என் மேகம் ???

Wednesday, July 23, 2008

அமெரிக்க அனுபவம்

சமீபத்தில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இது எனது 2-வது பயணம் தான் என்றாலும், இம்முறை ஊரில் ஒரு பாதசாரியாக சுற்றியதில் கிடைத்த சில அனுபவங்கள் இனிமையாக இருந்தன. என் ஏக்கம் எல்லாம் நான் கண்ட சில நல்ல விஷயங்கள் எல்லாம், ஒரு காலத்தில் இங்கு இருந்தவை...இன்று காண்பதற்கு அரியதாக ஆனவை...

அங்கு பாதசாரிகளுக்கு தான் முதலுரிமை. சிக்னல் மாறினாலும் நிதானமாக செல்லலாம் என்று தெரிந்தும், குடுகுடுவென நான் ஓடியது... சென்னை அண்ணா சாலையின் "pedestrian crossing" நினைத்துக் கொண்டு தான். சிறு வயதில் என் தந்தை சாலையைக் கடக்கும் பொழுது, "மெதுவாக போ, இது zebra crossing pedestrians preference first" என்று சொன்னது ஒரு கனவு போல் நிழலாடியது. என்னால் இன்று என் குழந்தைகளுக்கு "பார்த்து வேகமா ஓடு" என்று தான் கூற முடியும்.

அடுத்து பஸ் பயணம். ஜன நெருக்கத்தால் காத்தாட நம்மால் பஸ்ஸில் இங்கு பயணம் செய்ய இயலாது என்பது நிதர்சனம். சென்னை மக்களை இப்படி காத்தாட பயணம் செய்ய விட வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. ஊனமுற்ற ஒருவர் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார். பஸ் நின்றது. டிரைவர் சறுக்கும் படிகட்டுகள் மூலம், அவர் ஏறி அவர் இருக்கையில் இருத்தி
திரும்பும் வரை அனைவரும் வெளியே காத்திருந்தனர். (அட... பாதிக்குமேல் நின்றவர் நம்மூர் மக்களே!!!). ஏனோ, சமீபத்து இரயில் பயணம் நெஞ்சில் உறுத்தியது. அது ஒரு இரண்டாம் வகுப்பு பயணிகள் பெட்டி... அவரோ நிறை மாத கர்ப்பிணி. அவருக்கு middle berth. Lower berth மக்கள் நடுத்தர வயதுடையோரே.. அவர் கணவர் டிடியிடம் lower berth கேட்டார். டிடி "யாரேனும் கொடுத்தால், இவர்கள் படுப்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை" என்று பொறுப்பாக பதில் கூறிச் சென்று விட்டார். கேட்கப்பட்டவரும் கொடுப்பதாக இல்லை, வேடிக்கை பார்ப்போரும் கொடுப்பதாக இல்லை. எனக்கு RAC. நான் என் சகோதரனுடன் சென்றதால், அவரை கீழே படுக்கச் சொல்லி அவருக்கு berth தர முயன்றேன். இதன் பிறகே ஒருவர், மனமிறங்கி பெருந்தன்மையுடன் தனது lower berth கொடுக்க முன் வந்தார்.ஏதோ, இந்தளவாவது மனிதாபிமானம் உள்ளதே என்று எண்ணிக் கொண்டேன்.
என்றாலும் இச்சம்பவம் என் மனதில் ஓர் உறுத்தலாகவே உள்ளது...
எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்? ஓரு ஆங்கில நாவலின் முடிவு நினைவுக்கு வருகிறது. கடவுளால் தோற்கடிக்கப்பட்ட சாத்தான், ஒரு காட்டிற்கு வந்து சேரும். நவ உலகின் எந்த மாற்றமும் இல்லாத மக்கள் சாத்தானை அன்புடன் வரவேற்பார்கள். சாத்தான் சிரித்துக் கொண்டே கூறும் "Let me make you civilized..."

7 comments:

சந்தனமுல்லை said...

எது எதற்கோ ஒப்பந்தம் போடுபவர்கள்,ஏன் இதற்கெல்லாம் ஓப்பந்தம் போட மாட்டேனென்கிறார்கள்?? மனிதாபிமானமற்று வாழ்வதைதான் நாகரீகம் என்றெண்ணுகிறோமோ?

Syam said...

"Let me make you civilized..."

நூறுல ஒரு வார்த்தை...

Anonymous said...

padippavarin manathil paathippai earpaduthum ungalathu kanneer anjalikku enathu vaazhthukkal. ungalathu mamanarin maraivirkku enathu varutthangal....

PPattian said...

ரொம்ப சரி..

"நாகரீகம்" வளந்துகிட்டே போகுது..:(

Divya said...

உங்கள் அமெரிக்க அனுபவத்தை சுவாரஸியமாக எழுதி......முடிவில் நச்சுனு ஒரு கேள்வியும் கேட்டிருக்கிறீங்க, சிந்திக்கவைத்தது....:)))

ILA (a) இளா said...

நாகரிகம், முன்னேத்தம்னு நாம் மனிதாபிமானத்தை குழி தோண்டி பொதச்சுட்டு வரோம்ங்க.

மங்களூர் சிவா said...

உங்களுக்கு மிக நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது.

//
அமெரிக்க மக்களின் ஒழுங்கு முறை பற்றி பல இடங்களில் படித்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டு இருப்பீர்கள். நேரில் பார்க்காத மக்களுக்கு தான் இதனை எடுத்து சொல்ல இருக்கிறார்களே வெளி நாட்டு மாப்பிள்ளைகளும், மகன்கள்/மகள்கள் வீட்டிற்கு அமெரிக்கா வந்து திரும்பும் ரிட்டையர்டு பெரிசுகளும். ஆனால் சென்ற மாதம் இதற்கு முற்றிலும் மாறுபாடான ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது.

Washington, DC மற்றும் Virginia இடையிலான பாதாள ரயில் போக்குவரத்தில் ஏதோ பிழை ஏற்பட்டு அதனால் இரு ரயில் நிலையங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஒரு பக்கம் வரும் ரயில்கள் பயணிகளை ஒரு நிலையத்தில் இறக்கிவிட, அங்கிருந்து அவர்களை பேரூந்தில் மற்றொரு ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து மீண்டும் ரயிலில் பயணம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் ஒரு ரயிலில் வரும் பயணிகள் அனைவரையும் ஒரு பேரூந்தில் ஏற்றவா முடியும். அதனால் சுமார் 3000 அல்லது 4000 பயணிகள் வரை ஒரு நிலையத்தில் காத்திருக்க பயணிகளை ஏற்ற வரும் பேரூந்தோ நெடுநேரம் சென்றும் வரவே இல்லை.

அப்பொழுது அங்கே இருந்த தள்ளு முள்ளுவை பார்க்க வேண்டுமே. ஆஹா கண்கொள்ளா காட்சி.

Demand Vs. Supply என்பது சரிவிகிதமாக இருக்கும் வரை அமெரிக்கர்கள் ஒழுங்கு முறைகளை சரியாக பின்பற்றுபவர்களே. ஆனால் அதில் ஒரு சிறு பாதிப்பு வந்தாலும் அவர்களின் ஒழுங்கீனம் நம்மவர்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல. அதே நேரத்தில் Demand Vs. Supply விகிதத்தை சரியளவில் நம்மவர்களுக்கு அளித்தால் நம்மவர்களும் ஒழுங்கு முறைகளை சரியாகவே பின்பற்றுவார்கள். அதனை செய்வதை விட்டு விட்டு பேரூந்தில் வரிசையில் ஏறுங்கள் என்று பிரச்சாரம் மட்டும் செய்து கொண்டிருந்தால் எந்த மாற்றமும் நடக்காது. ஷங்கர் போன்ற இயக்குனர்களுக்கு அந்நியன் படம் எடுத்து காசு பார்க்கவே பயன்படும்.
//

http://sathyapriyan.blogspot.com/2008/06/blog-post_26.html