என் மேகம் ???

Friday, March 11, 2011

வானம்

வெட்டவெளியில் படுத்து வானத்து நட்சத்திரங்களை எண்ணும் கணங்கள் வாழ்வின் சில சுவாரசிய கணங்கள். சில்லென்ற காற்றுக்கு காலத்தைக் கடத்தும் சக்தி உண்டு. நிலவிருந்தால் வானத்தின் மீது கவனம் செல்வதில்லை; மேகத்திடை மறையும் நிலவைத் துரத்தியபடி மனமும் சென்றுவிடும். நட்சத்திரங்கள் மட்டுமே சிதறிக் கிடக்கும் வானம் இன்னும் அழகு. கரிய வானம் அழகாவதோடு, அந்த நீண்ட வெளியில் எண்ணங்கள் தடையின்றி பயணம் செய்யும்.

சிறு வயதில் நிலாச் சோறு உண்டு வானத்தை இரசித்ததுண்டு. ஊரில் காரையில் தான் தூக்கம். நட்சத்திரங்களில் உருவங்கள் தேடிக்கொண்டே உறங்கிப் போவோம். நட்சத்திர ஓளியில் விளையாடிய இரவுகளும் ஏராளம். பதின் வயதில் கோபம் வரும் பொழுதெல்லாம் தோட்டத்தில், சலவைக்கல்லில் உட்கார்ந்து கொண்டு வானம் பார்த்தால், மனம் இலேசாகிப் போகும். அதன் பின் வாழ்க்கை ஓடிய ஓட்டத்தில் நட்சத்திர இரவுகள் தொலைந்து போயின. நிலவுடன் ஒட்டியும் விலகியும் செல்லும் ஒற்றை நட்சத்திரம் மட்டும் அவ்வப்பொழுது கண்ணில் படும்.

வானத்தை நினைவுபடுத்தும் வேலையை குழந்தைகள் செய்கின்றனர். அம்புலி காட்டி ”நிலா நிலா ஓடி வா...” எனும் பொழுது நிலவும், “ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...” என்று நட்சத்திரங்களும் மீண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகின்றன. (ப்ளாக்கால் என்வானம் என் கணினியில் அடங்கியது... என்றாலும் வானம் தொலைவில் தான் நின்றது). மழலைகள் வளர்ந்து நிலவைத் தேடாது சாப்பிட ஆரம்பித்தவுடன் மீண்டும் வானம் தொலைவானது... பரபர வாழ்க்கையில்.

ஏதோ நினைவுகளுடன் விழி உயர்த்தி பார்த்தபொழுது மீண்டும் வானம் நெருக்கமானது. இந்த வானம் நோக்கிதான் எத்தனை கேள்விகள் பயணித்திருக்கும்... படிப்பு, வேலை, துணை, வீடு, வாகனம் , பிள்ளைகள் என்று எல்லா கனவுகளும் எத்தனை நட்சத்திர இரவுகளின் இருளில் பயணித்துள்ளன.... இன்று அந்த கேள்விகளுக்கு விடை இருக்கிறது. குழந்தைகள் பற்றிய அதே கேள்விகள் இப்பொழுது மீண்டும் பயணிக்கின்றன. அந்த இருள்வெளி நட்சத்திரங்களுடன் ஏதோ ஒருவிதத்தில் மனதை இலகுவாக்குகிறது.

விரிந்தே கிடக்கிறது வானம் எல்லோருக்கும்... நினைத்தால் அருகிலும் இல்லையென்றால் தொலைவாகவும்... வாழ்வின் தத்துவம் போல்...

4 comments:

அம்பிகா said...

\\வெட்டவெளியில் படுத்து வானத்து நட்சத்திரங்களை எண்ணும் கணங்கள் வாழ்வின் சில சுவாரசிய கணங்கள்.\\
மொட்டை மாடியில், மல்லாந்து படுத்தபடி வானத்து நட்சத்திரங்களை ரசிக்கவும், உறவாடவுமான சுவாரஸ்யமான கணங்கள் அநேகமாக எல்லோருக்கும் வாய்த்திருக்கும்.

\\விரிந்தே கிடக்கிறது வானம் எல்லோருக்கும்... நினைத்தால் அருகிலும் இல்லையென்றால் தொலைவாகவும்... வாழ்வின் தத்துவம் போல்...\\

அருமை.

middleclassmadhavi said...

வானம் தொட்டு விடும் தூரம்தான்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தத்துவமே தான் :)

Chitra said...

வானத்தை நினைவுபடுத்தும் வேலையை குழந்தைகள் செய்கின்றனர். அம்புலி காட்டி ”நிலா நிலா ஓடி வா...” எனும் பொழுது நிலவும், “ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...” என்று நட்சத்திரங்களும் மீண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகின்றன. (ப்ளாக்கால் என்வானம் என் கணினியில் அடங்கியது... என்றாலும் வானம் தொலைவில் தான் நின்றது). மழலைகள் வளர்ந்து நிலவைத் தேடாது சாப்பிட ஆரம்பித்தவுடன் மீண்டும் வானம் தொலைவானது... பரபர வாழ்க்கையில்.


......உண்மை..... அருமையாக சொல்லி இருக்கீங்க.