophy Prabhakaran said...

ஆக்கப்பூர்வமான பதிவு சகோ... ஏதாவது பத்திரிக்கைகளுக்கு அனுப்பி பிரசுரிக்கலாமே...

ராமலக்ஷ்மி said...

//ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் அடிப்படை உரிமை.//

மிகச் சரி.

நல்லதொரு இடுகை அமுதா.

ஆயிஷா said...

//எத்தனை குமுறல்களோ அந்த இதயத்தில்... என்றாலும் எப்பொழுதும் சிரித்த முகம் தான். நிச்சயம் புன்னகையின் ஒரு பகுதி பொருளாதார சுதந்திரம் தந்த தன்னம்பிக்கை தான்.//

நல்ல பகிர்வு. பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...

பின்னோக்கி said...

பெண்கள் வேலைக்குச் செல்வது எவ்வளவு முக்கியம் என்பதனை, அருமையாக உணர்த்தியிருக்கிறீர்கள்.

தமிழ் said...

புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள்

அன்புடன் நான் said...

மதிப்பிற்குரிய...எம்.எஸ் அவர்களுக்கும்
மதிப்பிற்குரிய... வித்யா அவர்களுக்கும் என் மரியாதைக்குரிய பொங்கல் வாழ்த்துக்கள்...

நீங்க சொல்லும் விடயங்கள் சரியே....

பகிர்ந்துகொண்ட உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

\\ ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் அடிப்படை உரிமை. \\

அழுத்தமான உண்மை.. ஆனால் அதை பல பெண்களே உணராதிருப்பதுதான் வேடிக்கை :(