என் மேகம் ???

Saturday, February 20, 2010

கிறுக்கல்கள்

வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டினால் பதின்மத்தின் பக்கங்கள் பெரும்பாலும் குழப்பமான கிறுக்கல்களாகவே தெரிகிறது.

பதின்மம்... தனது தனித்துவத்தைக் கண்டுணர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு போராட்டமாக இருந்ததோ என்று தோன்றுகிறது. “படிப்ஸ்” என்று மட்டுமே இருந்தாலும், பல குழப்பங்களுடன் தான் இருந்தது பதின்மம். ஒழுங்காகப் பள்ளி வந்து கொண்டிருந்த ரெஹானா, பர்கானா, அனிதா எல்லாம் பள்ளியில் இருந்து திடீரென நின்ற பொழுது... , பசங்க பொண்ணுங்க என்ற பாகுபாடின்றி கிரிக்கெட், செவென் ஸ்டோன்ஸ், மசாமஸ் என்று விளையாடிக் கொண்டிருந்த பொழுது பானு திடீரென வாசற்படி தாண்டி வரமறுத்தது என்று... வகுப்பில் சின்ன பெண்கள் எல்லாம் படித்துக்கொண்டிருக்க, பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டம் மட்டும் என்ன தான் பேசி சிரித்துக்கொள்கிறார்களோ என்று...

சந்தோஷமாக வெளியே செல்ல கிளம்பிய காலம் போய், வெளியே சென்றால் என்ன அத்துமீறல்களோ என்று மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது வீட்டுக்குள் சுருங்கிக் கொண்ட காலமும் அதுதான்.”படி தாண்டாதே” என்று அம்மா கூறவில்லை, நானே வீட்டிற்குள அடைந்து கொண்டேன். வாசிப்பு என்ற பொன்னுலகம் என்முன் விரிய ஆரம்பித்ததும் அப்பொழுது தான். என்னவென்றே புரியாத மன உளைச்சல்களோடு மூச்சிரைப்பு நோயும் உச்சகட்டத்தை அடைந்து என்னைப் பாடாகப் படுத்தியது. அம்மாவையும் அப்பாவையும் மிகவும் கவலைப்படுத்துவேன். விளையாட்டு என்ற ஒன்று என்னிடம் இருந்து அன்னியப்பட்டுப் போனது.

பள்ளியில் உணவு இடைவேளையில் மாடிப்படிகளில் அமர்ந்து, நானும் ஸ்ரீதேவியும் கேட்க சாரதா அழகாக கல்கியின் பொன்னியின் செல்வனை இரசித்துக் கூறுவாள், இரசித்துக் கேட்போம். வந்தியத் தேவனையும், குந்தவியையும், அருண்மொழியையும் வானதியையும் நினைத்து நினைத்து சிரிப்போம். மரணத்தின் தீவிரம் புரிந்ததும் இந்த பருவம் தான். சாரதாவின் அப்பாவிற்கு கேன்சர் என்று ஒரு முறை அவள் வீட்டிற்கு சென்றிருந்தோம். சில நாள்கள் கழித்து அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதைக் கனமாக்கியது. “இந்த வருஷம் எங்க வீட்ல நெல்லி நிறைய காய்த்தது... ஏதோ நடக்கும்னு தெரியும்” என்று அவள் கூறியது இன்னும் ஒலிக்கிறது. இப்பொழுதும் தோட்டத்தில் நெல்லியோ மல்லியோ நிறைய காய்த்தால், பூத்தால் மனதுள் திகில் குடியேறும்.

ஒழுங்காக படித்துக் கொண்டிருந்த உமா மகேஸ்வரி காதல் என்று ஓடிப்போனாள். ஒரு மாதம் கழித்து கணவனிடம் அடி உதை வாங்கிக் கொண்டிருந்தாள். சுமதியும் காதலனுடன் ஓடிபோய் விஷம் குடித்தாள். காதலன் இறந்துவிட, அவன் போட்ட 7 பவுன் சங்கிலியைத் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் பழையபடி சிரித்து வளைய வந்தாள். இருவரின் இந்த கதைகள் காதல் என்பது ஒரு க்ரேஸ் என்ற என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது.

பத்தாம் வகுப்பில் மார்க்‌ஷீட் வாங்கிவிட்டு அண்ணன் கல்யாணத்திற்கு ஊருக்கு சென்று விட்டேன். வருவதற்குள் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கும் நாள் கடந்துவிட்டதால் இடம் இல்லை என்று சொல்லிவிட, அரசு பள்ளியில் இருந்தவளை கான்வெண்ட்டில் சேர்த்து விட்டனர். தாவணியில் சென்று கொண்டிருந்தவள் ஸ்கர்ட் & ப்ளவுஸ் என்று மாறியது வித்யாசமாக இருந்தது. சுற்றி எல்லோரும் ஆங்கிலத்தில் பேச, நான் ஒரு தனி தீவாக உணரத்தொடங்கினேன். மெல்ல என்னுள் தாழ்வு மனப்பான்மை புகுந்தது. (இன்று வரை அது ஏதேனும் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு திடீரென்று உறக்கம் கலைந்து எழும் :-)) நாகலஷ்மி என்ற ஆங்கில ஆசிரியை அதை உணர்ந்து என்னை வெளியே கொண்டுவர முயற்சித்தார். எனக்கென சின்ன நட்பு வட்டம் கிடைத்தது சற்றே ஆறுதல். என்றாலும் மிகுந்த மன அழுத்தம் கொண்ட நாட்களும் அதுவே. அடிக்கடி உண்டியல் காசு பஸ் செலவுக்கும், அப்பாவின் மோதிரம் ஸ்கூல் பீஸுக்கும் மாயமாகும் வேளையில், என் உடல் நலக்குறைவால் மிகவும் மனம் வருந்திக்கொண்டிருந்த பெற்றோரிடம் பள்ளி பிடிக்கவில்லை என்று சொல்லாது தோட்டத்தில் இருளிடம் என் கண்ணீரைப் பகிர்ந்து கொண்டேன்.

இதோ முடிந்துவிடும் பள்ளிபடிப்பு என்று இருந்த வேளையில், கல்லூரியிலும் பெரும்பாலோர் ஹாஸ்டலராக இருக்க, நட்பு வட்டம் பெரிதாக இல்லை. ஆண்/பெண் நட்பின் எல்லைக்கோடு பற்றி கேள்விகளும் பதில்களும் எனக்குள்ளே சுற்றிக் கொண்டிருந்தன. கிட்டதட்ட கான்வெண்ட் போல் தான் என்றாலும் சில நட்புக்களால் மனம் சற்றே தெளிவாக இருந்தது. எல்லா வேளைகளிலும் எனக்கென்ற முகம் “படிப்பு” என்று மட்டுமே இருந்தது. பெரும்பாலும் பேசியதில்லை. அமைதியான பார்வையாளராக இருந்துள்ளேன். ஆனால் எனக்குள் என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. கவிதைகள் காகிதங்களில் எழுதப்பட்டு கசக்கி எறியப்பட்டன. (கற்பனை தான் எத்தனை சுகம்... கண்ணாடி மாளிகை என்றாலும் கற்பனை தான் எத்தனை சுகம்) தாழ்வு மனப்பான்மையை விரட்டி மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முயற்சிகள் நடந்தன. கல்லூரி இறுதியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் கூட, தன்னம்பிக்கை என்பது சென்னையில் வந்து வேலை செய்ய ஆரம்பித்த பின் தான் வேரூன்றியது. உற்சாகம், விளையாட்டு எல்லாம் மீண்டும் என்னிடம் குடிவந்தது. உடல்நலமும் மேம்பட்டது. தோழி பாரதியின் உற்சாகமான நட்பு மிக முக்கியமானது.

இன்று யாரேனும் “you are aggressive", "talkative" , “டீச்சரா இருந்திருப்பீங்களோ” என்று கூறும் பொழுது இருளில் கரைந்த அந்த கண்ணீர்க்கணங்களைப் எண்ணி சிரிக்காது இருக்க இயலவில்லை. வெகு நாட்களாக மனதில் கனத்துக் கிடந்த பதின்மம் பற்றி கூற அழைத்த அமித்து அம்மாவிற்கு நன்றி.

9 comments:

தமிழ் அமுதன் said...

அருமை....! நல்ல பகிர்வு ..!

///வாசிப்பு என்ற பொன்னுலகம் என்முன் விரிய ஆரம்பித்ததும் அப்பொழுது தான். ///

வாசிப்பை பொன்னுலகமாய் சொல்லி இருப்பது அழகு...!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்க சூப்பரா எழுதினதுக்கும் நன்றி :)

மூச்சிரைப்பு, தாழ்வு மனப்பான்மை என நீங்கள் குறிப்பிட்ட இடங்கள் எனக்கும் பொருந்தும்.
ரொம்பக் கொடுமையான நாட்கள் அவை.

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான நினைவுகள்.

//உற்சாகம், விளையாட்டு எல்லாம் மீண்டும் என்னிடம் குடிவந்தது. உடல்நலமும் மேம்பட்டது. தோழி பாரதியின் உற்சாகமான நட்பு மிக முக்கியமானது.//

எல்லாம் தாண்டி நீங்கள் ஜெயித்துக் காட்டியதில் மனம் பெருமிதம் கொள்கிறது. அந்த தோழிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

பிரமாதமா எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

நட்பின் முக்கியத்துவம் - நல்லா சொல்லியிருக்கீங்க.

படிப்பை தவிர மற்ற எல்லாத்திலும் முதலா வந்த அந்த நாட்களை நானும் விரைவில் பகிரனும்.

Anonymous said...

சுவையான பகிர்வு..சில நேரங்களில் நினைவுகளின் துணை தேவையாய் தான் இருக்கிறது....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ..:( இடமாற்றங்களும் நண்பர்களும் நமக்கு அந்த நேரத்தில் எவ்வளவு அழுத்தகுடுக்கக்கூடியதுன்னு நல்லா சொல்லி இருக்கீங்க அமுதா..

அதைஎல்லாம் புறம் தள்ளி இப்ப நீங்க தன்னம்பிக்கை உள்ளவரா ஆகிவிட்டதற்கு வாழ்த்துக்கள். :)

Vidhoosh said...

ரொம்ப அருமையான பகிர்வு. சென்னை என்ற மந்திர நகரம், பலரை புரட்டித்தான் போட்டு விடுகிறது. இன்றும் என்றேனும் பேருந்தில் பயணிக்கும் அதிருஷ்டம் வாய்க்கும் போது சில முகங்கள் என்னை ரொம்பவே ஈர்க்கும், இன்னும் "சென்னைப்படாமல்" இருக்கும் குழந்தை முகங்கள், ஜன்னலோரத்து இருக்கைக்குள் புன்னகைத்துக்கொண்டே, கட்டிடங்களை ரசித்துக் கொண்டு, பயணிக்கும் அம்முகங்கள்.. "ஆ.. இந்த குழந்தை மனது, இதை தொலைத்து விடாதீர்கள்" என்று கையை பற்றிக் கொண்டு சொல்லிவிடத் துடிக்கும். "சென்னைபட்டு" விட்ட உதடும் விரல்களும் பயந்து கொண்டு சும்மாவே இருக்கும் :)

-வித்யா

Deepa said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க அமுதா.
பதின்மத்திலிருந்து மெல்ல விரிந்த உங்கள் இளமைப் பருவமும் நீங்கள் அடைந்த மாற்றங்களும் சபாஷ் சொல்ல வைக்கின்றன.