என் மேகம் ???

Wednesday, March 10, 2010

தேடல்

வாழ்க்கை என்பதே தேடல் நிறைந்தது தானே? எங்கே தேடல் தொடங்கியது என்று யோசித்துள்ளீர்களா? குழந்தைகளாக இருக்கும் பொழுது தேடுவது போல் எனக்கு தெரியவில்லை. அழகாக பூவொன்று மலர்வது போல், அவர்களது முன்னேற்றம் ஒவ்வொன்றாக நிகழ்கிறது. என்றாலும் வாழ்வின் தேடலின் அவசியம் கருதியா என்று தெரியவில்லை... நாம் தேடலை அறிமுகப்படுத்தி விடுகிறோம்.

"காணோம்... காணோம் முட்டாச்" என்று ஆரம்பித்து, "காக்கா ஓச்" என்று கூறி அழகாக ஒரு தேடலுக்கான ஆரம்பம் கொடுக்கிறோம். பின் அது கண்ணாமூச்சியாகவும், ஒளிந்து பிடித்து விளையாட்டாகவும் மாறுகிறது. சில சமயங்களில் நல்ல ட்ரெய்னிங் கொடுக்க புதையல் வேட்டையும் சொல்லித்தரப்படும்.

இந்த சுவாரசியங்களின் முடிவில் நிஜ தேடல்கள் தொடங்கும். படிப்பு, வேலை, பொருள், துணை என்று பட்டியல் நீண்டு கொண்டிருக்கும். இதெல்லாம் முடிந்த ஒரு கணத்தில் கொஞ்ச நாள் தேடலை மறந்து இருப்போம் என்று தூங்கி எழுந்த ஒரு நாளில் முதல் கேள்வியாக வந்தது கணவரின் "என் பர்ஸைப் பார்த்தியாம்மா?" என்ற கேள்வி. நித்தம் தவிர்க்க முடியாத தேடலாகப் போகிறது என்ற உண்மையின் முன்னுரையுடன் என் முன் அந்த கேள்வி சிரித்தது. சிலருக்கு இது மனைவி கை தவறி வைத்த கம்மலாகவோ, சாவியாகவோ இருக்கலாம்.

என்ன ஆச்சர்யம்? தொலைந்தது சாவியோ, பர்ஸோ... ப்ரிட்ஜ் முதற்கொண்டு வீட்டின் அங்குலம் விடாது தேட வேண்டும் என்று அறிந்து கொண்டேன். எண்ணூறு சதுர அடி வீட்டை எட்டு வருடமாக தேடல் நடந்தாலும் இன்னும் கைமறந்து வைக்கப்படும் பொருள் எங்கிருக்கும் என சட்டென்று அறிய இயல்வதில்லை. பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எப்பொழுது முடியும் தேடல்? படிப்பு , வேலை என்று பெரிய பெரிய தேடல்கள் தராத தத்துவங்களைச் சின்ன சின்ன விஷயங்கள் தந்து விடுவது கூட ஆச்சர்யம் தான்.

தேடல் என்று இந்த பதிவு என் மனதில் தோன்றிய நேரத்தையும் நான் சொல்ல வேண்டும். ஊரில் வீட்டைப் பூட்டிக் கிளம்பி இரயிலைப் பிடிக்க வேண்டிய ஒரு அவசர கணத்தில் வீட்டைப் பூட்ட பூட்டும் சாவியும் இல்லை என்று அறிந்தோம். அப்பொழுது தோன்றியது, "பூட்டிய பின் சாவி தொலைந்தால் கூட ஊருக்குப் போய் வந்து பின் பூட்டை உடைக்கலாம். ஆனால் பூட்டவே சாவி இல்லை என்றால் எப்படி கிளம்ப முடியும்?" என்ன ஒரு தத்துவம் என்று எண்ணிய வேளையில் தான் தேடல் தொடங்கியது.

14 comments:

ஆயில்யன் said...

//"பூட்டிய பின் சாவி தொலைந்தால் கூட ஊருக்குப் போய் வந்து பின் பூட்டை உடைக்கலாம். ஆனால் பூட்டவே சாவி இல்லை//

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ (கமல் ரேஞ்சுக்கு அழணும் போல இருந்திருக்குமே!)

:))))))))))))

ஆயில்யன் said...

//படிப்பு , வேலை என்று பெரிய பெரிய தேடல்கள் தராத தத்துவங்களைச் சின்ன சின்ன விஷயங்கள் தந்து விடுவது கூட ஆச்சர்யம் தான்.//

:)))

முதல் தேடல் குழந்தையின் ஜனனத்தில் பூமிக்கு வருகையில் காற்றினை தேடும் அழுகையில் ஆரம்பிக்கிறது என்று எஸ்.ராவிடம் படித்த ஞாபகம் :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான எண்ணங்கள்

நட்புடன் ஜமால் said...

எங்கே துவங்கியது தேடல்

அப்படின்னு துவங்கிடிச்சி தேடல் ...

ராமலக்ஷ்மி said...

இந்த சாவித் தேடல் என்னாலும் இன்றுவரை தவிர்க்க முடியாமலே தொடர்கிறது.

//பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எப்பொழுது முடியும் தேடல்? படிப்பு , வேலை என்று பெரிய பெரிய தேடல்கள் தராத தத்துவங்களைச் சின்ன சின்ன விஷயங்கள் தந்து விடுவது கூட ஆச்சர்யம் தான்.//

உண்மைதான் அமுதா. அழகாய் சொல்லியுள்ளீர்கள்.

சந்தனமுல்லை said...

:-)

பின்னோக்கி said...

பல விதமாக வாழ்க்கை தேடல்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தொலைஞ்சா தேடுற விஷயம் மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அதென்னமோ அதை தேடுறதுல அவ்வளவு ஒரு சோம்பேறித்தனம் :)


//படிப்பு , வேலை என்று பெரிய பெரிய தேடல்கள் தராத தத்துவங்களைச் சின்ன சின்ன விஷயங்கள் தந்து விடுவது கூட ஆச்சர்யம் தான்.//

ம்ம்ம்.

கடைசியில ஒரு பஞ்ச் டயலாக் சொன்னீங்க பாருங்க. ச்சே சான்ஸே இல்ல. ;)

கோமதி அரசு said...

//கை மறந்து வைக்க படும் பொருள் எங்கிருக்கும் என சட்டென்று அறிய இயல்வதில்லை பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எப்பொழுது முடியும் தேடல்?//

தேடல் இருந்து கொண்டு இருக்க வேண்டும் அமுதா, அப்போது தான் வாழ்க்கை ருசிக்கும்.

தமிழ் அமுதன் said...

// "பூட்டிய பின் சாவி தொலைந்தால் கூட ஊருக்குப் போய் வந்து பின் பூட்டை உடைக்கலாம். ஆனால் பூட்டவே சாவி இல்லை என்றால் எப்படி கிளம்ப முடியும்?" என்ன ஒரு தத்துவம் என்று எண்ணிய வேளையில் தான் தேடல் தொடங்கியது.///

ஒரு பெரிய மேட்டர சாதாரணமா சொல்லிடீங்க ...!

"உழவன்" "Uzhavan" said...

தேடல் தான் ஒருவருக்கு அனைத்தையுமே கொடுக்கின்றன. அதனால் யாரும் தேடுவதை ஒருபோதும் நிறுத்திவிட வேண்டாம் :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)))

தேடல் தொடங்கிய தத்துவக்காட்சி எங்க வீட்டில் என்னால் அடிக்கடி நடக்கும்..

தேடறதுல இருந்து இப்படி தத்துவம் கிடைக்குதுன்னு தான் நான் தேடிக்கிட்டே இருக்கேன் ;)

அம்பிகா said...

அருமையான பகிர்வு.

தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் சுவை இருக்கும் னு
பாடிகிட்டே தேட வேண்டியதுதான்.

இந்த தேடல் எல்லோருக்கும் பொதுவானது தான் போல.

அகஆழ் said...

பொதுவான தேடல்களை பற்றி நன்றாக கூறியுள்ளீர்கள் !!
தேடலை பற்றி தான் நானும் கடந்த சில நாட்களாக யோசித்து வருகிறேன்.
இருப்பதில் இல்லாததாய்
இல்லாததில் இருப்பதாய் கருதுவதாலேயே
பெரும்பாலான தேடல்கள் இல்லாததை நோக்கி பயணிக்கின்றன...
அந்த இல்லாதது கிடைத்ததும், அது இருப்பதாகி விடுவதால், தேடல் மீண்டும் தொடங்குகிறது....