என் மேகம் ???

Wednesday, March 3, 2010

தீயினால் சுட்ட புண்

அவள் முழுப்பெயர் என்ன என்று யோசிக்கிறேன். நினைவில் வரவில்லை. வித்யாசமான பெயர்... பெயரைச் சுருக்கித்தான் அழைப்போம்... சரி விடுங்கள் பெயரைச் சொல்லி என்ன செய்ய? அவள் எனக்கு தூரத்து உறவு.. எப்படி என்றால்...சரி விடுங்கள் உறவைச் சொல்லி என்ன செய்ய?

விடுமுறைக்கு செல்லும் பொழுது விளையாடி உள்ளோம். கிணற்றில் எட்டி பார்த்து திட்டு வாங்கி உள்ளோம்; தேங்காய் பூ பறித்து சொப்பில் சமைத்துள்ளோம்; அவள் மாமா ஊரிலிருந்து கொண்டுவரும் முந்திரி கொட்டைகளை அனலில் இட்டு உடைத்து சாப்பிட்டுள்ளோம், பால் நிலா பொழியும் இரவுகளில் கதைகள் பேசி சிரித்துள்ளோம்.

ஏதோ ஒரு நாளில் கிணற்றை மறைத்த சுவரில் சாய்ந்து, கூரையில் தனித்து நிற்கும் மரப்பல்லிகளைப் பார்த்தவாறு, பெரியவர்கள் சண்டையில் சிறியவர்கள் பேசாது இருந்துள்ளோம்; என்றாலும் சில நேரங்களில் குப்பை கொட்ட வெளியே செல்லும் பொழுது சந்தித்தால் இரகசியமாகப் புன்னகைத்துள்ளோம்.

அவளுக்கு நல்ல சிரித்த முகம். அவள் கையெழுத்து அழகு ஆனால் படிப்பில் சுமார் என்பதெல்லாம் எனக்கு அப்பொழுது தெரியாது; விளையாட நட்பு பூக்கும் மனம் இருந்தால் போதுமே!!! நன்றாக படிப்பாளாம், ஆனால் மெதுவாக எழுதுவதால் மதிப்பெண் கம்மியாம்.

அது பதின்மம் தொட்ட பருவம் என்று எண்ணுகிறேன். ஒற்றை ரோஜாவை அழகாக கூந்தலில் பக்கவாட்டில் செருகி இருந்தாள். தோட்டத்தில் பூத்த ரோஜாவாக இருக்குமோ? தெரியவில்லை? அதற்கும் அவள் படிப்புக்கும் என்ன சம்மந்தம்? அன்று அவளுக்கு பரீட்சை பேப்பர் கொடுத்தார்கள். "ஸ்டைலா பூவை யாரை மயக்க வச்சுட்டு வர? மார்க் வாங்காதவளுக்கெல்லாம் பூ தேவையா?" என்ற சொற்கள் தீயின் வெம்மையைக் கூட மறக்கச் செய்துவிட்டது. மறுநாள் காலை அடுப்பெரிக்க வைத்த மண்ணெண்ணெய் பூவை எரித்துவிட்டது.

பூவாக மலர்ந்த முகத்தை கருகியதாக இன்னும் எண்ண இயலவில்லை. அந்த ஆசிரியை என்ன ஆனார் என்பதெல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் கனமான மனதுடன் இந்த நிகழ்வை எண்ணும் பொழுது, சமூகத்தின் சில அழுகிய முகங்களையும் காணும் மனத்திண்மையைக் குழந்தைகளுக்கு அளிக்கும் பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு என்று தோன்றுகிறது.

14 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ மிக சோகமான விசயம்.. ஆனா இப்படி நடப்பது பெண்களுக்கு அதிகம்.. பூ கண்மை , கொஞ்சமான அலங்காரங்கள் எல்லாமே படிப்போட சம்பந்தப்பட்டதாகவே நினைக்கப்படும் கொடுமை கண்கூடாப் பாத்துருக்கோமே. :(

தமிழ் அமுதன் said...

அதிர்ச்சியில் மனம் கனத்து விட்டது ;;(

ஆயில்யன் said...

//சமூகத்தின் சில அழுகிய முகங்களையும் காணும் மனத்திண்மையைக் குழந்தைகளுக்கு அளிக்கும் பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு//

கண்டிப்பாக! மற்றவர்களின் சொற்கள் நம்மை எந்த வகையிலும் மனதளவில் பாதிக்காத வகையினில் வாழ,வாழ்வினை எதிர்கொள்ள பெற்றோர்களே துணையாக இருக்க வேண்டும் !

கண்ணகி said...

ஆமாம். மருதாணி வைத்தால் இத்ற்கெல்லம் நேரமிருக்கிறது..படிக்க நேரமில்லையா என்று திட்டியிருக்கிறார்கள்.சில ஆசிரியர்கள்..அவர்களைக்கண்டாலே அஞ்சி நடுங்குவோம்...ம்..ம்.பாவம் அந்தப்பெண்...

கபீஷ் said...

:-(. ரொம்ப கொடுமையா இருக்குது.

☀நான் ஆதவன்☀ said...

:(

sathishsangkavi.blogspot.com said...

இவ்வளவு அழக சொல்லிட்டு கடைசியில் பேச விடாமல் செய்து வீட்டீர்களே...

அம்பிகா said...

என்ன கொடுமை!!
\\கனமான மனதுடன் இந்த நிகழ்வை எண்ணும் பொழுது, சமூகத்தின் சில அழுகிய முகங்களையும் காணும் மனத்திண்மையைக் குழந்தைகளுக்கு அளிக்கும் பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு என்று தோன்றுகிறது. \\
சரியாக சில்லியிருக்கிறீர்கள்.

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி சொன்னது போலவே இப்படி படிப்போடு சம்பந்தப் படுத்தி ஆசிரியர்கள் திட்டுவது நிறைய உண்டு அப்போதெல்லாம்:(! முடிவாய் சொன்னதும் சரியே.

pudugaithendral said...

ஆனா இப்படி நடப்பது பெண்களுக்கு அதிகம்.. பூ கண்மை , கொஞ்சமான அலங்காரங்கள் எல்லாமே படிப்போட சம்பந்தப்பட்டதாகவே நினைக்கப்படும் கொடுமை கண்கூடாப் பாத்துருக்கோமே. :(//

ஆமாம். இப்படித்தான் அப்போதைய ஆசிரியையகள். இப்போதும் ஏதும் மாற்றம் அதிகமாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆனால் கனமான மனதுடன் இந்த நிகழ்வை எண்ணும் பொழுது, சமூகத்தின் சில அழுகிய முகங்களையும் காணும் மனத்திண்மையைக் குழந்தைகளுக்கு அளிக்கும் பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு என்று தோன்றுகிறது. //

கண்டிப்பாக.

நமக்கெல்லாம் அப்போ இந்த மாதிரி சொல்லித்தர யாருமில்லை, இது மாதிரி வார்த்தைகளுக்கு அதுவும் ஆசிரியர்களிடமிருந்து வரும் வார்த்தைகளுக்கு பயந்தே ரொம்ப ஒடுங்கி இருந்தாச்சு :((

எனக்கும் இது மாதிரி அனுபவமுண்டு.
மேரி டீச்சர். இன்னும் மறக்கமுடியாது.

பின்னோக்கி said...

கொடுமையான விஷயம் :(

அகஆழ் said...

மிகவும் வேதனையாக இருக்கிறது.

தன்னம்பிக்கை வளர்க்க வேண்டியவர்களே இப்படி குலைப்பது வேலியே பயிரை மேய்வது போல் ஆகி விடுகிறது.

எந்தக் காரணத்திலும் திடமான உறுதியான மன நிலை வேண்டும்.
நம்மை நாம் முதலில் நம்ப வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்பிக்கும் முதல் பொருப்பு பெற்றோருடயதாக இருக்க வேண்டும்.

Dhiyana said...

படித்தவுடன் வேதனையாக இருந்தது அமுதா..